எழுத்துரு அளவு Larger Font Smaller Font


'குமுதம்' நிறுவனத்திலிருந்து பல கிளை இதழ்கள் வந்து கொண்டுள்ளன. அதில் இலவச இணைப்பு 'லைஃப்' எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அவ்விதழ் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அற்புதத் திருவிளையாடல்கள் என்று கற்பனை மாயக் குதிரையில் சவாரி செய்து அவிழ்த்துக் கொட்டிக் கொண்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக ஒன்று. ஒரு நாள் மகா பெரியவாளைத் தரிசனம் செய்யக் காத்துக் கொண்டிருந்த பக்த கோடிகளில் ஒரு பெண் திடீர்னு சிரிக்கிறார், வாய்க்கு வந்த மாதிரி சின்னக் குழந்தையாட்டம் பேசுகிறாள், அது வேணும் இது வேணும்னு அடம் பிடிக்கிறாள்.

அந்தப் பெண்ணின் அம்மா தவியோ தவி என்று தவிக்கிறார். மகா பெரியவா அழைப்பதாகத் தகவல், மகளோடு தாயும் செல்கின்றார்.

தாயார் நிலைமையை சொல்லுகிறார். இந்தப் பெண்ணுக்கு விவாகம் பண்ண வரன் தேடுறேன்; ஆனால் இந்தப் பெண்ணோ இந்த நிலைக்கு ஆளாகி விட்டாள் என்று கண்ணீர் விடுகிறார் தாய்.

காத்துக் கருப்பு மாந்திரீகம் எல்லாம் பார்த்தாயிற்று. பயனில்லை என்றும் கூறினார். டாக்டர்கள் எல்லாம் பார்த்தாச்சு; பலன் இல்லை என்று புலம்பினார் அந்தத் தாய்.

அந்தப் பெண்ணை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்த பெரியவாள் மறுநாள் வரச் சொன்னார். அவ்வாறே வந்தனர். 'உனக்கு அபிராமி அந்தாதி தெரியுமோ'... னு பெரியவா கேட்க அந்தப் பெண் கடகட என்று

ஒப்புவித்தாளாம்.

இப்படி ஓர் அற்புதம்!

முதல் நாள் பெரியவாள் பார்த்த பார்வையிலேயே இந்த மாயாஜாலம் நடந்து விட்டதாம்.

தங்களுக்கு ஆக வேண்டுமானால் அம்மிக் குழவி ஆகாயத்தில் பறந்ததை நானும் பார்த்தேன்; என் ஆத்துக்காரியும் பார்த்தாள்.

பக்கத்து வீட்டுப் பஞ்சாபகேசய்யரின் பாரியாளும் பார்த்தாள் என்று அள்ளி விடுவார்கள்.

பெரியவாளுக்கு அவ்வளவு அற்புத சக்தியிருந்தால், எத்தனை மாதம் படுக்கையில் கிடந்தார்? (உடல் நலனைக் கொச்சைப்படுத்துவதாகக் கருதக் கூடாது - பிரத்தியட்சமாக சிலவற்றைப் பார்க்க வேண்டுமே!)

வெளிநாடுகளிலிருந்தெல்லாம் மருத்துவக் கருவிகள் எல்லாம் வரவழைக்கப்பட்டும் என்ன பயன்! - சங்கரா நேத்ராலயாவில் கண் அறுவை செய்து கொள்ளவில்லையா?

சராசரி எல்லா மனிதர்களுக்கு நிகழ்வதெல்லாம் அவாளுக்கும் நடந்திருக்கிறது என்பதைத் தவிர,  வேறு சிறப்பு என்ன? எதற்குமே அற்புத வண்ணம் தீட்டி, மணலைக் கயிறாக திரித்து, வானத்தை வில்லாக வளைப்பது என்பதெல்லாம் வக்கணையும் வண்டலும்தான்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்த அற்புதங்களில் எல்லாம். இவர்கள் கூறும் அந்த 'மகா பெரியவாளுக்கு' நம்பிக்கை உண்டா? அதையும் பார்த்துவிடலாமே!

கொல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் மந்திர மாயா ஜாலங்கள் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அளித்த பதில்.

"மந்திரங்கள், மாயா ஜாலங்கள் மதத் துறையைப் பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மிக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும், தந்திரங்களும் சமயத்துறையின் அங்கங்களாக பாவிக்கப்படுவது பெருந்தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டதல்ல." (26.10.1974)

அற்புதம் மாயா ஜாலங்கள்பற்றி இப்படி கறாராகக் கருத்துச் சொன்னவர்மீதே இது போன்ற அற்புத மாயா ஜாலங்களை அப்புவது ஏன்? மக்களின் சிந்திக்கும் திறனைச் சீரழிக்கும் மகா மட்டமான அற்பத்தனம் இது அல்லாமல் வேறு என்னவாம்?

இன்னொரு எடுத்துக்காட்டு

1975இல் சென்னை தொலைக்காட்சி தொடக்க விழா. காஞ்சி காமகோடி சங்கராச்சாரியாரின் பாத பூஜையைப் படம்

பிடித்து ஒளிபரப்ப வேண்டும் என்று தொலைக் காட்சி விரும்பியது. ஆனால் அதற்கு இசைவு தெரிவிக்காத நிலையில், மீறிப் படம் எடுத்த கேமிராக்காரரின் கை விளங்கவில்லையாம்! இப்படி ஓர் அற்புதக் கதையை வெளியிட்டது தினமணி கதிர் (22.8.1975) அது உண்மையல்ல என்று சில நாள்களிலேயே அம்பலமாகி விட்டது.

ஒழுக்கக் கேடு என்பது சாராயம் குடிப்பது மட்டுமல்ல; பிறன் மனை விழைவது மட்டுமல்ல; திருடுவது, கொள்ளை அடிப்பது மட்டுமல்ல; பொய்யான புரட்டுகளை மக்கள் மத்தியில் ஏற்றிச் சவாரி செய்வதும், சுரண்டுவதும்கூட மகாமகா ஒழுக்கக்கேட்டின் உச்சமே!

- கருஞ்சட்டை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner