எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருஞ்சட்டை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் தீ. கடைகள் எரிந்து சாம்பல்; கோயில் தூண்கள் சிலைகள் வெடித்துச் சிதறின.
அயேடப்பா - இந்த மதுரை மீனாட்சியைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் 'பீலா' விட்டார்கள். அவள் மகா சக்தி வாய்ந்தவள் மகிஷாசுரனைக் கொன்றவள் - மகாக் காளி, பத்திரக்காளி என்று எப்படியெல்லாம் ஸ்தல புராணங்களை எழுதிக் குவித்து வைத்துள்ளனர்.

காளியாவது மூளியாவது: சக்தியாவது.. வெங்காய மாவது எல்லாம் வெத்துவேட்டு. அது ஒரு சிலை; ஒரு சிற்பியால் அடித்து வைக்கப்பட்டது.

அது ஒரு பொம்மை, வடலூரார் சொன்னதுபோல சிறுபிள்ளை விளையாட்டே!  நாஸ்திகர்கள் அவர்கள் நாச காலம் அடைவார்கள் என்ற நாத்தழும் பேற பேசு வார்கள். சாபம் விடுவார்கள். மண்ணை வாரி இறைப் பார்கள். ஆனால், இப்பொழுது நடந்ததற்கு என்ன பதில்? ஒரு தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லையே மீனாட்சி யால்!

மக்கள் மத்தியில் ஓர் எண்ணம் எழும் அல்லவா? பக்தர்கள் மத்தியில் அப்படி ஒரு சிந்தனை வந்து விட் டால் என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்தாயிற்றே!

உடனே திசை திருப்ப வேண்டுமே. மீனாட்சி பற்றி மக்களை சிந்திக்க விடக் கூடாதே!

திசை திருப்ப வேண்டிய நெருக்கடி அவாளுக்கு.. ஆரம்பித்து விட்டார்களய்யா.. ஆரம்பித்து விட்டார்கள்.

மீனாட்சிக் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தாம். பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டுமாம்? ஒன்பது ஆண்களிடம் தலா ஒரு ரூபாய் வீதம் ரூ. 9 தர்மம் வாங்கி, அந்த ரூபாயில் வளையல் வாங்கி  அம்மன் கோவிலுக்குச் சென்று வளையல் போட வேண்டும் என்றும், ஆண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீட்டு வாசலில் வெற்றிலை அல்லது வாழை இலையில் பச்சரிசி வைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும் என்ற வதந்தீகள் பரவிட காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் இவற்றைச் செய்ய ஆரம் பித்து விட்டார்களாம்.  (மாலைமுரசு 5.2.2018 பக்கம் 3)

இதற்கென்ன காரணம்? ஏன் இப்படி செய்ய வேண்டும்? யாரும் கேள்வி கேட்டிடக் கூடாது - கப்-சிப் - பக்தி விஷயமாச்சே!

மதுரை மீனாட்சிக் கோயில் பற்றி எரிந்ததே 'அம் புட்டுதான் அம்மன் சக்தியா?' என்று இனி பேச மாட் டார்கள் (பேசக் கூடாது என்பதுதானே இதற்குள்ளி ருக்கும் சூட்சமம்!)

விஷயத்தை வேறு இடத்திற்கு நகர்த்தி விட்டார்களே! இந்தச் சாமர்த்தியம் எங்கிருந்து வரும்?

இது மட்டுமல்ல இதற்கு முன்பு எப்பொழுதெல்லாம் கடவுள் சக்தி கேள்விக் குறியாக்கப்படுகிறதோ  அப் பொழுதெல்லாம் இப்படி ஒரு கரடியைக் கட்டவிழ்த்து விடுவார்கள்.

இராமேசுவரம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்தது, கோவை மாவட்டம், காங்கேயம் சிவன்கோயில் கொடி மரம் சாய்ந்தது.

திருவண்ணாமலை, திருச்செந்தூர் கோயில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைந்தன. ஏதோ கெட்ட சகுனமாம். அலறி அடித்து கோயில்களுக்கு ஓடோடிச் சென்று சிறப்புப் பூஜைகள் என்ன - காணிக்கைகள் என்ன களேபரம்தான் போங்கோ.

கல்யாணம் நடந்தாலும் எழவு விழுந்தாலும் புரோகித சுரண்டல் மட்டும் ஜாம் ஜாமென்று நடந்து கொண்டு தானிருக்கும். இந்த சாமர்த்தியம் வேறு எங்கு நடக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன் திருச்சானூர் தாயாரம்மாள் தாலி அறுந்து விழுந்து விட்டதென்று கூறிப் பெண்கள் எல்லாம் தாலிக் கயிறுகளைப் புதுப்பித்துக் கொண் டார்கள்.

காளஹஸ்தியில் கோபுரம் நெடுஞ் சாண் கிடையாக இடிந்து விழுந்தது. காளஹஸ்தி அம்மனுக்கு இதுதான் சக்தியா என்று மக்கள் எங்கும் பேசப் போகிறார்களோ என்ற அச்சம் உலுக்க, நாட்டிற்கு ஏதோ கெட்ட காலம் என்று அச்சுறுத்தி மக்களைத் திசை திருப்ப யாகங்களைக் கிடுகிடு என செய்ய ஆரம்பித்தனர்.

சிறீரங்கத்தில் ஒரு வைதிகக் கல்யாணத்து ஓம குண்டத் தீயால் ஏற்பட்ட விபத்தால் மணமகன் உட்பட 52 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

வைதிகக் கல்யாணம், அய்யர் நடத்தி வைத்த கல்யாணமாச்சே,  மக்கள் இவற்றில் நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்ற அச்சம் உலுக்க, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் நினைவிருக்கிறதா?

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்தில் மோட்ச விளக்கை ஏற்றச் சொல்லவில்லையா?

உலகம் போற்றும் உத்தமராகக் கொண்டாடப்பட்ட காந்தியாரை கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் சுட்டுக் கொன்றான். என்றதும் மக்கள் எங்கே பார்ப்பான் பக்கம் பாய்ந்து விடுவார்களோ, இந்துத்துவா சக்திகளிடம் கைவரிசை காட்டி விடுவார்களோ என்று தொடை நடுங்கிய அன்றைய காஞ்சி 'மகா பெரியவாள்!' என்ற அவாள் மகுடம் சூட்டும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா?

எல்லாப் பாவங்களுக்கும் தோஷம் கழிப்பு ஸ்நானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கும். இந்துக்கள் அனை வரும் அதனைச் செய்யுங்கள் என்று சொல்லவில்லையா?

விஷயத்தை முடிக்க முழுக்குப் போட வைத்தாயிற்று!

அதனால்தான் தந்தை பெரியார் அடித்துச் சொன்னார் "கடவுளும் மதமும் கெட்டாக வேண்டு மானால் பார்ப்பான் கெட்டாக வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும்" (விடுதலை 24.4.1967) என்று சொன்னதானது, கோயில் கடவுள் கல்லு என்பது எவ்வளவோ உண்மையோ, அவ்வளவுப் பெரிய  உண்மையாகும்.