எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விவாத மேடை:

- கருஞ்சட்டை -

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பற்றி  எரிந்தாலும் எரிந்தது, பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பார்ப்பனக் கைத்தடிகளின் வயிறுகள் எல்லாம் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்து விட்டன.

மதுரை மீனாட்சி என்றால் சாதாரணமா? எப்பேர்ப் பட்ட சக்தி வாய்ந்தவர் தெரியுமா? அவர்தான் இந்த மதுரையம்பதியை கட்டிக் காத்துக் கொண்டிருப்பவர் என்று ‘உதார்’ விட்டு கொண்டிருந்தார்கள்.

அவையெல்லாம் பொய்யாய், பழங்கதையாய் புஷ்வாணமாக போய் விட்டதே என்ற பதற்றத்தில் நம் பிழைப்பில் மண் விழுந்து விட்டதே என்ற நடுக்கத்தில் எதை எதையோ, சாக்கு போக்குகளைச் சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார்கள்.

இதில் ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன வார ஏடான விஜயபாரதம் வலிதாங்க முடியாமல் பிலாக்கணம் பாடும் பரிதாபத்தை என்னவென்று சொல்ல!

“மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழை அறிந்திலார் இலர். மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் என்றவுடன் எல்லோர் நெஞ்சிலும் தேன் பாயும் பாடலாக அமைவது ‘தொடுக்கும் கடவுள் பழம் பாடல்’ என்ற பாடலாகும்.

இப்பாடல் மீனாட்சியம்மையின் மாண்புகளை விளக்கும் மகுடமாக விளங்குகிறது. இப்பாடலைக் கேட்ட மீனாட்சி அம்மை குழந்தை உருவில் வந்து திருமலை நாயக்கர் மார்பில் உள்ள மணி மாலையைக் கழற்றி புலவருக்கு பரிசாக வழங்கியதாக அவ்வரலாறு கூறுகிறது.

புராணம் எல்லாம் வரலாறா?

பாண்டிய நாட்டில் புலவர்கள் அறிவுடன் படைத்த தமிழ்நூல்கள் பாழாகாமல் காப்பவள் மீனாட்சி. படைக்கும் கடவுளாகிய பிரம்மன் படைத்த உலகம், கீழ்ப்பகுதி, மேல்பகுதியாக மாறாமல் காப்பவள் மீனாட்சி. வறுமையாகிய பகைவன் தமிழ்நாட்டை ஆளாமல் காப்பவள்  உலக உயிர்கள் பாவமாகிய கடலில் கலக்காமல் காப்பவள், பாண்டியரும், சோழரும் ஒப்பானவர்கள் என்ற உண்மை நிலை அறியாதவர்கள் உரைக்காமல் காப்பவள் மீனாட்சி. மதுரை நகர் செழிக்குமாறு செய்பவள் மீனாட்சி.

- இப்படியெல்லாம் மீனாட்சியின் சகல வல்ல மைகளையும் வாய் நிறைய குதப்பி எழுதுகிறது ‘விஜயபாரதம்‘ என்ற ஆர்.எஸ்.எஸ்.இதழ்.  (விஜய பாரதம் - 23.2.2018 -பக்கம் 16)

விஜயபாரதமாகட்டும், விஜேயேந்திர சரஸ்வதியா கட்டும் அல்லது அவாளின் ரத கஜ பராக்கிரமப் பண்டிதர்களும் சரி, ஒரே ஒரு சின்ன கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு அடுத்த அடி வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பிடித்ததே அந்த சிறு தீ!- அது சக்தி வாய்ந்ததா - அல்லது மதுரையை ஆட்சி செய்வதாக மகோன்னத சாமரம் வீசப்படும் அந்த மீனாட்சி சக்தி வாய்ந்தவளா?

மரியாதையாக பதில் சொல்லி விட்டு, வீரப் பிரதாபங்களை அள்ளி வீசட்டும் இந்த அக்கிரகார இதழ்.

இதற்குப் பதில் சொல்ல வக்கில்லாத இந்த வெட்கம் கெட்டதுகள் எழுதியதைப் பாருங்கள் - எகனை மொகனையாக. கடவுளுக்கு உருவமில்லை கண்ணுக்குத் தெரியாதவர் என்று கூறியவர்கள் மீனாட்சி எங்கே வந்தாள், சுந்தரேசுவரர் எங்கே வந்தார்? என்ற கேள்விக்கு பதில் சொல்லட்டும்! சரி உயிரோடு அன்று உலவிய அந்த மீனாட்சி இப்பொழுது எங்கு உயிரோடு உலவுகிறாராம்? கடவுளின் லீலைகள் எல்லாம் இறந்தகாலம் தானா?

இன்னொரு வெட்கக் கேட்டை கேளுங்கள் - கேளுங்கள்!

ஆக்கிரமிப்பாளன் மன்னர் மாலிக்காபூர் படையெடுப்பின் போது 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயில் இடித்து தரை மட்டமாக்கப் பட்டது என்றும் விஜயபாரதம் விவஸ்தை இல்லாமல் எழுதுகிறதே- இப்படி எழுதுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?
இப்படி எழுதுகிறோமே - மாலிக்காபூர் படை யெடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இடித்து தரைமட்டமாக்கி விட்டான் என்று எழுதுகிறோமே அதன் மூலம் மீனாட்சியாவது - சக்தியாவது - மண்ணாங்கட்டியாவது, அது வெறும் பொம்மைதான் என்று நாமே ஒப்புக்கொண்டதாக ஆகாதா?  என்று ஒரு கணம் சிந்தித்து இருக்க வேண்டாமா?

சிந்திப்பதாவது  - வெங்காயமாவது , பக்தி வந்தால் தான் புத்தி போய் விடுமே!

இன்னொரு விஷயத்தை கேளுங்கள் - கேளுங்கள்!

சைவ வைணவ அய்க்கியம் என்றால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்தான். கூடலழகர் (பெருமாள்) சகோதரி மீனாட்சியை சிவபிரானான சுந்தரேஸ் வரரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த தலம் மதுரை. சிவத்தலமாம் மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டிய திருமலை நாயக்கர் வைணவர். இந்த அய்க்கியத்தை உடைக்கத்தான் தீ வைத்தார்களோ என்று தோன்றுகிறது.

சக்தி வாய்ந்த சிவன் - பெருமாள் அய்க்கியத்தை மற்றவர்களால் உடைக்க முடியும் என்று ஒப்புக் கொள்வதிலிருந்தே சிவனாவது - பெருமாளாவது எல்லாம் கடைந்தெடுத்த ‘டூப்’ என்பது அம்பலமாகி விட வில்லையா?

“எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையை கொண்டு வா கோவணம் கட்டிக்கிறேன்” என்று சொன்னவன் போல - அத்தோடாவது நின்று தொலையக்கூடாதா?

“நெருப்பின் வேகம் எப்படியிருந்தாலும் அது பரவும் விதம் வெறும் சாதாரண தீ விபத்தாக எண்ணத் தோன்றவில்லை. ஏதோ ஒரு துஷ்ட தேவதை இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத்தக்க வகையில் இருக்கிறது.

இதுவும் சாட்சாத் அதே விஜயபாரதத்தின் எழுத்துதான் (பக்கம் 11)

ஆக, மதுரை மீனாட்சி அம்மன் சக்தியை விட சுந்தரேஸ்வரர் சக்தியை விட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது - அது துஷ்ட சக்தி என்று விஜயபாரதம் ஒப்புக் கொண்டு விட்டதா இல்லையா?

அதானே பார்த்தோம் - இந்த பிரச்சினையிலும் கிறித்தவன், முசுலிம் பேர்களை இழுக்கவில்லையே. எப்படி மறந்தது விஜயபாரதம் என்று  நினைத்த நேரத்தில் ‘நாங்களாவது திருந்துவதாவது’ எங்கள் ரத்தத்தோடு பிறந்த குரோதம் ‘எங்களை விட்டு போய் விடுமா’ என்ன... வாருங்கள் கடைசி பக்கத்திற்கு என்று விஜயபாரதம் அழைத்துச் செல்கிறது.

ஒரு கேள்வி - பதில்

கேள்வி: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து பற்றி?

பதில்: இது மட்டும் ஒரு மசூதியிலோ, சர்ச்சிலோ நடந்திருந்தால் தமிழகத்தில் ஒரு கூட்டம், இது ஒரு பெரிய சதி என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். எரிந்தது இந்துக் கோயில்தானே... அதனால் தான் வாய் மூடி மவுனிகளாக உள்ளனர் என்று பதில் சொல்கிறது அந்த அக்ரகார இதழ்.

மருமகன் அடித்ததற்கு கூட நான் கவலைப்பட வில்லை; அதைப் பார்த்து சிரித்தாளே சக்காளத்தி, அதைத்தான் என்னாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாராம் ஒருவர்.

ஒரு இந்துக் கோயில் பற்றி எரிந்தது கூட கவலைப் படவில்லை. ஒரு மசூதியும், சர்ச்சும் எரியவில்லையே என்ற ஆதங்கத்தின், வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு தானே -இது!

அதனால் என்ன ஆர்.எஸ்.எஸ் கும்பல் குஜராத் திலும், ஒடிசாவிலும் எரிக்காத சர்ச்சுகளா?  இடிக்காத மசூதிகளா?
அட வெட்கம் கெட்டதுகளே - உம் பெயர்தான் விஜயபாரதமா?