எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட்' கொண்டு வந்தது - அந்த அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!

உண்மை நிலை என்ன?

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (யு.பி.ஏ.) இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று நீட்' கொண்டு வரப்பட்டது (21.12.2010).

இதனை எதிர்த்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்  குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு கடிதம் எழுதியது. கடிதத்தோடு நின்றுவிடாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி வழக்கும் தொடுத்தது. அந்த வழக்கு பின் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

நீட்'  செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது (18.7.2013). மருத்துவக் கவுன்சிலின் வேலை தேர்வு நடத்துவதல்ல என்றும் உச்சநீதிமன்றம் மண்டையில் அடித்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், விக்ர மஜீத் சென், அனில்தவே ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில், அனில் தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மைத் தீர்ப்பின் அடிப்படையில் நீட்' செல்லாது என்று ஆக்கப்பட்டது.

அதன்பின் பி.ஜே.பி. ஆட்சியில் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (21.1.2016) அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப்பட்டது. இதில் வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், எந்த நீதிபதி - மூவர் கொண்ட அமர்வில் நீட்'டுக்கு ஆதரவாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கினாரோ, அந்த அனில் தவேதான் இந்த அய்வர் கொண்ட அமர்வுக்குத் தலைவராம் - (நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாகி விட்டது!)

நீட்' தேர்வு செல்லும் என்று இந்த அமர்வு தீர்ப்பளித்துவிட்டது (16.3.2016).

உண்மை இவ்வாறு இருக்க தி.மு.க. நீட்'டை ஆதரித்தது என்று சொல்லுவது பித்தலாட்டப் பிரச்சாரமே!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், நீட்' நீக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தது - போராடியது திராவிடர் கழகமும்,  திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டின் சமுகநீதி சக்திகளும்!

18.12.2016 இல் எடுத்த முடிவின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அடங்கிய முத்தரப்பினரையும் இணைத்து திருவாரூர், நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன (31.1.2017). அதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களைக் கழகத் தலைவர் சந்தித்துப் பாராட்டியதுடன், இதனை எதிர்த்து யாரேனும் வழக்குத் தொடரக்கூடும் என்பதால், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி, மத்திய அரசை அணுகினால் நடப்பாண்டில் நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் அழுத்தமாகவே குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இரு மசோதாக்களை நிறைவேற்றியும், மத்திய இராணுவ அமைச்சர் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவே இல்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். நீட்' தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன; அதன் நிலை என்ன? என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து வந்த பதில் (8.5.2017) பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. நீட் தொடர்பான எந்த மசோதாவும் குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு வரவில்லை என்ற அந்தப் பதில்தான் அந்த அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதக்கள் - அவை தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே மத்திய பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு முடக்கி விட்டது - சதி செய்தது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கைக் காப்பாற்றத் தவறியவர் என்பதும் புரியவில்லையா? சமுகநீதிக்கு எப்பொழுதுமே பி.ஜே.பி. எதிரானதுதானே!

அதைவிடக் கொடுமை - கடிதங்களை அனுப்பியதோடு அ.இ.அ.தி.மு.க. அரசின் கடமை முடிந்துவிட்டதா? மேற்கொண்டு மத்திய அரசிடமிருந்து ஒப்புதலைப் பெற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றியது  - அ.இ.அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை வெறும் சடங்குதானா?

தமிழ் மண்ணுக்கே உரித்தான சமுகநீதிப் பிரச் சினையில்கூட அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை - மத்திய அரசை வலியுறுத்தும் திராணியில்லை.

பா.ஜ.க. ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்வதே தங்களின் திருப்பணி' என்று அ.இ.அ.தி.மு.க. முடிந்த முடிவுக்கு வந்துவிட்டதைத்தானே இது காட்டுகிறது.

இந்த நிலையில், தொடக்க முதலே நீட்'டுக்குப் பல வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க.மீது பழி போடுவது பச்சைப் பித்தலாட்டம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

- கருஞ்சட்டை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner