எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமுக இயக்கமாக இருந்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதால் ஆசிரியர் அவர்களை நாம் நம்பியிருக்கிறோம்!

இந்த மேடை இன்றைய தமிழகத்தைப் பாதுகாக்கும்

தந்தை பெரியாரின் நினைவு நாள் கூட்டத்தில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் உரை

சென்னை, ஜன. 7- அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக இயக்கமாக இருந்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதால்,  ஆசிரியர் அவர்களை நாம் நம்பியிருக்கிறோம் என்றும், இந்த மேடை இன்றைய தமிழகத்தைப் பாதுகாக்கும் என்றார் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.

24.12.2016 அன்று உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக் கூட்ட நிகழ் விற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களே,

இங்கே சிறப்புரையாற்ற வந்திருக்கின்ற எனது கெழுதகை நண்பர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

வரவேற்புரை நல்கிய தோழர் அன்புராஜ் அவர்களே,

அறிமுகவுரை வழங்கிய கவிஞர் பெருந்தகை கலி.பூங்குன்றன் அவர்களே,

எனக்குப் பின் சிறப்புரையாற்ற இருக்கின்ற அருமை தங்கை உலகநாயகி பழனி அவர்களே,

மருத்துவர் சாமி.தீபக் அவர்களே,

இணைப்புரையையும், நன்றியுரையையும் வழங்கவிருக் கின்ற அறிஞர் பெருமக்களே, கூடியிருக்கின்ற பெருமக்களே உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் இல்லையென்றால்...

அண்மைக்காலமாக, சற்று உடல்நலக் குறைவு காரணமாக, பேசுவதைத் தவிர்த்து, பேச்சாளன் என்பதைவிட்டு, கேட்பாளன் என்கிற நிலையில் இருந்துகொண்டிருக்கின்றேன். அந்த நிலையில், இந்த மேடையில் தந்தை பெரியாருடைய வரலாற்று நூலை வெளியிட வரவேண்டும் என்று சொன்ன பொழுது, வருகிறேன், மேடையில் அமர்கிறேன், இந்த நாளில் மேடையில் இருப்பது என்பது எனக்குப் பெரிய பெருமைக் குரியது என்று எண்ணத்தினால் அவர்களிடத்தில் சொன் னேன்.

காரணம், தந்தை பெரியார் இல்லையென்றால், நானெல் லாம் இந்த நேரத்தில், இந்த மேடையில் நிற்க முடியாது.

துவக்கப்பள்ளி மட்டுமே உள்ள ஒரு சிறிய கிராமம். வேறு பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடியாது. ஒரு கையளவு நிலம் கொண்டு, அந்த நிலத்தில், ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருப்பவனாக, ஏதோ ஒரு சிறு விவசாயத் தொழில் செய்பவனாக இருந்து இருக்க வேண்டிய என்னை - ஓரளவு இந்த மேடையில் ஏற்றுகின்ற தன்மையை தந்தது - தந்தை பெரியார் தமிழர்கள் அனைவரும் படிக்கவேண்டும்; படிக்கவேண்டும்; படிக்கவேண்டும் என்று சொன்னதுதான்.

என்னுடைய பெரிய தந்தை உறவினராகிய நாமக்கல் கருப்பண்ணன் அவர்கள் - அவர்களை சிட்டு என்று ஆசையோடு அழைப்பார்கள். அய்யா அவர்களுக்கு மிகமிக நெருங்கியவர். நாமக்கல்லைத் தாண்டிச் செல்கின்ற நேரத்தில், கருப்பண்ணனைப் பார்க்காமல், தந்தை பெரியார் அவர்கள் செல்லமாட்டார்கள்.

அவரும், என்னுடைய மாமனாரைப் பார்த்து, தம்பியை நீங்கள் எப்படியாவது படிக்க வைக்கவேண்டும் என்பார் அன்றைக்கு அவர்கள் என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாது இருந்திருப்பார்களேயானால், ஒரு நான்காம் வகுப்போடு, சிவியாம்பாளையத்தில் இருந்திருக்க வேண்டியவன் தான் நான்.

தந்தை பெரியார் அவர்கள்

நமக்கு என்ன செய்திருக்கிறார்...

ஆகவே, நான் இன்றைக்கு ஒன்றை சொல்கிறேன், தந்தை பெரியார் அவர்கள் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்ப தற்கு, வேறொன்றும் வேண்டாம், ஒரு திருமண அழைப்பி தழை எடுத்துப் பார்த்தால் போதும்.

என்னுடைய திருமண அழைப்பிதழைப் பார்த்தால், நான்  பி.ஏ. முடித்தவன்; என்னுடைய துணைவியார் 6 ஆம் வகுப்புவரை படித்தவர். ஆகையினால், அந்த அழைப்பிதழில், நண்பர்கள் என்னுடைய பட்டத்தைப் போடவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், நானோ, ‘‘என்னுடைய பெயருக்குப் பக்கத்தில் பட்டத்தைப் போட்டால், என்னுடைய துணை வியார் பெயருக்குப் பக்கத்தில் எதுவும் இல்லாமல் இருக்கும். ஆகவே, இரண்டு பேருடைய பெயர் மட்டும் இருந்தால் போதும் என்று அந்தத் திருமண அழைப்பிதழை அச்சடித் தோம். அன்றைய நிலை இது.

ஆனால், இன்றைக்கு ஒரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பார்த்தால், மணமக்களாகட்டும், அந்த மணமக்களுக் குப் பின், தங்கள் வரவேற்பை - தங்கள் வருகையை எதிர் பார்க்கும் என்று ஒரு 20 பேர்களின் பெயர் இருக்கும். அந்தப் பெயர்களிலோ, மணமக்களின் பெயர்களிலோ எந்தப் பெயரி லாவது பட்டங்கள் இல்லாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி இருக்கும்.

இவை அத்தனைக்கும் காரணம், தந்தை பெரியார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் சொன்ன அந்த அழுத்தம், ஆக்கம் இவையெல்லாம் நம்மை ஆக்குவித்தன.

அவர்களுடைய பண்பு, அவர்களுடைய நிலை எல்லா வற்றையும் சொல்கிறபொழுது, இங்கே ராதா அவர்களின் பெயரால் அமைந்துள்ள மேடையில் நின்று பேசுகிறோம்.

அவரைப் போன்ற துணிச்சல் மிக்கவர்கள் நாட்டிற்கு மிகமிகத் தேவை. தஞ்சாவூரில் 'ஓரிரவு' நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நாடகத்தை நாங்கள் போய் பார்க் கின்ற நேரத்தில், அவருடைய வீர நிகழ்ச்சிகளையெல்லாம் ஓரளவிற்குக் கண்டிருக்கின்றோம்.

நான் படித்திருக்கின்ற அந்தப் படிப்பிற்கு அடிப்படை காரணமாக இருந்த அந்த நிகழ்ச்சியினாலே இங்கே வந்தேன். இந்த மேடையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர் கள் இருக்கிறார்கள்; அருமை நண்பர் தொல்.திருமாவளவன் இருக்கிறார்கள். அவர்களுடைய நீண்ட உரையை, உங்க ளைப் போலவே, நானும் கேட்க ஆசைப்படுகிறேன்.

இங்கே வெளியிடப்பட்ட நூலை, அருமையாகத் தயாரித் திருக்கிறார்கள். ஒரு வரலாற்று நூல் எவ்வாறு அமைய வேண்டுமோ, அதுபோல, செய்திகளை கச்சிதமாக செதுக்கி, எங்கெங்கே என்னென்ன அமைக்கவேண்டுமோ, அவற்றை யெல்லாம் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

அந்த அமைப்பிலே ஒரு மூன்று அதிகாரத்தை மட்டுமே இங்கே உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அந்த மூன்றும் இன்றைக்கு மிகமிக அதிகமாகத் தேவைப்படுகிறது.

இன்றைய தமிழ்நாட்டிற்கு

மிகமிகத் தேவை

ஒன்று, தந்தை பெரியாரும் - ராஜாஜியும் சந்தித்த - நபிகள் நாயகம் கூட்டத்தைப்பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. அந்தக் கட்டுரை இன்றைய தமிழ்நாட்டிற்கு மிகமிகத் தேவையாகும்.

ஒரு தமிழன், இன்னொரு தமிழனோடு கருத்து வேறுபாடு இருக்கிறது என்கிற காரணத்திற்காக, பேசாதிருக்கின்ற தன்மை - இந்தத் தமிழ்நாட்டில் உள்ளதுபோன்ற கொடுமை வேறெங்கும் இருக்காது என்று நினைக்கிறேன்.

உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள்; ஆட்சியில் அல்லது கட்சியில் வேறுபட்டவர்களாக இருந்தால், பொது இடங்களில் நேருக்கு நேர் பார்ப்பதற்குக்கூட அஞ்சுகின்ற அல்லது ஒதுங்கிப் போகின்ற இந்த நிலையைப் பார்த்தால், நாம் ஏன் நண்பர்கள் என்ற முறையில் பழகுவதில்கூட நமக்கு ஒற்றுமை இல்லையா? கலந்து பேசக்கூடாதா? என்பதைப்பற்றி எண்ணிப் பார்க்கின்றபொழுது,

இந்த அன்பார்ந்த இரு நண்பர்கள் - ராஜகோபாலாச்சாரியார் அவர்களும், பெரியார் அவர்களும் மேடையில் அமர்ந்து பார்த்தபொழுது, இரண்டு பேரும் உரையாற்றிய அந்த நிகழ்வு இந்த நூலில் கட்டுரையாக மிகமிக அருமையாக அளித் திருக்கிறார்கள்.

திரு.வி.க. அவர்கள் மறைந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் தமிழ்மீது கொண்டிருந்த பற்றும், தமிழறிஞர்கள்மீது கொண்டிருந்த பற்றும் வெளிப்படும்படியாக அந்தக் கட்டுரை மிக அருமையாக இருக்கிறது.

கனகசபை - பொன்னம்பலனார்

என்று மாறியது

அவர்கள் எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைத்தவர்கள். நானும்கூட நினைக்கிறேன், சூழ்நிலைதான் மனிதனை உருவாக்குகிறது. நான் படித்த பள்ளி - நாமக்கல் பக்கத்திலுள்ள கந்தசாமி கவுண்டர் உயர்நிலைப்பள்ளி. அந்தப் பள்ளியில் போய் சேர்ந்தேன், அப்பள்ளியில் ஒரு தமிழாசிரியர் இருந்தார், அவருடைய பெயர் பொன்னம் பலனார் என்பது. அவருடைய பெயர் கனகசபை. அந்த கனகசபை - பொன்னம்பலனார் என்று மாறியது.

தமிழ்நாட்டில், வடமொழி பெயர்களை நீக்கிவிட்டு, தமிழ்ப் பெயர்கள் வரவேண்டும் என்ற ஒரு இயக்கத்தினால், மேடையில் இருக்கின்ற பலர் பெயரை மாற்றியவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் பெயர்களைக் கேட்டால், தமிழா? ஏதோ, என்னவென்று தெரியாமல் பெயர் வைக்கிறார்கள்.

என்னுடைய பக்கத்து வீட்டில் உள்ள குழந்தையை என் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அவருடைய பெயர் என்னவென்று கேட்டேன், சாய்சரண் என்றார்கள்.

கடைசியில் என்னாகும், ‘சாய் சாய்’ என்று அந்தக் குழந்தையை அழைப்பார்கள். டீ விற்கும் கடையில் சாயா கொடு என்பார்கள் - அந்த நிலைக்குப் போய்விடும்.

சேலத்திற்குக் கல்வி அதிகாரியாக

வந்த சுந்தரவடிவேலு அவர்கள்

ஆகவே, தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும் என்கிற எண்ணம்கூட இல்லாது இருந்த அந்த சூழ்நிலையில், பொன்னம்பலனார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளிக்கு, சுந்தரவடிவேலு அவர்கள் அப்பொழுதுதான் முதன்முதலாக சேலத்திற்கு கல்வி அதிகாரியாக வருகிறார்கள்.

பொன்னம்பலனார் அவர்களை தொடக்க காலத்தில் நமது ஆசிரியர் அவர்கள் பார்த்தார்களோ என்னவோ தெரியாது. கருத்த உருவம் - அவர் ஆற்றிலே குளித்துவிட்டு, நெற்றி நிறைய மூன்று கோடுகளை இட்டு சைவப் பழமாக வருவார். சைவப் பழமாக வந்தவர், கடைசியில் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்திற்குச் செல்லக் கூடிய அளவிற்கு மாறினார்.

அவர் தமிழ்ப்பாடத்தை நன்றாக நடத்துவார்; தூய தமிழில் தான் பேசவேண்டும். ஒரு சொல்கூட வடசொல் கலக்கக் கூடாது.

ஆகவே, அந்த ஊரிலிருந்த சில முக்கியமானவர், இவர் திராவிடர் கழகத்தைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்; இவர் ஒரு சுயமரியாதைக்காரர் என்று கல்வி அதிகாரிக்குப் புகார் கடிதம் எழுதினார்கள்.

கல்வி அதிகாரியாக இருந்த சுந்தரவடிவேலு அவர்கள் பள்ளி ஆய்விற்கு வருகின்றபொழுது, அப்படி வரும்பொழுது முதலாவதாக பொன்னம்பலனார் வகுப்பிற்குத்தான் வந்தார். இவரும் பாடம் நடத்தத் தொடங்கினார்.

அன்றைக்கு நடத்திய பாடம் என்னவென்றால்,

தன்னுடைய மனைவியை விற்றவன் எவன்

மனைவியினுடைய சேலையை கிழித்து காற்றில் விட்ட வன் எவன்?

என்பதுபோன்று அந்த பாடல் அமைந்திருந்தது. அந்தப் பாடத்தை அவர் நடத்தினார்.

சுந்தரவடிவேலு அவர்களைக் கையைக் காட்டி துணிச்சலோடு சொன்னார்

பாடத்தில் இருப்பதை நான் நடத்துகிறேன். இந்த ஊரில் இருக்கின்ற அப்பைகள் எல்லாம் ஏதோ ஒன்றைச் சொல்லி என்மேல் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். அது என்ன வென்று விசாரிக்க இவரும் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார் என்று, சுந்தரவடிவேலு அவர்களைக் கையைக் காட்டி சொன்ன அளவிற்குத் துணிச்சலோடு இருந்தவர் அவர்.

நாமெல்லாம் இந்த நிலைக்கு இன்றைக்கு வந்திருக்கிறோம் என்றால், தேசிய கல்லூரியில் படித்ததினால்தான் நான் திராவிட இயக்கத்திற்கு வந்தேன். காரணம், அங்கே இருந்த பள்ளி வேலையாளைத் தவிர, மற்ற அத்தனை பேரும் பார்ப்பனர்கள்.

நான் பி.ஏ. கணக்கு வகுப்பு படிக்கின்றபொழுது, 33 பேர் அந்த வகுப்பில் இருந்தோம். அதில் நான் ஒருவன் மட்டும் தான் பார்ப்பனரல்லாதவன். எனக்குப் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருப்பார். திருச்சியிலுள்ள ஒரு பட்டுக்கடை முதலாளி யின் மகன் அவர். நாமம் போட்ட ஒரு ஆசிரியர் வருவார், ‘‘டே ஷேசு, வீட்டுக் கணக்குப் போட்டு வந்திய்யா’’ என்று அழைப்பார். பக்கத்தில் நான் அமர்ந்திருப்பேன், ‘‘என்ன மிஸ்டர் செல்லப்பன், ஓம் ஓர்க் போட்டீங்களா?’’ என்பார்.

அவரை ‘டே ஷேசு’ என்று அழைத்தபொழுது, என்னை மிஸ்டர் செல்லப்பன் என்று அழைத்தபொழுது, அதில் இருந்த குத்தல் இருக்கிறதே, எனக்கு அருகில் இருந்தவர்க ளிடம் காட்டிய உரிமை, என்னிடம் இல்லையே என்கிற எண்ணம்தான் என்னை அன்றைக்குத் தூண்டியது என்பதற் காக இதனைச் சொல்கிறேன்.

பார்ப்பனர்களாகப் பார்த்து பதவி உயர்வு

அதனை மாற்றி, அடுத்தாற்போல, சுந்தரவடிவேலு அவர் கள், நாமக்கல்லில் இருந்த அய்யா கருப்பண்ணன் அவர்கள், நாமக்கல் பள்ளியில், தலைமை ஆசிரியர்களுக்காக சில ஆசிரியர்கள் பட்டியல் உயர்வு போடவேண்டும். அதில், பார்ப்பனர்களாகப் போட்டுவிட்டு, இரண்டு அருமையான ஆசிரியர் பெயரை போடாமல் விட்டுவிட்டார்கள். ஒருவர் ரங்கசாமி செட்டியார்; இன்னொருவர் கிருஷ்ண பண்டாரம் என்பது.

அந்த இருவரைவிட சிறந்த ஆசிரியர்கள் இருக்க முடியாது. சுந்தரவடிவேலு அவர்கள் அங்கே வந்தபொழுது, எங்கள் பள்ளியில் இருந்து மற்ற பள்ளிகளுக்கெல்லாம் செல் வார். அவருக்குக் காலையில் சிற்றுண்டி கொடுத்தல் முத

லிய பணிகளை செய்ததால், அவருடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

கல்வி அதிகாரியை சந்தித்த

நாமக்கல் கருப்பண்ணன்

ஆகவே, நாமக்கல் கருப்பண்ணன் அவர்கள் என்னிடம், ‘‘எங்களைக் கொண்டு போய் கல்வி அதிகாரியிடம் அறிமுகப் படுத்தி வை’’ என்று சொல்லி, சேலத்திற்கு அழைத்து வந்தார்கள்.

சுந்தரவடிவேலு அவர்களை சந்தித்தோம். நான் அவரிடம், நாமக்கல்லில் இருக்கக்கூடியவர்கள் உங்களிடம் ஏதோ சொல்லவேண்டுமாம்; அறிமுகப்படுத்துவதற்காக என்னை அழைத்து வந்தார்கள் என்று சொன்னேன்.

சுந்தரவடிவேலு அவர்களை சந்தித்த நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள், ‘‘எங்கள் பள்ளிக்கூடத்தில் இரண்டு ஆசிரி யர்கள் இருக்கிறார்கள். அங்கே இருந்த பல ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், இந்த இரண்டு பேரும் இன்னும் பதவி உயர்வு பெறவில்லை. அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டும்’’ என்று சொன்னார்கள்.

அவர்கள் கொடுத்த மனுவை வாங்கிப் படித்த சுந்தர வடிவேலு அவர்கள், ‘‘அதற்கென்ன செய்துவிடலாம்’’ என்று சொல்லிவிட்டு, ஒரு வார்த்தை சொன்னார்,

கிருஷ்ண பண்டாரத்தை நம்பலாம்; ரங்கசாமி செட்டியாரை நம்ப முடியாது போலிருக்கிறதே!

நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள கிருஷ்ண பண்டா ரத்தை நம்பலாம் போலிருக்கிறது; ஆனால், ரங்கசாமி செட்டி யாரை நம்ப முடியாது போலிருக்கிறதே என்று சொன்னார்.

ஏனென்று கேட்டால், கிருஷ்ண பண்டாரத்தின்மேல் பல பேர் புகார் எழுதியிருக்கிறார்கள். ரங்கசாமி செட்டியாரின்மேல் ஒரு புகாரும் வரவில்லை. ஆகையால், இவர் எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுப்பார் போலிருக்கிறதே; கிருஷ்ண பண்டாரம் ஒருவர் மட்டும்தான் உறுதியாக இருப்பார் போலிருக்கிறதே. அவருக்கு வேண்டுமானால், பதவி உயர்வு கொடுத்துவிடலாம் என்று சொன்னார்கள்.

உடனே இவர்கள், ‘‘இல்லை இல்லை. அவர் பண்பாளர்; பாடம் உண்டு, தானுண்டு என்ற அளவில் ரங்கசாமி செட்டி யார் இருப்பார்’’ என்று சொன்னார்கள்.

அந்த ஆண்டு இரண்டு பேருக்கும் பதவி உயர்வு கிடைத் தது. எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இப்படி யெல்லாம் பார்த்துப் பார்த்து பதவி உயர்வுகள் கொடுத்த தினால்தான், இன்றைக்கு நம்மில் பலர் பதவியில் இருக்கின்ற சூழ்நிலை இருக்கிறது. இதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நான் ஒரு நல்ல பேச்சாளனாகக் கருதப்படக் கூடியவன். பேச்சாளன் ஆனதே, நான் தேசிய கல்லூரியில் படித்ததினால் தான். அந்தக் கல்லூரியில், அத்தனை பேரும் பார்ப்பன ஆசிரியர்கள்தான்.

இந்த நாட்டுக்கு இந்தி  பொது மொழியாகவேண்டுமா? வேண்டாமா?

நான் பி.ஏ. படிக்கும்பொழுது அரையாண்டு தேர்வு நேரத் தில், ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. அந்தப் பட்டிமன்றத் திற்குத் தலைவர், வரதாச்சாரி. உச்சிக்குடுமி வைத்துக்கொண்டு, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டிருப்பார். கொழுத்த பார்ப்பனர் அவர். கட்டாயம் இந்தி வேண்டும் என்று வகுப்பில் சொல்லக்கூடியவர்.

அப்பொழுதெல்லாம் அரையாண்டுத் தேர்வு என்று சொன்னால், சில மாணவர்களை தேர்வுக்கு அனுப்பாமல்கூட நிறுத்தலாம். செலக்சன் எக்சாமினேசன். பேராசிரியர் நினைத்தால் நிறுத்திவிடலாம்.

அந்தப் பட்டிமன்றத் தலைப்பு என்னவென்று கேட்டால், ‘‘இந்தி இந்த நாட்டிற்குப் பொது மொழியாக வேண்டுமா? வேண்டாமா?’’

பட்டிமன்றத் தலைவர் யார் என்றால், கட்டாயமாக இந்தி வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.

அரையாண்டு தேர்வு நடைபெறுகிற நேரம்- அவர் விரும்பினால் தேர்வுக்கு அனுப்பாமல் நிறுத்திவிடலாம். ஆகவே, அந்தப் பட்டிமன்றத்தில் பேசிய அத்துணை பேரும், இந்தி இந்த நாட்டிற்குப் பொது மொழியாக வேண்டும், வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் நின்ற இடம்

'இந்தி வேண்டாம்' என்று பேசுகிற இடம்!

எனக்கு அந்தப் பட்டிமன்றத்தில் உட்கார்ந்து கொண்டிருப் பதற்கே எப்படியோ போல் இருந்தது. நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். எழுந்து வெளியில் செல்லலாம் என்பதற்காக எழுந்தேன், எனக்குப் பின் பரமசாமி என்பவர் உட்கார்ந் திருந்தார். அவர் என்னை வேகமாகத் தள்ளினார், அப்படி அவர் தள்ளிய நேரத்தில், மேடைக்கு அருகாமையில் சென்று விட்டேன். அப்படி வந்ததோடு மட்டுமல்ல, இந்தி வேண்டும் என்பவர் அந்தப் பக்கம் நின்று பேசினால், நான் போய் நின்ற இடம், இந்தி மொழி வேண்டாம் என்று பேசவேண்டிய இடம்.

அந்தப் பட்டிமன்றத் தலைவரோ, ‘‘இங்கே ஒரு மாணவர் இந்தி பொது மொழியாக வேண்டாம் என்று பேச வந்திருக் கிறார்’’ என்று சொல்லிவிட்டார்.

இதனை கேட்ட நான் ஓடியிருக்கலாம். ஆனால், மனதில் இருந்த அந்த எழுச்சி, பெரியார் அவர்களுடைய, அண்ணா அவர்களுடைய, கலைஞர் அவர்களுடைய, நாவலர் அவர்களுடைய பேச்சையெல்லாம் கேட்டதால், ‘‘என்னதான் ஆனாலும் பரவாயில்லை என்று ஒரு அய்ந்து மணித்துளிகள்’’ பேசினேன்.

அன்றைக்கு நான் மேடை ஏறாமல் இருந்திருந்தால்...

நான் என்னுடைய பேச்சை முடித்து வெளிவந்தவுடன், ‘‘உன்னால் பேச முடியும், உன்னால் பேச முடியும்’’ என்று மற்ற மாணவர்கள் தூண்டி விட்டதின் விளைவுதான், அன்றி லிருந்து பேசத் தொடங்கிய நான், பேச்சாளன் ஆனேன். ஒரு வேளை, அன்றைக்கு நான் மேடை ஏறாமல் இருந்திருந்தால், நான் பேச்சாளன் ஆகாமல் இருந்திருப்பேன்.

நாங்கள் நம்பியிருப்பதெல்லாம்,

ஆசிரியர் அவர்களைத்தான்

ஆகவே, எல்லா வகையிலும் பார்ப்பன நெருக்கம்தான் நம்மை ஒன்றுபடுத்தியிருக்கிறது; முன்னேற்ற செய்திருக்கிறது. ஆனால், இன்று பெரியார் இல்லாத சூழ்நிலையில், பழைய சூழ்நிலை வந்துவிடுமோ என்கிற அச்சம் நமக்கு இருக்கிறது. இந்த நேரத்தில் நாங்கள் நம்பியிருப்பதெல்லாம், ஆசிரியர் அவர்களைத்தான்.

அதேபோல, ஜாதி ஒழிப்பிற்காக நாங்கள் நம்பியிருப்பது, என்னு டைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன் அவர் களைத்தான்.

இன்றைக்கு மேடைகளில் நாம் பார்த்தால், ஒரு நண்பன், இன்னொரு நண்பனோடு பேசுவதற்கு என்ன தடை. ஒரு கட்சிக்காரரை பார்த்தால், வேற கட்சிக்காரர் ஓடிவிடுகிறார். திருமண வீடுகளில், மற்ற இடங்களில் நடைபெறும் நிகழ்வு களில் கலந்துகொள்வதைக்கூட மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள் என்றால்,

தந்தை பெரியாரும் - ராஜாஜியும் எவ்வாறு பழகினார்கள் என்று இங்கே வெளியிடப்பட்ட நூலில் உள்ள கட்டுரையைப் படித்தால் போதும்; மனிதன் மனிதனாக, மற்றவர்களோடு கலந்து பழகவேண்டும் என்ற அந்த எண்ணத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.

இங்கே இத்தனை பேர் கருப்பு சட்டை அணிந்து கொண் டிருக்கிறீர்கள். ஒருவர் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, கையில் விசிறி வைத்துக்கொண்டு மேடைக்கு வந்தார். அவரை இங்கே ஏன் வந்தீர்கள் என்று கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அவரும் மனிதர்; நாமும் மனிதர். அவருடைய கொள்கை வேறு; நம்முடைய கொள்கை வேறு. கொள்கையில் ஒத்துப் போகவேண்டும் என்கிற இன்றியமை யாமையே இல்லை.

அந்தக் கொள்கையை மறந்து, நண்பர்கள் என்கிற முறையில் கூடுகின்றபொழுது, மனிதனை மனிதனாக மதிக்கின்ற அந்தப் பண்பு இல்லாவிட்டால், நிச்சயமாக நமக்கு இந்த வாழ்வு சரியான வாழ்வாக இருக்காது. அது குடும்பத்திலும் இருக்கவேண்டும்.

ஒரு குடும்பத்தில் தந்தை - மகனுக்கு உள்ள உறவு; தந்தை - மகளுக்கு உள்ள உறவு; தாய் - மகளுக்கு உள்ள உறவு - பழைய பாசம் இல்லை.

தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக் காட்சியில் ஒரு நிகழ்வு. ஒரு பக்கம் சிலர் இருப்பார்கள்; எதிரே சிலர் இருப்பார்கள். வினாக்கள் கேட்பார்கள்; பதில் சொல்வார்கள். நான் பார்த்த நிகழ்வில், ஒரு பக்கம் மாணவர்கள்; இன்னொரு பக்கம் பெற்றோர்கள். இடையில் நிற்பவர் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பவர்.

அதில் ஒரு மாணவியிடம் கேட்டார்கள், என்ன படித்திருக் கிறாய்? எப்படி படித்தாய்? என்று கேட்டபொழுது,

நான் பொள்ளாச்சியை சேர்ந்தவள்; என்னுடைய சிறு வயதிலேயே என்னுடைய தந்தையார் இறந்துவிட்டார். என் தாய்தான் என்னை படிக்க வைத்தார். நான் இப்பொழுது சென்னையில் பணியில் இருக்கிறேன்; 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் என்றார்.

அடுத்ததாக நிகழ்ச்சி நடத்துபவர் அவருடைய தாயாரை அழைத்தார். உங்கள் மகள் இங்கே சொல்லியது உண்மை தானா? என்று கேட்டார்.

ஆமாம்! அந்தப் பெண் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது, அவருடைய தந்தையார் இறந்துவிட்டார். நான் தான் படிக்க வைத்தேன் என்றார்.

எப்படி படிக்க வைத்தீர்கள்?

இரண்டு எருமை மாடு வைத்திருந்தேன். அந்த எருமை மாட்டின் மூலம் வருகின்ற பணத்தைக் கொண்டுதான் அவளை படிக்க வைத் தேன். இன்றைக்கு நன்றாக இருக் கிறாள்; நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா? உங்கள் மகள் எவ்வளவு பணம் தருகிறாள்?

2000 ரூபாய் தருகிறாள்.

இந்தப் பணம் போதுமா?

இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்து அனுப்புமாறு கேட்கிறேன்.

எதற்காக இன்னும் ஆயிரம் ரூபாய்?

அந்தத் தாய் உள்ளம் சொல்கிறது, இன்னும் ஓராயிரம் அனுப்பினால், என்னுடைய கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது; இன்னொரு எருமை மாட்டை வாங்கி வளர்ப்பேன். அதிலிருந்து கிடைக்கும் பாலும், தயிரும் கொண்டு, என்னுடைய மகள் வருகின்ற பொழு தெல்லாம் அவளுடைய உடலைத் தேற்றுவதற்கு நான் பாடுபடுவேன் என்று சொல்கிறது அந்தத் தாய் உள்ளம்.

உடனே அந்தப் பெண்ணைப் பார்த்து நிகழ்ச்சி நடத்துபவர் கேட்கிறார், ‘‘ஏம்மா, இன்னும் ஓராயிரம் ரூபாய் சேர்த்து கொடுக் கலாமா?’’ என்று கேட்டார்.

உடனே அந்தப் பெண், ‘‘இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத் தால், மேக்கப் செட் வாங்குவதற்கு நான் எங்கே போவது?’’ என்று சொல்கிறாள்.

தந்தை பெரியாருடைய வழிகாட்டுதல் என்றைக்கும் துணையாக இருக்கிறது

அந்தப் பெண் சொன்ன மறுமொழி, ஆயிரம் ரூபாய் தாய் கேட்டபொழுது கொடுக்கவில்லை; மேக்கப் செட் முன்னால் வந்து நிற்கிறது. ஆகவே, வாழ்க்கையிலும் சரி, நட்பிலும் சரி ஏதோ வணிக வாழ்க்கையை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோமே, அதனை மாற்றி, மனித வாழ்க்கையாக, அன்பு வாழ்க்கையாக, ஒருவரோடு ஒருவர் கூடி, கலந்து ஒருவருக்கொருவர் நிற்கின்ற அந்த நிலையில் நீங்கள் மிகச் சிறப்பாக வாழவேண்டும். அப்படி வாழ்வதற்கு தந்தை பெரியாருடைய வழிகாட்டுதல் என்றைக்கும் துணையாக இருக்கிறது.

அந்தத் துணைக்குக்கூட - நான் உண்மையைச் சொல்கிறேன் - இன்றைக்கு நான் மேடையில் நின்று சொல்கிறேன் - தமிழர்களை வாழ வைப்பதற்கு - அரசியல் கட்சிகள் நிறைய இருக்கலாம் - ஆனால், அந்தக் கட்சி அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக கட்சியாக இருந்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதால், ஆசிரியர் அவர்களை நாம் நம்பியிருக்கிறோம்.

அதேபோல, நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களை நான் அதிகமாக சந்தித்ததில்லை. ஆனால், தொலைக்காட்சிகளில் பேசுகின்ற பொழுது, வகுத்து, தொகுத்து - எதிரிகளிடம்கூட நாணயத்தோடு பேசுகின்ற ஒரு பண்பைப் பார்க்கின்றபொழுது - அவரையும் நம்பியி ருக்கிறேன்.

ஆகவே, இந்த மேடை இன்றைய தமிழகத்தைப் பாதுகாக்கும் என்று சொல்லி அமைகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner