எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உளவியல் பூர்வமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஆழமாக ஆனதற்குக் காரணம் இந்துத்துவா சக்திகள்தான்!

தந்தை பெரியாரின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் மருத்துவர் தீபக் அவர்களின் உரை

சென்னை, ஜன.12-   உளவியல் பூர்வமாக மாற்றுத்திறனாளி களைப் பார்க்கப்போனால், அவர்களுக்கு இன்றைக்கும் தாழ்வு மனப்பான்மை ஆழமாக ஆனதற்குக் காரணம், இந்த இந்துத்துவா சக்திகள் என்பதுதான் யதார்த்த உண்மை. அத னால்தான்,  நாங்கள் மீண்டும் மீண்டும் அதனை  வேகமாக வலியுறுத்துகிறோம் என்றார் மருத்துவர் தீபக் அவர்கள்.

24.12.2016 அன்று உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர் தீபக் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அவையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் முதலில் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய மானமிகு வாழ்த்துகள்; வணக்கங்கள்.

முகநூலில்கூட நான் தெளிவாகப்

பதிவு செய்திருந்தேன்

இந்த இடத்தில் இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை என்னுடைய முகநூலில்கூட நான் தெளிவாகப் பதிவு செய்திருந்தேன்.

இது மாற்றுத் திறனாளிகள் இயக்கத்திற்குக் கிடைத்திருக் கின்ற ஒரு மிகப்பெரிய மரியாதை.

எதுவும் இந்த இடத்திலிருந்துதான் முதலில் தொடங்கும் என்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், தொடர்ச் சியாக மாற்றுத் திறனாளிகளை கழிவிறக்கத்தோடு பார்த்திருக் கக்கூடிய ஒரு சமூகத்திலிருந்து நாம் வந்து கொண்டி ருக்கின்றோம்.

இந்த மேடையில் பேசுவதற்கு

உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றோம்

ஆனால், முதன்முதலில், எங்களுக்குரிய சுயமரியாதைப் பார்வையை பார்க்க வைத்த இயக்கம் என்கிற வகையில், இந்த இடத்தில், இந்த மேடையில் பேசுவதற்கு உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றோம்.

என்னுடைய முகநூல் பதிவை பார்த்துவிட்டு, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் எண்ணற்ற பேர் மகிழ்ச்சியாக பெரியார் திடலிலா நீங்கள் பேசப் போகிறீர்கள்? என்று ஆர்வத்தோடு நிறைய பேர் கேட்டிருந் தார்கள். ஆனால், அதில் நிறைய பேர் மாற்றுத்திறனாளிகள் இல்லை என்பதுதான் எனக்கு வருத்தமான விஷயமாகும்.

‘மாற்றுத் திறனாளி’ என்கிற ஒரு சுயமரியாதை வார்த்தையை கொடுத்தது தமிழகம்தான்

ஏனென்றால், மாற்றுத் திறனாளிகள் என்கிற வார்த்தையை, இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசிய நாடுகளிலேயே ‘மாற்றுத் திறனாளி’ என்கிற ஒரு சுயமரியாதை வார்த்தையை கொடுத் தது தமிழகம்தான். அது எங்கிருந்து புறப்பட்டது என்றால், இந்த மேடைகளிலிருந்துதான் புறப்பட்டு இருக்கிறது. அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் எடுத்த முன் முயற்சிகள்தான், மாற்றுத்திறனாளிகள் என்று தனியான துறை, வாரியம் வருவதற்குக் காரணமாயிற்று.

மாற்றுத் திறனாளிகள் அய்யா பெரியார் அவர்களுடைய சுயமரியாதைப் பார்வையை ஏற்றுக்கொள்ளாததினால் அல்லது அதனைப்பற்றி அறிந்துகொள்ளாததினால், நாங்கள் என்னென்ன விஷயங்களைக் கடந்து வந்திருக்கின்றோம்; நாங்கள் எத்துணை விஷயங்களை இழந்திருக்கின்றோம்; இன்றைக்கு வரைக்கும் எங்களுக்கு என்னென்ன பிரச் சினைகள் இருக்கின்றன என்பதைத்தான் இன்றைக்கு நான் பதிய வைக்கவிருக்கிறேன்.

கடந்த 2000 ஆண்டுகளுக்கான வரலாறை பார்த்தீர் களேயானால், தொடர்ச்சியாக ஊனம் என்பது என்ன? என்கிற பார்வையில் நாம் சரியாகப் பயணிக்காமல் போய் விட்டோம்.

என்ன பாவம் செய்ததோ, ஆண்டவன் காலை ஊனமாகப் படைத்துவிட்டானே?

ஊனமுற்றவர்கள் என்றாலே, பாவத்திற்கான சம்பளம் - உன்னுடைய அம்மா, அப்பா அல்லது முன்னோர்கள் செய்த பாவத்திற்காகத்தான்  ஊனமுற்றவராக நீ பிறந்தாய் என்கிற பார்வையைத்தான் தொடர்ச்சியாக நாம் பார்த்துக் கொண்டு வந்திருக்கின்றோம். இந்து சமுதாயம் இன்றைக்கு வரை அதனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கருஞ்சட்டைத் தோழர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் மனச்சாட்சியைத் தொட்டு நீங்கள் சொன்னீர்கள் என்றால், இன்றைக்கும் என்னுடைய அப்பா உள்பட, என்னைக்கூட என்ன சொல்வார்கள் என்றால், உங்கள் அப்பா - அம்மா என்ன பாவம் செய்தார்களோ? என்று வயதான பாட்டிகள் எல்லாம் சொல்வார்கள்.

பிள்ளை நன்றாக இருக்கிறான், அழகாக இருக்கிறான். என்ன பாவம் செய்ததோ, ஆண்டவன் காலை ஊனமாகப் படைத்துவிட்டானே? என்பார்கள்.

இதைத்தான் நாங்கள் பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பிறக்கும் பொழுதே நீ பாவத்திற்குப் பிறந்துவிட்டாய் என்று கழிவிறக்கம் இருக்கின்ற பொழுது, அங்கொன்றும், இங்கொன்றுமாக மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஒரு சமூகப் பின்புலம் இருந்த காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

இந்துத்துவா சக்திகள்தான் காரணம்

ஆனால், நூற்றுக்கு 97 சதவிகித ஊனமுற்றவர்களின் நிலைமை என்னவென்றால், தங்களைத் தாங்களே - நேற்று கூட நான் திருச்சியில் பேசும்பொழுது, அவர்கள் எல்லோரும் அரசுப் பணியில் இருக்கக்கூடிய மாற்றுத் திற னாளிகள்தான். ஆனால், ஒரு கவுரவமாக, மரியாதையோடு நிற்கக்கூடிய ஒரு நிலை - உளவியல் பூர்வமாக அவர்களைப் பார்க்கப்போனால், அவர்களுக்கு இன்றைக்கும் தாழ்வு மனப்பான்மை ஆழமாக ஆனதற்குக் காரணம், இந்த இந்துத் துவா சக்திகள் என்பது தான் யதார்த்த உண்மை. அதனால்தான், அதனை நாங்கள் மீண்டும் மீண்டும் வேகமாக வலியுறுத்துகிறோம்.

மோடி அரசு கொடுத்த வார்த்தை

திவ்யாங் ஜென்

இன்றைக்கு நாம் சுயமரியாதையோடு மாற்றுத் திறனா ளிகள் என்கிற வார்த்தையைக் கொடுத்திருக்கின்ற நேரம் - மத்திய அரசு - மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. எங்களுக்கு என்ன வார்த்தை கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? தெய்வ உடம்பைப் பெற்றவர்கள் (திவ்யாங் ஜன்).

தமிழ்நாடு மட்டும்தான் மாற்றுத் திறனாளிகள் என்கிற வார்த்தையை சொல்கிறார்கள். முன்பெல்லாம் Department of Disability  Affairs or  Department of  abled Differently Affairs 
என்று மத்திய அரசாங்கத்தில் சொன்னார்கள். ஆனால், அந்தத் துறையையும் நாம்தான் உருவாக்கினோம்.

நம்முடைய கனிமொழி எம்.பி., அவர்கள் பேசியதன் காரணத்தினால்தான், அந்தத் துறைகளே 12 ஆவது அய்ந் தாண்டுத் திட்டத்தில் அதனைக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், மோடி அரசாங்கம் வந்ததற்குப் பிறகு, எங் களிடம் எந்தக் கருத்தையும் கேட்காமல்,  திவ்யாங் ஜன் என்று கெசட்டில் மாற்றிவிட்டார்கள். திவ்யாங் ஜன் என்றால் என்ன? ஹரிஜன், அதற்கடுத்து திவ்யாங் ஜன்.

மாற்றுத் திறனாளிகள் சட்டத்தில்

ஏகப்பட்ட ஓட்டைகள்

எங்களை மனிதர்களாக மதிப்பதற்கு நீங்கள் முயற்சி எடுத்தால் போதும். கடந்த சில நாள்களுக்குமுன் உருவாகியிருக்கின்ற மாற்றுத் திறனாளிகள் சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் உள்ளன.

எங்களுக்கு இருக்கக்கூடிய Human value - Human Nature அய் கொன்றுவிட்டு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனைப்பற்றி நாம் ஆழமாகப் பேசலாம். ஆனால், இந்த மேடைக்கு அது சரிப்பட்டு வராது. ஆனால், இந்த வார்த்தையை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கிறோம் என்று தமிழ்நாட்டில் நாங்கள் சொன்னாலும், எண்ணற்ற கடிதங்கள் எழுதினாலும்கூட இன்றைக்கும் ‘திவ்யாங் ஜென்’ என்ற வார்த்தையைத்தான் வைத்திருக்கிறார்கள்.

இதே மனிதர் முன்பு என்ன சொன்னார், ‘‘நொண்டி, குருடு, சப்பாணியாக இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்” என்று குஜராத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசினார்.

இந்த வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கண்ணியத்தோடு நீங்கள் அவர்களை நடத்தவேண்டும். ஊனத்தைச் சுட்டிக்காட்டி தயவுசெய்து நீங்கள் ஒருவரை திட்டக்கூடாது என்று நாங்கள் எத்தனையோ முறை எங்களுடைய கண்டனத்தைத் தெரிவித் ததற்குப் பிறகும்கூட, எங்களுடைய கண்டனத்தை அவர் கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல, எச்.ராஜா மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்பட.

எங்களைப்பற்றிய ஒரு பார்வை மாறவேண்டும்

பல இடங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்று நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். எங் களைப்பற்றிய ஒரு பார்வை மாறவேண்டும்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், மிக எளிதாக சொல்லவேண்டுமானால், தமிழ்நாட்டில் நடைபெற்ற இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். சென்னையில் நடைபெற்ற ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நேத்ரோதயா என்கிற ஒரு நிறுவனம் நொளம்பூரில் இருக்கிறது. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் படித்த வர்கள், பெரியவர்கள். அந்த நிறுவனம் என்பது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சென்னையில் தங்கி, படித்து, காம் படிட்டிவ் தேர்வில் பங்கேற்று, வேலை வாய்ப்பைப் பெறுவதற் காகத்தான் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் அது.

கண் பார்வை இல்லாதவர்களைப்

பார்ப்பது ஒரு அபசகுனமாம்!

அந்தப் பகுதியில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்திற்கு ஒரு மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் அவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்றால்,

‘‘காலையில் எழுந்தவுடன், கண் பார்வை இல்லாதவர் களைப் பார்ப்பது ஒரு அபசகுனம். அதனால், அந்த நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும்’’ என்று.

இதனை சொன்னவர்கள் யார் என்றால், படித்த அறி வாளிகள், அய்.ஏ.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள்தான்.

இன்றைக்கும்கூட சனி பகவான் என்ற ஒரு ஆள் கால் முடமானவராம். அதனால், ஊனமுற்றவரைப் பார்த்து, ஒரு 10 ரூபாயை அவருடைய கையில் கொடுத்தீர்களேயானால், ஏழரை சனியிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள் என்று காலையில் தொலைக்காட்சியில் ஜோதிடர்கள் பேசுவதைப் பார்க்கலாம்.

ஊனம் என்பது இயற்கையின் ஒரு அங்கம்

இது எந்த வகையில் எங்களுடைய ஸ்டிக்மாவை குறைக்கும். Disability is part of Diversity -- ஊனம் என்பது இயற்கையின் ஒரு அங்கம். Ability - Disability   என்பது வாழ்க்கையில், மனித சமுதாயத்தில், இயற்கையில் இது ஒரு அங்கம். இது ஒரு குறைபாடு அல்ல என்று எப்பொழுது வந்திருக்கும் என்றால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கும். Theory of  Karma  வராமல் இருந்திருந்தால், பாவத்தின் சம்பளம் ஊனம் என்கிற இந்தப் பார்வை வராமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லாம் இயற்கையினுடைய ஓர் அங்கம்தான் என்கிற பார்வை வந்திருக்கும்.

எல்லோரும் வெளியில் சிரித்துக்கொண்டு, நாம் எல்லாம் சமம்தானே என்கிறார்கள். உண்மையிலேயே சொல்லப் போனால், நாங்கள் என்ன இழந்திருக்கின்றோம் என்று சொன்னால், அப்பொழுதே பெரியாரை நாங்கள் சந்தித் திருந்தால், அம்பேத்கர் அவர்களைச் சந்தித்திருந்தால் எங்களுக்கு அடிப்படை உரிமை இருந்திருக்கும்.

எங்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கிறதா?

இன்றைக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திய அரசமைப்பு  சட்டத்தில், through the lense of disability    எங்களுக்கு Equality இருக்கிறதா? அதாவது மாற்றுத்திறனாளிகளுடைய பார்வையில் எங்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக் கிறதா? என்று பார்த்தால் இல்லை. . we have only interpretative jurisprudential    இருக்கிறதே தவிர Direct jurisprudential   கிடையாது.

அய்.நா.வில் மாற்றுத் திறனாளிகளுக்காக கையெழுத்துப் போட்டிருந்தாலும்கூட, இந்த நாட்டில் பிறந்த எல்லோரும் ஜாதி கடந்து, மதம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து எல்லோரும் சமம் என்று சொன்ன இடத்தில், இயலாமை - ஊனத்தையும் கடந்து நாங்கள் சரிசமமானவர்கள் என்கிற வார்த்தைகள் எங்களுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் என்வென்றால், நாங்கள் 50 ஆண்டுகளாக வெளியில் வராமல் இருந்ததுதான்.

இன்றைக்கும் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் நாங்கள் வெளியில் வந்துகொண்டிருக்கின்றோமே தவிர, மற்ற இயக்கங்களோடு தொடர்பு கொள்ளாத காரணம்,  எங்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மைதான்.

இன்றைக்குக் காலையில் என்னை இங்கே கொண்டு வந்து விட்ட தோழர், பெரியாரின் சிலையைப் பார்த்து இவரை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே என்கிறார். கமலநாதன் என்கிற மாற்றுத் திறனாளி ஒருவர் - அவரைப்  பற்றி நான் படித் திருக்கிறேன் என்றார்.

படிப்பு வரைக்கும் இன்றைக்கு

எங்களுக்கு மறுக்கப்படுகிறது

தந்தை பெரியாரைப்பற்றி தெரியவில்லை அவருக்கு. பகுத்தறிவைப்பற்றி தெரியாததின் காரணமாகத்தான் தொடர்ந்து நாங்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றோம்.

இதனுடைய நீட்சியாக எங்கே செல்கிறோம் என்றால், மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரையில், படிப்பு வரைக்கும் இன்றைக்கு மறுக்கப்பட்டுதான் இருக்கிறது.

ராம்ப் வைத்திருக்கிறார்களே, என்று நீங்கள் கேட்கலாம்.  அது அப்படியல்ல, எங்களைப்பற்றிய பார்வை இல்லாத தினால், தொடர்ச்சியாக, எங்களுக்குக் கிடைக்கவேண்டிய பல உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறது.

தகவல் உரிமைச் சட்டம் என்று சொல்கிறோம்; அந்தத் தகவல் என்பது எல்லோரையும் சென்றடையவேண்டும். ஆனால், காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய சைகை மொழி பெயர்ப்பைக் கூட இன்றைக்கு நாம் உறுதி செய்யவில்லை.

அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், எங்களை ஒரு பொருட்டாகவே பல ஆண்டுகாலமாக நினைப்பதில்லை.

1941 ஆம் ஆண்டுக்குப் பிறகு

2001 ஆம் ஆண்டுதான்!

1941 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில், உங்கள் வீட்டில் ஊனமுற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்கிற கேள்வி அங்கு இருந்தது.

ஆனால், சுதந்திரம் கிடைத்த பிறகு, 1951 ஆம் ஆண்டு - 1961, 1971, 1981, 1991, 2001 ஆம் ஆண்டுகளில் நாங்கள் வீதிக்கு வந்த பிறகுதான், உங்கள் வீட்டில் ஊனமுற்றவர்கள் இருக் கிறார்களா? என்கிற கேள்வியே கணக்கெடுப்பில் வந்தது.

இத்தனை ஆண்டுகாலமாக எங்களை எப்படிப் பார்த் திருக்கிறார்கள் பாருங்கள். எங்களுடைய குரல் ஒலிக்க வேண்டாமா? இங்கே தோழர் அய்யா திருமாவளவன் அவர்கள் எங்களுக்காகப் பேசவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கோரிக்கையை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஆங்கிலோ - இந்தியன் கம்யூனிட்டியில் இருக்கக்கூடியவர்கள், மக்களை சந்திப்ப தில்லை, வீதியில் இறங்கிப் போராடுவது கிடையாது - ஆனால், அவர்களுக்கு இந்த நாட்டினுடைய சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், எங்கள் பிரச்சினையைப்பற்றி பேசுவதற்கு, இந்த நாட்டில் குறைந்தது 2.9 சதவிகிதம்  - உலகத்திலுள்ள மக்கள் தொகையில் 15 சதவிகிதம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்குரிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு, எங்களுக்குக் கழிவறைகூட இல்லை என்பதைப்பற்றி பேசுவ தற்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது. அதுதான் எங்களுடைய பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருப்பதற்குக் காரண மாகும்.

மருத்துவப் படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சீட்!

இங்கே சொக்கலிங்கம் அய்யா இருக்கிறார். நாங்கள் மருத்துவப் படிப்பு படிக்க முடியுமா? என்று கேட்டோம். திருச்சியிலும் இதனைப் பதிவு செய்திருந்தேன். மருத்துவப் படிப்பில் 55 சீட்டுகள் மாற்றுத் திறனாளிகளுக்குக் கொடுக் கப்படவேண்டும். தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான சீட் கிடைத்தால், நாங்கள் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்டவேண்டாம். இதையும் நாம்தான் கொண்டு வந்திருக் கிறோம். வேறு எங்கும் இதுபோன்று இல்லை.

ஆனால், 55 சீட்டில், 35 சீட்கூட ஆண்டொன்றுக்கு நிரப்பப்படுவது கிடையாது. மீதியுள்ள சீட் எங்கே போகிறது என்றால், யாருக்கும் தெரியாது.

போராடியதால்தான் திவ்யா என்ற

மாற்றுத் திறனாளிக்கு சீட் கிடைத்தது!

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த திவ்யா என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக்கு சீட் கொடுக்கமாட்டோம் என்று சொன்னார்கள்; அதற்காக உச்சநீதிமன்றம்வரை சென்று போராடியதன் காரணமாகத்தான் அவருக்கு அந்த சீட் கிடைத்தது. அந்தப் பெண் தருமபுரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டினை அவர்கள் பின்பற்றுவதே கிடையாது. சமூகநீதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கும்கூட 21 விதமான ஊனமுற்றவர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், 21 விதமான ஊனமுற்ற வர்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீட்டைத்தான் மத்திய அரசாங்கம் தரும் என்று சொல்லியிருக்கிறது.

இதுபோன்று காது கேட்க முடியாத, வாய் பேச முடியாதவர்கள் இந்தப் படிப்பைத்தான் படிக்கவேண்டும்; பி.காம் மட்டும்தான் படிக்க முடியும். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள் இருக்கிறோம் இந்தியாவில். ஆனால், எங்களுக்குப் படிப்பு மறுக்கப்படுகிறது. நான் 80 சதவிகித மாற்றுத் திறனாளி.

எங்களை இதயப்பூர்வமாகப் பார்க்கவேண்டிய விஷயமல்ல;

இது அறிவுப்பூர்வமான பிரச்சினை

எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘‘அய்யோ, பாவம்!’’ என்றுதான். அதனால், எங்களை இதயப் பூர்வமாகப் பார்க்கவேண்டிய விஷயமல்ல. இது அறிவுப்பூர்வ மான பிரச்சினையாகும். இந்த அறிவுப்பூர்வமான பிரச் சினையைப் பார்ப்பதற்குத் தவறிக் கொண்டிருக்கிறது இந்த சமூகம்.

இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத quadra plegic   வந்து அமெரிக்காவில் எம்.பி.பி.எஸ். படிப்பு படிக்க முடியும். ஏனென்றால், அங்கே பிசிசியன் அசிஸ்டெண்ட் என்கிற ஒரு கோர்ஸ் இருக்கிறது. நாங்கள் இன்டலக்சுவலாக பணி செய்ய முடியும்.

மாற்றுத் திறனாளிகள் டாக்டர் அசோசியேசன் வெளி நாட்டில் இருக்கிறது. அமெரிக்காவில் படிக்க முடிகிற படிப்பு, இந்தியாவில் மட்டும் ஏன் படிக்க  முடிவதில்லை.  அங்கே ஒரு பார்வையற்றவர் சைகியார்ட்டிரிஸ்டாக இருக்கிறார். இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் இங்கே உள்ளன.

இதற்கான காரணம் என்னவென்றால்,  ஒரு சுயமரியாதைப் பார்வையில் இருந்து நாங்கள் பார்க்கப்படவில்லை.

இன்றைக்கு டிக்னிட்டி இருக்கிறதா?

ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிய நூலில் உள்ள முகவுரையில் பார்த்தேன். காரல்மார்க்ஸ் சொல்லியிருக்கிறார், சாப்பாட்டைவிட எங்களுக்கு டிக்னிட்டி முக்கியம் என்று. எங்களுக்கு இன்றைக்கு டிக்னிட்டி இருக்கிறதா? எல்லோர் முன்பும், நாங்கள் ஒரு காட்சிப் பொருளாக்கப்படுகிறோம்.

உடையார்முன் இல்லார்போல் கையேந்தி நிற்கக்கூடிய ஒரு சூழலைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சீனாவை எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுடைய கைகளில் வைத்திருக்கும் எல்லா ஸ்மார்ட் போனும், ஏதோ ஒரு மாற்றுத் திறனாளியினுடைய கைபடாமல் சீனாவில் இருந்து வெளிவருவது கிடையாது. எங்களுடைய ஏபிலிடி அவ்வளவு தூரம் இருக்கும்பொழுது, ஏன் எங்களுக்கு உண்டான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

Because we are seen as A sextual A Political  இந்தப் பார்வையெல்லாம் மாறவேண்டுமானால், தந்தை பெரியா ருடைய பார்வையை நாங்களும் உட்கொள்ளவேண்டும்.

சட்டத்திற்குமுன் ஒரு மனிதனாகக்கூட பார்க்கப்படுவதில்லை

அய்.நா.வில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை உடன் படிக்கையில், ஓரிடத்தில் றீமீரீணீறீ நீணீஜீணீநீவீtஹ்  என்று சொல் கிறார்கள். நாங்கள் இந்த நாட்டினுடைய சட்டத்திற்குமுன் ஒரு மனிதனாகக்கூட பார்க்கப்படுவதில்லை.

அடிப்படை உரிமை இல்லை என்று சொன்னேன்; அதே போன்று சட்ட மனிதனாக எங்களை இந்த நாட்டினுடைய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை.

சட்டத்திற்குமுன் அனைவரையும் சரி சமமாகப் பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருந்தாலும்கூட, எங்களை, இந்த நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தில் பார்க்கவில்லை.

எதார்த்த உண்மையிலிருந்து

நாங்கள் விடுபட விரும்புகிறோம்

மனித உருவில் இருந்தால், அவர்களை எப்படிப் பார்க்கவேண்டும்? மனித உருவில் இருக்கக்கூடியவர்களுக்கு மனித உரிமை இருக்கு என்று சொல்லும்பொழுது, மனித உருவில் இருக்கக்கூடிய மக்களை சுத்தமாக, கண்ணியத்தோடு நடத்தாமல் இருப்பதற்கான காரணம், எங்கள் பிரச்சினைகளை ஒரு பொருட்டாகவே கருதாத சூழ்நிலைதான் ஒரு எதார்த்த உண்மை. அந்த எதார்த்த உண்மையிலிருந்து நாங்கள் விடுபட விரும்புகிறோம்.

திராவிடர் கழகத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!

மாற்றுத் திறனாளிகளுக்கு தந்தை பெரியாருடைய சுயமரியாதைப் பார்வை என்பது தொடர்ச்சியாக  இருந்தால் மட்டும்தான், எங்களுக்காக என்றைக்கு இந்த சுயமரியாதை இயக்கம் பேச ஆரம்பிக்கிறதோ, என்றைக்கு எங்களுக்காக நீங்களும் பயணிக்க ஆரம்பிக்கிறீர்களோ, எல்லா விஷயத் தையும் கிரிட்டிகலாக அனலைஸ் செய்து நாம் பேச ஆரம் பிக்கின்றோமோ, அன்றைக்குத்தான் இந்த விஷயங்கள் முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கான விடிவு பிறக்கும் என்று சொல்லி வாய்ப்பளித்த தந்தை பெரியாருடைய பெயரில் இருக்கக்கூடிய திராவிடர் கழகத்திற்கு என்னுடைய மன மார்ந்த வாழ்த்துகளையும், வணக்கத்தினையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.

- இவ்வாறு மருத்துவர் தீபக் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner