எழுத்துரு அளவு Larger Font Smaller Font

Image may contain: 1 person, closeup

அரியலூர் மாவட்டம் செந் துறை வட்டம் சிறு கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய நந்தினி என்னும் பெண்ணுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடூரம் உலகில் வேறு யாருக்குமே ஏற்பட்டு விடக் கூடாது.

ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அந்தப் பெண் அதற்கு மேல் பள்ளிப் படிக்கட்டுகளை மிதிக்க முடியவில்லை. காரணம் அன்றாடம் காய்ச்சிகள் அன்றாடம் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவ வேண்டும்.

அந்தத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை ஒரு ஆண் மிருகம் சிதைத்து விட்டது; விளைவு கர்ப்பிணியானார்; திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

உயிரோடு இருந்தால் தானே என்னை வற்புறுத்துவாய் உன்னை இல்லாமலே செய்து விடுகிறேன் என்று கூறி, நந்தினியைக் கடத்திச் சென்று நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, உடலை எரித்துக் கிணற்றில் வீசி எறிந்துள்ளனர்.

குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஊர்ப் பொது மக்கள் பல்வேறு போராட்டங்களையும், அழுத்தத்தையும் கொடுத்த பிறகு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேர்களும் யார் என்று கேட்டால் அத்தனைப் பேரும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள்.

இவர்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கக் கூடியவர் மட்டும் கைது செய்யப்படவில்லை; அவர் மாவட்ட இந்து முன்னணியின் செயலாளராம்!

ஒரு தனியார் நிறுவனத்தில் இந்து முன்னணி மேலிடத்தின் சிபாரிசு பெயரில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். கை நிறைய சம்பளம் - காரும் அளிக்கப்பட்டுள்ளது.  அவர் வேலை கிராமத்துப் பையன்களிடம் பண ஆசை காட்டி, சலுகைகள் பெற்றுத் தருவதாகக் கூறி இந்து முன்னணிக்கு ஆள் பிடிப்பதுதான். அவரைக் கைது செய்யாததற்குக் காரணம் மேலிட சங்பரிவார்களின் அழுத்தம் தானாம்!

கவுரவக் கொலை பற்றிப் பேசுகிறார்கள். இந்த நந்தினி கொலையில் ஏன் மவுனிக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?

கைது செய்யப்படாத கோயில் காளையாக பவனி வரும் ஆசாமி கைது செய்யப்படுவது எப்போது? இது அந்தப் பகுதி மக்களின் குமுறலும் கோரிக்கையுமாகும். காவல்துறை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே நமது வலியுறுத்தல்.

குறிப்பு: 21.1.2017 அன்று பாதிக்கப்பட்ட  பெண்ணின் வீட்டிற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர், மண்டல திராவிடர் கழகத் தலைவர் சி. காமராஜ், மண்டலக் கழக செயலாளர் மணிவண்ணன், அரியலூர் மாவட்டக் கழக தலைவர் நீலமேகம் மற்றும் திராவிடர் கழக, திமுக தோழர்கள் சென்று விசாரித்தனர். உறுதுணையாக இருப்போம் என்றும் கூறி வந்தனர்.