எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் ஜெயராணி அவர்களின்  உரை

சென்னை, பிப். 19- ஜாதியை ஒழிக்கும் பணி செய்பவருக்கு பெரியார்-அம்பேத்கர் பெயரில் கிடைக்கும் அங்கீகாரமே மேன்மையானது என்றார் எழுத்தாளர் ஜெயராணி அவர்கள்.

16.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் பத்திரிகையாளர் ஜெயராணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

தனிப்பட்ட முறையில் இது மிகவும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சி யுமான ஒரு தருணம் எனக்கு.

இந்தத் தருணம்

மிகவும் நெகிழ்ச்சிக்குரியது

ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தி பணி செய்கின்ற யாருக்கும், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பெயரில் கிடைக்கப் பெறுகின்ற அங்கீகாரத்தை விடவும் மேன்மையான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த வகையில், இந்தத் தருணம் மிகவும் நெகிழ்ச் சிக்குரியதாக இருக்கிறது.

இக்காலகட்டம், விருதுகளை திருப்பி அளித்துக் கொண் டிருக்கும் காலம். அநீதிகளுக்கு எதிராக, 2015 ஆம் ஆண்டு முழுக்க பெரிய பெரிய கலைஞர்களும், அறிவு ஜீவுகளும் இந்த நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராக - விருதுகளை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

இன்றைக்கு விருதுகளைத் திருப்பி அளிப்பதுதான் ஒரு பெரிய புரட்சியாக இருக்கிறது. அநீதிகளுக்கு எதிராக தங்களு டைய எதிர்ப்பினைப் பதிவு செய்கிற ஒரு பெரிய புரட்சியாக இருக்கிறது.

விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சித் ததும்பல்

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்தை பெரியார் அவர் களின் பெயரில், இந்த மேடையில், இப்படியான ஆளுமை களும், தோழமைகளும் புடைசூழ இந்த விருதினைப் பெறுவது விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சித் ததும்பலுக்கு என்னை ஆளாக்குகிறது.

நாம் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கி றோம். நாம் செய்கிற பணி சரியானதுதான் என்று உறுதி செய் கின்ற ஒரு தருணம் இது. இந்தத் தருணத்திற்காக திராவிடர் கழகத்திற்கும், உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைப் பதிவு செய்கிறேன்.

இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிற அதேநேரத்தில், இன்னொரு வேதனையான உண்மையையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

பகுத்தறிவு பெருங்கோட்டையின்

எல்லை வரையிலானதுதான்

அது என்னவென்றால், இந்த மகிழ்ச்சி தற்காலிகமானது. இந்த மேடையில்வரையிலானது மட்டும்தான், என்னைப் பொறுத்தவரையில். இந்தப் பகுத்தறிவு பெருங்கோட்டையின் எல்லை வரையிலானதுதான். இன்னும் நேரிடையாக சொல்லவேண்டுமானால், இன்று இரவு மட்டுமானதுதான்.

இந்த மேடையை விட்டு இறங்கிவிட்டால், இந்தப் பகுத் தறிவு பெருங்கோட்டையின் எல்லையை விட்டு வெளியே சென்று விட்டால், இன்றைய இரவு விடிந்துவிட்டால், நாம் எதிர்கொள்ளப் போகும் சமூக எதார்த்தம், மிகுந்த அச்சுறுத் தலையும், கடுமையான கோபத்தையும், துயரத்தையும் உண்டாக்குவதாக இருக்கப் போகிறது, நிச்சயமாக!

நாளைக்கு விடிந்துவிட்டால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முகமது அக்லக்குகள் விரும்பிய உணவை உண்டதற்காக அடித்துக் கொல்லப்படலாம்.

ரோகித் வெமுலாக்கள் பல்கலைக் கழகங்களில் பலி கொல்லப்படலாம்.

அந்தோணி ராஜுகளும், சரவணன்களும் மலக் குழிக்குள்  இறக்கிவிடப்பட்டு சாகடிக்கப்படலாம்.

நாளை விடியலில் எதுவும் நடக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, இஸ்லாமிய கருவழிப்பு நடக்கலாம்.

நாளைய விடியல் மிகுந்த அச்சுறுத்தலோடுதான் இருக்கப் போகிறது

பொருளாதார பண மதிப்பிழப்பு என்ற பெயரில், அடித் தட்டு மக்களின் ஒரு வேளை உணவைப் பறிக்கும் அந்தக் கொடுமையும் நடந்திடலாம். இன்னும் எவ்வளவோ நடக்கலாம்.

நாளை விடியல் நிச்சயமாக நான் சொல்லியதுபோல, மிகுந்த அச்சுறுத்தலோடுதான் இருக்கப் போகிறது; நாம் அதனை எதிர்கொள்ளப் போகிறோம். நம்முடைய எதிரிகள் மிகத் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். நான் எதிரிகள் என்று யாரை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

2025 ஆம் ஆண்டு

ஆர்.எஸ்.எசினுடைய நூற்றாண்டு

2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எசினுடைய நூற்றாண்டு. இந்தப் பத்தாண்டுகளில் இந்த நாட்டை எப்படி அவர்களுக்குத் தக்கவாறு வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்கிற திட்டமிடல் அவர்களுடைய கைகளில்.

10 மணிநேரத்தில் என்ன செய்யவேண்டும்? 10 நாள்களில் என்ன செய்யவேண்டும்? 10 வாரங்களில் என்ன செய்ய வேண்டும்? 10 மாதங்களில் என்ன செய்யவேண்டும்? 10 ஆண்டுகளில் என்ன செய்யவேண்டும்? என்கிற திட்டமிடல் அவர்களுடைய கைகளில் இருக்கிறது.

இந்த நாடு சுதந்திரமடைந்த பிறகு, மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு இன்றைக்கு மத்தியில் ஆட்சி யில் இருக்கிறது. இந்தப் பலம், இந்த அதிகாரம் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கிறது. அதுதான் நம்மை, ஒவ்வொரு விடியலையும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. நம் குழந்தைகளையும், இளைஞர்களையும் கடுமையான மூளைச் சலவையின் மூலமாக, ஜாதி வெறிக்கும், மத வெறிக்கும் தொடர்ச்சியாக இந்து அமைப்புகள் ஆளாக் கிக் கொண்டிருக்கின்றன.

‘ஜாதியற்றவளின் குரல்’

ஷாகா பயிற்சியைப்பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட் டிருப்போம். 2004 ஆம் ஆண்டு ‘ஜாதியற்றவளின் குரல்’ என்கிற நூலில் அந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது.

2004 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்திற்கு ஒரு ஆய் வுக்காக சென்றேன். கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தலித் இளைஞர்களைச் சந்திப் பதற்காக சென்றேன். பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்தான் நாம் போவோம்.

அந்தக் கலவரத்தில் இஸ்லாமியர்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டார்கள் என்று கேட்டு, அதனைப் பதிவு செய்வோம். ஆனால், நான் இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட தலித்துகளைத் தேடிச் சென்றேன்.

ஒரு அம்பாகப் பயன்படுவது

தலித் இளைஞர்கள்தான்

ஏனென்றால், நமக்கு நன்றாகத் தெரியும், குஜராத் கல வரத்திலும் சரி, இங்கே நடைபெற்ற ஒவ்வொரு கலவரத்திலும் சரி, இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறுத்தப்படுவது, இஸ்லா மியர்களின்மேல் தாக்குதல் தொடுப்பது, அவர்களுக்கு எதிராக ஒரு ஆயுதமாக, ஒரு அம்பாகப் பயன்படுவது தலித் இளைஞர் கள்தான்.

நிறைய பேரை நான் சந்தித்தேன். 25 பேரிடம் பேட்டி கண்டேன். அதில் இளவேனில் என்பவர், ஷாகா வகுப்பு எப்படி தங்களைத் தயார்படுத்துகிறது என்பதை மிக விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லியிருப்பார்.

கழுத்தறுக்கும் இந்துத்துவம் - சிதையும் தலித் தலைமுறை என்கிற கட்டுரையில் மிக விரிவாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஷாகா வகுப்பு முடிந்து செல்லும் பொழுதும், நீ அவனை அடி என்று சொன்னால், உடனே கிளம்பி சென்று, அவனை கழுத்தை அறுத்துவிட மாட் டோமா? என்றுதான் ஒவ்வொரு நாளும் வீட்டிற்குச் செல்வேன். கோவை கலவரம் நடைபெற்ற அன்று, எனக்கு அந்த உத்தரவு வந்த அன்று - என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவிற்கு நிறைய பேர்மீது தாக்குதல் நடத்தினேன் என்றார்.

இதுபோன்று 25 பேரும் சொன்னார்கள். நான் அவர்களை சந்தித்தது 2004 ஆம் ஆண்டு. கோவை கலவரம் நடந்து சில ஆண்டுகள் ஆன பிறகுதான்.

தலித் மக்கள் இஸ்லாமியர்களைத் தாக்குகிறார்கள். எல் லோர்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆர்.எஸ். எஸினுடைய ஷாகா வகுப்பினுடைய நோக்கம் நிறைவேறி விட்டது. தலித்துகளை வைத்து இஸ்லாமியர்களை அடிப்பது என்கிற நோக்கம் நிறைவேறியது.

கலவரம் முடிந்ததும், இஸ்லாமியர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டார்கள்; அவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டு, நிறைய பேர் உயிரிழந்தார்கள்.

ஆனால், இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட தலித் ஒவ்வொருவர் மீதும் 10, 15 வழக்குகள் பதிவு செய்யப்பட் டன -அவர்கள் வெளியிலேயே வர முடியாத அளவிற்கு.

இஸ்லாமியர்களை எதிரியாகவும், தலித்துகளை அடிமைகளாகவும்...

இதுதான் ஆர்.எஸ்.எஸினுடைய, இந்துத்துவ அமைப்பு களுடைய சூழ்ச்சியாகும். அவர்கள் இஸ்லாமியர்களை எதிரியாகவும், தலித்துகளை அடிமைகளாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

அடிமைகளைக் கொண்டு,  எதிரிகளை அழிக்கவேண்டும். அதன் வழியே அந்த அடிமைகளைத் தண்டிக்கவேண்டும். இதுதான் அவர்களுடைய குறிக்கோள்.

இதனை நான் 2004ஆம் ஆண்டு நேரிடையாகக் கண்டேன்.

இன்றைக்கு இஸ்லாமியர்கள் நிறைய இருக்கும் பகுதி களைத் தாண்டி, எல்லா இடங்களிலும் ஷாகா வகுப்புகள் பரவியிருக்கிறது. அண்மையில்கூட, ஒரு வீடியோ பதிவு முகநூலில் பரவலாக காணப்பட்டது. ஷாகா வகுப்புகளில் எப்படி தாக்குதல் நடத்தவேண்டும் என்பதுபற்றி.

இந்தச் சூழலில், இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் ஒருசேர அழிக்கின்ற இந்த காலகட்டத்தில்,

நாம் அந்தக் குழந்தைகளையும், இளைஞர்களையும் எப்படி காப்பாற்றப் போகிறோம்?

அவர்கள் எல்லா நிலையிலும் அமைப்பு வைத்திருக் கிறார்கள். குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியே அமைப்பு வைத்திருக்கிறார்கள். எல் லோரையும் மூளைச் சலவை செய்கிறார்கள்; எல்லோருக்கும் இந்துக்கள் என்கிற உணர்வை ஊட்டுகிறார்கள்.

ஆனால், நாம் குழந்தைகளுக்காக என்ன வைத்திருக்கி றோம்? இளைஞர்களுக்கு என்ன வைத்திருக்கிறோம்? இந்தப் பகுத்தறிவையும், சமத்துவத்தையும் போதிக்கின்ற ஒரு பிளாட் பார்ம் இங்கே எங்கே இருக்கிறது?

நம்முடைய பள்ளிக்கூடங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை; நம் வீட்டில் சொல்லிக் கொடுப்பதில்லை. நான் பொது சமூ கத்தைப்பற்றி சொல்கிறேன். அமைப்புகளுக்குள் இருப்பவர் களைப்பற்றி நான் சொல்லவில்லை.

இந்த சமூகத்திற்கு, இந்தப் பகுத்தறிவு விஷயங்களைப் போதிப்பதற்காக நமக்கு என்ன களம் இருக்கிறது? எல்லாவற்றையும் அவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

70 ஆண்டு சுதந்திர நாட்டில், ஒரு மோசமான கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்தக் கால் நூற்றாண்டு காலம், அரை நூற்றாண்டு காலம் நமது புரட்சி யாளர்கள் அம்பேத்கர் - பெரியார் இருவரும் இங்கே சமூ கத்தில் விதைத்துச் சென்ற விஷயங்கள், அழிந்து கொண்டி ருக்கும் ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம் - கண்கூடாக அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

படித்த இந்தியா - பகுத்தறிவின்மீதும், சமத்துவத்தின்மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அது தேவையில்லை என்றும் நினைக்கிறது.

ஜாதி வேண்டும்; மதம் வேண்டும் - அதுதான் தங்களு டைய பண்பாடு, அதுதான் தங்களுடைய கலாச்சாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அதனை மாற்றுவதற்கு, அப் படியில்லை, சக மனிதனை நேசிப்பதும், சக மனிதனின் மாண்புரிமையைப் பாதுகாப்பதும்தான் நம்முடைய வேலை - அதுதான் பண்பாடு என்று போதிக்கின்ற ஒரு நிலை - கற்பிக்கின்ற ஒரு நிலை - அந்தக் கல்வியை நாம் எங்கிருந்து தொடங்கப் போகிறோம்.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவைப்பற்றி நாம் பேசுகி றோம். இன்றைக்கும் இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்கள் ஊராகவும், சேரியாகவும்தான் இருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. நாம் இங்கே பேசுவது எல்லாம் மேலோட்டமாகப் பேசுகின்ற விஷயம்தான். நான் ஒரு பத்திரிகையாளர். நான் கிராமங்களுக்குச் செல்வதென்றால், ஒன்று ஊருக்குப் போகவேண்டும் அல்லது சேரிக்குப் போகவேண்டும். தமிழர் திருநாள், தமிழருடைய உரிமை ஜல்லிக்கட்டு என்றெல்லாம் சொல்லிவிட்டு, இங்கிருந்து கிராமத்திற்குச் செல்பவர்கள், எங்கே போவார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஒன்று ஊருக்குச் செல்வார்கள் அல்லது சேரிக்குச் செல்வார்கள்.

அன்றைக்குத்தான் உண்மையான

மாற்றம் வரும்

அந்தப் பிரிவினையை என்றைக்கு நாம் எதிர்க்கப் போகிறோம். நாம் பேசுகின்ற மாற்றம் - நாம் பேசுகின்ற பகுத்தறிவு இவையெல்லாம் ஒரு சட்டகத்திற்குள் இருக்கிறது. இந்த சட்டகத்தை உடைத்து எப்பொழுது நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறோம். என்றைக்கு ஊரையும் - சேரியையும் பிரித்து வைக்கின்ற கோட்டையை நாம் அழிப்பதற்கு முயற்சி செய்கிறோமோ, அன்றைக்குத்தான் உண்மையான மாற்றம் வரும் என்று நான் நினைக்கிறேன்.

ஜல்லிக்கட்டைப்பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்; அதனை கட்டாயம் இங்கே பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டு தமிழர் உரிமை, தமிழர்கள் எல்லாம் ஒன்று சேருங்கள் என்று சொல்கிறார்கள். ஜல்லிக் கட்டுக்குத் தடை கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்துதான். ஆனால், ஜல்லிக்கட்டிற்குள் தீண்டாமை வந்து எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது. அதனை மாற்றுவதற்கு நாம் என்ன முயற்சி எடுத்தோம்?

ஒரு சமத்துவமான திருவிழாகூட இங்கே சாத்தியம் கிடையாது. தலித்துகளை தமிழர் என்கிற ஒரு பிரேமிற்குள் கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் இங்கே நடை பெறவில்லை. சாதாரண நாள்களில் நீங்கள் யாரும் தலித்துகள் பக்கம் இல்லை. அவர்களுக்கு சம உரிமை கொடுப்பதற்கும், சக மனிதராகக் கருதுவதற்கும் நாம் எந்தப் பணியையும் செய்யவில்லை.

தலித்துகள் ஒரு புள்ளி சதவிகிதம்கூட இருக்கமாட்டார்கள்

ஆனால், உங்களுடைய உரிமை பாதிக்கப்படும்பொழுது, நீங்கள் தலித்துகளை தமிழர்கள் என்று சொல்லி உள்ளே இழுக்கிறீர்கள். மாநில உரிமை என்று சொல்கின்ற இந்த வாதங்களை நான் தொடர்ந்து ‘பாலோ’ செய்துகொண்டிருக் கிறேன். நம் தோழமை சக்திகளைத்தான் நான் சொல்கிறேன். மாநில உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்; ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்கிற பட்டியலை ஆய்வு செய்து பார்த்தோமேயானால், நிச்சயமாக அதில் தலித்துகள் ஒரு புள்ளி சதவிகிதம்கூட இருக்கமாட்டார்கள்.

என்னை தீண்டத்தகாதவராக வைத்திருக்கும் ஒரு வழக்கத்திற்கு மாநில உரிமை என்கிற பெயரில், நீங்கள் ஆதரவு தெரிவித்தால், நான் ஏன் வரவேண்டும் என்கிற கேள்வி, தலித் மக்களுக்கு இருக்கும்; இருக்கவேண்டும்; நிச்சயமாக இருக்கவேண்டும். அதுதான் அவர்கள் ஜாதி ஒழிப்பை நோக்கிச் செல்கிறார்கள் என்பதற்கான அடையாளம்.

நான் சொல்ல வருகின்ற விஷயம் இதுதான் - அம்பேத்கர் அவர்களும் - பெரியார் அவர்களும் முதன்மையாக ஒரு விஷயத்தைத்தான் வலியுறுத்தினார்கள். மற்றவையெல்லாம் அதற்குப் பிறகுதான். அது இந்து மத ஒழிப்பு - ஜாதி ஒழிப்பாகும். ஆனால், அவர்கள் மற்றவை என்று சொன்ன வைகளைத் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பெரியார் - அம்பேத்கர் இருவரும் பெருங்கடல். அவர்களை நம் வசதிக்கேற்ப சிற்றோடை ஆக்கி, நமக்கு எது தேவையோ அந்த விஷயங்களை மட்டும்தான் நாம் பேசுகிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

அம்பேத்கர் அவர்களும், பெரியார் அவர்களும் முதன் மையாக பேசிய விஷயங்களைத்தான் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். நான் என்னுடைய உரையில் சொல்லியதுபோல,

மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும்; மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்

அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார்:

புரட்சிக்கு முன் ஜாதியை ஒழிக்கவில்லையெனில், எந்தப் புரட்சியானாலும், புரட்சிக்குப் பின் ஜாதி உங்களை வழி மறிக்கும் என்றார். இப்பொழுதும் அதைத்தான் நான் வலியு றுத்துகிறேன். சுற்றுச்சூழலாக இருக்கட்டும்; வர்க்கப் போராட் டமாக இருக்கட்டும் என்னுடைய எழுத்துகளில் அதனை நான் வலியுறுத்துவேன்.

புரட்சிக்கு அடிப்படையான விஷயம் என்னவென்றால்,  மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும்; மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இங்கே எங்கே மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்? எங்கே மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்?

மக்களை ஒற்றுமைப்படுத்தும் விஷயம் - மக்களை ஒன்றிணைக்கும் விஷயம் இங்கே இல்லை. மக்கள் சிறிய சிறிய இனக் குழுக்களாக இருக்கிறார்கள். இவர்களை ஒன்றி ணைக்காமல் எந்தப் புரட்சியும் சாத்தியமில்லை. எல்லாமே தோல்விதான். இதுவரை நடைபெற்றவை எல்லாம் தோல்வி தான். இன்றைக்கு இந்துத்துவாவாதிகளை நம்முடைய ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்திருக்கிறோம்  என்றால், அது எவ் வளவு பெரிய தோல்வி நமக்கு. இங்கே எந்தப் புரட்சியும் சாத் தியமில்லை - அர்த்தமில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஜாதி ஒழிப்பைத்தான் முதலில் பேசினார்கள்

தோழர்களே, அம்பேத்கர் அவர்களும், பெரியார் அவர் களும் எதை முதன்மைப்படுத்தினார்களோ, அதைத்தான் நாம் முதன்மைப்படுத்தவேண்டும். அவர்கள் ஜாதி ஒழிப்பைத் தான் முதலில் பேசினார்கள்; இந்து மத ஒழிப்பைத்தான் முதலில் பேசினார்கள். அதற்காகத்தான் நாம் வேலை செய்யவேண்டும்.

அதற்கான வேலையை நாம் செய்யும்பொழுது, மற்ற புரட்சிகள் எளிமைப்படும்; அது வேண்டாம் என்று நான் சொல்லவில்லை; மக்கள் ஒன்றிணையும்போது, ஜாதியை ஒழித்து ஒன்றிணையும்போது மற்ற புரட்சிகள் மிக எளிதாக நடந்து முடியும் என்பதுதான் என்னுடைய கருத்து!

இந்தத் தருணத்தில் ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தி பணி செய்கின்ற என்னுடைய சக தோழர்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பத்திரிகையாளர் ஜெயராணி அவர்கள் உரையாற்றினார்.


நானும் ஒரு தீவிர பெரியாரியவாதி, அம்பேத்கர்வாதி!

 

மீண்டும் மீண்டும் இன்ஸ்பையரிங் அவர்கள் என்னுடைய பெயரை சொல்லியதால், ஒரு விஷ யத்தை நான் அவருக்குத் தெளிவுபடுத்த விரும்பு கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் நம்பிக்கைவாதி. மிகவும் மகிழ்ச்சியோடு, நிறை வோடு எந்தவித பின்புலமும் இல்லாமல்தான் நான் என்னுடைய முயற்சியில்தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள் கிறேன். அதனால், அவருடைய தன்னம்பிக்கைக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்,

நீங்கள் ஒரு நாத்திகவாதியாக இருப்பதற்கும்,

நீங்கள் ஒரு பகுத்தறிவாளராக இருப்பதற்கும் வேறுபாடு உண்டு.

நாத்திகவாதி என்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம்.  நீங்கள் பகுத்தறிவாளர் என்றால், நீங்கள் சக மனிதரை உள்ளே சேர்க்கிறீர்கள்.

என்னுடைய வருத்தம் என்பது, என்னுடைய சந்தோசம் என்பது, சக மனிதரை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதைத்தான் இங்கே பதிவு செய்தேனே தவிர, தனிப்பட்ட முறையில் நான் மிகவும் தன்னம்பிக்கையோடு, மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன்.

அவர் சொல்லியதுபோல, பகுத்தறிவாளர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடுதான் இருப்பார்கள்.

அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. நானும் ஒரு தீவிர பெரியாரியவாதி, அம்பேத்கர்வாதி என்பதை மீண்டும் அவருக்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner