எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, மார்ச் 8  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தின்  21-ஆவது நாளான நேற்று நெடுவாசலுக்கு துலுக்கவிடுதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான  பெண்கள் மற்றும் ஆண்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.  அதனை தொடர்ந்து பேராவூரணி வீரையன் கோட்டையில் உள்ள அட்லாண்டிக் மெட்ரிக்  பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பேரணியாக வந்து போராட்ட களத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒப்பாரி போராட்டம்: வடகாடு பெரியகடைவீதியில்  நேற்று 3-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள்  தலைவிரி கோலத்துடன் மார்பில் அடித்துக்கொண்டு மத்திய அரசைக் கண்டித்து,  ``ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். எங்கள் போராட்டம் உங்களுக்கு  வேடிக்கையாக இருக்குதா?. உங்கள் கண்களுக்கு எங்களின் போராட்டம்  தெரியவில்லையா?. அல்லது தெரிந்து நடித்துகொண்டு எங்களை  ஏமாற்று கிறீர்களா?.

எங்கள் உயிர் உள்ளவரை இந்த பகுதியில் ஒரு கைப்பிடி  மண்ணைகூட எடுக்க  விடமாட்டோம் என்று ஒப்பாரி வைத்து போராட்டம்  நடத்தினார்கள். இந்தநிலையில், திட்டம் ரத்து செய்வது குறித்து, மத்திய அரசு உறுதியான அறிக்கை எதுவும் வெளியிடாததால் போராட்டக் களத்தில் நேற்று பேசியவர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

அப்போது, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் பேசினார்கள். நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்ற ஜெயக்கொடி, அமராவதி ஆகியோர் பேசியதாவது:

எங்கள் உழைப்பால் உருவாக்கிய பசுமையான பகுதியை எந்த  எண்ணத்தில்  அழிக்க உங்களுக்கு மனம் வந்தது என்று  தெரியவில்லை. நாங்கள் இல்லை என்றால் உங்களுக்கு உணவு இல்லை.

நாங்கள் வயலில்  கால்வைக்க வில்லை என்றால் உங்கள் வாய்க்கு உணவு இல்லை. நீங்கள் இந்த  திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் உங்களுக்கு எதிராக தொடரும். இவ்வாறு அவர்கள் ஆவேசமாக பேசினார்கள்.