எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுக்க ஒரே வழி கச்சத்தீவை மீட்பதுதான்!
சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 20- தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தொடர்ந்து தாக்கப் படுவதும், சுட்டுக் கொல்வதும் தடுக்கப்பட நிரந்தர தீர்வு கச்சத் தீவை மீட்பதுதான்; அதற்காக மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென சட்டமன்றத்தில் இன்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கடந்த 16ஆம் தேதி 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மீன்வள மற்றும் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று (20.3.2017) சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

இரங்கல் தீர்மானம்
சட்டமன்றம் கூடியதும் மறைவுற்ற சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சா.மெய்யப்பன், ஆ.பாலையா, இரா.வில்வநாதன், வி.எ.செல்லையா ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் இரண்டு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து கேள்வி -பதில் நிகழ்வு நடைபெற்றது.

இந்தக் கேள்வி நேரம் முடிந்தவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப் பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில் “தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், தமிழக மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியும் துன்புறுத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தரத் தீர்வாகும். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று 1974இல் முதல்வராக விருந்த கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமெனவும், இலங்கைக்கு கச்சத்தீவை கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்தார். இதற்காக பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார்.

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுத் தர மாட்டோம் என திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் இரா.செழியன் அவர்கள் பேசிப் பதிவு செய்தார். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு இலங்கைக்கு தாரை வார்த்ததாக திமுக மீது பழி சுமத்துவது சரியல்ல’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நிதியமைச்சர் ஜெயக்குமார்: கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பல முயற்சிகள் எடுத்தார். 1998இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் என்று பதிலளித்தார்.

நிதிநிலை விவாதம்
2017-2018ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக் கையை கடந்த 16ஆம் தேதி நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அந்நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தியாகராஜன்   பங்கேற்றுப் பேசுகையில் சில ஆலோ சனைகளை அரசுக்கு அளித்தார்.