எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுதம புத்தர் உண்டாக்கிய கட்டமைப்புகளை சங்கராச்சாரியாரைப் பயன்படுத்தி இடித்து முடித்தார்கள்

இப்பொழுதும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு

இதுவரை நுழையமுடியாத தமிழகத்தை குறி வைக்கிறார்கள்

எச்சரிக்கையாக இருந்து முறியடிப்போம்! முறியடிப்போம்!

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தோழர் தா.பாண்டியன் வரலாற்றுரை

சென்னை, ஏப். 6- அன்று கவுதம புத்தர் உண்டாக்கிய உணர்வை - அமைப்புகளை அரசுகளைத் துணை கொண்டு அழித்து முடித்தனர். இன்று அரசு அதிகாரிகளைப் பயன் படுத்தி அந்த சக்தி தலைதூக்க முயற்சிக்கிறது - எச்சரிக்கை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன்.

27.3.2017 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், நாட்டை எதிர்நோக்கும் பேராபத்துகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இந்திய வரலாற்றில் முதல் தடவை

ஒரு தேர்தல் ஆணையம், ஒரு கட்சியின் பெயரையே பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்திருப்பது - இதுதான் இந்திய வரலாற்றில் முதல் தடவை. கட்சியின் பெயரையே பயன்படுத்தக்கூடாது, அந்தக் கட்சியின் சின்னத்தையே பயன்படுத்தக் கூடாது என்று கூறிய வேகத்திலேயே,  மீண்டும் அவர்களை அழைத்து, நீ அந்த அம்மா, இந்த அம்மா என்று வைத்துக்கொள் என்று சொல்கிறார்கள். அதா வது சண்டை சரியாகப் போடவேண்டும்; பிளவு ஒழுங்காக நடக்கவேண்டும். என்னப்பா உன்னை அவன் அடிக்கிறான், நீ சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே,  எதையா வது ஒன்றை எடுத்து அடி என்று அவனிடமும் சொல்கிறான், இவனிடமும் சொல்கிறார்கள். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள் இங்கே சகோதர சண்டையைக் கிளப்பிவிட்டு, தமிழகத்திலும் கால் பதிக்கலாமா?  என்று நினைக்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில்

30 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சி!

மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகள் இடதுசாரி கட்சிகள் ஆட்சி நடத்தினார்கள். பல திருத்தங்களை செய்தார்கள். அதிலே தனிப்பட்ட முறையில் சொல்லப்போனால், அங்கே முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு, அப்பழுக்கற்ற மனிதர். ஆனால், அவர் ஆட்சியின்பொழுது சொன்னதையெல்லாம் செய்தாரா? இல்லையா? என்பது இன்றைக்கும் விமர்சனத் திற்கு உரியதுதான்.

நான் அதனை சொல்வதற்குள்ள காரணம், அவர்கள் உணவுப் பரிமாற்றத்தில் ஒழுங்காக நடத்தினார் என்பது உண்மை. பஞ்சாயத்துத் தேர்தலையெல்லாம் சரியாக நடத் தினார்கள் என்பதெல்லாம் உண்மைதான். நிலச் சீர்திருத்தங் களைக் கொண்டு வந்தார் என்பதும் உண்மைதான். சமூகநீதி என்று வருகின்றபொழுது, எங்கள் மாநிலத்தில் இரண்டே இரண்டு ஜாதியைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்றார்.

இந்திய சமூக அமைப்பில், பணக்காரன் - ஏழை என்ற இரண்டு ஜாதிகளைத் தவிர, ஜாதிகள் இல்லை என்று சொன் னால், ஒருவேளை மார்க்ஸ் மீண்டும் எழுந்து வந்திருந்தால், அப்பா, என் பெயரை பயன்படுத்தாதே என்கிற வேண்டு கோளை விடுத்திருப்பார்.

ஏனென்றால், மார்க்ஸ் எழுதிய முதல் புத்தகத்திலேயே இந்தியாவின் பழைய சமூகத்தை அத்தனை பட்டியலையும் போட்டு எழுதியிருக்கிறார். நானே, ஆச்சரியப்பட்டு, மார்க்ஸ் இந்தியாவிற்கு வந்தாரா? அவர் நம்முடைய கிராமத்தில் வாழ்ந்தாரா? இவருக்கு எப்படித் தெரியும் என்று நான் வியந்ததுண்டு. பிறகுதான் தெரியும், இங்கிருந்து போன சில செய்திகளை கேட்டு எழுதினாரே தவிர, அவர் இங்கு வரவில்லை.

ரத்தம் குடித்து வளர்ந்த குள்ளநரிதான் தமிழகத்திற்குள்ளும் நுழைய முயற்சிக்கிறது

எனவேதான், அவர் முழுமையான ஜாதியினுடைய பிடிப்பை புரிந்துகொள்ள முடியவில்லை. இங்கே துணிந்து சொல்கிறார், ஜோதிபாசு அவர்கள் - ஏழை - பணக்காரன் தவிர வேறு எந்த ஜாதியும் இல்லை. அப்படி வந்திருந்தால், இந்தியா என்றைக்கோ விடுதலை பெற்றிருக்கும். எவ்வளவோ முன்னேறியிருக்கும். ஆனால், உண்மை அதுவல்ல. பல்லா யிரம் பிளவுகள் - பிரித்து மிதிக்கப்பட்ட சமூகத்திற்குள் உட் பிரிவுகளை வைத்து அதற்குள்ளும் சண்டை. சகோதரர்களைத் தூண்டிவிட்டு, சண்டை போட விட்டே ரத்தம் குடித்து வளர்ந்த குள்ளநரிதான் இப்பொழுது தமிழகத்திற்குள்ளும் நுழைய முயற்சிக்கிறது. எனவேதான், பேராபத்து.

இதற்கு முன்பே, ஏனென்றால், மேற்கு வங்கத்தில் எவ் வளவு தீவிரவாதம் பேசினாலும், சமூக சீர்திருத்த விஷயங் களில், அது முன்னெடுக்கவில்லை. இந்தியாவில் இட ஒதுக் கீட்டை கடைசியாக சட்டமாக ஒப்புக்கொண்டது மேற்குவங்க மாநிலம்தான். மண்டல் கமிசன் வந்தபொழுதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது அதே தோழர்கள்தான். அதை யெல்லாம் அந்தக் கட்சிக்குள்ளே இருந்து, அதை எதிர்த்த போது, அதை எதிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டபொழுது பட்ட கதைகளை இங்கே சொல்ல விரும்பவில்லை.

இன்னும் நுழையாத ஒரு இடம் தப்பியிருக்கிறது என்றால், தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான்

எனவே, ஒரு மார்க்சிய தத்துவத்தையே கூட இந்திய சமூக அமைப்பை புரிந்துகொள்ளாதவர்களால் ஏற்பட்ட சங்கடங்களையும் அனுபவித்திருக்கிறோம். இப்பொழுதாவது புரியவேண்டும். ஏனென்றால், அவ்வளவு சீர்திருத்தங்கள் செய்து, 30 ஆண்டுகள் ஆண்ட பிறகு நடத்தப்பட்ட தேர்தல் களில், 11 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது அந்த வகுப்புவாத சக்தி. மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் சட்ட மன்றத்திற்குள் கால் பதிக்கவே நாம் விடவில்லை என்பதை சில சமயங்களில் அவர்களோடு உறவு வைத்த காரணத்தினால், நம்முடைய சகோதரர்களே கொடுத்ததால், ஒன்றிரண்டு நுழைந்தார்கள். மற்றபடி இன்னும் நுழையாத ஒரு இடம் தப்பி யிருக்கிறது என்றால், தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான்.

கேரள மாநிலத்திலும் அவர்கள் 3 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி யிருக்கிறார்கள். கைப்பற்றியதோடு மட்டுமல்ல, இப்பொழுது கத்தியை வைத்தும் விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

மதங்களிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது - தேசியக் கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது

இங்கே அந்த அளவிற்குப் போகவில்லை. அதற்குப் பதிலாக தமிழகத்தில், கட்சிகளிலேயே திராவிட இயக்கத்தில் இருந்து மட்டும்தான் தி.மு.க. பிறந்தது, பிறகு அ.தி.மு.க பிறந் தது, ம.தி.மு.க. பிறந்தது என்பதல்ல. மனித குல வரலாற்றில் எல்லா மதங்கள் தோன்றிய காலத்திற்குப் பிறகு மதங்களிலும் பிளவு ஏற்பட்டது. ஏற்பட்ட பிளவு எதுவுமே மாறி ஒன்றுபட்ட தாக இதுவரை தகவல் இல்லை. மதங்களிலும் பிளவு ஏற் பட்டிருக்கிறது - தேசியக் கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக் கிறது. அந்தப் பிளவுகள் அத்தனையிலுமே வளர்ந்திருப்பது வகுப்புவாதம் மட்டும்தான்.

கொல்லவும் முடிகிறது; கொன்றவனைப் பிடிக்காமல் தப்பவிடவும் முடிகிறது

ஏனென்றால், கவுதம புத்தர் யாருக்காக, எந்தக் கலாச் சாரத்தை எதிர்த்துப் போர்க்கொடித் தூக்கினார் என்பது எல் லோருக்கும் தெரியும், வரலாற்று ரீதியாகத் தெரியும். கடை சியில் அவரை எதிர்ப்பதற்குப் பதிலாக, சங்கராச்சாரியாரை வைத்து, கவுதம புத்தர் கட்டி முடித்த நாலந்தா பல்கலைக் கழகம் உள்பட, காசியில் கட்டப்பட்டிருந்த பல்கலைக் கழகம், காஞ்சியில் கட்டப்பட்டிருந்த பல்கலைக் கழகம் எல்லா வற்றையும் தரைமட்டமாக்கியவர்கள் அவர்கள்தான். அதற்கு அரசாங்கத்தின் பலத்தைப் பயன்படுத்தியே செய்தார்கள்.

செய்தவர்களுக்கு இப்பொழுது அதிகாரமும் கிடைத்திருக் கிறது - சம்பிரதாயங்களும் நீடிக்கிறது. எனவே, இரண்டையும் பயன்படுத்தி கருத்து மாறுபட்டவர்களை கொல்லவும் முடி கிறது; கொன்றவனைப் பிடிக்காமல் தப்பவிடவும் முடிகிறது.

இப்பொழுது அதனை மேலும் விரிவுபடுத்தி, மாநிலங் களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கவிழ்ப்பது - வரவிடாமல் தடுப்பது - தன்னாட்சியை சகல இடங்களுக்கும் கொண்டு வருவது என்று வந்துவிட்டால், ஒரு வார காலமாக இப்பொழுது முக்கியமான பத்திரிகைகளில் மிகவும் படித்தவ ர்கள் கட்டுரை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியா விலும், அமெரிக்க மாடல் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரவேண்டும். இந்த மக்களாட்சி, மக்களவை, மாநிலங்களவை என்று இருந்தால், ஒன்றுக்கொன்று சங்கடம் - எதுவும் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை.

'மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் - மாநில அரசு அதனை விட்டுக் கொடுக்கவேண்டும்'

எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்து விட்டால் என்று சொல்வதில் உள்ள காரணம், இப்பொழுது மாநிலங்களுக்கென்று கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கிறது.

இரண்டும் சேர்ந்த இடத்தில், அரசியல் சட்டம் எழுதும் போது, மாநில அரசும் சில சட்டங்களை நிறைவேற்றலாம் என்று பொதுப் பட்டியல் என்று ஒன்று இருந்தது. அதிலேயே ஒரு விதிவிலக்காக பின்னர் சேர்த்தனர்.  மாநிலங்களும், மத்திய அரசும் ஒரே பிரச்சினையின்மீது ஒரு சட்டம் நிறைவேற்றுமானால், மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் - மாநில அரசு அதனை விட்டுக் கொடுக்கவேண்டும்.

அதற்கடுத்தும் நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் கொடுத்து விட்டார்கள். மாநிலங்கள் சட்டமன்றத்தின் மூலமாக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களும், குடியரசுத் தலைவருடைய ஒப்புதலை, மத்திய அரசினுடைய பரிந்துரையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டு, கெசட் நோட்டிபிகேசன் வந்தால்தான் சட்டமாகும்.

முதல் மாநிலமாக பாதிக்கப்பட்டு

இருப்பது தமிழ்நாடு

அதிலேயேதான், காவிரி பிரச்சினையில், நீதிமன்றத்தில் போராடிப் பெற்ற பிறகும், மேலாண்மை வாரியத்தை நியமிக் கக் கேட்டால், அதற்குப் பரிந்துரை செய்து ஒப்புதல் பெற வேண்டிய பிரதமரே இதுவரையில் அதனை செய்யவில்லை. நிறைவேற்றாத ஒரு மாநிலத்தை சுட்டிக்காட்டி, நீ நிறைவேற்று என்று கூற முடியவில்லை. இதில், முதல் மாநிலமாக பாதிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு.

அதேபோல, கல்வி முறையிலும் நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தபோது சொன்னார்கள், நம்முடைய நீதிபதியே கேட்கிறார், இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களும் தயார் என்று சொல்கிறார்கள், போட்டி போடுகிறார்கள். தமிழ்நாட்டில், தேர்வுக்குச் செல்வதற்கே பயந்து, நீங்கள் அத்துணை பேரும் சேர்ந்து தேர்வே வேண்டாம் - எழுதாத வனையெல்லாம் படிக்க வையுங்கள் என்று ஆரம்பிக்கி றீர்களே, இது நியாயமா? என்று நம்முடைய நீதிபதி ஒருவரே கேள்வி கேட்கிறார்.

எங்கேயும் கல்வியில் ஒரு சீர்திருத்தம் வரவேண்டுமானால், அதனை எங்கே தொடங்கவேண்டும். தொடக்கப் பள்ளியில் தொடங்கி, இடைநிலை பள்ளியில் பயிற்சி கொடுத்து, பிறகு பட்டப் படிப்பிற்குக் கொண்டு வரவேண்டும்.

மாணவர்களைக் காப்பதற்காக அல்ல நுழைவுத் தேர்வு!

இப்பொழுது சொல்லப்படுவது என்ன? முதுகலைப் படிப்பு  தகுதிக்குத் தேர்ந்தெடுக்கிறபொழுது, திடீரென்று நுழைவுத் தேர்வு என்று நீ விதிப்பது - தடுப்பதற்கேயன்றி, மாணவர்களைக் காப்பதற்காக அல்ல.

எனவேதான், அதனை எதிர்த்து தமிழ்நாடு- தன்னந் தனியாக குரல் கொடுத்திருக்கிறது. அதிலும், பிற மாநிலங்கள் பக்கபலமாகக் குரல் கொடுக்கக் காரணம்.

மத்திய அரசின் பக்கபலம் நமக்கு உண்டு என்கிற துணிச்சல் தனியார் கல்லூரிகளுக்கு...

குரல் கொடுத்திருக்கின்ற இதே நாளில், ஒன்றை நாம் மறக்கக்கூடாது - தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் கல்லூரி கள், நீட் நுழைவுத் தேர்வு எழுத தனி பயிற்சி தரப்படும் என்று விளம்பரங்களை செய்கிறார்கள். சிறப்பு வகுப்புகளை நடத் திக் கொண்டிருக்கிறார்கள். சென்னையிலும் அதற்கான தனி பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

எங்கள் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு வரும். இந்த மாநில அரசிற்கு எதிராகவும் நாம் செயல்பட்டால், மத்திய அரசின் பக்கபலம் நமக்கு உண்டு என்கிற துணிச்சல் தனியார் கல்லூரிகளுக்கு வந்திருக்கிறது.

இதற்கும் நிதி ஒதுக்கும் யுஜிசி இப்பொழுது, வெறும் பெயர்ப் பலகையை மட்டும் போட்டு 400 சதுர அடியில் தொங்கவிட்டுவிட்டால், ஏனென்றால், அவர்களுக்கு நிதி போகிறது. ஏனென்றால், அவர்கள் சமஸ்கிருதத்தையும் கற்பிப்பதற்கு ஏற்றுக்கொண்ட பல்கலைக் கழகங்கள்.

ஆனால், நூறாண்டையும் தாண்டிவிட்ட பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி யைப் பெறுவதில், சிரமங்களுக்கும், சிக்கல்களுக்கும் ஆளாகி யிருக்கின்றன.

இதற்குக் காரணம் என்ன? அந்த தனியார் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதம் கற்பிப்போம் என்பார், இட ஒதுக்கீட்டை நிறைவேற்றமாட்டார், அவர்கள் விருப்பத் திற்கு இருப்பார்கள். ஆனால், ஒரு அரசு கிராண்ட் என்று பொதுவாக வருமானால், பாரதிதாசன் பல்கலைக் கழகம்,               பெரியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக்கழகம் என்று வருமேயானால், இட ஒதுக்கீடு முறை கட்டாயம் பின் பற்றப்படும். பின்பற்றும்படி நாம் கேட்கலாம். தனியார் கல்லூரிகளில் கேட்பதற்கு வழியே இல்லாமல் செய்கிறார்கள்.

குளோபல் பிரி ஸ்கூல்

சான்ஸ்கிரிட் இன்ஸ்ட்டியூசன்

இப்பொழுது, குளோபல் பிரி ஸ்கூல் சான்ஸ்கிரிட் இன்ஸ்டி டியூசன் என்கிற விளம்பரத்தை சென்னையில் நீங்கள் நிறைய பார்க்கலாம். அதோடு தொடர்புடைய நண்பரை நான் பார்த் தேன். உங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் சேர்க் கலாமே என்றார்? நல்லவேளை அந்த மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படவேண்டிய வயதில் பிள்ளைகள் இல்லை. பள்ளியில் சேர்க்க இடம் கேட்டால், தரமாட்டார்களே, நீங்கள் தேடி வந்து தருகிறேன் என்கிறீர்களே, ஆச்சிரியமாக இருக்கிறது என்றேன்.

சமஸ்கிருதம் படித்தால்தான் பழையபடி இந்தியாவை காப்பாற்ற முடியும். ஏனென்றால், இதிலிருந்துதான் விஞ்ஞானமே உலகம் முழுவதும் பரவியது. நாம் அதனை விட்டு விட்டதால்தான் பாழ்பட்டு விட்டோம். எனவே, அதனை புதுப்பிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறோம் என்று படிப்படியாக சொல்லிக் கொண்டு வந்தார்.

அட்மிஷன் குளோஸ்

நான் வாழ்கிற வீட்டிற்கு அடுத்த தெருவில்தான் அந்தப் பள்ளி நடைபெறுகிறது. விளம்பரப் பலகையை முதலில் இரண்டு வைத்தார், பிறகு நான்கு வைத்தார், அதற்குப் பிறகு ஆறு வைத்தார். திடீரென்று நேற்றைக்கு எல்லாவற்றையும் எடுத்து விட்டார்கள். ஏன் எடுத்துவிட்டீர்கள் என்று கேட்டதற்கு, அட்மிஷன் குளோஸ் என்று சொன்னார்.

நான் இதனை சொல்வதற்குக் காரணம், மத்திய அரசினு டைய பின்பலம் என்பது ஏதோ விளையாட்டாக நடக்கிறது என்று நினைக்காதீர்கள். தமிழகத்திலே அந்த மத்தியக் குழுக் கூட்டமே ஒரு கல்லூரியில் நடக்கிறது.

உடற்பயிற்சி என்ற பெயரால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்

பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்களில் திருச்சி - சென்னையில்தான் மோடி யினுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டமே நடைபெற்றது. மாண வர்கள் என்பவர்கள், உயர்ஜாதி மாணவர்கள் அத்துணை பேருமே ஏபிவிபி அமைப்பினர் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி என்பது அந்தக் கல்லூரியில் உடற் பயிற்சி என்ற பெயரால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

எனவே, நாம் ஒன்றுபட்டு நின்று விழிப்பை ஏற்படுத்தி, தமிழக மக்களை தெளிவுபடுத்தி எழுப்பாவிட்டால், ஊர்ந்து வந்துள்ள இந்தக் குட்டி நாகம் இந்தத் தமிழகத்தைக் கொட்டி விடும். எனவே, அது தடுக்கப்பவேண்டும்.

சகோதரச் சண்டையை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்

இது அரசமைப்பு சட்டப்படி மாநிலங்களின் உரிமையைப் பறித்திருக்கிறார்கள். நமக்குப் பொருளாதார ரீதியிலும் அந்த மாநில சுயாட்சியை நிலை நிறுத்தியாகவேண்டும். இதில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி என்கிற வேறுபாடுகள், விமர்ச னங்கள் இருக்கலாம். எனவேதான், இந்தத் தேர்தலில் யாரை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என்பது அல்ல - தமிழ்நாடு முழுவதையும் நாசப்படுத்தும் சக்தி எதுவோ, அதனை எதிர்த்து எல்லோரும் திரளுங்கள். சகோதரச் சண்டையை முடியுமானால், உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். இல்லை, இன்னும் கோபம் தீரவில்லையானால்,, இரண்டு பேர் மட்டும் சண்டை போடுங்கள். ஒருவரையொருவர் வீழ்த்துவ தற்காக டில்லிக்கு இருவரில் எவருமே போகாதீர்கள் என்று அவர்களை நாங்கள் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

அவர்களுக்குக் குரல் கொடுப்பதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்

யார் அவர்களைச் சார்ந்து தங்கள் பதவிகளைக் காப் பாற்றிக் கொள்ள விரும்புகிறார்களோ, அவர்களையும் சேர்த் துத்தான் எதிர்ப்போம். எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந் தாலும், அவர்களுக்குக் குரல் கொடுப்பதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்.

கொள்கை ரீதியில் தெளிவாக வரவேண்டும். இனியும் பொறுத்திருப்பது, நீதிமன்றத்திற்குச் செல்லலாமா என்றால், நடக்காது. மக்களைத் திரட்டித்தான், மக்களை நம்பித்தான் இந்த லட்சியங்களில் நாம் வெற்றி பெற முடியும். வேறு எந்த வழியிலும் வெற்றி பெற முடியாது.

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் - பெரியார் திடலில் அறிவிப்பு

ஆகவே, தமிழகத்தை மீண்டும் தெளிவுபடுத்த, விழிப்பை ஏற்படுத்த இந்தப் பரப்புரை பிரச்சார இயக்கத்தை, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்குவது என்று எடுத்த முடிவு - அந்த அறிவிப்பை பெரியார் திடலில் வெளியிடுவது - ஒத்த கருத்துள்ளவர்கள் என்று வந்தவர்கள் மட்டுமல்ல, இனியும் வரவேண்டியவர்களையும் அழைப்பது - எல் லோரும் சேர்ந்து தமிழகத்தில், நோக்கம் ஒன்றுதான் - உங்களுக்குள் இருக்கின்ற சிறு வேறுபாடுகளை சகோதர முறையில் தீர்த்துக் கொள்ளுங்கள். சண்டை போட்டால்கூட, டில்லியை நோக்கி காவடி எடுக்காதீர்கள் என்கிற வேண்டு கோளையும் சேர்த்து வைத்து,

பிற மாநிலங்களில் உள்ள தலைவர்களுடனும் தொடர்பு கொள்ளப்படும்

தமிழ்நாடு, தமிழ்நாட்டை விடுவிப்பதன்மூலம், இந்திய நாடு முழுவதிலும் உள்ள மக்களையும் விடுவிப்பதற்கு அது விரிவுபடுத்தப்படும் - பிற மாநிலங்களில் உள்ள தலைவர் களுடனும் தொடர்பு கொள்ளப்படும் என்றும் காலையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவெடுத்திருக்கிறோம்.

எனவே, தொடக்கம் தமிழ்நாடு - இமயம் வரையில் எட்டும், பரவும். நீங்கள் அனைவரும் துணை புரியவேண்டும் என்று கேட்டு, நன்றி கூறி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner