எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவண்ணாமலை, ஆக. 28 திருவண்ணா மலை மாவட் டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர், வீராங் கனைகள் விளை யாட்டு ஊக்க உதவித் தொகை பெற விண் ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாணவர் அல்லாதோருக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், விளையாட்டு வீரர்கள், மாணவர் அல்லாதோர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி, பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்க உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை பெற 2016 ஜூலை 1 முதல் 2017 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுக் குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகங்கள், இந்திய விளையாட்டுக் குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகிய இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.