எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தனக்குவமையில்லா தலைவர் கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம்.

நித்திரை நிலைகொள்ளாத இந்த நடுநிசியில், தலைநகரின் கடுங்குளிரில் உங்கள் வார்த்தை களின் ஒலிக்காக என் செவிகள் உண்ணா நோன் பிருக்கின்றன. ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. அலை வரிசைப் புயலின் கோரத்தாக்குதல் தனிமனிதர்களை மட்டுமல்ல, தத்துவார்த்தமுள்ள ஒரு இயக்கத்தையும் களங்கப்படுத்திய இந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை இழிச் சொற்கள், ஏளனங்கள்?. உங்களின் ஆளுமையின் விஸ்வரூபத்தை வாமன வடிவத்திற்கு சுருக்கிவிட முடியாதா என்று ஏங்கியவர்களுக்கு இந்த “அலைவரிசை அரசியல்'' எப்படியெல்லாம் கைகொடுத்தது? “பொய்களோடு போராடுவதும் உண்மையைதேடுவதும்சிலநேரங்களில்வெவ் வேறானவை.உண்மையைஅடைவதுகடினம், அதன் இயல்பினால் அல்ல; உங்கள் மூலதனம் அனைத்தையும் பொய்யில் முதலீடு செய்திருப்ப தால்” என்ற ஒஷோவின் வரிகளில் உள்ள அடர்த் தியை என்னால் இப்போது உணர முடிகிறது. அலை வரிசை வணிகத்தில் சிலரின் மூலதன முதலீடுகள் முற்றிலுமாய் இன்று நட்டத்தில் முடிந்து விட்டன. சிறை யிலிருந்தபோது நீங்களும், அண்ணன் தளபதியும் தலைநகருக்கே வந்து ஊட்டிய நெஞ்சுரம் என்னை இறுக்கத்திலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் மீட் டன; பிணையில் சென்னை வந்தபோது நீங்களும், பேராசிரியரும் சூட்டி மகிழ்ந்த மலர்மாலைகள் என்னை

“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து”

என்ற குறளை முணுமுணுக்க வைத்தன.

உலக வரலாற்றில் தனிமனித தாக்குதல் மிகச்சாதாரணமானவை மட்டுமல்ல; அன்றாட நிகழ்வுகள். ஆனால் அலைக்கற்றை தாக்குதல் தனி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, நிறுவனங்களால் நிகழ்த்தப்பட்டவை. மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய புலனாய்வு நிறுவனம்(சிபிஅய்), நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) மற்றும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடுத்த தாக் குதல்கள் நிர்வாக அமைப்பு முறையில் இந்திய வரலாற்றிற்கு மட்டுமல்ல; உலக வரலாற்றுக்குகூட புதியதுதான். அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசினை வீழ்த்திட நடத்தப்பட்ட சதியில் ‘அலை வரிசை’ அகப்பட்டுக் கொண்டதை அரசே அறிய முடியாமல் போனதுதான் அந்த ஆட்சியின் அவ லம்! உளவுத்துறை தன் கையிலிருந்தும் இதை உணரமுடியாத ஒர் அரசின் ‘நிலைதடுமாற்ற’த்தில், தறிகெட்டு ஒடிய சில நிறுவனங்களுக்கு பின்னணி யில்,ஒருமாநிலக்கட்சியானதி.மு.க.வின்‘இந்திய அரசியல் ஆளுமையை’ இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று முடிவெடுத்த சில ஆதிக்க சக்திகளும் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள அசாத்திய அறிவு வேண்டியதில்லை.

22-2-2010 அன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றப்பட்ட குடியரசுத் தலைவரின் உரையில் “2012ஆம் ஆண்டுக்குள் 60 கோடி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் இலக்கையும் தாண்டி, இதுவரை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாதம் ஒன்றுக்கு 2 கோடி இணைப்புகளை வழங்கி, 2009 ஆம் ஆண்டே 57 கோடி இணைப்புகளை எட்டி தொலைத் தொடர்புத்துறை சாதனை புரிந் துள்ளது” என்று குறிப்பிடப்பட்டது. அலைவரிசை இருப்பையே மறைத்து வைத்து சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே அதனை ஏக போகமாக அனுபவித்துக் கொண்டிருந்த கூட்டு வல்லாண்மையை (நீணீக்ஷீtமீறீ) தகர்த்து எல்லோரின் கரங்களிலும் இன்று எளிதாக புழக்கத்தில் விடப் பட்டுள்ள வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு வந்த புரட்சியை, ‘குற்றம்‘ என பெயர் சூட்டி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் இந்த தேசத்தில் மட்டும்தான் சாத்தியம்! 1965 ஆம் ஆண்டு மொழிப்போர் உக்கிரத்தின் உச்சியில் இருந்தபோது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட உங்களை சந்தித்தப்பின் அறிஞர் அண்ணா ‘காஞ்சி’யில் இப்படி எழுதினார்: “தன் னைப்பற்றிய எண்ணம் எழுப்பி வரும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிட ஒரு துறவு நிலையை ஏற்படுத்துவது சிறைச்சாலை. இதனையே ஆன் றோர்கள் சிறைச்சாலையை அறச்சாலை என்றனர்”, “தன்னை வெல்வான்; தரணியை வெல்வான்” என்று உங்களை உச்சிமோந்த அவரின் வார்த்தைகளால், ஏற்பட்ட காயங்களுக்கு களிம்பு பூசிக் கொள்ளலாம். ஆனால், ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி நட்டம் என்று கணக்கு சொன்னவர்களின் வஞ்சகத்தால் உங்களின் 80 ஆண்டுகால பொது வாழ்வையும் கொச்சைப்படுத்த எத்தனித்த ‘எச்சில் சிந்தனை‘யாளர்களுக்கு எவர் தண்டனை தருவது? “பொதுத் தொண்டில் ஈடுபடுகிறவர்கள், அந்த தொண்டில் ஈடுபடுவது காரணமாக மான அவமானம் ஏற்பட்டால் அதுபற்றி கவலைப்படக்கூடாது. தனி மனித வாழ்க்கைக்குத்தான் மான அவமானம் முக்கியமே தவிர, பொது வாழ்வில் மானம் பார்த்தால், பொதுத் தொண்டில் விளையும் பயன் பிரயோஜனம் அற்றதாய் ஆகிவிடும்‘’ என்றார் தந்தை பெரியார். பொதுத் தொண்டில் தனிமனித மான அவமானம் போகலாம்; ஆனால் அரசியல்களத்தில் சமூக தளத்தில் புரட்சிகர சீர்திருத்தங்களை கொண்டு சேர்த்த ஒர் இயக்கத்தையே சிதிலமடையச் செய்ய தொடுக்கப்பட்ட முயற்சியில், சிலர் பெற்ற தற்காலிக வெற்றிக்குப் பின்னால் ஏற்பட்ட மான அவமானங்களுக்கு யார் பொறுப்பு?

அறிவுத் தேவையை மட்டுமல்ல; ஆராய்ச்சி தேடலையும் அவ்வப்போது மறுதலித்துக் கொள்ளும் வழக்கம் கொண்ட சில இந்திய ஊடகங்களும், தின சரிகளும் அலைவரிசை மீது காட்டிய ‘அருவருப்பு அக்கறைக்கு’ பின்னால் இருக்கும் சமூகப் பார்வையை சாமானியர்கள் பாவம் அறியமாட்டார்கள்! ஆனால் அறிவு ஜீவிகளும் கொள்கைவாதிகளும் இன்னும் இருப்பதாக நம்பப்படும் இடதுசாரிகளும்கூட அலை வரிசை அரசியலை தனியுடமை ஆக்கிக் கொண்டு தடந்தோள் தட்டியது இன்னுமொரு தாளமுடியாத தத்துவசோகம்!

அலைவரிசை பிரச்சினையின் மீது புலனாய்வும், நிர்வாக விசாரணையும் நடத்திய நிறுவனங்களில் சிலவற்றின் அறியாமை-புரியாமை-தெரியாமை, சிலவற்றின் சூழ்ச்சி, வஞ்சகம் - இவையனைத்தும் இந்திய நிர்வாக அமைப்பின் மீதும், நீதி பரிபால னத்தின் மீதும் படிந்துபோன கறைகள். பேசத் தெரிவது ஒன்றே தனித்தகுதியாக கொண்ட சிலர், தங்களின் சொல்லாடலுக்குள் அலைவரிசையை அடக்க முயற்சித்து ‘முடிந்த’ அளவிற்கு வெற்றி பெற்றது விவரிக்க முடியாத விசித்திரம். “தம்பூரா மீட்டுகிறவனுக்கும் ஜால்ரா போடுகிறவனுக்கும் ‘ஸ்வரஞானம்‘ எதற்கு?” என்று யாரோ எழுதிய வரிகள் இப்போது என் ஞாபகத்திற்கு வருகின்றன. அறியாமைக்குகூட சில நேரங்களில் சிம்மாசனம் கிடைத்து விடுவது நீங்கள் அறியாததல்ல. ‘நெஞ்சுக்கு நீதி’யை நீங்கள் எழுதத் தொடங்கியபோது உங்கள் பேனா பிரசவித்த வரிகள் என் நினைவுக்கு வருகின்றன; “ஒருவனை குறை கூறிவிடுவது எளிது. அந்த நாக்கிற்கு இரண்டு கைதட்டல் கிடைக்கும். ஆனால் குறை கூறியவனின் நெஞ்சுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?” இங்கே குறைகூறிய எவருக்கும் நெஞ்சம் என்ற ஒன்றே இல்லை. என்றாலும் நீதி நமக்கு கிடைத்திருக்கிறது.

16.12.2017 அன்று இரவு உங்களை சந்தித்து “2ஜி வழக்கு தீர்ப்புக்காக நாளை டில்லி செல்கிறேன்; வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்று உங்கள் காதருகே சொல்லி வணங்கினேன். உங்கள் உதடுகள் ‘சரி’ என்று உச்சரித்தபோது சப்தம் வரவில்லை. என்றாலும், உங்கள் வலதுகரம் உயர்த்தி புன்னகையோடு வாழ்த்தினீர்கள். அந்த உங்களின் வாழ்த்துக்கும் புன்னகைக்கும் முன்னால் இந்த பிரபஞ்சம் சுருங்கி விட்டதாகவே எனக்கு பட்டது. “கொட்டுகின்ற மழை யில், வீசுகின்ற புயலில், சரளைக்கற்கள் நிறைந்த மலை உச்சியை நோக்கி நடப்பதைப் போல” அரசு மற்றும் அரசமைப்பு நிறுவனங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு நடத்திய இந்த அலைவரிசை பயணத்தில் நான் கரைந்துவிடாமலிருக்க, என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள் என்ற நன்றியுணர்ச்சியோடு உங்கள் காலடியில் இந்த தீர்ப்பினை வைத்து வணங்குகிறேன். மீண்டும் உங்களின் வாசகங்கள் என்னை வந்து வருடுகின்றன.

“உண்மையை மறைப்பது - விதையை

மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது”

நன்றி!

 

தங்களின் அன்பான தம்பி

ஆ.இராசா

 

புதுடில்லி 
21.12.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner