எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டிய

இட ஒதுக்கீட்டினை பறிப்பதை எதிர்த்து நிற்கும் களத்தில்

திராவிடர் கழகத்தோடு விடுதலை சிறுத்தைகள் என்றென்றைக்கும் கைகோக்கும்!

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எழுச்சி உரை

சென்னை, ஜன.3 பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டினைப் பறிக்கின்ற செயல், எந்த வகையில் வந்தாலும், அதனை எதிர்த்து நிற்கின்ற களத்தில், திராவிடர் கழகத்தோடு விடுதலை சிறுத்தைகள் என்றென் றைக்கும் கைகோத்து நிற்கும் - உற்ற துணையாக நிற்கும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

18.12.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலி லுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அந்த சமத்துவம், சமூகத் தகுதியில் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அதற்கு வழங்கப்படக் கூடிய நீதிதான், சமூகநீதி. ஆகவே, அந்த சமூகநீதியைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக ஒரு பேரியக்கமாக திராவிட முன் னேற்றக் கழகம் இருப்பதினாலேயே, திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தவேண்டும் - அழிக்கவேண்டும் என்று இன்றைக்கு நேற்றைக்கு அல்ல - அன்றைய நாளிலிருந்தே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பேராசிரியரின் ‘‘வாழ்க திராவிடம்’’ நூல்!

‘‘வாழ்க திராவிடம்’’ என்ற நூலை சிறிதுநேரம் நான் படித்துக் கொண்டிருந்தேன். பேராசிரியர் அவர்கள், இன்றைக்கல்ல, 1947 ஆம் ஆண்டில், மொழியின் அடிப் படையில் மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பே - திராவிடரா? தமிழரா? என்கிற விவாதம் அப்பொழுதே கிளம்பியிருக்கிறது.

ஆனால், அதற்குப் பதில் சொல்கிறார், திராவிடர் கழகத்தைக் கண்ட தந்தை பெரியார்தான், ‘‘தமிழ்நாடு, தமிழருக்கே’’ என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்.

‘‘தமிழ்நாடு தமிழருக்கே!’’

‘‘திராவிட நாடு திராவிடருக்கே’’ என்று இல்லாமல், ‘‘தமிழ்நாடு தமிழருக்கே’’ என்று சொன்னவர், நீங்கள் சொல்வதைப்போல, பிறப்பால் தமிழர் அல்லாதவராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், பெரியார்தான் அந்த முழக்கத்தை முன்வைத்தார். அதற்கு அவர் சொல்கிற விளக்கம் மிகவும் போற்றுதலுக்குரியதாக இருக்கிறது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி களைப் பேசக்கூடியவர்களாக இருந்தாலும், அவர்கள் ஆரியத்தைப் பாதுகாக்க, வருணாசிரம தர்மத்தைப் பாதுகாக்க, வடமொழியை இங்கே நிலைநாட்ட, கோவிலில் கடவுள் பாஷையாக, தெலுங்கை கொண்டு போய் வைக்கவேண்டும் என்று எந்தத் தெலுங்கனும் முயற்சி செய்யவில்லை; கோவிலில் கடவுள் மொழியாக, மலை யாளத்தைக் கொண்டு போய் வைக்கவேண்டும் என்று எந்த மலையாளியும் முயற்சிக்கவில்லை. எண்ணிக்கை யால், மிகக் குறைவாக இருந்தாலும், சமஸ்கிருதத்தைத்தான் கடவுள் மொழியாகக் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். தமிழிலே தெலுங்கு கலந்திருக்கலாம்; கன்னடம் கலந் திருக்கலாம்; மலையாளம் கலந்திருக்கலாம்; அந்த ஒரு சில சொற்களும்கூட, ஆரிய பார்ப்பனர்களால் திணிக்கப் பட்டவையாக இருக்கலாமே தவிர, உழைக்கும் தெலுங் கனால், உழைக்கும் மலையாளியால், உழைக்கும் வர்க்கத் தைச் சார்ந்த கன்னடியனால், ஒரு போதும் அது திணிக்கப்பட்டு இருக்க முடியாது.

அவன் தெலுங்கனாக இருந்தாலும், அவன் திராவிடன் தான். அவன் ஆதிக்கம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவனாக இருக்கிறான். எனவே, ஏன் திராவிடன் என்கிற சொல்லாட்சி தேவைப்படுகிறது என்றால், தமிழ்மொழியைப் பேசுவதினால், தமிழ்நாட்டில் பிறந்ததினால், தமிழ்நாட்டிலேயே வாழ்வதினால், ஆரிய சிந்தனை உள்ள ஒருவன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள முடியாது; சொல்லக்கூடாது.

ஆகவே, ஆரியன் யார்? திராவிடன் யார்? என்கிற அடையாளப்படுத்துவதற்கான தேவையிலிருந்துதான் திராவிட என்கிற சொல்லாட்சி தேவைப்படுகிறது என்பதை பேராசிரியரின் அந்த நூல் விவரிக்கிறது. முழுமையாக அந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை. இரண்டாம் பதிப்பாக திராவிடர் கழகம் அந்த நூலை வெளியிட்டு இருக்கிறது.

எவ்வளவு இந்தக் காலத்தோடும் பொருந்திப் போகிறது என்பதைப் பார்க்கும்பொழுது வியப்பாக இருக்கிறது. ஆகவே, கோட்பாட்டுப் புரிதல் இருந்தால்தான், இதை தெளிவுபடுத்த முடியும். இல்லையென்றால், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சொல்கிற இன்றைய தமிழ்த் தேசியம், தெலுங்கருக்கு எதிராகவும், மலையாளிகளுக்கு எதிராக வும், உழைக்கின்ற கன்னடம் பேசுகிறவர்களுக்கு எதிராக வும் அது பொருந்தும்.

உழைக்கின்ற மக்களுக்கானது

திராவிடர் கழகம்

உழைக்கின்ற மக்கள், ஏழை, எளிய மக்கள், சமூகநீதியை நுகர முடியாத மக்கள், இட ஒதுக்கீட்டுப் பயனை அனுப விக்க முடியாத மக்கள் - அவர்களுக்காக உழைப்பதுதான் நம்முடைய நோக்கம். அதற்காகத்தான் திராவிடர் கழகம்; அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம்; அதற் காகத்தான் இடதுசாரிகளின் இயக்கம்; அதற்காகத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு, நான் மாண வனாக எந்தக் களத்தில் நின்றேனோ, இன்றைக்கு ஒரு இயக்கத்தின் தலைவனாகவும், பெரியார் திடலில் நிற்க முடிவதற்குக் காரணம், சமூகநீதித் தொடர்பாக எனக்குள்ள அந்தத் தேடுதல், அந்தப் புரிதலில், அந்தத் தெளிவும்தான்.

27 சதவிகித இட ஒதுக்கீட்டை எல்லாத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தவில்லை

ஆகவே, சமூகநீதி களத்தில் ஒரு போராளியாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்தான், நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்கள். அவருடைய பிறந்த நாளை, பிறந்த நாள் கொண்டாட்டமாக இல்லாமல், பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான ஒரு களமாக திராவிடர் கழகம்  அமைத்திருப்பதற்குக் காரணம், மத்திய அரசாங்கமே, மண்டல் ஆணையத்தின் சமூகநீதி அடிப்படையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப் படுகிற 27 சதவிகித இட ஒதுக்கீட்டை எல்லாத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தவில்லை; முழுமையாக அது நிறை வேற்றப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.

தோழர் கோ.கருணாநிதி  கொடுத்தார்

இதுதான் தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் உள்ள பிரச்சினையும்கூட. இட ஒதுக்கீடு என்பது நம்முடைய சமூகநீதிக்கான கோரிக்கை; சமூகநீதிக்கான ஒரு உரிமை. ஆனால், எந்த அளவிற்கு, இதனை ஏய்க்க முடியுமோ, ஏமாற்ற முடியுமோ அவ்வளவு வேலைகளையும் திட்டமிட்டு செய்யக்கூடிய அளவிற்கு, மிக உயர்ந்த இடத்தில், கொள்கைகளைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில், நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வர வேற்கக்கூடிய இடங்களில், ஓ.பி.சி.யைச் சார்ந்தவர்களோ அல்லது செட்யூல்டு காஸ்ட், செட்யூல்ட் டிரைப்ஸ் என்கிற சமூகப் பிரிவுகளைச் சார்ந்தவர்களோ இல்லை. இங்கே குறிப்புகளை தோழர் கருணாநிதி அவர்கள் கொடுத்தார்.

தேசிய வங்கிகளில் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை என்னவாக இருக்கிறது? ஒரு சதவிகிதம்கூட

ஓ.பி.சி.க்கு நிறைவேற்றவில்லை.

27 சதவிகிதம் நிரப்பப்படவேண்டிய இடங்களில், ஒரு சதவிகிதம்கூட நிரப்பப்படவில்லை. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள், பிரதமராக இருந்த காலகட்டத்தில், இந்தப் பரிந்துரை ஏற்கப்படுகிறது என்கிற பிரகடனத்தைச் செய்தார். அதற்குமுன்பு அப்படியில்லை.

அவருக்கு உற்ற துணையாக அன்றைக்கு, இராம் விலாஸ் பாஸ்வான் இருந்தார்; பாஸ்வான் அவர்கள், இன்றைக்கு வேறு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்; பாரதீய ஜனதாவோடு அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறார் என்பது வேறு. ஆனால், வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது, அவருக்கு உற்ற துணையாக இருந்து, மண்டல் ஆணையப் பரிந்துரையை நடை முறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில், உறுதியாக இருந்தார். பாஸ்வான் மட்டுமல்ல, அகில இந்திய அளவில், அம்பேத்கர் இயக்கத் தலைவர்கள் அனைவரும் இதனை வரவேற்றார்கள்; ஆதரித்தார்கள். யாரும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை.

அத்வானியைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்

மண்டல் ஆணைய அறிக்கையை எதிர்த்து, அத்வானி அவர்கள் ரத யாத்திரையை மேற்கொண்டபொழுது, அன்றைக்குத் தேர்தல் அரசியலுக்கு வரமாட்டோம் என்று நாங்கள் களமாடிக் கொண்டிருந்த நேரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ரத யாத்திரையை மேற்கொண்ட அத்வானியைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை வரவேற்று.

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று உச்சநீதிமன்றம், உச்சவரம்பை விதித்தது. அந்த வரம்பை விதிப்பதற்கு, உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதி காரம் இருக்கிறது? அதனை எதிர்த்துப் போராடவேண்டும் என்று அனைத்துக்கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்து நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்தோம்; பொதுக் கூட்டத்தை நடத்தினோம் மதுரையில்.

உச்சநீதிமன்றத்திற்கு

யார் அதிகாரம் கொடுத்தது?

இட ஒதுக்கீட்டின் அளவை 50 சதவிகிதத்திற்குமேல் உயர்த்தக்கூடாது என்று சொல்வதற்கு, உச்சநீதிமன்றத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டங்களின் அடிப் படையில், விதிமுறைகளின் அடிப்படையில், தீர்ப்பளிப்பது தான் நீதிமன்றங்களின் கடமையாக இருக்க முடியும். அரசியல் நிலைப்பாடுகளை, கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடுகளை,  கோட்பாட்டு அடிப்படையிலான நிலைப்பாடுகளை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு. 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு இருக்கலாமா? வேண்டாமா? என்பது நாடா ளுமன்றத்தின் அவைகளில்தான் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றங்களில் முடிவெடுக்கக் கூடாது. அது கொள்கைசார்ந்த நிலைப்பாடு. ஆனால், இன்றைக்கு 50 விழுக்காடு என்பதினால், ஏற்கெனவே தாழ்த்தப்பட் டோருக்கு 15 விழுக்காடு; பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு. மொத்தம் 22.5 விழுக்காடு நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினால்,

பிற்படுத்தப்பட்டவர்கள் ஓ.பி.சி. என்கிற அதர் பேக் வேர்டு கிளாசஸ் - 70 விழுக்காட்டிற்குமேல் இருக்கக் கூடியவர்கள் இந்தியா முழுவதும் இருக்கின்ற மக்கள் தொகை. அவர்களுக்கு வெறும் 27 விழுக்காடுதான் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட முடியும் என்கிற நிலைப் பாட்டுக்கு வருவதற்குக் காரணம், 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்பதுதான்.

மக்கள் தொகை அடிப்படையில்

இட ஒதுக்கீடு!

ஆனால், 50 விழுக்காட்டிற்குமேல், இட ஒதுக்கீடு கூடாது என்கிற அந்த வரம்பை முதலில் தகர்ப்பதற்கு நாம் போராடவேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த 50 விழுக்காடு என்கிற வரம்பு எதனால் விதிக்கப்பட்டது? யாரால் விதிக்கப்பட்டது? ஏன் விதிக்கப்பட்டது? மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு. அவர்களின் சமூகத் தகுதி உயர்கிற வரையில் இட ஒதுக்கீடு.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்படுகிற வரையில் இட ஒதுக்கீடு; உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒவ்வொரு சமூகத்திற்குமான பிரதிநிதித்துவம் பெறுகிற வரையில் இட ஒதுக்கீடு. மிக உயர்ந்த பதவிகளில், பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் வரக்கூடிய வரையில் இட ஒதுக்கீடு.

ஓ.பி.சி. வகுப்பினரே இப்படி ஏய்க்கப்படுகிறார்கள்; ஏமாற்றப்படுகிறார்கள் என்றால்...

ஒரு சதவிகிதம்கூட வரவில்லை; வங்கிகளில் பொது மேலாளர் பதவிகளில் ஒரே ஒரு விழுக்காடு. ஆங்காங்கே, அரசியல் ரீதியாக எழுச்சிப் பெற்று, வலிமை பெற்று வருகிற, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே, மிக உயர்ந்த அதிகாரத்தில் அமைச்சர்களாக, பெரிய பொறுப்புகளில் இருக்கின்ற சூழலில்கூட, ஓ.பி.சி. வகுப்பினரே இப்படி ஏய்க்கப்படுகிறார்கள்; ஏமாற்றப்படுகிறார்கள் என்றால், தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதைப்பற்றியும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதைத்தாண்டி, வேலை வாய்ப்பை நியமிக்கின்ற இடங்களில்தான் இட ஒதுக்கீடு; பதவி உயர்வு தளங்களில் இட ஒதுக்கீடு இல்லை. ஆக, பதவி உயர்வு தளங்களில் இட ஒதுக்கீடு கொண்டுவரவேண்டும்; அதற்கு சட்டம் கொண்டுவரவேண்டும் - அதற்காக நாம் போராடவேண்டும்.

ஒட்டுமொத்தத்திலே 15 விழுக்காடுதான் அரசு மற்றும் பொதுத் துறை. மீதமுள்ள 85 விழுக்காடு தனியார் துறைகளில் இருக்கிறது. தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு இல்லை; ஆகவே, தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் போராடவேண்டியது நமது கடமை.

தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு கொண்டுவருதற்கு சட்டம் கொண்டுவரவேண்டும் என்று போராடுவதும் நமது கடமை. தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில், அரசுத் துறைகளில், பொதுத் துறைகளில் மட்டுமே இட ஒதுக்கீடு என்கிற அந்த அளவில், நம்முடைய போராட்டங்கள் சுருங்கி நின்றால், சமூகநீதியை நம்மால் காப்பாற்ற முடியாது.

இந்த அரசுத் துறைகளையும், பொதுத் துறைகளையும் மெல்ல மெல்ல தனியார் மயமாகுதல் என்கிற கொள்கை விழுங்கிக் கொண்டே வருகிறது.

கல்வித் துறை, விமானத் துறை, ரயில்வே துறை இவைக ளெல்லாவற்றிலும் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்து, ஒட்டுமொத்தமாக 100 விழுக்காடு தனியார் மயமாக்குவது என்கிற முறையை கைவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அதனுடைய பங்குகளை விற்பனை செய்வது. 10 சத விகிதமோ, 20 சதவிகிதமோ, 30 சதவிகிதமோ என்று.

தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவதற்கும் நாம் போராடவேண்டும்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒரு பொதுத் துறை என்றால், அதனை மொத்தமாக தனியார் மயமாக்கு கிறோம் என்றால், திராவிடர் கழகம் வீதிக்கு வந்துவிடும்; போராட்டம் வெடிக்கும். அதன் பங்குகளை மட்டும் விற் கிறோம்; தனியார் மயமாக்கவில்லை என்று, படிப்படியாக பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதன்மூலம், அதில் இட ஒதுக்கீட்டை கேட்க முடியாது. கேட்க முடியாத நிலை இருக்கிறது. கேட்கிற துணிச்சல் நமக்கு வரவில்லை. ஆகவே, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்கும் நாம் போராட வேண்டியவர்களாக இருக் கிறோம்.

தனியார் துறைகளிலும், அரசு துறைகளிலும்,  பொதுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதை நிலை நிறுத்துவதற்கு நாம் போராடினால்தான், இருக்கின்ற இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள் என்று போராடுவதற்கு நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிட்டும். இன்றைக்கு நாம் அதையெல்லாம் தாண்டி, ஜாதிய மதவாதிகள் திசை திருப்புவதற்காகவே, ஜாதி வெறியையும், மதவெறியையும் மூலதனமாக்கி, மக்களை அந்த மாயைக்குள் கொண்டு வந்து, அதிலேயே சிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு உணர்ச்சி பூர்வமான நிலை - ஜாதி உணர்ச்சி என்பதும், மத உணர்ச்சி என்பதும் - மனிதனின் இயல்பான போக்கிலே, அவனை எளிதாக சிக்க வைக்கக்கூடியது.

பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள்தான் அத்வானி கும்பல்

ஆகவே, அதை அரசியல் யுக்தியாக கையிலெடுத்துக் கொண்டு, அரசியல் ஆதாயத்திற்காக இன்றைக்கு ஆங் காங்கே திட்டமிட்ட வன்முறைகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை, எளிய மக்கள், உழைக்கின்ற மக்கள் மிக இலகுவாக மதம் சார்ந்த அரசியல் களத்திலே தங்களை இணைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக - யாருக்கு ஆதரவாக? மண்டல் ஆணையப் பரிந்துரையை எதிர்த்து ரத யாத்திரையை நடத்தியவர்களுக்கு ஆதரவாக - இந்த மண்ணில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் அறிவித்தபொழுது, அது கூடாது என்று ரத யாத்திரையைத் தொடங்கி, ரத்த யாத்திரையாக முடித்து, பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள்தான் அத்வானி கும்பல்; ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள்.

அவர்களை எதிர்த்து நிற்கவேண்டிய ஓ.பி.சி. சமூகம், இன்றைக்கு அவர்களுக்குப் பக்க பலமாக நின்றுகொண்டு, குரல் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பது, நமக்கு உள்ளபடியே வேதனையாக இருக்கிறது.

அவர்கள்தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நின்றார்கள். மிகப்பெரிய அளவில், முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களையெல்லாம் வீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். வரலாறு காணாத அளவிற்கு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார் கள். இதையெல்லாம் நினைவில் கொண்டு, இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு எதிராக, கருத்தியல் ரீதியான பகைவர்கள் யார்? எதிரிகள் யார்? கொள்கை ரீதியாக - திராவிட அரசியலே கூடாது என்று, தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் நம்முடைய எதிரிகள் அல்ல. தமிழ்த் தேசியத்தைப் புரியாமல், தமிழ்மீது உள்ள பற்றால் பேசு கிறார்கள். ஆனால், திராவிட அரசியல், திராவிட தேசியம் என்பது, சமூகநீதிக்கான அரசியல், சமூகநீதிக்கான கோட்பாடு என்பதைப் புரிந்து வைத்துக்கொண்டு, எதிர்த்து சதித்திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களை அடையாளம் காணுவதன்மூலம்தான் இந்தப் பாதிப்புகளிலிருந்து நாம், நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். அதை உணர்த்துகின்ற களம்தான் இந்தக் களம். அந்தக் களத்தில் மூத்தப் போராளிகளில் ஒருவர்தான் நம்முடைய இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள். அதனால்தான், அவருடைய பிறந்த நாளில், திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் அய்யா அவர்கள், இந்த வரலாற்று நிகழ்வை ஒருங்கிணைத் திருக்கிறார்.

இன்றைக்கு நாம் சந்திக்கின்ற எதிர்ப்புகள், சவால்கள், அச்சுறுத்தல்கள், அவதூறுகள் ஒன்றும் பெரிதல்ல!

இந்தக் களத்தில் எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் - நாமெல்லாம் சந்திக்கின்ற அச்சுறுத்தல்கள் எல்லாம் சாதாரணமானது; பெரியார் சந்தித்தவை எல்லாம் - நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம்  தொடக்கக் காலங்களில் சந்தித்த ஒடுக்குமுறைகள் எல்லாம் சாதாரணமானவையல்ல. அவற்றோடு இன் றைக்கு நாம் சந்திக்கின்ற எதிர்ப்புகள், சவால்கள், அச்சுறுத்தல்கள், அவதூறுகள் ஒன்றும் பெரிதல்ல.

ஆகவே, இவற்றையெல்லாம் எண்ணி வேதனைப் படாமல், நமக்கு திராவிடர் கழகம் இருக்கிறது; திராவிடர் இயக்கத் தலைவர்கள் இருக்கிறார்கள்; திராவிட முன் னேற்றக் கழகத்தின் பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிற அந்தத் துணிச்சலோடு, இந்தக் கொள்கையில் உடன்படுகிற இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்கிற அந்தப் புரிதலோடு களத்திலே நிற்கிறோம்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டிய இட ஒதுக்கீட்டினைப் பறிக்கின்ற செயல், எந்த வகையில் வந்தாலும், அதனை எதிர்த்து நிற்கின்ற களத்தில், திராவிடர் கழகத்தோடு விடுதலை சிறுத்தைகள் என்றென்றைக்கும் கைகோத்து நிற்கும் - உற்ற துணையாக நிற்கும் என்று சொல்லி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரை யாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner