எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.17 திராவிடர்களுக்கென்று இருந்த விழாக்களெல்லாம் பண்டிகைகளாக திரிந்து போன பிறகும் உழவர் திருநாளாம், அறுவடைத் திருநாளாம் தைத்திருநாள் மட்டும் மானமிகு விழாவாக தொடர்கிறது. அதையும் சங்கராந்தி என்று ஆரியம் அபகரிக்கப் பார்த்து தோற்றுப்போனது. தந்தை பெரியாரின் சுயமரியதைச்சூடு பட்டதும் வாலைச் சுருண்டுக்கொண்டு விட்டது.

மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு பல்வேறு தடைகளுக்குப்பிறகு தை முதல்தான் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டம் இயற்றியது! ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. யார் மாறினால் என்ன? தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் தைமுதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகிறது. வழமை போல பெரியார் நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கருகில், வேலு ஆசானின் சமர் கலைக்குழுவின்

பறையிசையோடு முதல் நாள் (15-01-2018) நிகழ்ச்சிகள் தொடங்கியது.

பல்கலைச் செல்வர் மு. கலைவாணன் அவர்கள் பறையை இசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் சென்னை மண்டலச் செயலாளர் பன்னீர் செல்வம், திராவிடர் திருநாள் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவ ரான ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு திராவிடர் திருநாளின் கருத்தமைவாக தமிழிசையை மய்யப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது.

இதற்கென தனி அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. ஒன்றில் தமிழிசை சார்ந்த கருவிகளின் படங்களும், மற்றொரு அரங்கில் தமிழிசைக்கருவிகளே கண்காட்சியாகவும் வைக்கப்பட்டிருந்தது.

தமிழிசைக் கருவிகள் 108 வகைகள் உள்ளதாகவும் அதில் 27 கருவிகள் மீட்கப்பட்டு விட்டதாகவும், 69 வகைகள் மீட்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த அரங்கை ஒருங்கிணைத்திருந்த சிவக்குமார் கூறினார். இதில் முகவீணை, எஸ் கொம்பு, கோடை நகரான், எக்காளம், தாரை, நெடுந்தாரை, உடுக்கை, சேமக்கலம், முரசு, கஞ்சிரா, பலகை, சட்டி, கொட்டு, பால் சங்கு, போர்ச் சங்கு, திருச்சின்னம், இசைக்கிண்ணம், துத்தேரி, கொக்கரை போன்ற பழங்கருவிகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

மக்கள் குடும்பம் குடும்ப மாக வந்திருந்து அக்கருவிகளை பார்த்தும், அதைப் பற்றிக் கேட்டும், தாங்களே அதை வாசித்துப் பார்த்தும் மகிழ்ந்தனர். இந்த இரண்டு அரங்குகளையும் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உணவுத்திருவிழாவுக்கென அய்ந்து அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விருதுநகர் வீச்சுப் பரோட்டா, திருநெல் வேலி அல்வா, மணப்பாரை முருக்கு, பகோடா, பஜ்ஜி, இடியாப்பம் கறி, பஞ்சுமிட்டாய், சாண்ட்விச் ஆகியவை அந்த அரங்குகளில் கிடைத்தன. பெரியார் நினைவிடத்தில் முயல், வாத்து, கொண்டைச் சேவல், மீன்கள், காடைக் கோழிகள், காதல் பறவைகள் ஆகியவை தனித்தனி கூண்டுகளில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

நிகழ்ச்சி முடிந்தபிறகு பறையிசைக்கு பார்வையாளர்கள் மேடையேறி தங்கள் ஆசைதீர ஆடிக்களித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner