எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜன.21 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், தேசிய தீயணைப்பு வாரத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு துறையும் பெரியார் நூற்றாண்டு கல்வி குழுமமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தீ தடுப்பும் மற்றும் பாதுகாப்பும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 19-01-2018 அன்று மதியம் 2  மணி முதல் 4  மணி வரை நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையின் திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் (பொறுப்பு) கோ. இளங்கோ அவர்களும், தீயணைப்பு துறையின் மாவட்ட உதவி அலுவலர் சு.கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளியின் முதல்வர் எம்.இராதாகிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

பள்ளியின் தன்னார்வ மாணவர்கள் முதலுதவி, தீ தடுப்பு, தீ முன்னெச்சரிக்கை, வாகனம், ஊடகம், பாதிக் கப்பட்டவர்கள் போன்ற குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தீ விபத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு செய்து காட்டினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் தீ தடுப்பு ஒத்திகை பற்றியும் திருச்சி, தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் அ.தனபால்  மற்றும் அவரது குழவினர்கள். திருச்சி மாவட்ட சுகாதார துறையின் அவசரகால ஊர்தியின் ஒட்டுநர், செவிலியர் ஆகியோர் சிறப்பாக செய்து காட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தினர்.

நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பயிலும் சுமார் 3000 மாணவ, மாணவிகள் மற்றும் 300 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் துணை முதல்வர் நா.அருண் பிரசாத் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.