எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல்

மருத்துவக் கருத்தரங்கம் எனும் பெயரால் மதவாதத்தைத் திணிக்கச் செய்த முயற்சி முறியடிப்பு - நிகழ்ச்சி ரத்து!

சென்னை, ஏப்.18 மருத்துவக் கருத்தரங்கம் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு தந்திரமாக எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தை  இணைத்து நடத்த இருந்த கருத்தரங்கம், எதிர்ப்பின் காரணமாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

மதவாத அமைப்பின் சார்பில் நடைபெறும் கருத்தரங் கிற்கு அனுமதியளித்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் கிளம்பிய கடுமையான எதிர்ப்பின் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தது பல்கலைக்கழக நிர்வாகம்.

சங் பரிவாரின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத் திற்காக தங்களுடைய துணை மற்றும் இணை அமைப் புகள் உதவியுடன் பல்வேறு தந்திர காரியங்களில் இறங்கி யுள்ளது. இதில் ஒன்று மருத்துவத் துறையில் மெடிவிஷன் என்ற பெயருடன் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து தங்களது கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் போல் கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.    2016 ஆம் ஆண்டு மைசூரு மருத்துவப் பல்கலைக் கழகத்திலும், மும்பையிலும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. முன் னின்று நடத்தியது. மைசூரு மற்றும் மும்பையில் நடைபெற்ற இரண்டு ஏ.பி.வி.பி. மருத்துவ நிகழ்ச்சிகள் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தின. முக்கியமாக ஆங்கில மருத்துவம் குறித்த இந்துத்துவ அமைப்பினரின் மூடத்தனமான கருத்துகள் பெரிய அளவில் மருத்துவர் களிடையே எதிர்ப்பை எதிர்கொண்டன.  இந்த நிலையில் இந்த ஆண்டும் ஏப்ரல் 21 மற்றும் 22 இல் ஏ.பி.வி.பி. சார்பில் மெடிவிஷன்- 2018 என்ற பெயரில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்த விருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவப் பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத் துவர்களுக்கு அனுப்பப்பட்டது. நேரடியாக ஏ.பி.வி.பி. என்று எழுதாமல் இளையபாரதம் என்ற அமைப்புடன் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் விழா என்று குறிப்பிடப்பட்டது.  ஆனால், இந்த இளைய பாரதம் அமைப்பை ஏ.பி.வி.பி. அமைப்பினரே உருவாக்கியுள்ளனர். இருப்பினும் இந்த அழைப்பிதழில் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பே முன் னிலைப் படுத்தப்பட்டிருந்தது. ஏற்கெனவே இந்த அமைப்பினர் நடத்திய இரண்டு நிகழ்வுகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பதால், இம்முறை அழைப் பிதழ் பெற்றவர்கள் அனைவருமே எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்துபவர் ஏ.பி.வி.பி. அமைப்பின் தலைவர் சுப்பையா சண்முகம் ஆவார். இந்த நிகழ்ச்சியில் இவர் ஒருவர் மட்டும் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் தான் இந்த நிகழ்ச்சியை நடத்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அனுமதி தரவேண்டும் என்று கூறி வற்புறுத்தி அனுமதி பெற்றிருக்கிறார். இவரைத் தவிர மற்ற விருந்தினர்கள், பேச்சாளர்கள் அனைவருமே வட இந்தியர்கள். இது தொடர்பாக தமிழக மருத்துவர் அமைப்பும், இந்திய அளவிலான மருத்துவ அமைப்பும் இணைந்து தேசிய மருத்துவ ஆணையத்தில் புகார் அளித்தன. இப்புகாரை அடுத்து தேசிய மருத்துவ ஆணையம் இந்நிகழ்ச்சியை நடத்தும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு விளக்க அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.  இது தொடர்பாக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும் போது, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்பது அரசு அமைப்பாகும்; அப்படி ஒரு அரசு அமைப்பில் மதவாத கருத்துகளைக் கொண்ட ஒரு தனியார் அமைப்பு எப்படி நிகழ்ச்சிகளை நடத்தலாம், இந்த நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கியது என்று கேள்வி எழுப்பி யுள்ளார். இந்துத்துவ அமைப்பின் நிகழ்ச்சி குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், எங்களுக்கு இந்த நிகழ்ச்சியை ஏ.பி.வி.பி. என்ற மதவாத மாணவர் அமைப்பு நடத்துகிறது என்று தெரியாது. மாணவர்களின் நலன்களுக்காக சிறப்பு கருத்தரங்கம் ஒன்று நடைபெறப் போவதாகத்தான் தெரிவித்திருந்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல் கலைக்கழக இயக்குநர் கீதாலெட்சுமி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குத் தெரிவித்ததாவது:

இந்த நிகழ்ச்சி நடக்கப்போவது குறித்து எங்களின் அனுமதியை வாங்கும் போது மாணவர் கருத்தரங்கம் என்று தான் கூறினார்கள். மேலும் எங்களைக் கேட்கா மலேயே எங்கள் பெயரையும் அழைப்பிதழில் சேர்த்து நாங்களும் இணைந்து நடத்துவதுபோன்று பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அழைப்பிதழைப் பார்த்த பிறகுதான் அவர்கள் முறைகேடாக எங்கள் பெயரைச் சேர்த்தது தெரியவந்தது. இது தொடர்பாக நான் சுப்பையா சண்முகத்திடம் விளக்கம் கேட்டு இருக்கிறேன்'' என்றார். சுப்பையா சண் முகம் 2017 ஆம் ஆண்டு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப் பின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  அரசு பணியில் இருப்பவர் ஒரு மதவாத அமைப்பின் முக்கியப் பதவியில் எப்படி இருக்க முடியும் என்று கேட்ட போது,  ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் கருத்துகள் ஒன்றும் தீண்டத்தகாத கருத்துகள் அல்ல; நாங்கள் அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. பல்கலைக்கழக நிர்வாகத்தின் அரசமைப்புச்சட்டத்தின் படி செயல்படும் மாணவர் அமைப்பு ஒன்றின் தலைவராக இருக்கிறேன் இதில் எந்த தவறும் உள்ளதாகத் தெரியவில்லை'' என்றுகூறினார்.  பல்கலைக் கழகத்திற்குத் தவறான தகவலைத் தந்து நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் எச்சரித்தோடு அதற்கான விளக்கமும் பல்கலைக் கழக நிர்வாகம் கேட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.