எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.11 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டத்தின்கீழ், பயன்பெற வியாழக்கிழமை (ஜன. 10) முதல் ஜன. 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சார்பில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஜன. 10) முதல் வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பலாம்.

மானியம், தகுதி: இத்திட்டத்தின்கீழ், அதிகபட்சமாக இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்குப் பொருத்தப்பட்ட கூடுதல் சக்கரங்கள் உடைய வாகனத்துக்கு மானியத் தொகையாக அதிகபட்சமாக ரூ.31,250 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் பெண்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சொந்த முதலீடு அல்லது வங்கிக் கடன் பெற்று இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும். அதன் பின் மானியம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

1.1.2018-க்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட புதிய, மாசு ஏற்படுத்தாத வாகனமாக இருக்க வேண்டும். மேலும் பயனாளி 18 முதல் 40 வயது வரை உள்ளவராகவும், ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2,50,000 மிகாமல் இருக்க வேண்டும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner