எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்து ராஷ்டிரம் என்ற பெயரால் வேதகால நாகரிகமா? இதனைத் தடுத்து நிறுத்துவதே நமது முதல் வேலை!

அய்யாவின் கருத்துகளை அகிலத்திற்கே கொண்டு சேர்த்தவர் தான் நமது ஆசிரியர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளில்

உன்னிப்பாகக் கவனம் செலுத்தவேண்டும் தமிழர் தலைவர்

‘அய்யாவின் அடிச்சுவட்டில் நூல்’ வெளியீட்டு விழாவில் மதுரை பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் அரிய உரை

மதுரை, சன. 3- இந்து ராஷ்டிரம் என்ற போர்வையில் வேத கால நாகரீகத்தைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள், இதனை முறியடிக்க வேண்டும் என்றார் மதுரை பொன்.முத்துராம லிங்கம் அவர்கள்

மதுரை எஸ்.ஏ.எஸ். அரங்கத்தில் 24.12.2016 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் அறிமுக விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆற்றிய உரை வருமாறு:

நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் இயக்க வரலாறான தன் வரலாறு என்ற இந்த அறிவுசார் புத்தகத்தை திராவிடர் இயக்கத்திற்கு வரலாற்று ஏட்டின் அய்ந்தாம் பாகத்தை அறிமுகப்படுத்துகின்ற இன்றைக்கு திராவிடக்கழக தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய தன்னுடைய வரலாறு.

அவர் “தன்னுடைய வரலாறையும், இயக்கத்தினுடைய வரலாறையும் வேறுபடுத்துவதற்கான, பிரித்து சொல்லுவ தற்கான வாய்ப்பே இல்லை; என் வாழ்வே இயக்க வாழ்வு; இயக்கம் தான் என் முழுமையான வாழ்வு; எனவே இயக்க வாழ்வோடு கலந்து என் தொடர்பான செய்திகளையும் சொல்லுகிறேன்” என்ற முன்னுரையோடும், தன்னடக்கத் தோடும் திராவிட இயக்கத்தினுடைய வரலாற்று நூலை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். திராவிட இயக்கத்தி னுடைய கடந்த கால வரலாறு, நிகழ்கால வரலாறு எதிர்காலத் தில் எப்படி செயல்படவேண்டும் என்கின்ற இந்த முக்கால பார்வையோடு திராவிட இயக்கத்தினுடைய செயல் வீரர்கள் திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகளை அணுகிட வேண்டும்.

கடந்த காலத்தில் அய்யா அவர்கள் 1926க்கு முன்னால் காங்கிரஸ் இயக்கத்திலே இருந்தார். வணிகராக இருந்தார் 26ஆம் ஆண்டிலே “சுயமரியாதை இயக்கம்” கண்டார். இந்த சுய மரியாதை என்கின்ற அந்தத் தன்மான உணர்வுக்கு இடைஞ்சலாக, தடையாக இருந்த இனம் எது என்றால் அது ஆரிய இனம்.

சேரன்மாதேவியில் நடந்தது என்ன?

பார்ப்பனர்களால் சேரன்மாதேவியிலே வ.வே.சு.அய்யர் என்று கருதுகிறேன். அவர் நடத்திய குருகுலத்தில் பிராமணர் கள் - பிராமணர் அல்லாதவர்கள் குடிக்கின்ற தண்ணீரிலே கூட வேறுபாடு என்பதையெல்லாம் கண்ட பெரியார் அவர் கள் சுயமரியாதைக்கு இவ்வளவு பெரிய சோதனை வருகின்ற காலக்கட்டத்திலே கூட காங்கிரஸ் இயக்கம் இதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் நாட்டு விடுதலை என்பதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்களே இந்த மனிதாபிமான உணர்வு என்னாவது இவர்கள் பேசுகின்ற சுதந்திரம், இவர்கள் விடுக்கின்ற வேண்டுகோளை வேண்டுமானால் ஆங்கிலேய ரிடமிருந்து அதிகாரத்தை பிராமணர்களுக்கு மாற்றித்தருமே அல்லாமல் விலங்கிலும் கேடாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்குமா என்றால் நிச்சயமாக கிடைக்காது என்பது தான் பெரியாரு டைய தீர்க்கமான சிந்தனை. அந்த அடிப்படையிலே உருவான இயக்கம் தான் ‘சுயமரியாதை இயக்கம்’ 1912-16ஆம் ஆண்டுகளில் பிராமணர் அல்லாதோர் சங்கம்; அதன் தொடர்ச்சியாக தென்னிந்திய நல உரிமை சங்கம்; அதன் பரிமாண வளர்ச்சியில் நீதிக்கட்சி; இப்படி பரிணாம வளர்ச்சி பெற்று வந்த நீதிக்கட்சி; இந்த சாதாரண மக்களை சாதியத்தின் அடிப்படையில் பிறப்பு என்ற அடிப்படையில் வேறுபடுத் தாமல் அனைவரும் சமம் என்கின்ற அடிப்படையிலே, பிராமணர்களுக்கு இருக்கக்கூடிய அந்த வாய்ப்பு அவர்கள் எண்ணிக்கை வளத்தாலே பெற்றதல்ல, மாறாக அவர்கள் பெரும்பான்மை மக்களை ஏமாற்றிப் பெற்றிருக்கிறார்கள், என்கின்ற உண்மையைத் தெரிந்து கொண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதன் மூலம் ஆங்கிலேயன் கூட கொஞ்ச நாள் இருந்து தொலையட்டும் ஆனால் ஆட்சிக்கு வருவதன் மூலமும் இந்தக் கொடுமைகளுக்குக் கட்டுப்பாடு விதித்திட முடியும் என்கின்ற சிந்தனையிலே வந்தவர்கள் தான் நீதிக்கட்சிக்காரர்கள்.

இரு வேறு சுய மரியாதை இயக்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிற அய்யா அவர்களும் நீதிக்கட்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களும், சிந்தனையில் ஒன்றாக இருந்த காரணத்தினாலே தான் அய்யா அவர்களே நீதிக்கட் சிக்குத் தலைமை ஏற்கக் கூடிய காலக்கட்டம் அன்றைக்கு உருவானது. ஆனால் அய்யா அவர்கள் தலைமை ஏற்றாலும் கூட, நீதிக்கட்சி மக்கள் மத்தியிலே புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவானதை எண்ணிப்பார்த்து, அய்யா அவர்கள் அதை திராவிடர் கழகமாக மாற்றிட வேண்டும் என்கின்ற அடிப்படையிலே தான் 1944 அன்று ‘அண்ணா தீர்மானம்’ என்றே அந்த தீர்மானத்திற்குப் பெயர் - சேலம் மாநாட்டிலே திராவிடர் கழகமாக அது பரிணாம வளர்ச்சி பெற்றது. திராவிடர் கழகமாக வளர்ச்சி பெற்றதற்குப் பின்னாலே தான் அனைத்து மக்களுடைய கட்சி இது பிற்படுத்தப்பட்டவர்களின் கட்சி, தாழ்த்தப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின், தண்டிக்கப்பட்டவர்களின் இயக்கம் என்கின்ற அந்த நிலைக்கு திராவிடர் கழகம் உருவானது.

அய்யாவின் தீர்க்கமான கொள்கை

1944ல் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தீர்மான அடிப்படையிலே தான் அப்பொழுது அய்யா அவர்களுடைய தீர்க்கமான கொள்கை “மனிதன் மனிதாக வாழ வேண்டும். மனிதனுடைய உழைப்பு பிராமணர்களாலே சுரண்டப்படக் கூடாது. வர்ணாசிரமத்தின் அடிப்படையில் ஸ்மிருதி அடிப் படையில் சாதிகளை உருவாக்கி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று வேறுபாடு கற்பித்து அதன் மூலமாக உயர்ந்த சாதிக் காரன், தாழ்ந்த சாதிக்காரனை சுரண்டுவது என்பது தடுக்கப் படவேண்டும். சாதிய வேறுபாட்டாலே நடைபெற்றுக் கொண் டிருக்க கூடிய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”

கல்வி பெறுகின்ற வாய்ப்பே இல்லாத மக்களுக்கு, கல்வி பயிலுகின்ற வாய்ப்பைப் பெற்றுத்தரவேண்டும் என்கின்ற இந்த உரிமைகளைப் பெறுவதற்காகத்தான் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் ஒன்றாக இணைந்து அய்யாவினு டைய தலைமை ஏற்று, அதற்கு பின்னாலே அண்ணா அவர்கள் வழிநடத்த மிகப்பெரிய இயக்கமாக தமிழ்நாட்டில் இது உருவெடுத்தது என்பது வரலாறு.

அய்யா அவர்களுடைய எழுச்சிக்குப் பின்னாலே மிகப்பெரிய மாற்றங்களை தமிழ்நாடு சந்தித்தது. ஏன் அய்யா அவர்கள் இதே கேரளப் பகுதியில் வைக்கம் சென்று போராட் டம் நடத்தி அங்கே அனைவரும் தெருவிலே நடக்கலாம் அவர்களுக்கு உரிமை உண்டு. தாழ்த்தப்பட்டவன் நடக்கக் கூடாது, தெருவிலே செல்லக்கூடாது என்ற தடையினை உடைத்தெறிந்த பெருமை அய்யா அவர்களுக்கு உண்டு. அதனாலேயே திரு.வி.க. அவர்கள் 'வைக்கம் வீரர்' என்ற பட்டத்தை வழங்கினார் என்பது வரலாறு. இப்படி சாதிய ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தெறிந்த பெருமை நம்முடைய அய்யா அவர்களுக்குத்தான் உண்டு. இன்னும் தெளிவாக சொன்னால் அய்யா அவர்கள் சமநீதி, அது போன்று சமுதாய சீர்திருத்தம் இவை இரண்டும் தான் அவருடைய அடிப்படை கொள்கைகள்.

சமூக நீதி, பொருளாதார நீதி

சமுதாய சீர்திருத்தம் சமநீதி, பொருளாதார நீதி இந்த இரண்டையுமே அய்யா அவர்கள் எடுத்துச் செல்ல வேண் டும் என்று எண்ணிய காலம் உண்டு. அந்தக் காலக்கட்டத் திலேயே தான் 1932இல் சோவியத் யூனியனுக்குச் சென்றார். ஏறத்தாழ மூன்று மாத காலம் சோவியத் ரஷ்யாவில் இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நான் இங்கு வாழவேண்டும் என்று சொல்லி இது தான் மனிதன் வாழக்கூடிய பூமியாக உள்ளது என்று கூறினார். அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். அய்ரோப்பா விலே கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதற்காகப் பெரும் பாடு பட்ட சக்லத் வாலா அவரோடு தொடர்பு கொண்டு அவருடைய விருந்தினராக ஏறத்தாழ 20 நாட்கள் இங்கிலாந்தி லேயே தங்கியிருந்தார். உலக நாடுகளை எல்லாம் சுற்றி உலக மக்கள் சமுதாயம் எப்படி இருக்கிறது என்பதை ஆழமாக சிந்தித்த பின்னாலே தான் இங்கே வந்தார். இங்கே தமிழ்நாட்டில் உள்ள தென்னகத்தினுடைய முதல் கம்யூனிஸ்ட் என்று கருதப்பட்ட சிந்தனை சிற்பி சிங்கார வேலர் - அது போல ஜீவா ஆகியோர்களுடன் இணைந்து ஈரோட்டுப்பாதை என்கின்ற சமதர்ம கோட்பாட்டை உள்ளடக்கிய அந்தக் கொள்கை பிரகடனத்தையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அறிக்கையையும் தமிழ்படுத்தி வெளியிட்டார்.

அய்யா எடுத்த நிலைப்பாடு

ஈரோட்டுப்பாதை இவர்களாலே உருவாக்கப்பட்டது தான் அந்த அடிப்படையிலே தான் அய்யா அவர்கள் சிறை சென்றதும் உண்டு. ஆனால் அதற்குப் பின்னாலே ஆழமாக சிந்திக்கின்றார்கள் அய்யா அவர்கள். சரி ஒரு கம்யூனிஸ்ட் தத்துவத்தை நாட்டிலே அறிமுகப்படுத்த வேண்டுமானால் அதற்கான முன்னேற்பாடுகள் வேண்டும். ஆனால் “இந்திய சமூகம் வேதகாலத்திலிருந்து கெட்டு ஒரு சுமுகமான சூழ்நிலையே இல்லாமல் இருக்கின்ற நிலையில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை நான் இங்கே செயல்படுத்துவது ஆகாது” என்று ஆழமாக அறிந்த காரணத்தினால் தான் சமுதாய சீர்திருத்தம் என்கின்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு நின்றுவிட்டார். அதனாலேயே சமதர்மம் வேண்டாமென்று பொருள் அல்ல அது இந்த சமுதாயத்தை பண்படுத்திய பின்னாலே இச் சமுதாயத்தை ஒழுங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னாலே கம்யூனிஸ்ட் சமதர்மத்தை, சித்தாந்தங்களை, பொருளாதார சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப் பக்குவத்தை சாதாரண அப்பாவி மக்களுக்கு கல்வி அறிவில்லாத மக்களுக்குப் புரிகின்ற சூழ்நிலையை உருவாக்கி கொண்டு கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தலாம் என்கின்ற சிந்தனையின் அடிப்படையிலே தான் அய்யா அவர்கள் இந்த சமதர்மக் கொள்கையை விட்டு விட்டு சமூக சீர்த்திருத்தக் கொள்கையிலே வலுவாக நின்று பிரச்சாரத்தை நடத்தி வெற்றியும் கண்டார்கள்.  நம்முடைய எழில் விழியன் அவர்கள் கூட குறிப்பிட்டார்கள்.

அண்ணா, அய்யாவுக்கு எழுதிய கடிதம்

அண்ணா அவர்கள் அமெரிக்காவில் இருந்த பொழுது அய்யா அவர்கள் 90 வயதை அடைந்த போது கொஞ்சம் நாம் செய்த பணி பயன்பட்டிருக்கிறதா? சமுதாயம் திருந்தி இருக்கிறதா? சமுதாயம் ஒரு விழிப்புணர்வை பெற்றிருக்கிறதா? என்று ஆய்வு செய்த அய்யா அவர்கள் மனசஞ்சலப்பட்டு தன் பிறந்தநாள் மலரில் 'துறவியாக ஆகிவிடலாம் என்று சிந்தனைகள் செல்லுகிறது' என்று மனசஞ்சலத்தோடு எழுதியிருக்கிறார். இதை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அண்ணா அவர்கள் அய்யா அவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார். 'நீங்கள் செய்த இந்த சமுதாய புரட்சி என்பது சாதாரணமானது அல்ல; உலக வரலாற்றில் எந்த ஒரு சமூகப் புரட்சியாளனும் செய்ய முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியை இந்த நாட்டில் செய்து காட்டிய மகத்தான தலைவன் நீங்கள். எனவே எந்தக் காலக்கட்டத்திலும் சலனப்படவேண்டிய அவசியம் இல்லை‘ என்று அண்ணா அவர்கள் 1968ம் ஆண்டு அய்யா அவர்க ளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அது முரசொலியில் 03.12.2009 ஆண்டு வெளிவந்திருக்கிறது. ஆக இப்படி அய்யா அவர்களுடைய வரலாறு செல்லுகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்

திருவள்ளுவர் சொன்னார்

வள்ளுவர் கூட சொன்னார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்.

இங்கே 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே சொன்னார். ஆனால் அப்படி நடத்தி மனிதன் ஒன்று என்று கருதுகிற காலத்தில் அவன் செய்யும் தொழிலில் ஏன்டா வேற்றுமை படுத்துகிறீர்கள். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு, என்று வள்ளுவர் அன்றே கேட்டார். அதற்குப் பின்னால் அய்யா வந்து இப்பிரச்சனை ஆரம்பித்ததற்குப் பிறகு அதே போல சித்தர்கள் சொன்னார்கள்.

சித்தர்கள் பாடி பாதி விளங்கி, பாதி விளங்காமல் அய்யா வின் கருத்தை அவர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள், சித்தர்கள் பாடியிருக்கிறார்கள், கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை. இதெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் துணிச்சலாக அய்யா மாதிரி சொல்ல முடிந்ததா? “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” ஏன் இப்படி சொன்னார்.

சித்தர்களாக இருக்கட்டும் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஏன்டா விளங்காம பொதுமக்கள் புரிந்து கொள்ள முடியாத படி பாடி வைக்கிறீர்கள் நான் சொல்லுகி றேன் பார், கேள், அப்படின்னு சொல்லிட்டு கடவுள் இல்லவே இல்லைடா, கடவுளைத் தேடி அலைந்து கொண்டிருக்க கடவுளை எப்பவுமே அய்யா சொற்களில் வந்து அந்த பாலிஷ் போட்டு பேசுவது இருக்காது. அய்யா எப்பவுமே நாட்டு மருந்துதான் கொடுப்பார்.

அந்த இனிப்பு தடவப்பட்ட மாத்திரை கிடையாது. கசப்புனா கசப்புதான் இது சுகப்படுத்தும், சரிபடுத்தும் என்பது அய்யாவின் கசப்பான மாத்திரைகளை கசப்பு என்று சொல்லிக்கொடுப்பார் அய்யா அவர்கள் இப்படி சாதாரண மக்களுக்கு இப்படி பேசுனா தான் அவன் புரிந்துகொள்வான் சித்தர் பாடலை ரோட்டில் திரிகிற சுப்புனும், குப்பனும் எப்படி தெரிந்து கொள்வான் ஆனால் அய்யா கொடுத்த இந்த மாத்திரை இருக்கு பாருங்க இதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. என்னடா முட்டாள்னு சொல்றது, அயோக்கியன்னு சொல்றது இது ஆண்டவன் பார்த்து உருவாக்கிய பூமி, ஆண்டவன் பார்த்து உருவாக்கிய மனிதன் என் படைப்பே ஆண்டவனால் உருவாக்கப்பட்டது.

டார்வின் சொல்லிவிட்டும் அப்படித்தானே நம்பி கொண் டிருந்தான். டார்வின் வந்து பரிணாம வளர்ச்சியின் வடிவம் தான் மனிதன் விலங்கிலிருந்து பிறந்தவன் என்று டார்வின் அறிவியல் பூர்வமாக சொல்லும் வரை என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள். படைப்பே ஆண்டவன் தான் ஆகவே இந்த முட்டாள்தனமான தத்துவங்களை உடைத்து அவன் பேசுகின்ற மொழியிலே பேசினால் தான் விளங்கும் என்பது அய்யா அவர்களுடைய கருத்து அந்தக் கடினமான வார்த் தைகளைப் போட்டு அதனால் சொன்னார்கள். கம்பராமாய ணத்தை எரி என்றார்கள். அய்யா பார்ப்பனர்களின் குடுமியை அறுடா என்று சொன்னார்கள்.

இதையெல்லாம் ஏன் சொன்னார்கள் என்றால் இந்த மொழிதான் இவனுக்கு புரியும் இந்த மொழியில் சொன்னால் தான் விளங்கும் ஆனால் அண்ணா அவர்கள் மென்மையாக சொன்னார்கள். அது அண்ணாவின் பொலைட் லாங்குவேஜ் நீ போ, பொதுத் தொண்டு செய்ய வேண்டும் என்றால் அவ னோடு இரு அவனுடைய மொழியில் பேசு, நீ போய் ஒப்பனை மொழியில் பேசாதே அவன் என்ன மொழியில் பேசுவானோ அந்த மொழியில் பேசு அவனைத் திருத்து என்று அண்ணா சொன்னார்கள். அது வேறு ஆனால் அய்யா அவர்கள் அவனுக்குப் புரிந்த அதே மொழியில் அவனைத் திருத்தினார். இது நமக்கு கடந்த காலத்தில் திராவிடர் இயக்கம் மிகப்பெரிய சாதனைகளை செய்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில்

அண்ணாவின் கன்னிப் பேச்சு

அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்துக்குச் சென்ற போது கன்னிப் பேச்சில் என்ன பேசினார்? நான் யாருக்காக வாதாட நாடாளுமன்றம் வந்திருக்கிறேன் என்றால் “மேட்டுக்குடி மக்களுக்காக அல்ல நடைபாதையில் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஏக்க பெருமூச்சோடு அலைந்து கொண்டிருக் கக்கூடிய சாதாரண, சாமானிய மனிதனுக்காக வாதாடுவதற்கு டில்லி நாடாளுமன்றம் வந்திருக்கிறேன்” எனறு சொல்லிய மகத்தான தலைவன்.

இந்திய நாட்டின் வரலாற்றில் பேரறிஞர் அண்ணாவைத் தவிர வேறு யார் அப்படி திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் கலங்கரை விளக்கங்கள் இருந்தார்கள். அய்யா, அண்ணா ஆகியோர் இருந்தார்கள். கலைஞர் அவர்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்திருக்கிறோம்.

ஆனால் இன்றைக்கு அரசியல் நிலைமை என்ன தமிழ் நாட்டில் இந்தியாவின் அரசியல் நிலைமை என்ன இதற்கு ஏற்ப திராவிட இயக்கத்தின் பார்வை இருந்திட வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்! இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியல் திராவிடர் இயக்க உணர்வோடு இருக்கிறதா இங்கு கலப்படங்கள் அதிகமாகிவிட்டன.

கலப்படம் அதிகமாகி உண்மையை விட கலப்படங்கள் அதிகமாக இருக்கின்றன. நமக்குப் பயன்தரும் பயிர்களை விட களைகள் அதிகமாக முளைத்துவிட்டன. இதை எப்படி திருத்தப்போகிறோம். சிந்தியுங்கள், இதை எப்படி களையப் போகிறோம். அவனும் அய்யா படத்தையும், அண்ணா படத் தையும் வைத்திருக்கிறான். இரண்டையும் வைத்துக்கொண்டு காவடி எடுத்து ஆடுகிறான், பால்குடம் எடுக்கிறான், யாகம் நடத்துகிறான் தேர் இழுக்கிறான். முதுகில் கொக்கி போட்டு இழுத்து வருகிறான்.

இதற்கு என்ன மாற்று? அய்யா காலம் வேறு, அண்ணா காலம் வேறு; அப்போது மகத்தான தலைவர்கள் இருந்தார்கள். ஒரு சொற்பொழிவின் மூலம் லட்சணக்கான மக்களை மாற்றக்கூடிய நிலை இருந்தது. மாற்றிக்காண்பித்தார்கள். இன்றைக்கு நம் நிலைமை? அவர்கள் காலத்தில் இல்லாத பிரத்யேகமான ஒரு சங்கடம் வந்திருக்கிறதே - இங்கே அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே - இதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?

மாற்றான் தோட்டத்து

மல்லிகைக்கும் மணம் உண்டு

வைரஸ் கிருமி மாதிரி வந்து கொண்டிருக்கிறான்; மக்க ளையும் கெடுக்கின்றான். ஜனநாயகம் இப்படி கேள்விக் குறியதாக ஆகும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அண்ணா அவர்கள் ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு மக்க ளைப் பக்குவபடுத்தினார், மாற்றான் தோட்டத்து மல்லி கைக்கும் மணம் உண்டு; மாற்றான் தோட்டத்திலே வளர்ந்த காரணத்தினாலே அந்த மல்லிகைக்கு மணம் இருக்காது என்று வாதாடக்கூடாது. அது நமது எதிரி வீடாக இருக்கலாம் அவனுடைய தோட்டத்தில் மல்லிகை மலர்ந்தாலும் மல்லி கைக்கே உண்டான மணம் என்று ஏற்றுக்கொள்ளுபவன் தான் ஜனநாயக வாதி என்று அண்ணா சொன்னார்கள்.

எண்ணிக்கை பலமா - எண்ண பலமா?

‘எண்ணிக்கை பலத்தை விட எண்ணத்தின் பலமே மேலானது’ ஜனநாயகத்தின் வழி இதுதான் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு சட்டமன்றத்தில் தாளம் போடுவதை தவிர என்ன பழகியிருக்கிறார்கள். சட்டமன்றம் என்பது என்ன? மக்கள் பிரதிநிதித்துவ சபை மக்களின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும்; அப்படிப்பட்ட சட்டமன்றம் தலையாட்டி தாளம் போடுவதை போல் தாளம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயக முறை குட்டிச்சுவராகிவிட்டதே அண்ணா கண்ட ஜனநாயகமா நடக்கிறது? இல்லை இப்படியொரு விபரீதமான சூழ்நிலை; தமிழ்நாட்டில் நடக்கிறது. இன்றைக்கு அரசியல் சூழ்நிலை என்ன? ஒரு குழப்ப நிலை, தேக்க நிலை, குதர்க்கமான அரசியல் சூழ்நிலை - இது தான் இன்றைக்கு தமிழ்நாடு: மத்தியிலே எப்படி இருக்கிறது. வேதகாலத்தோடு வந்துகொண்டிருக்கிறார்கள். மோடி என்பவரே ஒரு மர்மமான நபராகத் தெரிகிறார். கிராமத்தில் பிள்ளைகளை பயமுறுத்த மோடி மஸ்தான் வருகிறான் என்பார்கள்.

இப்போது மோடி வருகிறார் என்றாலே போதும் ஒரு நாட்டின் பிரதமராக இருப்பதற்கான அடிப்படை தகுதியாவது இருக்கிறதா? அண்ணல் காந்தி அவர்கள் பாரிஸ்டர் படித்தவர் தான்; அவர் தமிழ்நாட்டிற்கு வந்த போது விவசாயி கோவணம் கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டார்; இவன் தான் இந்திய குடிமகனா என்று பார்த்தார்; எல்லாரும் இதைத்தானே கட்டியிருக்கிறார்கள்; எனவே நானும் இதை கட்டிக்கொள்கிறேன்; அவனுடைய பிரதிநிதியாக இருக்க வேண்டுமென்றால் என நினைத்து உடுத்திக்கொண்டார்.

அய்யா கருப்புச் சட்டை ஏன் அணிந்தார்?

அய்யா ஏன் கருப்பு சட்டை அணிந்தார்? இந்த நாட்டில் அறியாமை மண்டிக் கிடக்கிறது. கருப்பு சிகப்பு இரண்டுமே என்னைப் பொறுத்த வரையில் புரட்சிதான். அறியாமை இன இழிவு இதை அடையாளப்படுத்த கருப்பை அணிந்தார் கள். எவன் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் கருப்பு சட்டை அணிந்து பிரச்சாரம் செய்தார்கள். சமுதாயத்தில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்த அய்யா அயராது பாடுபட்டார்கள். ஆனால் மோடி அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு டிரஸ்ஸில் வருகிறார். மாறுவேடப் போட்டியில் வந்தது போல ஒரு நாள் குல்லா - டர்பன், ஒரு நாள் சர்வாணி; கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு வருகிறார்.

சாதாரண குடிமகனுக்கு மூன்று வேளை உணவு இல்லை, வேஷ்டி இல்லை, வீடு இல்லை ஆனால் இந்தியக் குடி மகனுக்கு வழிகாட்டவேண்டிய பிரதமருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு டிரஸ்; இந்தியாவை சுற்றி வளம் சேர்ப்பார் என்றால் உலகத்தை சுற்றுகிறார். வீட்டு ஞாபகம் வந்தால் தான் இந்தியாவிற்கு வருவது; இது இந்தியாவின் நிலைமை.

சமஸ்கிருதம், இந்தி திணிப்பு

சும்மாவாவது இருந்து தொலைப்பாரா என்றால் அதுவும் இல்லை; நான் வேதகால நாகரீகத்தைக் கொண்டு வருவேன். என்னடா வேதகால நாகரீகம் என்றால் சமஸ்கிருத்தை படிக்க சொல்கிறாயா ‘அது தவளை பாஷை அதை எப்படி படிப்பேன்’. என்ன படிச்சாலும் நமக்கு வராது. நாக்கு அப்படிச் சுழட்ட முடியாது. அக்கிரகாரத்தில் இருப்பவன் தான் அப்படிச் சுழட்டுவானே ஒழிய நக்கியே பழக்கப்பட்டவன்; அதனால் நம்மால் சுழட்ட முடியாது.

அடுத்து இந்தியை எல்லாவற்றிலும் புகுத்துகிறார்கள். எதைப் பார்த்தாலும் எந்தத் திட்டத்திற்கும் இந்தி, சமஸ்கிருதப் பெயர்கள் தான் வைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியில் உள்ளார்.

டெட்டாலை தெளிக்காதே, மாட்டு கோமியத்தை தெளி என்கிறார். கோமாதா - மாட்டுக்கறி சாப்பிடாதே என்கிறார். இன்று அய்யாவும் இல்லை, அண்ணாவும் இல்லை, கலைஞரும் நோயில் இருக்கிறார். கலவர சூழ்நிலையை உண்டாக்குகிறார்கள் என்று எங்களைப் போன்றவர்களுக்குக் கவலையாக இருக்கிறது என்ன செய்ய போகிறோம்! வேதகாலத்திற்கு போகப்போகிறோம். திராவிட இயக்கம், இதை இயக்கம் என்று பெயர் வைத்தார் என்றால் ஒரு கட்சி இல்லை, கட்சி என்றால் ஒரு காலத்தோடு முடிந்து போய்விடும் இதை இயக்கம் என்று சூட்டியதற்குக் காரணம் காலமெல்லாம் இருக்க வேண்டிய ஜீவ சக்தியுள்ள அமைப்பு உயிரோட்டமுள்ள அமைப்பு அதனால் தான் இதற்குப் பெயர் இயக்கம் என்று அய்யா, அண்ணா அழைத்தார்கள்.

ஆக இந்த இயக்கம் இன்று உள்ள மோடி அரசு வேதகாலத்திற்கு நம்மை இழுத்து செல்ல வேண்டுமென்று திட்டமிட்டே இந்து ராஷ்டிரம் என்று சொல்கிறான். என்னடா இது இந்து ராஷ்டிரம்? வரலாற்று ஆசிரியர்களே வேறு பெயர் சொல்லுகிறார்களே இந்தியா என்பது துணை கண்டம்  -அப்படித்தானே வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். பல தேசிய இனங்களை உள்ளடக்கிய கலையால், கலச்சாரத்தால், நாகரிகத்தால், பண்பாட்டால் வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு துணை கண்டம்; இதுதானே வரலாறு, வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.

அது மட்டுமல்ல வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் இந்தியா என்கின்ற பெயர் எங்கிருந்தது. ஜம்பு தீவு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாரத நாடுன்னு சொல்றான். அது, இது என்று சொல்கின்றார்கள். இந்தியா என்கின்ற பெயரே வெள்ளைக்காரன் இங்கு வந்தபிறகு தானடா - இந்தியா என்பதற்கு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவை இருந்த போதும் இந்தியா பிரிந்து போன பிறகு இந்தியாவா.

இந்தியா என்பதற்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லை. இந்தியா என்பதே ஒரு துணைக்கண்டம் இதற்கு எப்படி வேதகால நாகரிகம் பொருந்தும். உன் வேதகாலத்திற்கு முந்திய நாகரிகம் எங்களது நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் இந்த மணலூருக்குப் பக்கத்திலே தோண்டுகிறார்களே; 3000,4000 ஆண்டுகளுக்கு முன்னால் வீடுகளை கட்டி பயன்படுத்தியிருக்கிறார்களே; எகிப்து மேலை நாடுகளோடு வணிகம் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

நீ என்னைப்போய் வேதத்தைப்படி சமஸ்கிருதத்தை படி என்றால் உன் சமஸ்கிருதத்திற்கு முந்திய மொழி தமிழ் மொழி உலகத்தில் மொழிகள் தோன்றிய காலத்திலே தோன்றிய தமிழ் மொழி. தமிழ்மொழியில் இருக்கக்கூடிய வளம் அந்த இலக்கிய வளம், சொல் வளம், இதெல்லாம் எந்த மொழியிலே இருக்கிறது?

தொல்காப்பியர் கூற்று

தொல்காப்பியர் 3000,4000 ஆண்டுகளுக்கு முன்னால் சொல் எங்கே பிறந்திருக்கிறது என்று சொன்னார். உரம், கண்டம், உச்சி, உச்சிநார், கூற்று, இதழ் நாள், பள்ளி, வெவ்வேறு எழுத்துரையால் வரல் பரப்பே சொல் எங்கே பிறக்கிறது என்று சொல்லியிருக்கிறாரே தொல்காப்பியர். அதை இன்று கூட மாற்றி எழுதிப்பாரேன் - தொல்காப்பியர் இலக்கணத்தை மாற்ற முடியுமா, முடியவே முடியாது.

அவ்வளவு அறிவியல் பூர்வமாக சிந்தித்து தொல்காப்பியர் எழுதி வைத்துள்ளார். இந்த நாகரிகத்திற்கெல்லாம் சோதனை வருவது போல் பிஜேபி இந்து ராஷ்டிரம், இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும். வேறு எவனும் இருக்கக் கூடாது இது என்ன அக்கிரமமாக இருக்கிறதே. இங்கே பிறந்த கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் நிலை என்ன வேறு மதத்தை தழுவியவர்கள் எங்கே போவது? என்னடா கொள்கை இது? பரந்ததொரு நாட்டிற்குப் பொருந்துமா? இப்படி எல்லாம் வரும் என்று தான் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

நான் திராவிட நாடு பிரிவினையை விட்டாலும் கூட அப்பிரச்சனை அப்படியே இருக்கிறதென்று சொன்னார்கள். அண்ணா அவர்கள் அடிக்கோடிட்டு சொன்னார்கள். என்று சொன்னால் இப்படி யாராவது மோடி போன்றவர்கள் வருவார்கள். நாம் இப்படி சொல்லி வைத்து விட்டு போனால் தான், நம் திராவிட இயக்க தொண்டர்கள் அவன் வரும்போது பேனரில் எழுதி அவர்களுக்கு முன்னால் நீட்டுவார்கள். அப்போது தான் அவர்களுக்கு புத்தி வரும் அறிவு வரும்  -என்று தான் அண்ணா அவ்வாறு சொல்லி வைத்து விட்டு மறைந்தார்கள். ஆக இந்த சிந்தனையோடு திராவிட இயக்கத் தொண்டர்கள் எதிர்காலத்தை நோக்கவேண்டும்.

கடந்த காலங்களில் எல்லாம் நாம் வெற்றி கண்ட காலங்கள் தான் பல்வேறு பிரச்சனைகளில் நாம் கணிசமாக வெற்றிகளை பெற்றிருக்கிறோம். யாராலும் மறுக்க முடியாது ஆனால் நிகழ்கால மத்திய அரசைப் பற்றி திராவிட இயக்க தொண்டர்கள் எப்படி எதிர்கொள்வது என்று சிந்திக்க வேண்டும். இந்த நேரத்தில் நமது தமிழர் தலைவர் ஆசிரியரைப் பற்றி குறிப்பிடவேண்டுமானால் அய்யா அவர்கள் உலகம் முழுவதும் சென்று வந்தார்கள். உலகம் முழுவதும் உள்ள சமுதாய அமைப்புகளைக் கண்டார்கள். அறிந்தார்கள் மனிதன் பிறப்பால் ஒன்று என்று கருதிகிற நேரத்தில் சாதிய கொடுமை என்பது தூக்கி எறியப்பட வேண்டிய மோசமான கொடுமை என்று அதைத் தூக்கி எறிந்தார்கள. அதில் வெற்றியும் கண்டார்கள் அவ்வளவு மகத்தான தலைவர்கள் அன்று இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு வரக்கூடிய வேதகால நாகரீகம், இந்து ராஷ்டிரம் என்கின்ற ஏற்பாட்டை ஆர்எஸ்எஸ் சிந்தனையில் பிறந்த இந்தியா ஒரே நாடு - இந்துக்களுக்கு மட்டும் தான் இந்தியா சொந்தம் - என்ற இந்த பேராபத்துகளை இந்த அணுக் கதிர் வீச்சுகளை நாம் எப்படி கட்டுப்படுத்தப்போகிறோம் என்பதே நம்முடைய சிந்தனையாக இருந்திட வேண்டும்.

அய்யாவை அகிலமெல்லாம்

கொண்டு சென்ற ஆசிரியர்

நம்முடைய ஆசிரியர் தமிழர் தலைவர் அய்யா அவர்களுடைய கொள்கைகளை அகில உலக நாடுகளுக்குக் கொண்டு சென்ற பெருமை அவரையே சாரும் நமது நாட்டில் பல்வேறு மொழிகளில் ஆங்கிலம், பிரெஞ்சு பொன்ற மொழிகள் மூலமாக உலகம் முழுவதும் பெரியாரைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் நம் ஆசிரியர் அவர்கள் இன்றைக்கும் தன்னலம் கருதாது, திராவிட இயகத்தின் கொள்கைகள் தான் தன் உயிர் மூச்சு என்று சொல்லியிருக்கிறார்கள். இந்நூலில் நான் சுவாசிப்பதே பெரியாரின் தத்துவத்தைத்தான் என்று அப்படிப்பட்ட ஒரு அருமையான தலைவர். திராவிட இயக்கத்திற்கு கிடைத்திருக்கிறார்.

இக்கூட்டத்தின் வாயிலாக நான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வேண்டிக் கொள்வதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதும் திராவிடர் கழகம் தாய்க் கழகம் என்றால் தி.மு.க. சேய் கழகம் இந்த இரண்டையும் ஒப்பீடு செய்து தன் பணிகளால் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்லிய காலம் உண்டு. எனவே அப்படிப்பட்ட தி.மு.க. அதனுடைய நடவடிக்கைகள் எதிர்காலம் இவற்றில் ஆசிரியர் அவர்கள் அக்கறை எடுத்து ஆழமாக சிந்தித்து கவனமாக பார்க்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை இக்கூட்டத்தின் வாயிலாக மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

திராவிட இயக்கத்தின் அடையாளம் தி.மு.க. ஒன்றுதான். தி.க. சமூக சீர்திருத்தப் பணிகளை அரசியலுக்கு வராமல் செய்யக் கூடிய இயக்கம். ஒரு சமூகப் புரட்சி இயக்கம். தி.மு.க. ஜனநாயகத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி அதன் மூலமாக சட்ட வடிவம் கொடுக்க வேண்டும், சமுதாயப் புரட்சி கொள்கை கருதி என்பதுதான்.

எனவே இந்த தி.மு.க.வின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்கின்ற பொறுப்பும், கடமையும் தமிழர் தலைவருக்கு மட்டுமே உள்ளது என்பதனை மட்டும் அவர் கவனத்திற்கு எடுத்துச் சொல்லி, இந்நூல் மிகப் பயனுள்ள படிக்க வுண்டிய நூல் என்பதை எடுத்துச் சொல்லி, திராவிட இயக்கத்தினுடைய பார்வை காலத்தோடு ஒட்டியிருக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத் தெரிவித்து விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

என்று சிறப்பாகப் பேசினார் பொன்.முத்துராமலிங்கம் அவாகள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner