எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமேஸ்வரம், ஜன. 18- ராமேஸ்வரம் மீனவரின் படகு மீது, இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை மோதி உடைத்ததால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். மரிய சகாயம் என்பவரது படகின்மீது ரோந்து கப்பலால் மோதினர். இதில் பக்கவாட்டு பலகை உடைந்து படகு சேதமடைந்தது.

இதையடுத்து மீனவர்கள் அனைவரும் படகுகளை வேகமாக திருப்பி வேறு பகுதிக்கு சென்றனர். இரவு முழுவதும் மீன் வளம் குறைந்த இடத்தில் மீன் பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினர். மீன் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர். இதேபோல், கடந்த 7 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவரின் படகை இலங்கைக் கடற்படையினர் கப்பலால் மோதி உடைத்தனர். இரண்டாவது முறையாக மீண்டும் படகை உடைத்துள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தாக ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது முதலாம் மணல் திட்டில் சந்தேகத்திற்கிடமாக ஒரு இளைஞர் நின்றிருந்தார். அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர் இலங்கை வவுனியா, சின்னசெட்டிகுளம் பகுதியிலுள்ள ஆச்சிபுரம் சமனங்குளத்தைச் சேர்ந்த ராபர்ட் ராக்சன் (28) என தெரியவந்தது.

அவர், இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார். அவரிடம் இருந்த இலங்கை பாஸ்போர்ட், மொபைல் போன், இலங்கை வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இதேபோல் கடந்த 3 நாள்களுக்கு முன், ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை  கடற்கரை பகுதியில் அனுமதியின்றி வந்த இலங்கை  பேசாளையை சேர்ந்த பிரித்விராஜ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner