எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

2015 டிசம்பர், 2016 ஜனவரி மாதங்களில் தமிழ்நாட்டின் தலை நகரம் தண்ணீரால் தத்தளித்தது என்றால், 2017 கோடைக் காலம் தண்ணீர் இல்லாமல் தவிக்கப் போகிறது என்பது யதார்த்தமான நிலைமை.

பொதுவாக தமிழ் நாட்டில் இவ்வாண்டு மழை குறைவு. விவசாயம் பொய்த்து விட்டது. கருநாடகம் வஞ்சித்து  விட்டது. விளைவு நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மரணம்.

தலைநகரத்தில் தாகம் தீர்க்கும் தாயாக இருந்து வருபவை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள்தாம். பருவ மழை காரணமாகத்தான் இந்த ஏரிகள் கொழித்து வந்துள்ளன. பருவ மழை 57 சதவீதம் பொய்த்துப் போனதால் ஏரிகளும் தம் இயலாமையைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டுள்ளன.

2016ஆம் ஆண்டில் இதே கால கட்டத்தில் (ஜனவரி 9ஆம் தேதி நிலவரப்படி) 9723 மில்லியன் கனஅடி தண்ணீர் இந்த ஏரிகளில் இருந்தன என்றால், இவ்வாண்டு இதே தேதியில் நிலவரம் என்ன தெரியுமா? 1544 மில்லியன் கன அடி தண்ணீராகும். இந்த இருப்பு இன்னும் ஒரு மாதத்துக்குத்தான் தாக்குப் பிடிக்கும் என்பதால் மார்ச்சு மாதமே பல்லிளிக்கப் போகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை ஆண்டுதோறும் சராசரி 556 மி.மீ. பொழியும்; இவ்வாண்டோ வெறும் 246 மி.மீ.தான். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்கால நிலைமை 432 மில்லியன் கனஅடிதான்.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர், இயற்கையின் கருணை இவற்றைப் பொறுத்தே தலைநகரம் தப்புமா தவிக்குமா என்பது தெரிய வரும்.

இதில் என்ன கொடுமை என்றால் 2015 இறுதியில் பெய்த மழை 300 டி.எம்.சி. அளவுக்குக் கடலில் சங்கமமானதுதான் மிச்சம். தொலை நோக்குத் திட்டம் இல்லையேல் தொல்லை தான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner