எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள்மேல் நம்பிக்கை இல்லாததால்தானே கோவிலுக்கே செல்கிறார்கள்?

உலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்; நாத்திகர்கள்தான்!

திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் 'இனமுரசு' சத்யராஜ் இடி முழக்கம்!

சென்னை, ஜன. 31- உலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யா வினுடைய தொண்டர்கள்தான்; நாத்திகர்கள்தான். அது எங் களுக்கு நன்றாகத் தெரியும் என்றார் நடிகர் இனமுரசு சத்ய ராஜ் அவர்கள்.

15.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் நடிகர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தொண்டர் களுக்கும், தொண்டர்களுக்கெல்லாம் தொண்டராய் விளங் கும் பெருந்தொண்டர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தினை முதலில் தெரிவித்துக் கொள் கிறேன். மற்றும் மேடையில் இருக்கும், மேடையின் முன்னால் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.

இங்கே திடலில் நுழைந்ததிலிருந்து ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். அண்மையில் ஆசிரியர் அய்யா அவர்க ளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பதை - அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும்பொழுது, அவர் சொல்லி தெரிந்தது.

நான் இங்கே வரும்பொழுது, அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தேன். அப்பொழுதுதான் இந்த ஆண்டில் நான்கு முறை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது தெரிந்தது. அதோடு அவர் பெரியாரின் பெரும் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்.

‘சலிப்பும், ஓய்வும் ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலைக்குச் சமம்!’

அய்யா பெரியாரை, ஆசிரியர் மூலமாக நான் பார்க்கிறேன். அய்யா பெரியார் அவர்கள் சொன்னதில் மிக முக்கியமானது, ‘‘சலிப்பும், ஓய்வும் ஒரு சமூகப் போராளிக்குத் தற்கொலைக்குச் சமம்’’ என்று சொல்வார். அதற்கு நாம் உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், ஆசிரியர் அய்யா அவர்களைச் சொல்லலாம்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், பிரச்சாரப் பயணங் களை மேற்கொண்டு, அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு, தொடர்ந்து அவருடைய பணிகளை செய்துகொண்டு வரு கிறார். அதில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்படவில்லை.

தந்தை பெரியாருடைய சுயமரியாதைக் கொள்கைகளை பின்பற்றியதனால்தான்

‘‘சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு’’ என்கிற வாசகம் மாட்டியிருந்தது. அதனை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன். சமூக அவலங்களினால் ஏற்படும் வருத்தத்தைத் தவிர, தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சியாக மனிதனாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் சுயமரியாதை சிந்தனைதான். தந்தை பெரியாருடைய சுயமரியாதைக் கொள்கைகளை பின்பற்றியதனால்தான்.

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால், அவனுக்கு மனதில் எந்தவித குழப்பங்களும் இருக்கக்கூடாது. எந்தக் குழப்பமும் இல்லாமல், என்னை மகிழ்ச்சியான மனிதனாக வைத்திருப்பது, தந்தை பெரியாருடைய தத்துவங்கள்தான்.

அடுத்ததாக, கீழடி அகழ்வராய்ச்சியில் நமக்கு நடந்த துரோகத்திற்கு சரியான பதிலடி கொடுப்பது போன்ற அந்த நிகழ்வு - அதனை அப்படியே இங்கே கண்காட்சியாக வைத் திருந்தார்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அதனைப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.

அதனைப் பார்த்துவிட்டு, இங்கே மேடையில் ஆசிரிய ருக்குப் பக்கத்தில் அமர்ந்தேன். தப்பாட்ட நிகழ்ச்சி நடத்திய வர்கள் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நானொரு சினிமா நடிகராக இருப்பதினால், இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக ஆடுவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.

ஆயிரம் அடி வசனம் பேசியதுதான் உலகத்திலேயே பெரிய ரெக்கார்ட்

ஒரு நடனக் காட்சியோ, சண்டைக் காட்சியோ ஒரு 30 செகண்ட் இருக்கலாம்; அதிகபட்சமாக ஒரு நிமிடம் இருக்கும். ஒரே ஷாட்டில் மிகப்பெரிய நீளமான வசனத்தைப் பேசியவர் நடிகர் திலகம் அய்யா சிவாஜி அவர்கள்தான். கலைஞர் அவர்கள் கதை வசனம் எழுதிய, ராஜா - ராணி திரைப்படத்தில், சேரன் செங்குட்டுவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிவாஜி அவர்கள் ஆயிரம் அடி வசனம் பேசியதுதான் உலகத்தி லேயே பெரிய ரெக்கார்ட்டாகும்.

மனித வதையில்

சேர்த்துவிடப் போகிறார்கள்

ஆசிரியர் அய்யா அவர்களிடம் சொன்னேன், ‘‘இவ்வளவு நேரம் தப்பாட்டம் ஆடி அசத்துகிறார்கள்; இதற்கு நிறைய ஸ்டாமினா வேண்டும்’’ என்றேன்.

உடனே ஆசிரியர் அய்யா அவர்கள், ‘‘இதை மனித வதையில் சேர்த்துவிடப் போகிறார்கள்’’ என்றார்.

8, 9 ஆண்டுகளுக்கு முன்பாக தோழர் சுப.வீரபாண்டியன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பொழுது, தோழர் அருள்மொழி அவர்கள் வந்திருந்தார். அவர் ஒரு சரியான பதிவை சொன்னார். இங்கே எத்தனை ஆண்கள் இருக்கிறீர்கள்; பெண்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள். ஏனென்றால், இதற்குக் காரணம் ஆண்கள் தான். நீங்கள் செய்வதுதான். சினிமாவிற்குப் போகும்போது குடும்பத்தோடு போகிறீர்கள்; கடற்கரைக்குச் செல்லும் பொழுது குடும்பத்தோடு போகிறீர்கள். இதுபோன்று பகுத் தறிவு சிந்தனைகளை  ஊட்டி வளர்க்கின்ற இடத்தில், புரட்சி கரமான சிந்தனைகளை ஊட்டி வளர்க்கின்ற இடத்தில், எத்தனை பேர் குடும்பத்தோடு வந்திருக்கிறீர்கள் என்றார். நான் தலையை குனிந்துகொண்டேன்.

ஆனால், இங்கே வந்து பார்க்கும்பொழுது, அவருடைய குறை நீங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அது பெரியார் திடலில் மட்டும்தான் நீங்கும்.

இங்கே வந்துவிட்டுப் போனால்,

அதற்குரிய தைரியம் வந்துவிடும்

நம்முடைய தோழர் முத்துகிருஷ்ணன் அவர்கள் சொன்னார் பாருங்கள், இங்கிருந்துதான் ஒரு விஷயம் ஆரம் பமாகிறது என்று. அது உண்மைதான். இங்கே வந்துவிட்டுப் போனால், அதற்குரிய தைரியம் வந்துவிடும். ஏனென்றால், இவ்வளவு பேர் நம் பின்னால் இருக்கிறார்களே, யார்? என்ன செய்துவிட முடியும் என்கிற ஒரு தைரியம் வந்துவிடும். அதுதான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.

இங்கே விருது வாங்கிய அமுதன் அவர்களாகட்டும், பிரின்சு கஜேந்திரபாபு அவர்களாகட்டும், முத்துக்கிருஷ்ணன் அவர்களாகட்டும், இராஜு முருகன் அவர்களாகட்டும் எல்லோரும் ஒரு விஷயத்தைப்பற்றி பேசினார்கள்.

இந்த விருதுக்கு எங்களுக்குத் தகுதி இருக்கிறதா? இந்த விருதை வாங்கியதற்காகவாவது நாங்கள் மிகப்பெரிய பய ணத்தை - சமூக சீர்திருத்தப் பயணத்தைத் தொடங்கவேண்டும் என்று சொன்னார்கள்.

இந்த விருதை நான் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பாக  வாங்கினேன். ஆனால், நான் உங்கள் அளவிற்கு சிரமப்பட வில்லை. இராஜு முருகன் அவர்கள், இந்தியாவில் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக, இந்தியா முழுவதும் பயணம் சென்று, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைப்பற்றியும், தேசிய இனத்தின் பண்பாடு அழிக்கப்படுவதைப்பற்றியும் ஒரு பெரிய ஆராய்ச் சியை செய்திருக்கிறார்.

பெரியார் விருதிற்கு

நீங்கள் தகுதியானவர்தான்

சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்கவேண்டும் என்பது மிகவும் கடினமானது. அப்படி அந்த இடத்தைப் பிடித்தவுடன், அந்த வெற்றியை உடனே காசு பண்ணவேண்டும் என்றுதான் நினைப்போம். உண்மையும் அதுதான். உதாரணத்திற்கு என் னையே சொல்கிறேன். நான் ஒரு 5, 6 ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டு, சினிமாவில் அடியாள் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். நண்பர் மணிவண்ணன் அவர்களின் மூலமாக நூறாவது நாள் படத்தில் வாய்ப்பு வந்ததும், 27 படங்கள் ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், வீடு வாங்க வேண்டும், கார் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில். முதலில் செட்டிலாகவேண்டும் என்கிற புத்திதான் வரும்.

அப்படியில்லாமல், ‘ஜோக்கர்’ என்ற படம் வெற்றியடைந் தவுடன், அதனை காசாக்க விரும்பாமல், சமுதாயப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறாரே, இந்த விருதிற்கு நீங்கள் தகுதியானவர்தான்.

அதேபோன்று, முத்துக்கிருஷ்ணன் அவர்கள், காசா வரையில் சென்றிருக்கிறார். நான் இப்பொழுதுதான் அவரைப் பற்றிய தெளிவான விளக்கங்களைக் கேள்விப்பட்டேன். அவர்களையெல்லாம் பார்க்கும்பொழுது, என்னுடைய உழைப்பு மிகவும் குறைவாகத்தான் எனக்குத் தெரிகிறது.

அய்யா பிரின்சு கஜேந்திரபாபு அவர்கள், கல்விக்காக எவ்வளவு போராட்டங்களை உணர்ச்சியோடு  முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதேபோன்று ஆர்.பி.அமுதன் அவர்களுடைய ஆவணப் படங்களை நிறைய நான் பார்த்திருக்கிறேன். அவர் அண்மையில், ‘‘டாலர் சிட்டி’’ என்று திருப்பூர் நகரில் நடக் கின்ற அவலங்களைப்பற்றி அவர் எடுத்தப் படத்தையும் பார்த்திருக்கிறேன்.

இவர்களோடு என்னை ஒப்பிடும்பொழுது, எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது

இவர்கள் எல்லோரும் பயணத்தை மேற்கொண்டு இந்த சமுதாயத்திற்குப் பணி செய்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களோடு என்னை ஒப்பிடும்பொழுது, எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. நம்முடைய தோழர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்தால், நான் சூட்டிங்கில் இருக்கிறேன், வெளியூரில் இருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. ஏனென்றால், சூட்டிங் இருந்தால், எந்த நிகழ்ச்சியிலும் பங் கேற்க முடியாது. சினிமா தொழில் எப்படி என்றால், திரையில் தெரிகின்ற முகங்கள் நான்கு, அய்ந்து பேர்தான் இருக்கும். பின்னால், ஒரு நூறு பேர் பணி செய்வார்கள். ஒரு சூட்டிங்கை ஒப்புக்கொண்டு, அதனை கேன்சல் செய்வது என்பது மிகப்பெரிய தலைவலியாகும்.

நான் ஒரு 40 ஆண்டுகாலமாக திரைப்படத் துறையில் இருக்கிறேன். சீனியர் நடிகர்; எனக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது,  அதற்குச் செல்லவேண்டும் என்று தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ சொன்னோம் என்றால்,

‘‘சார், அதெல்லாம் முடியாது’’ என்று சொல்லமாட்டார்கள்; சார், நாளைக்கு இந்த சீன் எடுக்கப் போறோம்; இதில் இத்தனை பேர் இருக்கிறார்கள்; சினிமாவைப்பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் சென்றுவிட்டு வாருங்கள், இரண்டு நாள்கள் சூட்டிங்கை கேன்சல் செய்துவிடுகிறோம்’’ என்பார்கள்.

நடிப்பதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்

அப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால், சமு தாயப் பணி செய்யவேண்டும் என்றால், இதுபோன்ற நிகழ்வு களில் கலந்துகொள்ளவேண்டும் என்றால், சினிமாவில் நடிப் பதைக் குறைத்துக் கொள்ளவேண்டும். ஆண்டுக்குப் பத்து படங்கள் நடிக்கிறோம் என்றால், 5 படங்களில் நடித்துவிட்டு, 5 படத்தினுடைய வருமானத்தை தியாகம் செய்யவேண்டும்.

பெரியாருடைய தொண்டர்களுடைய சிறப்பு!

ஏனென்றால், தம்பி முத்துக்கிருஷ்ணன் அதனைத்தான் செய்துகொண்டிருக்கிறார். வருமானத்தைத் தியாகம் செய் திருக்கிறாரே! இதுதான் பெரியாருடைய தொண்டர்களுடைய சிறப்பு. அய்யாவிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்; அய்யா வினுடைய தொண்டர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

இன்றைக்கு நான் அய்யாவிடம் கற்றுக்கொள்வதைப் போன்று, பிரின்சு கஜேந்திரபாபு அவர்களிடமிருந்தும், அமு தன் அவர்களிடமிருந்தும், முத்துக்கிருஷ்ணன் அவர்களிட மிருந்தும், இராஜு முருகன் அவர்களிடமிருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடிகிறது.

இது ஒரு புதுப் பாடமாக இருக்கிறது எனக்கு. நீங்கள் செய்கின்ற வேலையை நான் செய்யவில்லையே! வந்தவரை காசு வாங்கிப் போட்டுக்கொண்டு நடித்துக் கொண்டுதானே இருக்கிறேன். உண்மையும் அதுதான். இன்றுவரை அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதனைப் பெருமையாக வேறு நினைத்துக் கொள்கிறேன், ‘‘நான் இந்த வயதிலும் நடிக்கிறேன்; நான் பிசியாக இருக்கிறேன்; அந்த மொழியில் நடிக்கிறேன், இந்த மொழியில் நடிக்கிறேன், இன்னும்கூட எனக்கான டிமாண்ட் சினிமாவில் இருந்துகொண்டு இருக்கிறது என்பதை பெருமையாக நினைத்துக்கொண்டு’’, அதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.

நாம் களப்போராளியாக இல்லாவிட்டாலும்...

இல்லை! நாம் இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். நம்முடைய பங்களிப்பு வேண்டும். நாம் களப் போராளியாக இல்லாவிட்டாலும், களப் போராளியாக இருக் கின்ற ஆசிரியர் அய்யா அவர்கள் போன்ற பெருந்தொண் டர்கள் பின்னால், உங்களைப் போன்ற  தொண்டர்களின் பின்னால் நாம் நிற்கவேண்டும். அதை செய்யாமல், எப்பொழு தும் வேலை, வேலை என்று சொல்லிக் கொண்டிருந்தால், அதனால் என்ன பயன்? ஏனென்றால், பல முறை எனக்கு அதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இங்கே முத்துக்கிருஷ் ணன், இராஜு முருகன் ஆகியோர் உரையாற்றும்பொழுது, அது என்னை உறுத்துகிறது.

அய்யாவினுடைய கொள்கையை

திணித்துக் கொண்டுதான் இருப்பேன்

ஆனால், நான் எங்கே சென்றாலும், ஏதோ ஒரு வகையில் அய்யாவினுடைய கொள்கையை திணித்துக் கொண்டுதான் இருப்பேன். இப்பொழுது தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். முதல் நாள் சூட்டிங்கின்போது, கேமிரா விற்கு தேங்காய் ஆரத்தி காட்டி, என்னிடம் கொண்டு வரு வார்கள்.

அப்படி வரும்பொழுது, தெரியாததுபோல், முகத்தைத் திருப்பிக் கொள்ளலாம்; அல்லது வேறு எங்கேயாவது ஒரு மூலையில் நின்று கொள்ளலாம். அப்படியில்லாமல், அந்தத் தேங்காயைக் கொண்டு வருபவரை அழைத்து,

‘‘எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை; இதில் எல்லாம் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆகையால், நாளையிலிருந்து என்னிடம் இதனைக் கொண்டு வராதீர்கள்’’ என்பேன். உடனே எனக்கு அருகிலிருக்கும் கதாநாயகர்கள், அவர் களுடைய பெயரை சொல்ல விரும்பவில்லை; ‘‘சார், எனக்கும் கூட, இதில் பெரிதாக நம்பிக்கை இல்லை’’ என்பார் கள். உடனே நான் சொல்வேன், ‘‘இதில் பெரிதாக நம்பிக்கையில்லை, சிறிதாக நம்பிக்கை இல்லை என்பதெல்லாம் கிடையாது. நம்பிக்கை யாருக்குமே இல்லை’’ என்பேன்.

‘‘என்னங்க இப்படி சொல்றீங்க’’’ என்பார்கள்.

‘‘நீங்கள் கோவிலுக்குச் செல்வீர்களா?’’ என்றேன்.

‘‘அவரும் ஆமாங்க!’’ என்றார்.

கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால்,

எப்படி கோவிலுக்குப் போவீர்கள்

‘‘அப்படி என்றால், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்; கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால், எப்படி கோவிலுக்குப் போவீர்கள்? உங்களுக்குக் கடவுள்மேல் நம்பிக்கை இல்லாததினால்தானே கோவிலுக்குச் செல்கிறீர்கள்.

கோவிலுக்குச் செல்வது என்றால் என்ன அர்த்தம்; கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்பதுதான்.

நீங்கள் கையில் கயிறு கட்டியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் - உங்களுக்குக் கடவுள்மேல் நம்பிக்கையில்லாமல், கயிறு மேல் நம்பிக்கை இருப்பதால்தானே கயிறு கட்டிக் கொள்கிறீர்கள். அப்பொழுதே நீங்கள் பெரியாருடைய தொண்டர்கள்தான்.

கண் பார்வை கொஞ்சம் தெரியவில்லை; கண்ணாடி போடுகிறீர்கள் அல்லவா - முழு நாத்திகர் நீங்கள்தான். கண் பார்வை தெரியவில்லை என்பதற்காக கோவிலுக்குச் சென்றீர் களா? டாக்டரிடம் சென்றீர்களா? தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கிறீர்களே, நீங்கள் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்.

உலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்

உங்களுக்கு உடம்பு கட்டாக இருக்கவேண்டும் என்பதற் காக ஜிம்முக்குச் செல்கிறீர்களே, சிக்ஸ் பேக் வரவேண்டும் என்பதற்காக கோவிலுக்குச் செல்கிறீர்களா? ஜிம்முக்குச் செல்கிறீர்களா? ஜிம்முக்குத்தானே போகிறீர்கள்.

அப்படியென்றால், நீங்கள் அய்யாவினுடைய தொண்டர் கள்தான்! உலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்; நாத்திகர்கள்தான். அது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

கடவுளை வேண்டுதல் என்பது, கடவுளை இம்சைப்படுத்து வதுதான். கடவுளுக்கு நீங்கள் ஆணையிடுகிறீர்கள்.

ஆண்டவா, ‘‘எப்படியாவது நான் நடித்த படத்தை சூப்பர் ஹிட் செய்துவிடு’’ என்பது வேண்டுதல்.

இந்த டயலாக்கை கொஞ்சம் மாற்றி, ‘‘இராஜ்முருகன் சார், எப்படியாவது என் படத்தை ஓட வைத்துவிடுங்கள்’’ இது வேண்டுதல்.

‘‘எப்படியாவது என் படத்தை ஓட வைத்துவிடு மகனே’’, என்பது கட்டளையிடுதல்.

உங்கள் வேண்டுதல் என்பது என்னவென்றால் - கடவு ளுக்கு ஆணையிடுகிறீர்கள். நீ செய்வது சரியில்லையப்பா, இப்படி இப்படி செய்யவேண்டும் என்று கட்டளையிடு கிறீர்கள். அப்படியென்றால், உண்மையில் கடவுள் என்பவர் ஒருவர் இருந்தால், அவருக்கு உங்கள்மேல் கோபம்தான் வரும். எங்களைப் போன்றவர்களை அவருக்குப் பிடிக்கும்.

நாத்திகர்கள், அவர்கள் பாட்டுக்கு அவர்களுடைய வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்; நம்மை டிஸ்டர்ப் செய்வதில்லை என்று சந்தோசப்படுவார்.

கடவுள் இருந்தால், எங்களைத்தான் பிடிக்கும் அவருக்கு. இல்லை என்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.

உடனே சிலர் சொல்வார்கள், நீங்கள் இயற்கையை நம்புகிறீர்கள் அல்லவா! என்பார்கள்.

சகலவிதமான மூடநம்பிக்கையும் வரும்

இயற்கை அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது, அது ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வுகள்தான். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் நம்புவதற்கும், நம்பாததற்கும் இடம் இல்லை. நீங்கள் இயற்கை என்கிற ஓர் அமைப்பிற்கு, மேக்கப் போட்டு, பூச்சூடி, பொட்டு வைத்து அதனை கடவுள் ஆக் கினீர்கள் என்றால், என்னாகும் என்றால், அதில் சகலவித மான மூடநம்பிக்கையும் வரும்.

அந்த சகலவிதமான மூடநம்பிக்கையில் மிகவும் கேவல மான விஷயம் என்னவென்றால், பிறப்பால் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்று வரும். ஆணாகப் பிறந்தவன் உயர்ந்தவன்; பெண்ணாகப் பிறந்தவள் தாழ்ந்தவள் என்று வரும்.

குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவர்கள் உயர்ந்தவர்கள்; குறிப் பிட்ட ஜாதியில் பிறந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று வரும்.

அஷ்டமி, நவமி, குட் பிரைடே, அது, இதுவென்று ஏகப் பட்ட மூடநம்பிக்கைகள் வந்து, உங்களால் எந்த வேலையை யும் செய்ய முடியாது. வாழ்க்கையைக் கெடுத்து, உங்களுடைய சந்தோசத்தை அழித்துவிடும் என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.

ஜாதி அடுக்குமுறையைத் தூக்கி எறியவேண்டும் என்றார்

அதனால்தான், அய்யா பெரியார், கடவுள் இல்லை என்கிற இடத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை. பிறப்பால் அனைவரும் சமம் என்கிற இடத்திலிருந்து ஆரம்பித்தார். அனைவரும் சமம் - ஆனால், அனைவருக்கும் தரவேண்டிய மரியாதையை நீ கொடுக்கவில்லை; அனைவருக்கும் தர வேண்டிய கல்வியை நீ கொடுக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக உனக்குக் கல்வி மறுக்கப்பட்டு இருக்கிறது; உனக்கான மரியாதை மறுக்கப்பட்டு இருக்கிறது; கவுரவம் மறுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் காரணம், ஜாதி அடுக்குமுறை - அதனைத் தூக்கி எறியவேண்டும் என்றார்.

அதெல்லாம் தூக்கி எறிய முடியாதுங்க என்றார்கள்.

ஏன் என்றார் அய்யா!

அது வேதத்திலேயே சொல்லியிருக்கிறது என்றார்கள்.

அப்படியென்றால், வேதத்தைத் தூக்கி எறி என்றார் அய்யா.

அய்யோ, வேதத்தைத் தூக்கி வீச முடியாதுங்க என்றார்கள்.

ஏன் என்றார் அய்யா!

அது கடவுளால் சொல்லப்பட்டது என்றார்கள்.

அப்படியென்றால், கடவுளைத் தூக்கி எறிந்துவிட்டுப் போங்கள் என்றார் அய்யா.

அய்யா சொன்ன ஆணித்தரமான கருத்துகளை யாராலும் மறுக்க முடியாது.

‘பெரியார்’ படத்தில் நடிக்கும்பொழுது எப்படிப்பட்ட வசனங்கள் - எல்லாம் அவர் பேசியதுதான்.

‘‘சாமி இல்லை, சாமி இல்லை என்று சொல்கிறீர்களே, திடீரென்று உங்கள்முன் சாமி வந்தால் என்ன செய்வீர்கள்?’’

‘‘இருக்கு என்று சொல்வேன்’’ என்பார்.

நான் இன்னும் பயணிக்கவேண்டும்

அப்படி ஒரு அற்புதமான இடத்தில், நான் இன்னும் பயணிக்கவேண்டும் என்கிற ஒரு விஷயத்தை ராஜ்முருகன் அவர்களும், முத்துக்கிருஷ்ணன் அவர்களும், அமுதன் அவர்களும், பிரின்சு கஜேந்திரபாபு அவர்களும் எனக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அந்த இளைஞர்களுக்கு என்னுடைய நன்றியினையும், வாழ்த்தினையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு நடிகர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner