எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமூகத்தின் சுயமரியாதைக்கான பணி செய்பவர்களுக்கு

தம் சுயமரியாதை பற்றி கவலை கிடையாது என்பதை  பெரியார் திடல் உணர்த்தியது

திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் உரை

சென்னை, பிப். 6- சமூகத்தின் சுயமரியாதைக்கான பணி செய்பவர்களுக்கு தம் சுயமரியாதை பற்றி கவலை கிடையாது என்பதை பெரியார் திடல்தான் உணர்த்தியது என்றார் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்கள்.

15.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திரா விடர் திருநாள் பொங்கல் விழாவில்  எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இறுதியாகப் பேசுவது என்பது மிகுந்த சிக்கலுக்குரிய விஷயம்

விருது வாங்கும் விழாவில், இறுதியாகப் பேசுவது என்பது மிகுந்த சிக்கலுக்குரிய விஷயம். ஏனென்றால், அமுதன், ராஜூ முருகன், பிரின்சு கஜேந்திரபாபு ஆகிய நண்பர்கள் எல்லாம் நான் எழுதி வைத்திருந்த வரிகளையெல்லாம் களவாடி விட்டார்கள்.

என்னிடம் இப்பொழுது சொற்கள் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நிச்சயமாக முதலில் இந்த சந்தர்ப்பத்தில் நான் என் குடும்பத்தாருக்கும், என் நண்பர்களுக்கும், என் கட்டுரைகளையெல்லாம் வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் கள் அனைவருக்கும், என்னுடைய  நூல்களையெல்லாம் வெளியிட்ட பதிப்பகங்கள் நடத்தக்கூடியவர்களுக்கும், இவையெல்லாம் தாண்டி தொடர்ந்து என் பேச்சுகளை மதித்து, என்னுடைய சொற்களுக்காக தொலைக்காட்சியில் தொடர்ந்து பேச அழைக்கக்கூடிய என் நண்பர்கள் அனை வருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் எல்லாம் இல்லையென்றால், நான் இந்த மேடையில் இல்லை

ஏனெனில், இவர்கள் எல்லாம் இல்லையென்றால், நான் இந்த மேடையில் இல்லை. இந்த நேரத்தில் நான் இரண்டு விஷயங்களுக்காக மகிழ்ச்சி கொள்கிறேன்.

1993 ஆம் ஆண்டுவரை எனது முதல் 20 ஆண்டுகள்வரை என்னுடைய அம்மா - அப்பா எவ்வளவோ கெஞ்சியும், தமிழை ஒருபோதும் படிக்கமாட்டேன் என்கிற முடிவிலிருந்த நான், இங்குள்ள பல்வேறுவிதமான விஷயங்களைக் கண்டு குழம்பிப்போய், எனக்கு இந்த சமூகத்தில், குடும்பத்தில் யாரிட மிருந்தும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவே இல்லை.

80 வயதானவரை, ஒரு ஏழு வயது பையன், பெயர் சொல்லி அழைக்கிறான்

ஒரு கிராமத்திற்குள், ஏன் ஒரு முதியவர் பெயர் சொல்லி அழைக்கப்படுகிறார் என்றால், குடும்பத்தாரிடம் பதில் இல்லை. மாலையில் வருகின்ற சலவைத் தொழிலாளியான 80 வயதானவரை, ஒரு ஏழு வயது பையன், பெயர் சொல்லி அழைக்கிறான்.

ஏன் இவர்களுக்கெல்லாம் பள்ளிக்கூடங்களில் எதையும் சொல்லித் தரவில்லையா? என்று கேட்பேன். என்னை தலையில் தட்டி, இப்படியெல்லாம் கேள்வி கேட்காதே என்று விரட்டியடிப்பார்கள். அப்படி எனக்கு, என் குடும்பத்திற்குள், எனக்குத் தெரிந்தவர்கள் மத்தியிலும், இந்த சமூகம்பற்றிய எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறபொழுது, நான் 1993 ஆம் ஆண்டு தமிழைக் கற்கத் தொடங்கினேன். அந்த முடி விற்காக நான் இந்த நேரத்தில் பெரிய மகிழ்ச்சியை அடைகிறேன்.

அதன்பின்பு நான் தொடர்ந்து நூல்களைப் படிக்கத் தொடங்கி, இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். இடையில் நான்  படித்து முடித்து, பல்வேறு தொழில்கள் செய்தேன். பல நிறுவனங்களில் பணியாற்றினேன். எங்கேயும் இரண்டு, மூன்று மாதங்களுக்குமேல் ஒரு வேலையிலும் நிலைக்க வில்லை.

ஒரு துணிச்சலான முடிவை என் வாழ்நாளில் எடுத்தேன்

அப்படி தொடர்ந்து பணி செய்துகொண்டிருந்தபோது, நான் வாசிக்கக்கூடிய இந்த வாசிப்பின் கனம் எனக்குள் பலவிதமான மாற்றங்களை செய்துகொண்டிருந்தது. அப்பொ ழுது நான் ஒரு துணிச்சலான முடிவை என் வாழ்நாளில் எடுத்தேன்.

1998 ஆம் ஆண்டில் இனி நான் வேலைக்குச் செல்வ தில்லை என்கிற முடிவை எடுத்தேன். வேலைக்குச் செல்வ தில்லை என்றால், பொருள் ஈட்டுவதில்லை. அது சார்ந்து இனி சிந்திப்பதில்லை. நம் பயணம் இனி, சமூகப் பயணம்தான் என்கிற ஒரு முடிவினை எடுத்தேன். அந்த முடிவினை எடுத்த கணம் எனக்கு ஒரு பெரிய இருண்ட ஒரு கணம் - குழம்பிய ஒரு கணம். ஆனால், அந்த முடிவினை எடுத்தது சரிதான் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

நிச்சயமாக,  நாம் ஒவ்வொரும் வாழ்க்கையில் அதுபோன்ற பல முடிவுகளை எடுத்தாகவேண்டி இருக்கிறது. ஏனென்றால், தேசம் அவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கிறது. தேசம் எவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை விவரிக்க ஆட்கள் யாரும் தேவையில்லை. இந்த சமூகம் அந்த சிக்கலை உணர்ந்தால், நான் எழுத்தாளனாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ராஜ்முருகன் இயக்குநராக இருக்கவேண்டிய அவசியமில்லை, பிரின்சு கஜேந்திரபாபு அவர்கள் கரடியாகக் கத்தவேண்டிய அவசியமில்லை. ஆனால், இங்கே இருக்கக் கூடிய கல்வி, சமூகம் என்று நம்மிடம் இருக்கக்கூடிய அத் துணை நிறுவனங்களும் தோல்வி அடைந்ததால்தான், நாங் கள் எல்லாம் முழு நேரமாக இந்தப் பணியினை செய்ய வர வேண்டிய ஒரு நெருக்கடி இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து, அது சுடுகாட்டில் புதைக்கப்படுகின்ற வரை ஜாதிதான்

இந்த சமூகத்தில் எங்கும் ஜாதி, எதிலும் ஜாதி - ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து, அது சுடுகாட்டில் புதைக்கப்படு கின்ற வரை ஜாதிதான். இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்ற தாழ்வுகள், இழிவுகளுக்கு எதிராக ஏன் அனைவரின் மனமும் பொங்கி எழவில்லை என்கிற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

நம்மிடம் பலர் வந்து, அவர்கள் மிகப்பெரிய முற்போக் கானவர்கள் என்று காட்டிக்கொண்டாலும், கொஞ்சம் விலக் கிப் பார்த்தால், அவர் வீட்டிற்குள் செல்லும்பொழுது அவர் ஒரு ஜாதிவாதியாக இருக்கிறார், பெண்ணடிமைவாதியாக இருக்கிறார். எல்லா வாதியாகவும் அவர் வேறு ஒரு பக்கம் இருக்கிறார்.

இந்தக் கேள்விகளையெல்லாம் இந்த சமூகத்தில் ஏற்படுத் துவது முக்கியம் என்றுதான் என் பயணம் தொடங்கியது.

ஒரு பள்ளி மாணவனாக எனக்கு அன்றிருந்த கேள்வி, இந்த ஜாதி, ஜாதி என்று கட்டி அழுகிறார்களே, கொஞ்சம் பணம் வந்துவிட்டால், வசதி வந்துவிட்டால் அது ஜாதி வெறியாகவும் மாறிவிடுகிறது. இவர்களில் யாருக்காவது விபத்து ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் படும்பொழுது, எனக்கு செட்டியார் ரத்தம் வேண்டும்; எனக்கு நாடார் ரத்தம் வேண்டும்; எனக்கு நாயக்கர் ரத்தம் வேண்டும் என்று ஏன் கேட்பதில்லை என்பது போன்ற கேள்விகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றுகிறது.

பெரியார் விருதை நான் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன்

ஆனால், இந்தக் கேள்விகளை எங்கே கேட்பது? யாரிடம் இந்தக் கேள்விகளை முன்வைப்பது? இன்று இந்த சமூகத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த மாற்றத்திற்கு நான்கு பேரில்லை, எட்டு பேரில்லை, 8 ஆயிரம் பேர் தேவைப்படு கிறது. அவ்வளவு பேரை நாம் உருவாக்கவேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில்தான், இந்த விருதை நான் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

எங்களைப் பார்த்து, பலர் உங்களுடைய வாழ்வில் துணிச் சலான முடிவினை எடுங்கள். அதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் இந்த சமூகத்தில் இருக்கிறது.

பல நேரங்களில், எங்கள் பத்திரிகை ஆசிரியர்களிடம், ‘‘அய்யா இந்த மாதம் கட்டுரை எழுத முடியாது எங்களை விட்டுவிடுங்கள்’’, ‘‘தொலைக்காட்சி விவாதத்திற்கு என்னால் வர முடியாது; எனக்கு வேறு வேலை இருக்கிறது’’ என்று சொன்னால்,

துணிச்சலான ஆளாக

நாம் மாறுவதற்குத் தயங்குகிறோம்

மீண்டும் மீண்டும் அந்த இடங்களில் இருந்து வரக்கூடிய பதில் என்னவென்றால், ‘‘எழுதுவதற்கு ஆளில்லை; பேசுவதற்கு ஆளில்லை’’ என்பதுதான்.

அப்படியானால், ஒருபுறம் நாம் நம்மை மிகப்பெரிய அறி வுமிக்க சமுதாயமாக காட்டிக் கொண்டாலும், இன்னொருபுறம் பேச ஆளில்லை, எழுத ஆளில்லை என்பது. அப்படியென் றால், அந்த இடத்தில் என்ன தோன்றுகிறது, துணிச்சலான ஆளாக நாம் மாறுவதற்குத் தயங்குகிறோம். யார் பின்னா லாவது ஒளிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறோம். நீங்கள் அந்த வேலையை செய்தால், அதற்கு உறுதுணையாக இருக் கிறோம் என்று நினைக்கிறோம்.

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும். 1998 ஆம் ஆண்டு நான் இனி பொருளீட்டுவ தில்லை என்கிற முடிவினை உரக்க அறிவித்த பிறகு, எனக்கு உதவி வரக்கூடியவர் பலர்.

எனக்குத் தொலைப்பேசி கட்டணத்தை ஒருவர் கட்டு வார்; பேண்ட் ஒருத்தர் வாங்கிக் கொடுப்பார்; சட்டையை ஒருவர்  வாங்கித் தருவார்; என் பயணத்திற்கான செலவுகளை யாரோ ஒருவர் ஏற்பார். நீங்கள் ஏர்போட்டில் நில்லுங்கள் அல்லது ரயில்வே ஸ்டேசனில் நில்லுங்கள், உங்களுக்கு எஸ்.எம்.எஸ்.சில் டிக்கெட் வந்துவிடும் என்று யாரோ ஒருவர் டிக்கெட் வாங்கிக் கொடுப்பார். யாரோ ஒருவர் சோறு போடுவார்; எங்கேயோ படுத்து எழுந்திருப்பேன்.

2011 ஆம் ஆண்டு

பாலஸ்தீனத்திலுள்ள காசாவில்...

அடுத்த நாள் பொழுது எப்படி இருக்கும் என்று தீர்மானமாக ஒருபோதும் எனக்குத் தெரியாது. அப்படி ஒரு சூழலில்தான், நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். முத்தாய்ப்பாக நான் பாலஸ்தீனத்திலுள்ள காசாவில், 2011 ஆம் ஆண்டு புத்தாண்டை - குண்டு மழைகளுக்கு நடுவில் - ஷெல் குண்டுகள் என்றால் என்ன? நாம் தமிழில் சினிமா விலும், ஹாலிவுட் படங்களிலும்தான் பார்த்திருப்போம். ஆனால், ஒரு ஷெல் குண்டு என்றால் என்னவென்பதை, நான் காசாவிற்குள் நுழைந்த இரவில் உணர்ந்தேன். இரவில் வெடித்த குண்டின் சத்தம், காலை 7 மணிவரையில் எங்கள் காதுகளை விட்டுப் போகவில்லை. தலையணை வைத்து காதினை அமுக்கிப் பார்த்தாலும், அந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

அப்பொழுது எனக்குத் தோன்றிய விஷயம், இந்த உலகத்தின் வலியை, எந்தவிதமான ஒரு ஊடகத்தின் வழியா கவும் கடத்த முடியாது. வாழ்ந்து பார்ப்பது என்பது வேறொன் றாக இருக்கிறது. அப்படியென்றால், அந்த வலிகளையெல்லாம் எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பதற்கான முயற்சியைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அதில் நான் வெற்றி பெற்றதாக ஒருபோதும் கருத மாட்டேன். அதனை நான் வெவ்வேறு வடிவங்களில் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

அந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏராளமான இளைஞர் கள் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் நான் இந்த விருதைப் பெற்றுக்கொண்டு வைக்கும் வேண்டுகோள், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு போரா ளியை நீங்கள் அடுத்தத் தலைமுறைக்குத் தயார் செய்தால் மட்டுமே, இந்த விஷயங்களை நாம் ஓரளவிற்கு நாம் இந்த பூமியை விட்டு கிளம்பும் நாளில், நாம் நம்பிய தத்துவத்தை கையில் எடுப்பதற்கு மிகப்பெரிய ஒரு கூட்டம் இருக்கிறது என்கிற மிகப்பெரிய நம்பிக்கையோடு விடைபெற இயலும்.

இந்த எழுத்து வாழ்க்கை, இந்தப் பொதுவாழ்க்கை என்பது, நீங்கள் நினைப்பதுபோல், இந்த மேடையில் நான் உட்கார்ந்திருக்கும் ஒரு அரை மணிநேரம், ஒரு பஞ்சு மெத் தையாக அல்லது பூக்களின்மேல் அமர்ந்திருப்பது போன்று இருக்கலாம். ஆனால், இந்த வாழ்க்கை, ஒரு போதும் மகிழ்ச்சி யான வாழ்க்கையாக இருந்ததில்லை. அதற்குள் சோர்வும், துன்பமும் - யாருடன் பகிர்ந்துகொள்ள முடியாத வேதனை யும், அவமானமும் நிறைந்ததுதான்.

ஒரு பெரும் ஆறுதலாக, ஒரு பெரும் நிம்மதியாக இந்தக் கணத்தை நான் பார்க்கிறேன்

அதற்காகவும் நீங்கள் தயாராகத்தான் இந்தக் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும். அப்படியான இந்த அவமா னங்களை, அப்படியான இந்தப் பெரும் சங்கடங்களைப் போக்கிக் கொள்ள ஒரு பெரும் ஆறுதலாக, ஒரு பெரும் நிம்மதியாக இந்தக் கணத்தை நான் பார்க்கிறேன்.

இனி, இந்த நால்வரின் சார்பாகவும் நான் அதனை சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்தப் பெரியார் விருதி னைப் பெற்ற பிறகு, ஒன் வே டிராபிக்தான். இனி நாங்கள் எங்கும் திரும்பிப் போக முடியாது. ஒரே வழிதான், பணி செய்து கிடப்பதே! மரணம் வரை, நாங்கள் நம்புகிற விஷ யத்தை மக்களிடம் சொல்வோம். அதற்கு வரக்கூடிய எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வோம். எதிர்கொள்வதற் கான துணிச்சல் இதுபோன்ற மேடைகள் எங்களுக்குக் குரல் கொடுக்கும் என்கிற ஒரு பெரிய நம்பிக்கையை இந்த நொடி யில் நான் உணர்கிறேன்.

அந்தத் துணிச்சலைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி!

அண்ணன் சத்யராஜ் அவர்கள் என்னிடம் சொன்னார், மரபுகளை உடையுங்கள், போய் மைக்கைப் பிடியுங்கள், அதற்கான இடம்தான் இது என்றார். அந்தத் துணிச்சலைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்க்கையில் இருக்கும்பொழுது ஏற்படுகின்ற மனச்சோர்வான இடங்களில், பல நேரங்களில் நமக்குள் இருக்கக்கூடிய சுயமரியாதை லேசாக டிஸ்டர்ப் ஆகும். நமக்கு உதவக்கூடியவர்களே நம்மை கீழ்மையாக, இழிவாக,  சங்கடத்திற்கு உட்படுத்துவார்கள். அப்படி எனக்கு ஒரு பெரிய சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டபொழுது, இந்தப் பொதுவாழ்வைத் தொடரவேண்டுமா? ஒரு வேலைக்குச் சென்றுவிடலாமே என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் -  எனக்கு உடன்பிறவாத சகோதரரான, எனது பயணத்தில் மிக முக்கிய நண்பராகத் திகழ்கின்ற தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன் அவர்கள் ஒரு நாள் பெரியார் திடலுக்கு அழைத்து வந்தார்.

உனக்கென ஒரு சுயமரியாதை கிடையாது

இங்கே இருக்கின்ற கல்வெட்டில் உள்ள ஒரு வாசகத்தைப் படித்து காட்டினார்.

என்றைக்கு இந்த சமுகத்தின் சுயமரியாதைக்காக நீ வேலை செய்யப் போனாயோ, உனக்கென ஒரு சுயமரியாதை கிடையாது என்று அந்த இடத்தை அடிக்கோடிட்டு நிரப்பிய இடம், இந்தப் பெரியார் திடல்தான். இனி வாழ்க்கை முழுவ திலும் கையில் ஒரு பிச்சைப் பாத்திரத்தோடு கழித்துவிடலாம். ஏனென்றால், நான் என் வாழ்வை இந்த சமூகத்தின் சுயமரியா தைக்காகத்தான் செலுத்துகிறேன், என் சுயமரியாதைக் காக அல்ல.

மீண்டும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி!

- இவ்வாறு  எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner