எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்களுக்கு யார் காரணம்?

இடதுசாரிகளைவிட தந்தை பெரியார் அவர்களின்

திராவிடர் விவசாய சங்கங்களின் பங்களிப்பு முக்கியமானது

திராவிடர் திருநாளில் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்  ஆய்வுரை

சென்னை, பிப். 15- தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் வளர்ச்சி - மாற்றங்கள் ஏற்பட்டதற்கு - இடது சாரிகளைவிட தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் விவசாயிகள் சங்கங்களின் பங்களிப்பு முக்கினமானது என்றார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.

16.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் பொருளாதார நிபுணர் ஜெய ரஞ்சன் அவர்கள் உரையாற்றினார்.

எல்லோருக்கும் வணக்கம்! இந்த விருதினை எனக்கு வழங்க முடிவு செய்த திராவிடர் கழகம் - தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் ஆகியோருக்கும் எனது பெருமையுடன் கூடிய நன்றியை தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

பெரியார் எனக்கு எப்படி அறிமுகமானார்

எனது ஏற்புரையாக நான் சொல்லவிரும்புவதை சில பகுதிகளாக நான் பிரித்துக் கொள்கிறேன்.

முதலில், பெரியார் எனக்கு எப்படி அறிமுகமானார்; அவ ரோடு நான் எப்படி பயணிக்கத் தொடங்கினேன் என்பதை முதல் பகுதியாகவும்.

இரண்டாவது பகுதி, எனது புரிதலில் பெரியார் எப்படி உருவாகியிருக்கிறார் என்பதும்,

மூன்றாவதாக, எனது பணிகளில் பெரியார் எப்படி என்னை வழி நடத்துகிறார் என்பதையும்,

நான்காவதாக, என்னுடைய எதிர்கால வேலை திட்டத்தில், பெரியார் என்னை எப்படி கொண்டு செல்லப் போகிறார் என்பதையும் மிகச் சுருக்கமாக உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

8 ஆம் வகுப்பு பயிலும்பொழுதே, முதன்முதலில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றியவர்

முதலில், பெரியார் எனக்கு எப்படி அறிமுகமானார் என்று கேட்டால், தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில், எனது தந்தையார் அவர்கள், 8 ஆம் வகுப்பு பயிலும்பொழுதே, முதன்முதலில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றியவர். அதற் காக மிகப்பெரிய அளவில் பல இன்னல்களை சந்தித்தவர். ஆற்றங்கரையில் இருந்த கடவுளர் சிலைகளை ஆற்றில் விட் டவர். அதற்காக பின்னாட்களில் வருத்தப்பட்டது வேறொரு கதை.

அதன் பிறகு, நான் சிறுவயதாக இருக்கும்பொழுது, மேலத் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண் டிருந்தபொழுது, நெற்றியில் திருநீறு இல்லாமல் நான் செல்ல முடியாது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பிற்கு உள்ளே அனுமதிக்கமாட்டார். ஆனால், வீட்டில் எனது தந்தையோ திருநீறு பூசிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் செல்லக்கூடாது என்பார்.

ஆகவே, பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியில்,  வாய்க் காய் கரையில் நின்று, சிலேட்டுக் குச்சியால் சிலேட்டில் தேய்த்து, அதில் வரக்கூடிய வெள்ளைப் பொடியை நெற்றி யில் பூசிக்கொண்டு, பள்ளிக்கூடத்திற்கு சென்ற நாள்களும் உண்டு.

அதன் பின்னர் ஒரு அய்ந்தாண்டுகள் இடம் மாற்றம் காரணமாக, வெவ்வேறு ஊர்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட தால், அதுபோன்ற ஒரு தொடர்பும் இல்லாமல் போனது.

எமர்ஜென்சி என்றால்

என்ன என்றுகூட தெரியாது

பின்னர் 1975-1976 ஆம் ஆண்டுகளில் சென்னைக்கு வந்த சமயம் - அப்பொழுதுதான் எமர்ஜென்சி கொண்டுவரப் பட்டது. எனக்கு 15, 16 வயது இருக்கும். அந்த வயதில் சாதா ரணமாக ஒரு எதிர்ப்புணர்வு வரும். அதன் காரணமாக, எமர்ஜென்சி என்றால் என்ன என்றுகூட தெரியாது. ஆனால், எமர்ஜென்சிக்கு எதிராக இருக்கவேண்டும் என்று மட்டும் தெரிந்தது.

அப்பொழுது புதிய ஆவடி சாலையில் இப்பொழுதுபோல், வாகனங்கள் செல்வது கிடையாது. அன்றைய மாலை முரசில் ஒரு போஸ்டர் அடித்திருந்தார்கள்; ஜார்ஜ் பெர்னாண்டஸ் பரோலில் விடுதலை. அதனைப் படித்துவிட்டு, சாக்பீஸ் எடுத்துக்கொண்டு, ஆவடியில் சாலையில் எல்லா இடங் களிலும் எழுதினேன். ஜார்ஜ் பெர்னாண்டஸ் பரோலில் விடு தலை - பரோலில் விடுதலை என்று.

யாரோ ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், என்னைப் பார்த்து, பரோல் என்றால் என்ன தெரியுமா? என்றார்.

எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், எதிர்க்க வேண்டும் என்பதுதான்.

பெரியாரைப்பற்றி

சிறிது சிறிதாக படிக்க ஆரம்பித்த காலம்

பிறகு நான் மதுரைக்கு கல்லூரி படிப்பிற்காக சென்று விட்டேன்.  மறுபடியும் எதிர்ப்பு அரசியலின் தொடர்ச்சியாக,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வாசக மன்றங்கள் தான் என்னுடைய பெரும்பாலான நேரங்களை ஈர்த்துக் கொண்டன. அதன் வழியாக, பெரியார் என்பவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; மேடைகளில் பேசுவதை கேட் டிருக்கிறோம் - அதனை நாம் படிக்கவேண்டும் என்று நினைத்து, சிறிது சிறிதாக படிக்க ஆரம்பித்த காலம் அது.

பிறகு, அதனை முழுமையாகப் படிக்கவும், அதனை சரியாகப் புரிந்துகொள்வதற்குமான வாய்ப்பு -நான் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டெடிஸ் என்கிற ஆய்வு நிறுவனத்தில் 1983 ஆம் ஆண்டு சேர்ந்தபொழுது நிகழ்ந்தது.

அது எப்படி நிகழ்ந்தது என்பது அதைவிட பெரிய ஆச்சரியமான விஷயமாகும்.

மாற்று சிந்தனையையும், மாற்று அரசியலையும் முன்னெடுக்க வேண்டும்

என்னவென்றால், உங்களில் சில பேருக்குத் தெரிந்திருக் கலாம்; முழுக்க முழுக்க இடதுசாரிகள் சிந்தனையுள்ள அறிவு ஜீவிகள் இருக்கக்கூடிய இடம். அதில் மறுபடியும் எதிர்ப்பு அரசியல் நடத்தவேண்டும் என்றால், மாற்று சிந்தனையை தேடவேண்டும் - அதனை முன்வைக்கவேண்டும் என்கிற எண்ணவோட்டத்தின் அடிப்படையில், எனக்கு சீனியராக இருந்தவரும், எனது உற்ற நண்பரான எம்.எஸ்.எஸ்.பாண்டி யன் அவர்களும் இப்பொழுது அவர் உயிரோடு இல்லை. நானும், அவரும் மாணவர்களாக இருக்கும் காலகட்டத்தி லேயே பெரியாரைப்பற்றி படிப்பது - அவர் வைத்த வாதங்களை முன்வைப்பது என்கிற மாற்று சிந்தனையையும், மாற்று அரசியலையும் முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம்.

அதன் பிறகு, அவர் கலை மற்றும் வரலாறு என்று பாதை மாறி, வேறு வழியில் பயணிக்கத் தொடங்கினார். நான் பொரு ளாதாரத்திலேயே என்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் இன்றுவரை.

ஆனால், பெரியாரைப் படித்து, அதிலிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்று கேட்டீர்களேயானால், ஆசிரிய ரைப் போன்றோ, கவிஞரைப் போன்றோ முழுக்க முழுக்க பெரியாரைப் படித்தவன் அல்ல. அங்கங்கு படித்திருப்பேன். அவருடைய தாக்கங்கள் என்னுடைய ஒவ்வொரு எழுத் திலும் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்.

எப்படி என்றால், என்னை மிகவும் கவர்ந்தது - என்னை வழி நடத்திச் செல்வது என்பது அவருடைய சுயமரியாதைக் கோட்பாடு. அந்த சுயமரியாதை கோட்பாடுதான் - அவரது பல போராட்டங்களுக்கும், பல விடுதலைகளுக்கும் அவரை அழைத்துச் சென்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சுயமரியாதை இயக்கம்பற்றி

தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொல்லும்பொழுது,

மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படவே சுயமரி யாதை இயக்கம் ஏற்பட்டது.

சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும்.

அநேக காரியங்களில் மற்றவர்களால் நான் துன்பமும், இழிவும் அடையாமல், நம்மலாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மனமாற்றம் ஏற்படாமல், நம் சமூகம் மாறுதல் அடைவது என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும்.

இந்தத் தத்துவம்தான் என்னை மிகமிக பாதித்தது.

எனக்கு இதைப் படித்தவுடன் என்ன தெரிந்தது என்றால், அதுவரைக்கும் பெரியாரை வேறு மாதிரி புரிந்துகொண்டி ருந்தேன். இட ஒதுக்கீட்டிற்காகப் போராடியவர் - கடவுள் மறுப்பு இயக்கத்தை நடத்தியவர் என்று.

ஆனால், அதில் என்ன சொல்கிறார் என்றால், அடிப்படை யில் நாம் முதலில் திருந்தவேண்டும்; நமக்குள் பெரிய சீரழிவுகள் உள்ளன. அதிலிருந்து நாம் மீண்டு வந்தால்தான், நாம் ஒரு சுயமரியாதைக்காரனாக முடியும். சமுதாயம் ஒரு சுயமரியாதை சமுதாயமாக உருவெடுக்கும் என்று அவர் முன்வைத்த கருத்துதான், என்னை தொடர்ந்து என்னுடைய பணிகளில் எல்லாவற்றிலும் வழிநடத்துகின்றன.

இங்கே வீடியோ பிரசன்டெசனில் காட்டியதுபோல, என் னுடைய இன்னொரு முகமான மீடியாவில் பேசுவது என்பது நான் புதிதாக எடுத்துக்கொண்ட பணிகள் - அது தவிர்க்க முடியாமல் எடுத்துக்கொண்டது. என்னுடைய நண்பர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி, கண்டிப்பாக பங்கெடுக்க வேண்டும் என்று சொன்னதினால்தான். அதனை நான் விரும்புவதில்லை.

அதில் முக்கியமாக குணசேகரன் அவர்கள், உங்களை அழைத்து வருவதற்கு நான் என்ன பாடுபடுகிறேன் என்று உலகத்திற்கு தெரியாது என்பார். அவருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நான் எழுதுவதற்குக் காரணம், நக்கீரன் காமராஜ் அவர்கள். தேரைக் கட்டிக்கூட இழுத்துவிடலாம்; உங்களை கட்டி இழுக்க முடியாது என்று சொல்வார். அந்த வகையில் அவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதை என்பதை நான் எப்படி புரிந்துகொண்டேன் என்றால்...

சுயமரியாதை என்கிற கருத்து என்னுடைய எழுத்துகளில், என்னை எவ்வாறு வழிநடத்துகிறது என்றால், சுயமரியாதை என்பதை நான் எப்படி புரிந்துகொண்டேன் என்றால்,

மானுடம் எந்தத் தடையும் இல்லாமல் சிறப்பாக இயங்க வேண்டும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் எந்த விதத் திலும் அவனை அடிமைப்படுத்தவோ, கீழ்மைப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அது பொருளாதார ரீதியாக இருக் கலாம்; சமூக ரீதியாக இருக்கலாம்; ஆண்பால், பெண்பால் என்கிற பெயரால் இருக்கலாம்; பணம் இல்லை, பணம் இருக்கிறது என்கிற நிலை - அல்லது அரசாக இருக்கலாம் - யாராக இருந்தாலும் - ஆக, நான் செய்திருக்கக்கூடிய ஆராய்சிகள் எல்லாவற்றிலும் அதனை மய்யப்படுத்தித்தான் எல்லா பணிகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.

அது உலக வர்த்தக அமைப்பிலிருந்து ஆரம்பித்ததினால் அதனுடைய தாக்கமாக இருக்கலாம். அல்லது உலக வர்த்தகம் ஏற்பட்டதினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளாக இருக்கலாம்.

திராவிடர் இயக்கத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் இருக்கிறது

சமீப காலமாக நான் மேற்கொண்ட ஒரு ஆய்வு - தஞ்சை மாவட்டத்தில் நடந்த விவசாய மாற்றங்கள் - சமுகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் - இதுவரையில் அது எப்படி சென்று கொண்டிருந்தது என்றால், வரலாற்றில் எப்படிப்பட்ட பதிவு இருக்கிறது என்றால், முழுக்க முழுக்க இடதுசாரிகள் மட்டுமே அதில் வென்றெடுத்த ஒரு காரியமாகக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால், அவர்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கி றதோ, அதைவிட சற்றுக் கூடுதலான பங்கு திராவிடர் இயக் கத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் இருக்கிறது என்ப தாகும்.

அதனை ஆவணப்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சையிலேயே தங்கியிருந்து, பலரையும் சந்தித்து, ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டு, அது எப்படி ஒரு கிராமமாக இருந்தது. பிறகு பெரியார் நடத்திய போராட் டங்கள் - அதன் தொடர்பாக திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது - அது தொடர்பாக நடந்த போராட் டங்கள். அதன் பிறகு எப்படி இடதுசாரிகள் உள்ளே வந்தார் கள். அவர்களும், இவர்களும் இணைந்து பணியாற்றியது. அதன் பிறகு திராவிட முன்னேற்ற கழக அரசு வந்த பிறகு, எத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த சட்டங்கள் எதற்கு ஏதுவாகின? அதன் வழியாக எப்படி நிலவுடைமை சமுதாயம் மாறியது? இப்பொழுது இருக்கின்ற நிலை என்ன? என்பதைப்பற்றியெல்லாம் பல்வேறு காலகட்டங்களில் அதனை தொகுத்து, இப்பொழுது ஒரு ஆய்வுக் கட்டுரையாக சமர்ப்பித்திருக்கிறேன்.

ஆசானாக விளங்குவது தந்தை பெரியார் என்பதை எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்வதில் பெருமைப்படுகிறேன்

ஆக, இப்படியாகத்தான் எனது பயணம் முழுவதும் சுயமரியாதை என்ற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் வழியமைத்து சென்று கொண்டிருக்கிறேன். அதற்கு ஆசானாக விளங்குவது தந்தை பெரியார் என்பதை எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

அடுத்ததாக, நமது வேலைத் திட்டம் என்று நான் எண்ணும்பொழுது, சுயமரியாதை என்பது நமக்குள் இருந்து பிறப்பது. அதனால், அது அனுதினமும் புதுப்பித்துக் கொண்டே இருக்கப்படவேண்டும். அப்படி இல்லை யென்றால், புறக்காரணிகளால் அது சிறை பிடிக்கப்படும் - அல்லது மாற்றியமைக்கப்படும். ஆகவே, அது ஒரு தொடர் போராட்டம்.

திரும்பத் திரும்பப் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்

இது ஒரு அட்டவணையைப் போட்டு வைத்துக்கொண்டு, இதை இதையெல்லாம் நாம் செய்துவிட்டோம். ஆகவே, நாம் சுயமரியாதைக்காரனாகி விட்டோம் என்று நாம் சொல்வது பொருந்துமா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், அந்தப் பொசிஷனை நாம் திரும்பத் திரும்பப் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, புறக்காரணிகள் எப்பொழுதும் அதனைத் தகர்ப்பதற்குத்தான் முயற்சி செய்துகொண்டிருக்கும். அது எந்த வடிவத்திலும் வரலாம். காவி உடைகளில் வரலாம்; பச்சை உடைகளில் வரலாம்; மஞ்சள் உடைகளில் வரலாம். எந்தவித நிறங்களிலும் வரலாம். ஆனால், கருப்பு உடைகள் என்னவாக இருக்கவேண்டும் என்றால், அதனை எதிர்த்து அரசியல் செய்துகொண்டே இருக்கவேண்டும்; தனி நபராக இருந்தாலும் சரி, அல்லது இயக்கமாக இருந்தாலும் சரி அதனைச் செய்துகொண்டே இருந்தால் மட்டும்தான் நாம் உயிர்ப்புடன் இருப்போம். இந்த அக, புறப் போராட்டங்கள் குறித்த காலத்தில் நடந்து முடிவதல்ல. அது என்றென்றும் நடப்பது. ஆகவே, அது தொடர்ந்துகொண்டே இருக்கலாம்.

இந்த இடத்தில் பெரியார் என்ன சொன்னார் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

‘‘இந்த இயக்கமானது இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் வைதுகொண்டு மூடப் பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டிக் கொண்டு, மக்களைப் பரிகாசம் செய்துகொண்டிருப்பது போலவே, என் றைக்கும் இருக்கும் என்றோ அல்லது அவை ஒழிந்தவுடன் இவ்வியக்கத்திற்கு வேலையில்லாமல் போய்விடும் என்றோ யாரும் கருதிவிடக் கூடாது.

மேற்சொன்னவைகளில் ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில், ஒருவன் நோகாமல் சாப்பிடுகிற தன்மை இருக்கும் வரையில், சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும். மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை, இவ்வியக்கத்தை ஒழிக்க யாராலும் முடியாது’’ என்று 1930 ஆம் ஆண்டு வெளிவந்த ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் எழுதியிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.

போலி தேச பக்தியும்,

மதமும் முன்வைக்கப்படுகின்றன

அதேபோல்தான், இப்பொழுது என்ன நடந்து கொண்டி ருக்கிறது என்றால், போலி தேச பக்தியும், மதமும் முன்வைக் கப்படுகின்றன. இந்த இரண்டும் சேர்வது - பெரியார் இருக்கும்பொழுதே நடந்திருக்கிறது. எப்படியென்றால், நேஷனலிஸ்ட் என்று சொல்லக்கூடிய தேசியவாதிகள் என்பவர்கள், மதத்தையும், தேச பக்தியும் முன்வைக்கும் பொழுது பெரியார் சொல்கிறார்,

இந்த இரண்டும் சேர்வது என்பது குரங்கு கள் குடித்து விட்டு, அதன் கைகளில் தடி எடுப்பது போன்றது என்றார்.

அதனை இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கின் றோம். அது எப்படி உண்மையாக இருக்கிறது என்று.

தந்தை பெரியாரின் மிகப்பெரிய கொடை

இத்தகைய சூழலில், ஒரு சுயமரியாதை உள்ளவனாக, நம்மால் செயல்படத் தேவையான அறத்தையும், நியாயத்தை யும், உரிமையையும், மன வலிமையையும், திறமையையும் பெரியார் வழங்கி சென்றிருக்கிறார்.

இதுவே அவருடைய மிகப்பெரிய கொடை என்பது எனது  உறுதியான  முடிவாகும். இந்த வெளிச்சம் காட்டும் வழியில், என்னுடைய பயணத்தைத் தொடர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அதற்கான ஒரு தூண்டுகோலாகத்தான் இந்த விருதினை ஏற்று உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் அவர்கள் உரையாற்றினார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner