எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியாரியல் என்பது பெண் விடுதலை

பெரியாரியல் என்பது ஜாதி ஒழிப்பு

பெரியாரியல் என்பது சுயமரியாதை

பெரியாரியல் என்பது சுரண்டலை எதிர்த்து போரிடுகிற போர்க்குணம்!

ஊர்தி அளிப்பு விழாவில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் முழக்கம்!

மதுரை, பிப்.25- பெரியாரியல் என்பது உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போரிடுகிற போர்க் குணம் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல். திருமாவளவன் அவர்கள்.

4.2.2017 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு விழா - தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கக் கொள்கை களைப் பரப்புவதற்கு உதவக்கூடிய பரப்புரை பயண ஊர்தி வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த எழுச்சிமிகு விழாவின் தலைவர் திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் மானமிகு கவிஞர் அண்ணன் கலி.பூங்குன்றன் அவர்களே,

அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற மானமிகு எடிசன் ராஜா அவர்களே,

இந்த நிகழ்வில் தொடக்கவுரையாற்றி சிறப்பித்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களே,

திராவிடர் கழகத்தின் இன்னொரு பொதுச்செயலாளர் மானமிகு துரை.சந்திரசேகரன் அவர்களே,

செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே, பொருளாளர் மானமிகு பிறைநுதல் செல்வி அவர்களே, இந்த நிகழ்வில் பங்கேற்று இதனை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சார அணி செயலாளர் மானமிகு வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,

எனக்கு முன் இங்கே நம்முடைய அய்யா அவர்களுக்கு பயண ஊர்தி வழங்கி சிறப்பித்திருக்கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் அவர்களே,

இளைஞரணி செயலாளர் இளந்திரையன் அவர்களே, தம்பி பிரின்சு என்னாரெசு பெரியார்  அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின்

தீர்மானக் குழுத் தலைவர்

எனக்கு முன்னர் இங்கே சிறப்புரையாற்றி அமர்ந்திருக் கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் மானமிகு பொன்முத்துராமலிங்கம் அவர்களே,

நிறைவாக நம்மிடையே விழாப் பேருரை ஆற்றவிருக் கின்ற நமது தமிழர் தலைவர் அய்யா அவர்களே,

இங்கே திரளாகக் கூடியிருக்கின்ற திராவிடர் கழகத்தின் செயல் வீரர்களே, கருஞ்சிறுத்தைகளே, என்னுடன் வருகை தந்திருக்கின்ற என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தை களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, இன்றைக்கு நான் வேறொரு நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண் டிருந்தேன், வேலூர் மாவட்டத்தில். ஆனால், அய்யா அவர் களின் இந்த நிகழ்விலே பங்கேற்கவேண்டும் என்பதற்காக நான், அவர்களிடம் வருத்தம் தெரிவித்து, இசைவு பெற்று இங்கே வந்திருக்கின்றேன்.

ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு

இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு. சுயமரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா - அய்யா அவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை என்றாலும்கூட, அவருடைய 84 ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு, அவருக்குப் பயண ஊர்தி பரிசளிக்கும் விழா - எல்லாவற்றை யும்விட வரலாற்று சிறப்பு வாய்ந்த மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்குகிற விழா என்கிற வகையில், இவ்விழா வரலாற்று சிறப்புவாய்ந்த ஒரு நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

84 வயதில் அய்யாவிற்குப் பயண ஊர்தி. ஓய்வெடுக்கவே விடமாட்டோம். அய்யா பெரியார் அவர்களைப் போல் நீங்கள் தொடர்ந்து சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டே இருக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தொண்டர்கள், நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுக்கு இன்றைக்குப் பகுத்தறிவுப் பயண ஊர்தியை வழங்கியிருக்கிறார்கள்.

84 வயது இளைஞருக்கு பயண ஊர்தி!

24 வயது இளைஞருக்கு வழங்குவதைப்போல, 84 வயது இளைஞருக்கு இந்த ஊர்தி வழங்கப்பட்டிருப்பது வியப்பாக இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களை நேரிலே காணுகிற வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை, அந்த ஏக்கம் எனக்கு உண்டு. ஆனால், அவருடைய வடிவில்,   அவரைப் போலவே வீரியமாகக் களப்பணியாற்றக்கூடிய நம்முடைய தமிழர் தலைவர் அவர்களோடு இணைந்து, செயலாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. அந்த ஏக்கம் தணியக்கூடிய வகையில், எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

என்னை அறிமுகப்படுத்தும்பொழுது கவிஞர் அவர்கள் இங்கே சொன்னார், திருமாவளவன் அரசியல் ரீதியாக என்ன முடிவெடுத்தாலும், எப்பொழுதும் நம் வீட்டுப் பிள்ளை திருமாவளவன், நம்முடைய குடும்பத்தைச் சார்ந்தவர் திருமா வளவன், இந்த இயக்கம் என்கிற திராவிடர் கழகத்தோடு பின்னிப் பிணைந்தவர் திருமாவளவன் என்று சொன்னார்.

தமிழர் தலைவரின் குரல்தான்

நான் எண்ணிப் பார்த்தேன், தருமபுரியில் அப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்தபொழுது, உடனே ஆவேசப்பட்டு ஒரு குரல் தமிழகத்தில் ஒலித்தது என்றால், அது தமிழர் தலைவரின் குரல்தான். வெறும் கண்டனக் குரலாக இல்லாமல், உடனே களத்தில் இறங்கி, அதே மண்ணில் ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துவோம் என்று சொல்லி மாநாட்டை நடத்திக் காட்டியவர் - அந்த துணிச்சல் மிகுந்தவர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்.

எவ்வளவு ரணம் இருந்த நேரத்திலும், வலி இருந்த நேரத்திலும், தமிழர் தலைவரின் குரல்தான் ஒரு மருந்தாக நம்மை ஆற்றுப்படுத்தியது.

அந்தத் துணிச்சல்

தமிழர் தலைவருக்கு மட்டுமே உண்டு

தருமபுரியில் அப்படி நிகழ்ந்தவுடன், எப்படி உடனே அதற்கு எதிர்வினை ஆற்றினார் தமிழர் தலைவர் அவர்கள் என்பதை அடுத்து, இன்றைக்கு அரியலூரில் வருகின்ற 13 ஆம் தேதி ஆணவக் கொலை எதிர்ப்பு - ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்று ஜாதி வெறியர்களின் நெஞ்சாங்குலையில் போய் மாநாடு நடத்துகின்ற துணிச்சல் தமிழர் தலைவருக்குத்தான் உண்டு.

எந்த இடத்தில், ஜாதி வெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறதோ, அதே இடத்தில் மாநாடு போடுகிற துணிச்சல் தமிழர் தலைவருக்கு மட்டுமே உண்டு என்பதை இந்த இரண்டு நிகழ்வுகளும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

தந்தை பெரியார் அவர்கள் நம்மிடையே இல்லை என்கிற ஏக்கத்தைத் தீர்த்து வைப்பதற்கு, இதைவிட வேறு என்ன நாம் சான்று சொல்ல முடியும்.

அரசியல் கட்சிகளால் வெளிப்படையாக ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்த முடியாது.  ஜாதி ஒழிப்பை ஒரு கொள்கை யாக முன்வைக்க முடியாது.  மதவாத சக்திகளை, ஜாதி வாதிய சக்திகளை வெளிப்படையாக எதிர்த்து குரல் எழுப்ப முடியாது - களப்பணியாற்ற முடியாது.

இன்றைக்கு அந்த ஆற்றல் உள்ள ஒற்றைக் குரல் - திராவிடர் கழகத்தின் குரல் - தமிழர் தலைவரின் குரல் என்பதை தலைநிமிர்ந்து நெஞ்சுயர்த்தி சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

திராவிடர் கழகத்திடமிருந்தும், திராவிடர் கழகத் தலைவர் அய்யா தமிழர் தலைவரிடமிருந்தும் நாம் ஏராளமாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஓய்வின்றி உழைப்பது எப்படி?

நான் அடிக்கடி அவரை நிமிர்ந்து வியந்து பார்க்கிறேன், ஓய்வின்றி உழைப்பது எப்படி? தமிழர் தலைவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது.

தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வின்றி உழைக்கக்கூடிய தலைவர் என்பதை நாம் அறிவோம். அது அரசியல். அரசியல் அடுத்தடுத்து வேலைத் திட்டங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நெருக்கடிகள் வந்து வேலைத் திட்டங்களை வழங்கிக் கொண்டே இருக்கும். 24 மணிநேரமும் விழிப்பாக இருந்தால்தான், தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அப்படிப்பட்ட அரசியல் தேவைகளான ஒரு நெருக்கடி இல்லாத நிலையிலும், ஓய்வின்றி உழைக்கின்ற ஒரு தலைவர் - பெரியாருக்குப் பிறகு - தலைவர் கலைஞரைப் போல - இன்றைக்குத் தமிழர் தலைவர் அய்யா அவர்கள்தான் என்பதை நாம் பார்க்கும்பொழுது வியப்பாக இருக்கிறது.

ஊக்கம் குன்றாமல் உழைப்பது எப்படி?

அதனால்தான், 84 வயதிலும் வண்டி கொடுக்கிறீர்கள். இன்னும் ஊர் சுற்றுங்கள்; தமிழகம் முழுவதும் சுற்றி வாருங்கள் - தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் சென்று வாருங்கள் - உங்கள் உழைப்பு இன்னும் தேவைப் படுகிறது. பெரியாரியல் இன்னும் கிராமப்புறங்களுக்குச் சென்று சேரவேண்டி இருக்கிறது என்பதை சொல்லக்கூடிய வகையில், 84 ஆம் வயதில் பயண ஊர்தி அவருக்கு வழங்கப்படுகிறது.

ஓய்வின்றி உழைப்பது எப்படி? என்று நாம் அவரிடம் கற்றுக்கொள்வதைப்போல, ஊக்கம் குன்றாமல் உழைப்பது எப்படி? என்பதையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

பொதுவாழ்க்கையைப் போல, நிம்மதியைக் குலைக்கின்ற வாழ்க்கை வேறு எதுவும் கிடையாது

பொதுவாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும், சலிப்பும் விரைந்து வரும். ஏனென்றால், பொதுவாழ்க்கை என்பது பலருக்குப் பகட்டானதாகத் தெரியும், சொகுசானதாகத் தெரியும், புகழ் நிறைந்ததாகத் தெரியும். ஆனால், பொது வாழ்க்கையைப் போல, நிம்மதியைக் குலைக்கின்ற வாழ்க்கை வேறு எதுவும் கிடையாது. பொதுவாழ்க்கையில் ஏற்படுகின்ற விரக்தி, பொதுவாழ்க்கையில் ஏற்படுகின்ற வெறுப்பு, பொது வாழ்க்கையில் ஏற்படுகின்ற சலிப்பு நம்மை சோர்வடைய வைக்கும்.

சுயநலமின்றி  உழைப்பது எப்படி?

ஆனால், இந்தப் பொதுவாழ்க்கையில் ஊக்கம் குன்றாமல், சலிப்பின்றி உழைக்கின்றார் தமிழர் தலைவர் அவர்கள். அதனை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சலிப்பின்றி உழைப்பது, ஓய்வின்றி உழைப்பது என்பதைவிட, சுயநலமின்றி உழைப்பது எப்படி? என்பதை நாம் தமிழர் தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசியலில் ஒருவன் 24 மணிநேரமும் சுற்றிச் சுழன்று, ஓடியாடி உழைத்துக் கொண்டே இருக்கிறான்; மக்களைப் போய் சந்திக்கிறான்; ஆறுதல் சொல்கிறான்; மாநாடுகளில் கலந்துகொள்கிறான்; பொதுக்கூட்டங்களில் பேசுகிறான்; போராட்டங்களில் கலந்துகொள்கிறான் என்றால், அதற்கு ஒரு சுயநலம் இருக்கிறது. அதுதான் வாக்கு வங்கி.

பதவி ஆசை இல்லாமல், ஓட்டுக்காக இல்லாமல்...

எப்படியாவது அந்தத் தொகுதியில் நாம் போட்டியிடவேண்டும்; வெற்றி பெற்றாகவேண்டும். மக்களைப் போய் பார்க்கவில்லை என்றால், கல்யாணத்திற்குப் போகவில்லை என்றால், சாவுக்குப் போகவில்லை என்றால், நாளைக்கு அவனிடத்தில் ஓட்டுக் கேட்க முடியாது என்கிற ஒரு சுயநலம் இருக்கிறது.

அப்படி பதவி ஆசை இல்லாமல், ஓட்டுக்காக இல்லாமல், சுயநலமின்றி ஊக்கத்தோடு உழைப்பது எப்படி? என்பதுதான் வியப்பிலும் வியப்பு.

திருமாவளவனுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வண்டி கொடுக்கிறார்கள் என்றால், அதில் வியப்பு அல்ல.

ஏனென்று சொன்னால், திருமாவளவன் கட்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலே இருக்கின்ற தொண்டன், அவனுக்கு ஒரு தேவை இருக்கிறது அல்லது ஒரு பதவி தேவைப்படுகிறது. நாளைக்கு சட்டமன்றத் தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ வந்தால், போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டும். அதன்மூலம் தலைமையின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்கிற ஒரு தேவை இருக்கிறது.

தன்னுடைய சொந்த உழைப்பில் இருந்து

பயண ஊர்தி வழங்குகிறார்கள்

அப்படி எந்தத் தேவைகளும் இல்லாமல், திராவிடர் கழகத் தொண்டர்கள், கருஞ்சிறுத்தைகள், இந்த இயக்கத்தில் இருப்பதினால் எந்த லாபமும் - சுய லாபமும் இல்லை. இந்தக் கழகத்தில் இருப்பதினால், உள்ளாட்சி மன்ற உறுப்பினராக முடியாது; சட்டமன்ற உறுப்பினராக முடியாது; நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது. வேறு எந்த வகையிலும் பொருளீட்ட முடியாது என்ற நிலையிலும், தன்னுடைய சொந்த உழைப்பில் இருந்து பயண ஊர்தி வழங்குகிறார்கள் என்று சொன்னால், அவருடைய சுயநலமில்லாத உழைப்புதான் அதற்குக் காரணம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சுயநலமில்லாமல் இருப்பதுதான் காரணம். ஆக, ஓய்வின்றி உழைப்பது, சலிப்பின்றி உழைப்பது என்பதைவிட, நீர்த்துப் போகாமல், சமரசமாகாமல் உறுதியோடு நின்று உழைப்பது.

தந்தை பெரியாரிடம் என்ன வீரியத்தைப் பெற்றாரோ, அதே வீரியத்தோடு...

தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து தளர்வடை யாமல், அந்தக் கொள்கையிலிருந்து சமரசம் செய்து கொள்ளாமல், எந்த நிலையிலும், தன்னை நீர்த்துக் கொள்ள அனுமதிக்காமல், தந்தை பெரியாரிடம் என்ன வீரியத்தைப் பெற்றாரோ, அதே வீரியத்தோடு தொடர்ந்து போராடுகிற - 84 வயதிலும் அந்த வீரியத்தோடு பணியாற்றுகின்ற - கொள்கை யில் சமரசம் செய்துகொள்ளாமல், பணியாற்றுகிற அந்த நிலையை, உறுதிக் குலையாமல் உழைப்பது எப்படி என்று நாம் தமிழர் தலைவர் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறவர்கள், ஏதோ ஒரு வகையில் வாக்குகளுக்காக சமரசம் செய்துகொள்ள வேண்டி வரும். திராவிடர் கழகத்தில் ஜாதியை ஒழிப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால், அதேபோல, ஒரு அரசியல் கட்சியில் ஜாதியை ஒழிப்போம் என்று தீர்மானம் போட முடியாது.  ஜாதி ஒழிப்பிலே உடன்பாடு இருக்கலாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு - இடதுசாரிகள் இயக்கத்திற்கு ஜாதி ஒழிப்பிலே உடன்பாடு இருக்கலாம். ஆனால், திராவிடர் கழகத்தைப்போல ஜாதியை ஒழிப்போம் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? என்றால், முடியாது.

சமரசம் இல்லாமல், நீர்த்துப் போகாமல், உறுதி குலை யாமல் போராடுவது எப்படி? தமிழர் தலைவரிடம் நாம் கற்றுக்கொள்ள இன்னும் ஏராளம், ஏராளம் இருக்கிறது.

வீரமணி அவர்கள் பெரியாரின் பிள்ளை!

தமிழர் தலைவர் அவர்கள், இப்படி நாமெல்லாம் புகழ்ந்து பேசுவோம் என்பதற்காக உழைக்கவில்லை. ஏனென்றால், அவர் பெரியாரின் பிள்ளை. பெரியார் அதற்காக உழைக்க வில்லை. ஏனென்றால், இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கிறவர்கள், சூத்திரப் பட்டத்தை சுமந்து கிடக்கிறவர்கள் - இப்படிப்பட்ட நிலையில் நாம் வாழுகிறோம் என்பதை அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் - விடுதலை பெறவேண்டும் என்பதற்காக தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர் தந்தை பெரியார்.

அவருக்கு இருந்த வசதி, அவருக்கு இருந்த வாய்ப்பு - சுகபோகமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மடிந்திருக்க முடியும். தந்தை பெரியாருக்கு திருமாவளவனுக்கு இருப் பதைப்போன்ற நெருக்கடி இல்லை. எனக்கு சமூகநீதியான நெருக்கடி உண்டு. நான் அதிலிருந்து மீண்டு எழவேண்டும் என்ற ஆவேசத்தோடு வீதிக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. என்மீது திணிக்கப்படுகிற இழிவுகளை நான் துடைத்தெறிய வேண்டிய ஒரு நெருக்கடிக்குள் நான் இருக் கிறேன். அப்படி ஒரு நெருக்கடிக்குள் பெரியார் அவர்கள் சிக்கியதும் இல்லை.

புரட்சியாளர் அம்பேத்கருக்கு நெருக்கடி உண்டு

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு அப்படி ஒரு நெருக்கடி உண்டு. அவருக்கு இருந்த அறிவுக்கும், ஆற்றலுக் கும், கல்விக்கும் அவரும் ஒரு சுகபோகமான வாழ்க்கையைத் தேடிப் போயிருக்க முடியும். ஆனால், அவர் இந்தப் பொது வாழ்க்கைக்குள் தன்னை இணைத்துக் கொண்டது, பிணைத் துக் கொண்டது ஒரு வரலாற்றுத் தேவையாக இருந்தது. அவருக்கே தனிப்பட்ட ஒரு நெருக்கடியாக அது இருந்தது.

ஆனால், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அப்படி ஒரு நெருக்கடி இல்லை - தனிப்பட்ட நெருக்கடி இல்லை. இந்த சமூகத்தின் மீதிருந்த அக்கறையின் காரணத்தால், இப்படி கோடான கோடி மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கிடக்கிறார்களே, பகுத்தறிவு இல்லாமல் இருக் கிறார்களே, யார் ஏய்க்கிறார்களோ, ஏய்க்கின்றவர்களை நம்பிக் கிடக்கிறார்களே, யார் நம்மை சுரண்டுகிறார்களோ, சுரண்டுகிறவர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார்களே,

யார் நம்மை இழிவுபடுத்துகிறார்களோ, அப்படி இழிவு படுத்துகிறவர்களையே தலையில் வைத்து சுமந்து திரி கிறார்களே, இவர்களை மீட்பது எப்படி? என்கிற கவலையால் தந்தை பெரியார் களத்திற்கு வந்தார்.

பெரியாரின் மறைவிற்குப் பிறகு கழகம் இல்லாமல் இருந்திருந்தால்...

அந்தப் பணிகளை அப்படியே, இன்றைக்கு அண்ணன் பொன்முத்துராமலிங்கம் அவர்கள் சொன்னதைப்போல, தந்தை பெரியாரைவிடவும், பெரியாருக்கு மேலே வைத்து சொல்வதற்காக அல்ல - பணிகளில் அப்படி சிறப்பாக இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அந்தக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றி இருக்கிறார். அவருடைய மறைவிற்குப் பிறகு கழகம் இல்லாமல் இருந்திருந்தால் என்பதை எண்ணிப் பாருங்கள்.

பெரியாரியம் என்பது....

பெரியாரியம் என்பதுபற்றி இங்கே பேசிய தலைவர்கள் சொன்னார்கள் சமூகநீதி,

பெரியாரியம் என்பது பெண் விடுதலை,

பெரியாரியம் என்பது ஜாதி ஒழிப்பு,

பெரியாரியம் என்பது சுயமரியாதை,

பெரியாரியம் என்பது உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போரிடுகிற போர்க்குணம்,

பெரியாரியம் என்பது கடவுள் மறுப்பு என்பதோடு சிலர் சுருக்கிப் பார்க்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கையால் அனைத்தையும் மறந்து கிடக்கிறான் மனிதன்

ஏன் கடவுள் மறுப்பு என்பதை ஒரு கோட்பாடாக வைக்கிறார் என்றால், கடவுள் நம்பிக்கையால், இவை அனைத்தையும் மறந்து கிடக்கிறான் மனிதன்.

கடவுளின்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையினால்,

கடவுளின்மீது வைத்திருக்கின்ற பக்தியினால்,

கடவுளின்மீது வைத்திருக்கின்ற அந்த மாயாவாதப் போக்கினால், இவன் தன்னை சுரண்டுவது தெரியாமல் கிடக் கிறான்; தன்னை இழிவுபடுத்துவதை அறியாமல் கிடக்கிறான்; தன்னை யார் ஏமாற்றுகிறான் என்பதை உணராமல் கிடக்கிறான்.

இவற்றிற்கு எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது இவனது மூடநம்பிக்கைதான்; இவனது மூடநம்பிக்கைக்கு இவன் கொண்டிருக்கின்ற கடவுள் பக்திதான். ஆகவே, கடவுள் இல்லை என்று சொல்லி, இவனை நம் பக்கம் ஈர்க்கவேண்டும் என்கிற அடிப்படையில், கடவுள் மறுப்பை ஒரு கோட்பாடாக முன்வைக்கிறது - ஒரு யுக்தியாக முன் வைக்கிறது பெரியாரியம்.

பெரியாரியம் என்பது ஜாதியை ஒழிப்பதற்கான ஒரு சமத்துவக் கோட்பாடு.

பெரியாரியம் என்பது ஆணாதிக்கத்திற்கு எதிரான ஒரு பெண் விடுதலை கோட்பாடு.

பெரியாரியம் என்பது இந்துத்துவத்தை வேரறுக்கக்கூடிய ஒரு பகுத்தறிவு கோட்பாடு.

தமிழர் தலைவர் அவர்கள்,

நூறாண்டுகள் வாழவேண்டும்

அப்படிப்பட்ட ஒரு மகத்தான கோட்பாட்டைக் கட்டிக் காப்பாற்றி, இன்றைக்குத் தமிழகத்தில் அதனை வீரியத்தோடு முன்னெடுத்துச் செல்கின்ற தமிழர் தலைவர் அவர்கள், நூறாண்டுகள் வாழவேண்டும் - அந்த நூற்றாண்டு விழாவிற்கு திருமாவளவனை அழைக்கவேண்டும் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.


பெரியார் திடல்தான்

என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்பொழுது, திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று நாம் இதுவரை சொல்லி யிருந்தோம், சொல்லி வந்தோம். இப்பொழுது விடுதலை சிறுத்தைகளையும் இணைத்து இது மூன்று குழல் துப்பாக்கி என்று கூறினார். எனக்கும், இந்த இயக்கத் திற்கும் பெருமை சேர்த்தார்.

நான் அடிக்கடி அய்யா அவர்கள் இல்லாத மேடைகளிலும் சொல்லியிருக்கிறேன், இருக்கின்ற மேடைகளிலும் சொல்லியிருக்கிறேன்.

எனக்கு இந்த உணர்வைக் கொடுத்தது, இந்த வீரியத்தைக் கொடுத்தது, இந்த ஊக்கத்தைக் கொடுத்தது திராவிடர் கழகம் - பெரியார் திடல்தான்.

அங்கே என்னை நான் செதுக்கிக் கொண்டேன்; அங்கேதான் என்னை நான் வார்த்துக் கொண்டேன்; அங்கேதான் என்னை நான் உருவாக்கிக் கொண்டேன். அதுதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

உலகமெல்லாம் சுற்றி வந்தாலும், சொந்த ஊருக்குத் திரும்புகின்றபொழுது எப்படி மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, பிறந்த வீட்டிற்குள் நுழையும்பொழுது எப்படி ஒரு பாதுகாப்பு உணர்ச்சி நமக்கு மேலொங்குகிறதோ, அப்படித்தான் திராவிடர் கழகத்தின் மேடையில் நான் அமர்கிறபொழுது உணர்கிறேன்.

அப்படிப்பட்ட அந்த ஒரு மகத்தான வரலாற்றுப் பாரம்பரியம் உள்ள சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக, திராவிடர் இயக்கத்தை இன்றைக்கு திராவிடர் கழகத்தை முன்னெடுத்துச் செல்கின்ற ஒரு மகத்தான தலைவராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் விளங்குகிறார்.

 


ஒரு தமிழர் தலைவர் இல்லையென்றால்

ஒரு திருமாவளவனுக்கு மேடை கிடைத்திருக்காது

ஒரு வேளை, தந்தை பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகத்தை கட்டி காப்பாற்றுவதற்கு தகுதியான ஒரு தலைமை - தமிழர் தலைவரைப்போல் இல்லாமல் இருந்திருந்தால், இன்றைக்குத் திருமாவளவன் இந்த மேடையில் நின்று பேச முடியாது. அந்த உணர்வைப் பெற்று இருக்க முடியாது. அந்தத் துணிச்சலைப் பெற்று இருக்க முடியாது. இந்த வாய்ப்பை ஒரு அரசியல் கட்சி எனக்கு மேடை போட்டு தராது. திராவிடர் கழகம் தருவதைப்போல தராது. திராவிடர் கழகத்திற்கு இருக்கின்ற அந்த சுதந்திரம் அரசியல் கட்சிக்கு வராது. ஆக, அப்படி தந்தை பெரியாருக்குப் பின்னால், இன்றைக்குத் தமிழர் தலைவர் அவர்கள், மிகச் சிறப்பான ஒரு தலைமையை தந்து, இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி வருகிறார் என்பதைவிட, பெரியாரி யத்தைக் கட்டிக் காப்பாற்றி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner