எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழாவில் புலவர் பா.வீரமணி  வரவேற்பு உரை

சென்னை, மார்ச் 1-- தந்தை பெரியார் அவர்களால், செடி யாக இருந்த ஒரு திராவிடர் கழகத்தை மரமாக ஆக்கி, கனி தருகின்ற பெருமரமாக ஆக்கியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் என்றார் புலவர் பா.வீரமணி அவர்கள்.

22.2.2017 அன்று சென்னை பல்கலைக் கழக நூற் றாண்டு மெரினா அரங்கில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், சிங்காரவேலர் சிந்தனைக் கழக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சிங்கார வேலர் அறக்கட்டளை பொழிவு--9 கூட்டத்தில் புலவர் பா.வீரமணி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அறக்கட்டளையின் சார்பாக

வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

பெருமதிப்பிற்குரிய தமிழர் தலைவர் அவர்களே!

நிகழ்ச்சியின் தலைவர் மரியாதைக்குரிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை தலைவர் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் அவர்களே! தமிழ் மொழியியல் துறையின் தலைவர் பேராசிரியர் பாலு அவர்களே! திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலா ளர் வீ.குமரேசன் அவர்களே! பல்கலைக் கழகத்தில் பயிலும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மாணாக்கர்களே! உங்கள் அனைவரையும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சிந்தனைக் கழக அறக்கட்டளையின் சார்பாக வரவேற்ப தில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கவி வீச்சோடு தொடங்கலாம் என அறக்கட்டளை கருதியது

இந்த நிகழ்ச்சியின் முதல் அமர்வாக கவி வீச்சு நடை பெற உள்ளது. இது கவியரங்கம் அல்ல; கவியரங்கம் என்றால் விரிவான கதை போல படிக்க ஆரம்பித்து, கேட்பவர் அலுப்பு, சலிப்பு கொண்டு சோர்வடையும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படியில்லை கவிவீச்சு என் பது! சுருக்கமும், செறிவும் வாய்ந்தது. ஆழமாக தரப்படு வதுதான் கவிதை. அந்த வகையில் சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா நிகழ்வினை கவி வீச்சோடு தொடங் கலாம் என அறக்கட்டளை கருதியது. இந்த கவி வீச்சுக் கும், சிங்காரவேலருக்கும் ஒரு பெரும் தொடர்பு உண்டு. சிங்காரவேலர் தந்தை பெரியாரை விட 19 வயது மூத் தவர். தமிழகத்தின் தலைவர்கள் அனைவரைக் காட்டி லும் மிகவும் மூத்தவர். திலகரைக் காட்டிலும், காந்தி யைக் காட்டிலும் மூத்தவர். இவர்களைவிட மூத்தவர் என்பதை விட, பல விஷயங்களில், பல துறைகளில் பலவற்றை அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாக விளங்கியவர்; முன்னோடியாக விளங்கியது மட்டுமல்ல - முன்னோடியில்லாத முன்னோடியாக விளங்கியவர். அம்பேத்கர் என்றால் ஒரு பூலே இருந்திருக்கின்றார். லெனின் என்றால் ஒரு மார்க்ஸ் இருந்திருக்கிறார். சிங்காரவேலருக்கு சோவியத் புரட்சியும், அந்தக் காலத் தில் வளர்ந்து நிலவிய விஞ்ஞான தொழில்நுட்ப தாக்கம் நிறைந்த சமூகச்சூழலே பெரும் அறிஞராக அவரை உருவாக்கியது. அந்தப் பெரும் சிந்தனையாளர் 1925ஆம் ஆண்டில் கயாவில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் பேசுகின்றபொழுது வால்ட் விட்மன் உடைய அழகிய கவிதையினை எடுத்து, விரித்து எடுத்துக் காட்டியிருக் கின்றார். எனக்குத் தெரிந்து முதன் முதலில் ஒரு மாபெ ரும் அரசியல் மேடையில் ஒரு கவிதையை எடுத்து சமூ கச் சூழலை ஒப்பிட்டுப் பேசிய பதிவு சிங்காலவேலரு டையதுதான்.

எனவே சிங்கார வேலர் கயா மாநாட்டிலும், கான்பூர் மாநாட்டிலும் ஆங்கில கவிதை வரிகளை எடுத்துக்காட்டி பேசியதைப் போன்று, அவரை நினைவூட்டுகின்ற இந்த விழாவிலும் கவி வீச்சு தொடர இருப்பது மிகவும் பொருத்தமானது என கருதுகிறேன்.

வடசென்னை புறக்கணிக்கப்பட்ட பகுதி

இந்த கவி வீச்சிற்கு புலவர் தமிழமுதன் வந்திருக் கிறார். அவர் தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். ‘சிலம்புச் செம்மல்’ என்று பெயர் பெற்றவர். வடசென்னையின் தமிழர் மரபை மீட்டெடுத்து அதனை வளர்த்து வரு கின்ற ஓர் அரிய கவிஞர்; தமிழ் அறிஞர். இங்கு இருக் கின்ற மூவர் - நண்பர் அருளைத் தவிர - மூவரும் வடசென்னையைத் சார்ந்தவர்கள். உங்களில் பெரும்பா லோர் நினைக் கலாம். தென் சென்னைதான் மிகப்பெரிய அறிஞர் கூட்டம் இருந்த இடமென்று. அது உண்மையில்லை - மிக மிகப்பெரிய அறிஞர்கள் வடசென்னையில் தோன்றி வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள். அது ஒரு பெரிய வரலாறு! கால அவசியம் கருதி இப்பொழுது அது முழுவதையும் கூறிட முடியாது. அந்த வடசென்னை மரபின் தொடர்ச்சியாக இருப்பவர்கள் தான் இந்தக் கவிஞர்கள். எனவே இந்தக் கவி வீச்சிற்கு வந்திருக்கின்ற தமிழமுதன் அவர்களை வரவேற்கிறேன். இரா.தே.முத்து அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத் தின் செயலாளராகவும், பொருளாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். ஒரு செயல் தேனீயாக விளங் கிக் கொண்டிருப்பவர். அவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நா.வே.அருள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க வடசென்னை கிளையின் செயலாளராகப் பணியாற்றியவர்; சிறந்த கவிஞர். அவரையும் வருக வருக என வரவேற்கிறேன். அன்பு நண்பர் கவியழகன் அவர்கள், கவிஞர் வைரமுத்து அவர்களால் அவரது இயற்பெயரை மறைத்து ‘கவியழகன்’ எனப் பெயர் சூட்டப் பெற்றவர். அவரும் வடசென்னையைச் சார்ந்த வர். அவ¬ரை வருக வருக என வரவேற்கிறேன். என்ன வடசென்னை, தென்சென்னை எனப் பிரிவு என நீங்கள் கேட்கலாம். எந்தப் பிரிவும் இதில் இல்லை; வட சென்னை புறக் கணிக்கப்பட்ட பகுதி என்பதால் அதைச் சுட்டிக் காட்டு வதற்காகக் கூறுகிறேன். இப்பொழுது கவி வீச்சு தொடர்கிறது.

அறக்கட்டளை சொற்பொழிவு அமர்வு

பெருமதிப்பிற்குரிய நண்பர்களே! நேரம் மிக அதிக மாகக் கடந்துவிட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களாலும் நீண்ட நேரம் உட்கார முடியாது. இந்த விழா விற்கு அவர் வருவது என்பதே சற்று கடினமாக இருந் தது. காரணம்; எதிர்பாராத ஒரு விபத்தின் காரணமாக அவர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையே குறைத்து இருக்கிறார். சிங்காரவேலரது நிகழ்ச்சியினால் - கடந்த 16ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய சூழலில் அவர், வேறொரு நிகழ்ச்சியினை தள்ளி வைத்துவிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வந்தாக வேண்டுமென்று அவர்கள் தேதி ஒப்புதல் தந்தார்கள். 16ஆம் தேதி சென்னை பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி நடத்த அரங்குகள் தயாராக இல்லாததால், நிகழ்ச்சி 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நேரத் திலும் பல சிக்கல்கள் இருந்தன. அப்படி சிக்கல்கள் இருந்தாலும், ஆசிரியர் அவர்கள் மனமுவந்து பல்வேறு உடல் சங்கடங்களுக்கு இடையில் வருகை புரிந்திருக் கிறார்கள். அறக்கட்டளை சார்பாக எங்களது பெருநன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் சிங்காரவேலரைப் பற்றிப் பேசுவதற்கு மூன்று, நான்கு வாய்ப்புகள் கிட்டியிருக்கிறது. மாணவர்களும் கேட்டிருக்கிறார்கள். இப் போது நான் எனது வரவேற்புரையினை நீட்டிக்க விரும்ப வில்லை.

சிங்காரவேலரைப் பற்றி ஒரே ஒரு செய்தியை மட் டும் கூறிவிட்டு, ஆசிரியர் அவர்களை சற்று அறிமுகப் படுத்திவிட்டு, நான் விடைபெறலாமென கருதுகிறேன்.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியத்தில் இடம் பெறாத ஒரு கட்டுரை

இந்த பிப்ரவரி திங்களில் தாய்மொழிநாள் முக்கியமா னதாகும். இந்தத் தாய்மொழியை எத்தனை பேர் எத் தனை நாடுகளில் எவ்வளவு சிறப்பாக வளர்த்திருக்கி றார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். அதிலொரு குறைவு இருப்பதனால்தான் ஒரு தாழ்வு இருப்பதனால் தான் ‘தாய்மொழி நாள்’ என அறிவித்து, தாய்மொழிக்கு ஆக்கமும், ஊக்கமும் தரவேண்டும் என்ற அடிப்படை யில் இந்த நாளை அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த மொழிப்பிரச்சினையை, தாய்மொழியைப் பற்றிய பல் வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிங்கார வேலர் அவர்கள் கூறிய கருத்து மிக மிக சிறப்புக் குரிய ஒன்று. மொழிப்பிரச்சினை ஏற்பட்ட பொழுது பெரும் பாலானோர் பேசக்கூடிய ‘இந்தி மொழிதான்’ ஆட்சி மொழியாக வரவேண்டுமென்று, இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஓர்முகமாகக் கூறினார்கள். இந்தியத் தலைவர்கள் மட்டுமல்ல; பொதுவுடமைத் தலைவர்கள் கூட சில காலக்கட்டத்தில் ‘இந்தி தான்’ ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று கூறியிருக் கிறார்கள். இப் படிப்பட்ட நிலையில் சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியத்தில் இடம் பெறாத ஒரு கட்டுரை, அண்மை யில் எனக்குக் கிடைத்தது.

ஜப்பான் நாட்டைச் சார்ந்த

மொழியியல் வல்லுநர் மச்சே கவுடா

1938ஆம் ஆண்டில், ‘இந்தி எதிர்ப்புப் போர்‘, ஓர் பெரும் போராக தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட பொழுது, சிங்காரவேலர் பாரிசவாயு நோயால் முடக்கப் பட்டு படுக்கையில் இருந்தார். படுக்கையில் இருந்த நேரத்தில் உடம்புக்கு முடியாத நிலையிலும் அவர் ஒரு கட்டுரையை எழுதித் தந்திருக்கிறார். அந்தக் கட்டுரை 1938இல் ‘குடிஅரசில்’ வெளியிடப்பட்டிருக்கிறது. சிங் காரவேலர் சிந்தனைக் களஞ்சியத்தில் 1936ஆம் ஆண்டு வரை வெளிவந்த கட்டுரைகள் இடம் பெற் றிருக்கும். இந்தக் கட்டுரை 1938இல் எழுதப்பட்ட கட்டுரை. ஆனால் இந்தக்கட்டுரையை பொதுவுடமைத் தலைவர் கள் பார்த்திருந்தால் கூட அவர்களின் சிந்தனையில் வேறுவிதமான கருத்து தோன்றியிருக்கும். ஏனென்றால் மோகன்குமாரமங்கலம் அவர்களே ‘லிணீஸீரீuணீரீமீ றிக்ஷீஷீதீறீமீனீ’ என ஆங்கிலத்தில் 200 பக்க அளவில் ஒரு நூலை எழுதி யிருக்கிறார். அந்த நூலில் எந்தவித ஜனநாயகக் கருத்தை யும் எடுத்துக் கொள்ளாமல், இந்திதான் பெரும்பாலா னவர்களால் பேசப்படக்கூடிய மொழி; அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது யுனெஸ்கோவில் ஒரு பெரிய ஆய்வுக் குழுவை ஏற்படுத்தி, அந்த ஆய்வுக்குழு ஜப்பான் நாட்டைச் சார்ந்த மச்சே கவுடா (விமீநீலீணீ நிஷீஷ்பீணீ) என்பவர் - மிகப்பெரிய மொழியியல் வல்லுநர், நாம் சோம்ஸ்கியைப் (ழிஷீணீனீ சிலீஷீனீsளீஹ்) போன்று ஒரு மாபெ ரும் மொழியியல் வல்லுநர்.

உலகத்தில் தோன்றிய முதன்மொழியாக தமிழ்தான் இருக்க முடியும்

அந்த மச்ச கவுடா 19 ஆண்டுகள் யுனெஸ்கோ சார் பாக ஆய்வு செய்து “ஒரு மனிதனுடைய சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிதும் உதவுவது - ஓர் உயிர் சக்தியாக விளங்குவது தாய் மொழி தான். தாய்மொழி வாயிலா கத்தான் அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்பட வேண் டும். பல மொழிகளை அவர்கள் கற்கலாம்; கற்கத் தூண்டலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் அறிவி யல் கல்வியை, வேற்றுப் பாடங்களை தாய்மொழியில் கற் பிக்கப்படக்கூடிய சூழல் நிலவினால்தான் சுயசிந் தனை வளரும்” என மச்சேகவுடா அவர்கள் வலியுறுத்தி யுள்ளார். நாம்சோம்ஸ்கி கூட இந்தியாவிற்கு வந்த பொழுது - சென் னைக்கு வந்தபொழுது அவர் ஒரு பேட்டி கொடுத்தார். “உலகத்தில் தோன்றிய முதன் மொழியாக தமிழ்தான் இருக்க முடியும்” என சொல்லியிருக்கிறார். அது மட்டு மல்ல; தாய்மொழி மூலக்கல்வி மூளையோடு, நாடி நரம்போடு பின்னிப் பிணைக் கப்பட்டுள்ளது. தாய் மொழிக்கல்வி மிகமிக முக்கியம் என்பதை அவர் வலி யுறுத்திச் சென்றிருக்கிறார்.

பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில், அரசியல் போராட்டங்களில், பெரும் புயல்கள் பலவற்றில் சிக் குண்ட சிங்காரவேலர், 1938ஆம் ஆண்டில் அவர் எழு திய கருத்து மிகமிக கவனிக்கத் தக்கது; சிந்திக்கத்தக்கது; பின்பற்றக்கூடியது. சிங்காரவேலர் எழுதுகிறார்.

எந்த அந்நிய பாஷையிலும் எங்கள் நாட்டு அரசியலை நடத்தவிடமாட்டோம்

‘‘தமிழ்நாட்டு சமதர்மவாதிகளாகிய நாங்கள் எங்கள் தமிழ்நாட்டில் தமிழ் பாஷையிலன்றி மற்ற எந்த அந்நிய பாஷையிலும் எங்கள் நாட்டு அரசியலை நடத்தவிட மாட்டோம்”

பொதுவுடைமைவாதிகள் முதலில் இதைக் கவனிக்க வேண்டும்; கவனித்தார்களா? பல்வேறு நிலைகளை - வழிகளை நாம் கவனிக்காமல் - கண்டு பிடிக்காமல் இருந்திருக்கிறோம்; தவறி இருக்கிறோம். இதை சிங்கார வேலர் 1938 இல் சொல்லி இருக்கிறார்.

‘‘தமிழ் பாஷையில் அன்றி மற்ற எந்த அந்நிய பாஷையிலும் எங்கள் நாட்டு அரசியலை நடத்தவிட மாட்டோம். சகல வித விவகாரங்களுக்கும், சட்டம், நீதி, நிர்வாகம், விஞ்ஞானம், பொருளாதாரம், தொழிற் சங்கம் முதலிய பல்லாயிர ஸ்தாபனங்களும், இலாக்கா களும் தமிழ் பாஷை மூலமாக நடத்தப்படவேண்டும்.’’

இதை யார் சொல்கிறார்?

ரஷ்யன் மொழி அறிந்தவர், பிரெஞ்சு மொழி அறிந்த வர், ஜெர்மன் மொழி அறிந்தவர், இந்தி மொழி அறிந் தவர், உருது மொழி அறிந்தவர். ஆங்கிலம், பால் குடிக் கின்ற குழந்தையிலிருந்து படித்தவர். தமிழ் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். அவர் தனிப்பட்ட முறையில் முயன்று படித்த மொழி தமிழ்.

அவருக்கு எல்லாமும் ஆங்கிலம்தான். அப்படிப் பட்ட அறிஞர். பாலி மொழியும் அறிந்தவர்.

மொழி பிரச்சினைகள் தோன்றாத

ஒரு காலகட்டத்தில்...

அவர் சொல்கிறார்,

அந்தந்த மாகாண சுயராஜ்ஜியம், அந்தந்த மாகாண பாஷையில்தான் நடத்தப்படவேண்டும் என்று அரசியல் திட்டம் தீட்டப்படவேண்டும் என்று மிகத் துல்லியமாக சொல்லியிருக்கிறார் 1938 இல்.

இதுபோன்ற மொழி பிரச்சினைகள் தோன்றாத ஒரு காலகட்டத்தில், இந்தியச் சூழலை அறிந்து, உலகச் சூழலை உணர்ந்து, எது ஒரு விஞ்ஞான உண்மையாக இருக்க முடியும் என்பதை முடிவெடுத்து, அவர் அக் காலத்தில் வலியுறுத்தி சென்றிருக்கிறார். இது மிகமிக முக்கியமான முன்னோடிச் சிந்தனையாகும்.

இந்த சிந்தனையை முன்னெடுத்துச் செல்வது நம்மு டைய கடமையாகும். இதை மட்டும் நான் கூறி விடை பெறலாம் என்று கருதுகிறேன்.

“தந்தை பெரியாரும் - சிங்காரவேலரும்’’

இந்த விழாவிற்கு ஆசிரியர் அவர்கள் வருகை புரிந் திருக்கிறார்கள். அவர்கள் பேசவிருக்கின்ற தலைப்பு, ‘‘தந்தை பெரியாரும் - சிங்காரவேலரும்’’     இதைக் காட்டிலும் மிக முக்கிய தலைப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழகம் மட்டுமல்ல; இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்ல; உலக சிந்தனையாளர்கள் ஏறெடுத்து கவனிக்கப்பட வேண்டிய மிகமிக முக்கியமான ஒரு தலைப்பு.

இந்தத் தலைப்பையொட்டி ஒன்றை நான் சொல்ல விரும்பு கிறேன். பல மேடைகளிலும் அதனைச் சொல்லியிருக்கிறேன். இங்கே இருக்கின்ற மாணவர்கள்கூட அதனைக் கேட்டிருப்பார்கள்.

நேருவால் மதிக்கப்பட்ட ஹிரேன் முகர்ஜி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.கே.தங்க மணி அவர்கள், ஒருமுறை பாராளுமன்றத்தில் பேராசிரி யர் ஹிரேன் முகர்ஜி மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், 2004 ஆம் ஆண்டில் 96 ஆம் வயதில் மறைந் தவர். ஆங்கில இலக்கியம், சட்டம் போன்ற துறை களில் முனைவர் பட்டம் பெற்றவர். நேரு அவர்கள். மிகமிக அதிகமாக நேசித்த, அவரால் மதிக்கப்பட்ட முதல் பெருந்தலைவர் ஹிரேன் முகர்ஜிதான்.

அவருடைய இல்லத்தில் பலமுறை, உலகில் வெளி வருகின்ற அரசியல் சூழலையும், வெளிவருகின்ற நூல் களைப்பற்றி யெல்லாம் நேரு அவர்கள், ஹிரேன் முகர்ஜியிடம்தான் விவாதிப் பார் என்பதல்ல, யோசனை கேட்பார்.

ஹிரேன் முகர்ஜியினுடைய ஆங்கிலத்தை, நேரு அவர்களே உங்கள் ஆங்கிலம் என்ன ஒரு பூந்தோட்டமாக இருக்கிறதே என்று வியந்து கேட்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட ஹிரேன் முகர்ஜி, ஒருமுறை கே.டி. தங்கமணியிடம் கேட்டார்,

இந்தியத் துணைக்கண்டத்தில்  இன்னும் 500 ஆண்டு கள் ஆனாலும் மதிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் இருக்கிறாரா? உங்களால் சொல்ல முடியுமா? என்றார்.

கே.டி.தங்கமணி அவர்களும், யார் யாரையோ சொன்னார்.

ஹிரேன் முகர்ஜி அவர்கள், இல்லை, இல்லை என்றார்.

பிறகு கே.டி.தங்கமணி அவர்கள் சொன்னார், ‘‘நீங்களே சொல்லுங்கள்’’ என்றார்.

இந்தக் குறிப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘தினமணி’ தலையங்கத்தில் வெளிவந்திருக்கிறது.

500 ஆண்டுகள் ஆனாலும்...

அப்போது ஹிரேன் முகர்ஜி சொன்னார், ‘‘இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும், இந்திய மக்களால் மதிக்கப்பட வேண்டிய சமூக சிந்தனையாளர்கள் சிங்காரவேலரும், தந்தை பெரியாரும் தான்.

இந்த இரண்டு சிந்தனைகள்தான், இந்திய நாட்டை தூக்கத்திலிருந்து விழிக்க வைத்து, அவர்களுக்கு எழுச்சியையும், மலர்ச்சியையும் தருகின்ற சிந்தனைகள்.

இந்த சிந்தனையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்ற ஒரு போக்கு நம்மிடையே வளரவேண்டும். அப்படி வளரவேண்டும் என்பதற்காகத்தான், இந்தத் தலைப்பை ஆசிரியர் வீரமணி அவர்கள் தந்திருக்கிறார்கள்.

சிங்காரவேலர் ஒரு நல்ல

தைரியமான நாத்திகர்

தந்தை பெரியார் அவர்கள், சிங்காரவேலரைப்பற்றி சொல்லு கின்ற இந்தக் குறிப்போடு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

தோழர் சிங்காரவேலர் பிடிவாதக்காரர்; பொது வாழ்வில் தனிப்பட்ட சிறப்பு அவரிடமிருந்தது. தொழி லாளர்களுக்காகப் பாடுபட்டு வந்தவர். அந்த விஷயத்தில் கஷ்ட, நஷ்டம் பலவற்றை அடைந்தவர்.

பொதுவுடைமை, பகுத்தறிவு சம்மந்தமாக அவரைப்போன்று அறிந்தவர்கள் அப்போது இல்லை. அவர் எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவர் வீடே புத்தக சாலையாகக் காட்சியளித்தது. கடினமான பிரச்சினைகள் குறித்தெல்லாம் எழுதுவார். அவர் ஒரு நல்ல தைரியமான நாத்திகர்.

காங்கிரசில் இருந்துகொண்டே, நகர சபையில், கடவுளின் பெயரால் பிரமாணம் எடுக்கக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தவர்.

கடவுள் பெயரில் பதவி ஏற்பு மேற்கொள்ளமாட்டேன்

இந்தியாவிலேயே முதன்முதலில் கடவுள் பெயரில் பதவி ஏற்பு மேற்கொள்ளமாட்டேன் என்று கூறிய முதல் தலைவர் சிங்காரவேலர்தான்.

அதுமட்டுமல்ல, தாய்மொழியில்தான் பதவியேற்பேன். தாய்மொழியில்தான் பதவி ஏற்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல் மனிதரும் அவர்தான்.

அதை பெரியார் அவர்கள் நினைவுறுத்துகிறார்.

எதையும் ஆராய்ச்சி செய்யும் பண்பும், துணிச்சலும், தைரி யமும் உடைய அவரைப்போன்ற ஆராய்ச்சியாளர்கள், நிறைய விஷயமறிந்து விவாதிப்பவர்கள் அவருக்குப் பிறகு தோன்றவே இல்லை.

உண்மையான உழைப்பாளர்களாக, தொண்டர்களாக சிலர் தான் தோன்ற முடியும், அந்த அளவில் தோழர் சிங்காரவேலரைப் பாராட்டுகிறோம்.

சிங்காரவேலுவின் கருத்துகள் நமக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்

தோழர் சிங்காரவேலுவின் கருத்துகள் நமக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். அவரது ஆராய்ச்சி மிகுந்த புத்தகங்களை நீங்கள் படிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.

அந்த அரிய தலைவரைப்பற்றி ஆசிரியர் அவர்கள் பேச வந்திருக்கிறார்கள். இதற்குத் தலைமையேற்க தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் அவர்கள் வந்திருக்கிறார்கள். நல்ல பேச்சாளர், எழுத்தாளர் - சில வாரங் களுக்கு முன்புகூட துணைவேந்தர் பதவியை மூன்றாண்டுகளாக இருப்பதை - அய்ந்தாண்டு காலமாக ஆக்கினால் சிறப்பாக இருக்கும் என்று தினமணியில் ஒரு கட்டுரையை எழுதியிருக் கிறார். உண்மையில், அய்ந்தாண்டு காலமாக ஆக்கப்படவேண் டியது அவசியம்தான். அவர்கள் இந்த நிகழ்விற்குத் தலைமை யேற்கிறார். அவரைப்பற்றி அதிகமாக சொல்லவேண்டியதில்லை.

மாணிக்கவாசகரே பாடி சென்றுவிட்டார்,

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பின் விளைந்த ஆரமுதே!

சிங்காரவேலர் நூல்களை ஆசிரியர் வெளியிட்டார்

அந்த ஆரமுது இப்பொழுது தலைமையேற்க வேண்டுகிறேன். தலைமை ஏற்பதற்கு முன்பு, சிங்காரவேலருடைய தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை ஆசிரியர் அவர்கள் வெளியிட்டு, ஒப்பில்லா மதிவாணன் தலைமை உரை ஆற்றுவார்கள்.

- இவ்வாறு புலவர் பா.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 

 

 

தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றி பா.வீரமணி

 

ஆசிரியர் அவர்களைப்பற்றி ஒன்றை நான் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கவிஞன் டென்னிசன் பாடினான்,

Made weak by time and fate but strong in will
to strive, to seek,  to fight

காலமும், விதியும் மனிதனை பலகீனமாக ஆக்கி விடும். ஆனால், மனத்தளவில் உறுதியாக இருக்க வேண்டும். தேடு தலிலும், சண்டையிடுதலிலும், போராடுதலிலும் தொடர்ந்து செல்லவேண்டும். அப்படி தொடர்ந்து செல்லுகின்ற முன்னணி வீரர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

ஒரு பெரும் பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உண்டு

அவர் ஒரு மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல, பேச்சாளர் மட்டுமல்ல, சிந்தனையாளர் மட்டுமல்ல, இவற்றைக் காட் டிலும் மிகச் சிறந்த நிர்வாகி. மிகமிகச் சிறந்த நிர்வாகி.

பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்கூட அவரிடத்தி லிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதனால் தான் அவர் ஆசிரியர். அவர் மிகச்சிறந்த சிந்தனையை நமக்குப் புகட்டுகிறார் என்பதல்ல - தந்தை பெரியார் அவர்களால், செடியாக இருந்த ஒரு திராவிடர் கழகத்தை மரமாக ஆக்கி, கனி தருகின்ற பெருமரமாக ஆக்கிய ஒரு பெரும் பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உண்டு.

இன்று பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின்பு, நூற்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, முதியோர் இல்லம் இன்னும் பல்வேறு இல்லங்கள், நூலகங்கள், அரங்குகள், பொது விளையாட்டுத் திடல்கள், இப்படி பல்வேறு அறக்கட்டளை களை நிறுவி, ஒரு பெரிய மலர்ச்சியை உருவாக்கிக் கொண்டி ருக்கிறார்கள். இதுதான் அவரு டைய பெரிய சிறப்பு.

எவ்வளவோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன; அந்த அரசியல் கட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான சொத்துகள் இருக்கின்றன. எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத, ஒரு பெரும் சாதனையை, தந்தை பெரியார் அவர்கள், ஒரு ஒரு காசாக சேர்க்கப்பட்ட சொத்தை, அப்படியே காப்பாற்றி வைத்ததை, காப்பாற்றி - அதனை இன்னும் பன்மடங்காக - பெரியாருடைய சிந்தனைகளை, இந்தியா விற்கு மட்டுமல்ல - உலக நிலைக்கு எடுத்துச் செல்லுகின்ற ஒரு பெரும் பேராசிரியராக ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள்.

130-க்கும் மேற்பட்ட

நூல்களை எழுதியிருக்கிறார்

விடுதலை நாளிதழை நீங்கள் பார்த்தீர்களேயானால் புரிந்துகொள்ளலாம், எப்பொழுது பார்த்தாலும் அவர்க ளுக்கு நிகழ்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும். இந்த சூறாவளிகளுக்கு இடையில், இந்த வயதில், 130-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

ஒரு பேராசிரியரால் கூட செய்ய முடியாத - ஏன் செய்ய முடியவில்லை என்று சொல்கிறேன் என்றால், பேராசிரியர்களுக்கு ஓய்வு இருக்கிறது - நேரமிருக்கிறது - பல நிலையில் சிந்தனையை ஒருமுகப்படுத்துகின்ற நேரம் அவர்களுக்குக் கிடைக்கும். எழுதுதல் என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.

ஆனால், ஆசிரியர் அவர்கள், இவ்வளவு சிக்கல்க ளுக்கு இடையில், இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடை யில் 130 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தந்தை பெரியாரு டைய எழுத்துகளை மிகச் சிறந்த முறையில், தமிழகத்தில் எந்தப் பல்கலைக் கழகமும் கொண்டுவரப்பட முடியாத அளவில், அவருடைய சிந்தனைகளையும், எழுத்துகளையும் 49 தொகுதிகளாக, உயர்ந்த தாளில், மிகச் சிறந்த அச்சுடன், மிகச் சிறந்த பைண்டிங் செய்யப்பட்டிருக்கிறது அந்தப் புத்தகங்கள்.

வாழ்வியலைப்பற்றி 12 நூல்கள்

அதற்கடுத்த முறையில், அரசியல், சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு இவற்றை மட்டுமல்லாமல், வாழ்வியலைப் பற்றி 12 நூல்களை எழுதியிருக்கிறார்.

அவர் பல நூல்களை எழுதியிருந்தாலும்கூட, அதனு டைய தாக்கம் சமூகத்தில் ஏற்பட்டாலும்கூட, வாழ்வியல் சிந்தனைகளைப்பற்றி அவர் எழுதிய நூல்களில், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய ஒரு பரபரப்பை, ஒரு கிளர்ச் சியை ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த அளவிற்கு அவர் எழுதிக் கொண்டே இருக் கிறார். அவர் நமக்கு ஒரு பெரிய முன்னோடியாக இருக் கிறார். அந்த முன்னோடி, தந்தை பெரியாரைப்பற்றியும், சிங்கார வேலரைப் பற்றியும் பேச வந்திருக்கிறார்கள்.

 

 

 

‘‘நம் தலைவர் பெரியார்’’

என்றார் சிங்காரவேலர்

பெரியார் இல்லை என்றால், சிங் காரவேலர் காலம் கடந்துதான் கிடைத்திருப்பார். கிடைத் திருப்பாரோ, இல்லையோ! அப்படி கிடைத்திருந்தால், மிகமிகக் காலங்கடந்துதான் கிடைத்திருப்பார்.

சிங்காரவேலரை முதலில் அறிமுகப்படுத்தி, அவரை மேல்நிலைக்குக் கொண்டு வந்தவர், தந்தை பெரியார் தான்.

தந்தை பெரியார் அவர்கள் சிங்காரவேலரைக் காட்டி லும் 19 வயது இளையவர். ஆனால், சிங்காரவேலர், பெரியாரைப்பற்றி சொல்லுகிறார் பாருங்கள்,

தலைவர் ராமசாமியார் மார்ட்டின் லூதரைப்போல், மதக் கற்பனைகள் நமது நாட்டினின்று ஒழியுமாறு தம் இயக்கத்திற்கு வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழியை கடைபிடித்து, நமது 35 கோடி பாமர மக்களின் அறியாமையைப் போக்கவேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் - என்று ஒரு கட்டுரையில், சிங்காரவேலர், அவ்வளவு பெரிய சிந்தனையாளர், அவ்வளவு பெரிய படிப்பாளி - தந்தை பெரியாருடைய உழைப்பையும், தியாகத்தையும், அவருடைய எந்த ஒரு பயன் கருதா தொண்டையும் கருதி, ‘‘நம் தலைவர் பெரியார்’’ என்று சொல்கிறார் என்று சொன்னால், இதைக் காட்டிலும் மிகப்பெரிய ஒரு பாராட்டு பெரியா ருக்குத் தேவையில்லை என்று நான் கருதுகிறேன்.

அப்படி சிங்காரவேலரால், போற்றப்பட்ட ஒரு அரிய தலைவர் தந்தை பெரியார்.

பெரியார் இல்லை என்று சொன்னால்? அவர்தான் முதன்முதலில் ‘குடிஅரசு’ சார்பாக, சிங்காரவேலர் கட்டு ரைகளை வெளியிட்டார். கட்டுரைகளை வெளியிட்டது மட்டுமல்ல, அவருடைய நூல்களை சிங்காரவேலர் வெளியிடுவதற்கு முன்பு, சுயமரியாதை இயக்கம் / திராவிடர் கழகம்தான் வெளியிட்டது.

1930 ஆம் ஆண்டிலிருந்து 2017  ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது சுயமரியாதை இயக்கம் / திராவிடர் கழகம்.

அண்மையில்கூட ‘‘விஞ்ஞான முறையும்- மூடநம் பிக்கையும்’’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை நீங்கள் கண்டிப்பாக வாங்கிப் படிக்கவேண்டும்.

இப்பொழுது திராவிடர் கழகம் இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிறது. ‘கடவுளும் மனிதனும்’; மற் றும் ‘கடவுளும் பிரபஞ்சமும்’.

பழைய ‘குடிஅரசு’ இதழ்களை எடுத்து நீங்கள் பார்த்தால், இந்த நூல்களைப்பற்றி நிறைய விளம்பரங்கள் வந்திருக்கின்றன.

இப்படி விளம்பரம் கொடுத்து, எழுதுவதற்கு வழியமைத்துக் கொடுத்தவர் தந்தை பெரியார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner