எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெண்கள் தன்னம்பிக்கை பெற அந்தப் புத்தகத்தினைப் படிக்கவேண்டும்

நூலினை வெளியிட்டு மேனாள் துணைவேந்தர் திருமலை உரை

மதுரை, மார்ச் 16-  ‘‘கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’’  புத்தகம் நம்முடைய வீடுகளில் இருக்கவேண்டிய புத்தகம். இந்தப் புத்தகத்தினை முதற்கண் நாம் பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்து, அவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும்; அவர்கள் தன்னம்பிக்கை பெறவேண்டும் என் றார் தமிழ் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சிறந்த தமிழறிஞருமான திருமலை அவர்கள்.

4.9.2016 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடை பெற்ற 11ஆவது புத்தக கண்காட்சியில் ‘‘கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’’ நூலினை வெளியிட்டு தமிழ் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சிறந்த தமிழறிஞருமான திருமலை அவர்கள் உரையாற்றினார்.

தலைசிறந்த அடையாளங்களுள் ஒன்று

மதுரை நகரத்தின் தலைசிறந்த அடையாளங்களுள் ஒன்றாக எப்பொழுதும் நினைவுகூரப்படுவது இந்தப் புத்தகக் கண்காட்சி.

இக்கண்காட்சியில், நாள்தோறும் நூல்களை வெளியிட்டு, மக்களுக்கு நூல்களினுடைய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டக் கூடிய இந்த நிகழ்ச்சித் தொடரில்,

இன்றைக்கு தலைவர் வீரமணி அவர்களுடைய ‘‘கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’’ என்கிற நூலை வெளியிட்டு உரையாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்.

உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’’

நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம், நண்பர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் என்னை அழைத்து, புத்தகக் கண்காட்சியில் ‘‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’’ என்ற நூலினை வெளி யிட்டு உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, உட னடியாக அந்த நூலினை எனக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

நான் அந்த நூலினைப் படித்துவிட்டு, உரையாற்றுவதற்குத் தயாராக இருந்த நேரத்தில், அவர் மீண்டும் என்னை தொலை பேசியில் தொடர்புகொண்டு, உங்களுக்கு இன்னொரு புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறேன். அதனைப்பற்றி நீங்கள் பேசுங்கள் என்று சொன்னார்.

அதுதான் நான் இங்கே வெளியிட்ட, ‘‘கல்லூரி பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’’ என்கிற நூல். அப்படியென்றால், “பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்” பற்றியும் பேசவேண் டுமா? என்று கேட்டபொழுது,

அவர் சொன்னார், அந்த நூல்பற்றி நம்முடைய சுந்தர ஆவுடையப்பன் பேசுகிறார் என்று சொன்னார்.

இரண்டு மிகச்சிறந்த நூல்களைப் படிக்கின்ற வாய்ப்பு

முதலில் நான் “பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்” என்கிற நூலைப் படித்து, அதற்குப் பிறகு, ‘‘கல்லூரி பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’’ நூலையும் படித்தேன். படி, படி என்று மற்றவர்களை சொல்வதைவிட, முதலில் நாம் படிக்கவேண்டும் அல்லவா! அதனால், அந்த சோதனை எப்படி வேண்டுமானாலும் வரும் என்பதினால், நம்முடைய நம்.சீனிவாசன் அவர்களால், குறுகிய காலத்தில், இந்த இரண்டு மிகச்சிறந்த நூல்களைப் படிக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக் கிறேன்.

இங்கே இந்த விழாவிற்கு வந்து நான் அமர்ந்திருந்த பொழுது, நம்முடைய ஆவுடையப்பன் அவர்களுடைய உரையை வெகுவாக ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். கணிதப் பாடத்தில் நான் மிகவும் பலவீனமானவன். அதனால் தான் நான் தமிழ் இலக்கியம் படித்து, ஒரு சாமர்த்தியமான வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சென்று, எங்கெங்கேயோ சென்று, மீண்டும் நம் இடத்திற்கு வந்துவிட்டோம்.

ஆவுடையப்பனை நினைத்து

நான் என்னை தேற்றிக் கொண்டேன்

இரண்டு நூல்கள் விலை 500 ரூபாய் என்றால், எவ்வளவு தள்ளுபடி என்று கேட்டவுடன், உடனே மனக்கணக்குப் போட்டார். அப்பொழுது நான் நினைத்தேன், நான்தான் இந்த உலகத்திலேயே கணிதப் பாடத்தில் மிகவும் மோசமானவன் என்று - ஆனால், எனக்கு இப்பொழுது தைரியம் சொல்வது போன்று, நம்முடைய ஆவுடையப்பன் இருக்கிறார்; அவரை நினைத்து நான் தேற்றிக் கொண்டேன்.

நான் உடனே கணக்குப் போட்டு 20 சதவிகிதம் தள்ளுபடி வருகிறது என்றேன். உடனே அவர், ஒரு புத்தகம் வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி வருகிறது என்றார். அதற்காக ஒரு மனக்கணக்குப் போட்டேன்.

அடுத்தபடியாக நம்முடைய நீதியரசர் அவர்கள் உரை யாற்றுவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியின் வேகத்தினுடைய போக்கில், என்னை உரை யாற்ற அழைத்தார்கள். அதனை நான் சிறிது நிறுத்தி, நீதியரசர் உரையாற்றும்படி கேட்டுக்கொண்டேன். அப்படி செய்தது மிகவும் பயனுள்ளதாயிற்று.

அவர் மிக நுணுக்கமான பல செய்திகளை இங்கே சொன்னார். அதற்காக செல்வம் அவர்களுக்கு என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலினைப் படித்து, அதனைப்பற்றி உரையாற்றும் பொழுது எனக்கு ஒரு பெரிய சிந்தனை மனதினுள் எழுந்தது.

ஒரு மொழி பேசுகிற, ஒரு குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை, பண்பாடுகளைப் பெற்றிருக்கின்ற ஒரு சமுதாயம், அது பல வரலாற்றுக் காலகட்டங்களுக்கு ஊடாக அப்படியே பயணம் செய்து போகின்றபொழுது, அது மாறாமல் இருக்குமா? என்கிற ஒரு கேள்வி வருகிறது. அது மாறுவதுதான் அதனு டைய இயற்கை.

அப்படி மாறுவதற்கு பல்வேறு விதமான புற உலகத்தி னுடைய சூழல்கள், அந்த அமைப்புக்குள்ளேயே இருக்கின் றன. இந்தச் சமுதாயம் மாறுவதற்குத் தேவையான எல்லாவித மான சூழல்களும் அதற்குள்ளேயே அமைந்திருக்கின்றன.

பெரியார் அவர்கள் அறிவினால் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா?

அப்படிப் பார்க்கின்றபொழுது, நம்முடைய மனித சமுதாய வரலாற்றில், மிக முக்கியமான ஒரு காலகட்டம் என்பது, “சூழ்நிலைக்காலம்” (Age of environment) அறி வொளிக்காலம் - இதனை சொல்வதற்குக் காரணம் - பெரியார் அவர்கள் அறிவினால் தன்னுடைய வாழ்க்கையை அமைத் துக் கொண்டாரா? என்றால், இல்லை என்றுதான் நான் உறுதியாகச் சொல்வேன்.

பெரியார் அவர்கள் அறிவினால் தன்னுடைய வாழ்க் கையை அமைத்துக் கொண்டதைவிட, உணர்வினால் தன்னு டைய வாழ்க்கையின் கோட்பாடுகளை அதிகம் அமைத்துக் கொண்டார். அனுபவத்தினால் தன்னுடைய கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டார். அதனால்தான் பலருடைய மனதைத் தொட முடிந்தது!

அறிவொளிக் காலம் என்ற ஒன்று மனிதனுக்கு என்ன கொடுக்கிறது என்றால்,

திடீரென்று ஒருவர் வந்து கேள்வி கேட்டு, மரபு சார்ந்த அனைத்து விஷயங்களையும் ஒரு விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்ற தன்மையைப் பார்க்க முடியாது.

அதற்கு முன்னரே, இந்த அறிவொளிக்காலம் தொடங்கு கிறபொழுது, எல்லாவற்றையும்பற்றி கேள்வி கேள். திரைப் படத்தில்கூட ஒரு பாட்டு வரும்,

‘‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’’ என்ற வரி சாதாரண வரியல்ல - மிகமிக நுட்பமான வரியாகும்.

எல்லாவற்றையும் கேள்வி கேட்பதன் மூலமாக மனித இனத்தை மேம்படுத்தலாம் என்ற ஒரு கருத்து 18 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் உருவாகிறது. நமக்கு அது கொஞ்சம் பின்னாளில்தான் நடைமுறைக்கு வருகிறது.

அந்த உருவாக்கத்தின் காரணமாக உலகத்தில் பல புரட்சிகள் ஏற்பட்டன. பொதுவாக எல்லோரும் என்ன சொல் வார்கள் என்று கேட்டால், ஒரு சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்று சொன்னால், அரசியலில் மாற்றம் ஏற்பட்டு, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றியப் பிறகு  சமுதாயத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று சொல்வது ஒரு வகை.

ஆனால், உலக வரலாறு நமக்குச் சொல்லக்கூடிய செய்தி என்னவென்று கேட்டால், அரசியல் வரலாற்றுக்குப் பிறகு அல்ல - சமுதாய சீர்திருத்த வரலாறு ஏற்பட்டது என்பதாகும்.

சமுதாய சீர்திருத்த வரலாறு - சிந்தனைகளின் வரலாறே - அரசியல் வரலாற்றை தீர்மானிக்கிறது என்பதை நமக்கு இந்த வரலாறு காட்டுகிறது.

ஜெர்மானிய தத்துவஞானி

இமானுவேல் கான்ட்

ஒரு சில சான்றுகளைச் சொல்வதாக இருந்தால், ஜெர்மானிய தத்துவ ஞானியான இமானுவேல் கான்ட் என்ற ஒரு அறிஞர் இருந்தார். அவர் முதல் முறையாக தன் காலத்தில் இருந்த மக்களை நோக்கி ஒரு செய்தியை சொல்கிறார்.

அது என்னவென்றால்,

Dare to know  என்று சொல்கிறார்.

எல்லாவற்றையும் தெரிந்துகொள்வதற்கு நீ துணிந்து நில்!

இரண்டாவது வாசகம் என்னவென்றால்,

Have courage to use your own reason  என்று சொல்கிறார்.

உன்னுடைய காரணம் காணும் பகுத்தறிவை நீ பயன் படுத்துவதற்கு தைரியத்தை மனதில் கொள் என்று சொல்கிறார்.

இந்த இரண்டு செய்திகள் உலக அறிவொளி காலத்தினு டைய உச்சமாகும்.

நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தீர்களேயானால், பிரெஞ்சு புரட்சிக்கு அடிப்படையாக அமைந்ததே சிந்தனை யாளர்களுடைய கருத்துகள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை - நீங்களே தெரிந்து வைத்திருப்பீர்கள் - அதனை ஏற்றுக்கொள்வீர்கள்.

தாமஸ் ஜெபர்சன்

அதுபோல,  The Declaration independence என்ற அந்த ஒரு கட்டுரை - பேச்சு என்பது தாமஸ் ஜெபர்சன் என்ற ஒரு அறிஞருடைய பேச்சு. அமெரிக்காவில் மாபெரும் எழுச்சி ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

அப்படிப் பார்த்தோமேயானால், அறிவாளிகள், சிந்தனை யாளர்கள் இந்த சமுதாயத்தை உருவாக்குகிறார்கள் என்பதை மிக மிக நினைவில் கொள்ளவேண்டிய ஒரு அடிப்படையான செய்தி.

அப்படியானால், அறிவாளிகள், சிந்தனையாளர்கள் எப்படி உருவாகுகிறார்கள். பெரியார் ஈ.வெ.ரா.  போன்றவர்கள் எப்படி உருவானார்கள்? காந்தியாரைப் போன்றவர்கள் எப்படி உருவானார்கள்? மகாகாவி பாரதி  போன்ற கவிஞர்கள் எப்படித் தோன்றினார்கள்? என்று பார்த்தால்,

சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற மாமனிதர்கள் தோன்றுவது காலத்தின் கட்டாயம்

அது பெரியாராக இருக்கலாம், காந்தியராக இருக்கலாம், பாரதியாக இருக்கலாம் அல்லது வேறு எவரோ ஒருவராக இருக்கலாம். ஆனால், இதேபோன்ற தன்மைகளையுடைய சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற மாமனிதர்கள் தோன்றுவது காலத்தின் கட்டாயம் என்பது நமக்கு வரலாறு சொல்லக்கூடிய செய்தியாகும்.

பெரியார் இல்லாவிட்டால், இன்னொருவர் அந்த இடத்திற்கு வந்திருப்பார். ஏனென்று சொன்னால், சமுதாயம் அந்தப் போக்கிலே நீண்டு கொண்டிருக்கின்றபொழுது, அதற்கு ஒரு மாற்றாக, ஒரு தலைவன், சிந்தனையாளன் தேவைப்படுகிறான். அவன் தோன்றியே தீருவான் என்பது காலத்தன் கட்டாயம். அது ஒரு இயங்கி.

இந்தியாவில் இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. மிக முற்பட்ட காலத்திலேயே இப்படிப்பட்ட சமூக நம்பிக்கை களுக்கு எதிரான ஒரு சிந்தனையை நம்முடைய வள்ளுவர் பேராசான் முன்வைக்கிறார்.

அவற்றில் பெரும்பாலானவற்றை பெரியார் அவர்கள் அழகாக வழிமொழிகிறார்; நம்முடைய தலைவர் வீரமணி அவர்கள் அதனைப்பற்றி இந்த நூலில் மிக அழகாக எடுத்து ரைக்கின்றார்.

அம்மை நோய் ஏற்பட்டுவிட்டால், அது தெய்வத்தினு டைய குற்றத்தினால் வந்தது என்று நம்புவதை அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கின்றார்.

சீரான வளர்ச்சிக்கு மிக உகந்தது!

அதுபோல காலரா நோய் வந்துவிட்டால், ஏதோ எண் ணெய் தடவி கொடுத்தது அம்மா என்று நம்பப்படுவதை விமர்சிக்கின்றார்.

இதையெல்லாம் கேள்வி கேட்டு, இவையெல்லாம் குறிப்பிட்ட நோய்கள், இவை கிருமிகளால் உருவாகின்றன என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை, நிலை நாட்டிலே வரவேண்டும். அது சீரான வளர்ச்சிக்கு மிக உகந்தது என்பதை நாம் பார்க்கிறோம்.

வள்ளுவர் என்ன சொல்கிறார்,

எல்லாவற்றையும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றின் வழி நாம் போகின்றோம் என்று எண்ணுகின்ற நம்பிக்கையின் மீது மிக ஆழமாக நிலவியிருந்த ஒரு காலத்தில் வள்ளுவர் சொல்கிறார்,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந்து உறும்

என்ற கருத்து நிலவிய காலகட்டத்திலேயே வள்ளுவர் அதற்கு மாற்றாக ஒரு சிந்தனையை முன்வைக்கின்றார்.

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்

என்ற குறளில் அந்த முந்தைய நம்பிக்கைக்கு ஒரு மாற்றாக மனிதனுடைய முயற்சியை வள்ளுவர் முதன் முறையாக தமிழ் இலக்கிய வரலாற்றில் அதனை முன்வைத் திருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

காலப் போக்கில் அவை எவ்வாறெல்லாம் மாறுகின்றன - சில நேரங்களில் மறக்கப்படுகின்றன - சில நேரங்களில் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன.

இந்தப் புத்தகம் இன்றைக்கு

நம் கைகளில் இருக்கிறது.

இந்த ஒரு பின்னணியில்தான், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரியாரைப் போன்றவர்கள் தோன்ற, இயக்கங் கள் உருவாகின்றன. அதனுடைய ஒரு தொடர்ச்சியாக இந்த நூல் இன்றைக்கு நம் கைகளில் இருக்கிறது.

நான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்தபோது, அதற்குப் பக்கத்திலேயே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இருந்ததினால், அங்கே துணை வேந்தராக இருந்த நல்.இராமச்சந்திரன் அவர்களோடு எனக்கு நல்ல நட்புணர்வு இருந்ததினால், அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்படும்பொழுது, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்களை நான் வாங்கிப் படித்திருக்கின்றேன்.

வாழ்வியல் சிந்தனை என்கிற நூல் எனக்குத் தெரிந்து பல தொகுதிகளாக வந்திருக்கின்றது. அதில் நான்கு தொகுதி களை நான் படித்திருக்கிறேன்.

பெரியாருடைய கருத்துகளை வாங்கி அதனைப் பிரதிபலிக்கிறேன்

அந்த நூல்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் இருக்கக்கூடிய ஒரு மாபெரும் சிறப்பு என்னவென்றால், அவர் நூல்களில் பார்த்தது என்னவென்றால்,

எனக்கென்று தனியாக ஒரு கருத்து என்று ஒன்று இல்லை. நான் அப்படியே பெரியாருடைய கருத்துகளை வாங்கி அதனைப் பிரதிபலிக்கிறேன் என்று நூலின் தொடக்கத்தி லேயே தெளிவாக அவர் சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொல்லிவிட்டு, அதன் பிறகு ஒவ்வொரு செய்தியாக சொல்கிறார்.

“கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்” என்ற இந்தப் புத்தகம் ஒரு பேச்சு வடிவத்தில் அமைந்திருக்கின்ற ஒரு நூலாகும். பல்வேறு கல்லூரிகளில், பல்கலைக் கழகங் களில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதை தொகுத்து இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் பயனுள்ள பல செய்திகள், மிக எளிய வடிவில் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பதுதான் இந்த நூலின் சிறப்பாகும்.

இவை முற்றிலும் மாணவர்களுக்கு முன் நின்று அவர் உரையாற்றியது என்பதனால், இந்த நூலினுடைய அடிப்படை என்பது, எளிமை என்ற ஒன்றைக் கொண்டதாக அமைந்திருக் கிறது.

அவர் என்ன சொல்கிறார், பெரியார் சொன்ன அதே விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்.

இந்த உலகம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகத்தினுடைய போக்கில், நாமும் மாறவேண்டும் என்பதை அவர் ஒரு இடத்தில் மிக நுட்பமாக சொல்லியிருக்கிறார்.

உயிருள்ள மனிதர்கள் எப்படி

மாறுவதிலிருந்து தவிர்க்க முடியும்?

அப்படிப் பார்த்தோமேயானால், இந்த உலகத்திலுள்ள எல்லா பொருள்களும், 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லையே என்று நிறைய எடுத்துக் காட்டுகளைச் சொல்லிவிட்டு,

அப்படி இந்த உலகத்தினுடைய ஜடப்பொருள்களே மாறிக் கொண்டு வரும்பொழுது, உயிருள்ள மனிதர்கள் எப்படி மாறுவதிலிருந்து தம்மைத் தவிர்க்க முடியும் என்கிற ஒரு வினாவை எழுப்பி, மாற்றம் என்பது அடிப்படையானது என்கிறார்.

நம்முடைய மக்களுக்கு இருக்கும் மாபெரும் ஒரு கோளாறு அல்லது அடிப்படையான தன்மை என்னவென்று கேட்டால், நாம் எதற்காக இதைச் செய்கிறோம் என்பதற்கான காரணமே இல்லாமல், மிகமிகப் பிடிவாதமாக உறைந்துபோன தன்மையிலே நம்முடைய மக்கள் இருக்கிறார்கள்.

பலரோடு பழகும்போது, பேசும்போது கேட்டீர்களே யானால், இதை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கான விடை கிடைக்காது. பெரிய வர்கள் இப்படிச் செய்தார்கள், அதனால் அதனை நான் விடமாட்டேன் என்று சொல்வார்கள்.

இந்தப் பிடிவாதமான தன்மை - ஆங்கிலத்தில் Closed Mind என்று சொல்வார்கள், நம்முடைய உள்ளத்தினுடைய கதவுகளை இறுக்கமாகப் பூட்டிக்கொண்டால், உங்களுக்கு எப்படி புதிய செய்தி, புதிய வெளிச்சம் கிடைக்கும். எனவே,  எப்பொழுதும் நம்முடைய உள்ளத்தை அகலமாகத் திறந்து வைத்திருக்கவேண்டும் என்ற செய்திகளைச் சொல்லிவிட்டு,

பாடத் திட்டங்களில் அடிப்படையான மாற்றங்கள் வேண்டும்

நாமெல்லாம் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை அவர் சொல்கிறார்,

அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசியபொழுது அங்கே இருந்த ஒருவர் சொன்னார், மக்களுடைய சிந்தனைப் போக்கு, இளைஞர்களுடைய எழுச்சி எப்படி ஏற்படுகிறது என்று பார்த்தால், அது பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் இருந்துதான் ஏற்படுகிறது; அல்லது கல்லூரிகளில் இருந்துதான் அது ஏற்படுகிறது என்பதை சொல்லிவிட்டு,

அந்தப் பகுதிகளை முடக்கிவிட்டோம் என்று சொன்னால், சிந்திக்கக்கூடிய தன்மைகளை முற்றிலுமாக அடக்கிவிடலாம், மாற்றிவிடலாம். அதற்கான ஏற்பாடுகள் நிறைய இருக்கிறது. அதற்கான சூழ்நிலைகள் மிகுதியாக இருக்கின்றன.

அந்த வகையில் பார்க்கும்பொழுது, பாடத் திட்டங்களில் அடிப்படையான மாற்றங்கள் வேண்டும் என்கிறார்.

இறைவன் இல்லை - கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய தத்துவங்களைத்தான்

இறையியலைப்பற்றிப் படிக்கக்கூடியவர்கள், முதலில் படிக்கக்கூடிய பாடங்கள் என்னவென்று கேட்டால், இறை வனுடைய இருப்பு என்பதைப்பற்றி அல்ல. அவர்கள், முதலில் இறைவன் இல்லை - கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய தத்துவங்களைத்தான் முதலில் படித்துவிட்டு, அதன் பிறகு அவர்கள் இறையியலைப் படிப்பதற்குப் போகிறார்கள்.

ஒரு பாடத்திட்டத்தில் அடிப்படையில் நமக்கு பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

என்கிற குறளை சொன்னவுடன், பலருக்குப் பல்வேறுவித மான கோபங்கள் ஏற்படுகின்றன.  அதில் முக்கியமாக, பெண்கள், கணவனின் காலைத் தொட்டு எழுந்திருக்கவேண் டும் என்கிற அந்தச் செய்தியை மிகக் கடுமையாக விமர் சிப்பதை நான் நேரிடையாகக் கேட்டிருக்கிறேன்.

அந்தக் குறளுக்கு உரை எழுதியவர்களும், கணவனையே எப்பொழுதும் மனைவி நினைத்து, அவனை தொழுது கொண்டிருக்கக்கூடிய ஒரு பெண், இப்பொழுது நீ பெய் என்று சொன்னால், மழை பெய்யும் என்று அந்த உரையை முடிக்கிறார்கள்.

ஆனால், உரை எழுதிய காலத்தில், பின்னாளில் இப்படி யெல்லாம் சமுதாயம் மாறும் என்பதும், இப்படியெல்லாம் ஒருவர் கேள்வி கேட்பார் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

அதன் பிறகு, இந்தக் குறளை விமர்சனம் செய்கிறார்கள். நான் ஏற்கெனவே சொல்லியதுபோல,

தனக்கு முன் இருக்கிற எல்லா விஷயங்களையும்  கேள்வி கேட்பது - அதனை பகுத்தறிவோடு ஆராய்வது என்று அந்த மரபை அவர்கள் கடைபிடிக்கிறார்கள். பெரியாரும் கேட் கிறார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதற்கு விளக்கம் சொல்கிறார்,

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

அப்படியென்றால், அந்தப் பெண் எப்படிப்பட்டவர் என்று கேட்டீர்களேயானால், இப்பொழுது மழை வேண்டும் என்று நினைக்கும்பொழுது, மழை வந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் நினைக்கும்பொழுது, மழை பெய்துவிட்டால், அந்த மழையை நாம் வாழ்த்துவோம், பாராட்டுவோம். அது போல, அப்படிப்பட்ட பெண் என்று விளக்கம் சொல்கிறார்.

இதயத்தினாலும், உணர்ச்சியினாலும் வாழ்ந்தவர் பெரியார் அவர்கள்

பெரியார் அவர்கள் அறிவினால் மட்டும் வாழ்ந்தவர் அல்ல, இதயத்தினாலும், உணர்ச்சியினாலும் வாழ்ந்தவர் பெரியார் அவர்கள்.

உடனே பெரியார் அவர்கள் ஒரு கேள்வி கேட்கிறார்,

நீ சொல்வது எல்லாம் சரிதான். எதற்கு கணவனை பெண் தொழவேண்டும். கணவன் பெண்ணைத் தொழுகிறானா? பிறகு ஏன் கணவனை பெண் தொழவேண்டும்? என்று கேட்டார்.

பெரியாருடைய சிந்தனைகளில் எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு உண்டு.

பெரியார் அவர்கள் எழுதுகிறார்,

ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக நிறைய அறைகள் இருக்கும்; சமையலறை, படுக்கை அறை கண்டிப்பாக இருக்கும். இந்தப் பக்கம்தான் கட்டில் போடவேண்டும்; பீரோ வைக்கவேண்டும் என்று ஏகப்பட்ட முறைகளை வைத்திருக் கிறார்கள்.

உங்கள் வீட்டில் நூலக அறை

என்ற ஒன்று இருக்கிறதா?

இங்கேதான் பெரியார் கேட்கிறார், நீங்கள் சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்; தூங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால், நீங்கள் படிப்பதற்கு எங்கேயாவது முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா? அதற்காக உங்கள் வீட்டில் நூலக அறை என்ற ஒன்று இருக்கிறதா? என்று கேட்கிறார்.

நூலக அறை என்றால் என்னவென்று கேட்கின்ற காலம் இது. அநேக வீடுகளில் நூலக அறை என்று ஒன்று கிடையாது. என்னைப் போன்று, ஆவுடையப்பன் போன்றவர்களின் வீடுகளில் என்ன ஒரு பெரிய பிரச்சினை என்றால், இங்கே இந்த புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு, நூல்களை வாங்கிக் கொண்டு செல்வேன்.

என்னுடைய துணைவியார் என்ன சொல்வார் என்றால், இப்படியே நூல்களை வாங்கிக் கொண்டே வருகிறீர்களே, எங்கே வைப்பது என்று. இப்படி இது ஒவ்வொரு வீட்டிலும் பெரிய பிரச்சினையாக இருக்கும்.

அதிலும் வாடகை வீட்டில் இருந்தால் மிகப்பெரிய பிரச்சினை; வீடு மாற்றம் செய்யும்பொழுது, புத்தகங்களை கட்டுக்கட்டாகக் கட்டி ஏற்றிக்கொண்டுவந்து, அதனைப் பிரித்து அடுக்குவது என்பது மிகப்பெரிய வேலை. மற்றவை யெல்லாவற்றையும்விட, புத்தகங்களைப் பராமரிப்பது என்பதில் ஒவ்வொரு முறையும் பெரிய போராட்டம்தான் நடைபெறும்.

நான் பணியில் இருக்கும்பொழுது, புத்தகங்கள் வாங்கும் பொழுது அதனை வீட்டிற்குக் கொண்டு போவது கிடையாது. 10, 20 நாள்கள்வரை அலுவலகத்திலேயே வைத்திருப்பேன். பிறகு சாப்பாட்டுப் பையோடு இரண்டு இரண்டு புத்தகங்களாக எடுத்துக்கொண்டு போய் வீட்டிற்குள் சேர்த்து விடுவேன். இதுபோன்ற நிலைமையில்தான் இன்னமும் இந்தச் சமுதாயம் இருக்கிறது.

ஆயிரக்கணக்கான நூல்களை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்திற்கு அளித்தேன்

ஒத்துழைப்பு கொடுத்து நூல்களை வாங்குங்கள், படியுங் கள் என்று சொல்கிறோம். நாம் ஏன் நூல்களை சேர்த்து வைக் கிறோம் என்கிற கேள்வி எழுகிறது? நான் சேர்த்து வைத் திருந்த  ஆயிரக்கணக்கான நூல்களை தஞ்சை தமிழ்ப் பல் கலைக் கழக நூலகத்திற்கு அளித்துவிட்டேன். ஏனென்றால், அந்த நூல்களைப் படித்தாகி விட்டது. தேவையென்றால் நூலகத்திலிருந்து எடுத்துப் படிக்கலாம். ஒரு பட்டியல் போட்டு அந்த நூல்களைக் கொடுத்துவிட்டேன்.

அந்த நூல்களில், அன்பளிப்பு முனைவர் திருமலை, துணைவேந்தர் என்கிற சீல் போடலாமா? என்றார்கள்.

அது வேண்டாத வெட்டி வேலை என்று சொல்லி விட்டேன். நூல் எழுதியவரின் பெயர் அதில் இருக்கிறதல்லவா - நான் அதனை வாங்கித்தானே கொடுத்தேன் என்றேன்.

புத்தகங்கள் என்பது ஒரு சர்குலேசன் - ரொட்டேசனில் போய்க்கொண்டே இருக்கவேண்டும். நாம் எல்லாவற்றையும் சேர்த்து வைக்கவேண்டும் என்று நினைப்பதினால்தான், பெரிய பிரச்சினைகள் வருகின்றன. நம்முடைய கலாச்சாரமே, சேர்த்து வைக்கிற கலாச்சாரம்தான்.

பழைய சட்டையை 1982 ஆம் ஆண்டில் தைத்த சட்டை இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அந்த சட்டை உங்களுக்குப் போதாதே ஏன் அதனை வைத்திருக்கிறீர்கள் என்பார் என் துணைவியார். அதுபோல், புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம்; அதுபோல சொத்துகளை சேர்த்து வைத்திருக்கிறோம்.

அதனால்தான் பெரியார் சொன்னார்,

நீங்கள் படிப்பதற்கு ஒரு நூலக அறை என்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும் என்று.

பெரியார்தான் கம்யூனிட்டி கிச்சன் என்கிற ஒரு கருத்தியலைக் கொண்டு வந்தவர்

பெண்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தியை பெரியார் எழுதியிருக்கிறார்.

மறுநாள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய நான்கு இட்லிக்கு, முதல்  நாள் காலையில் மாவாட்டி, அதனை எடுத்து வைத்து, பிறகு புளிக்கிறதா என்று பார்த்து, இரவில் எடுத்து வெளியில் வைத்து, மறுநாள் காலையில் கரைத்து, அதன் பிறகு நான்கு இட்லியை சாப்பிடுவதற்குப் பதில்,

பெரியார்தான் முதன்முதலில் கம்யூனிட்டி கிச்சன் என்கிற ஒரு கருத்தியலைக் கொண்டு வருகிறார். அது பெண்களுக்கு பெரிய விடுதலை என்று நான் நினைக்கிறேன்.

அது என்னவென்றால்,

ஒரு தெருவில் உள்ளவர்கள் சேர்ந்து ஒரு கிச்சனை அமைத்துக் கொள்வது. அவரவர்கள் விருப்பப்பட்டவர்கள் சமைத்துக் கொள்ளலாம். அதனை எடுத்துக்கொண்டு போய் அவரவர் வீட்டில் சாப்பிட்டுக் கொள்ளலாமே என்றார்.

பெண் இனத்தையே ஏன் நாசப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார் பெரியார். பெண்களுக்கு விடுதலை கொடுங்கள் என்றார். பெரியார் மட்டுமல்ல, பல சிந்தனையாளர்களும் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்கள்.

பெரியார் அவர்களுடைய சிந்தனையை வீரமணி அவர்கள் இந்த நூலில் மிக அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

கருத்துகளைக் கண்டு அஞ்சக்கூடாது; ஏற்றுக்கொள்வதற்கான துணிவு வேண்டும்

மூன்றாவதாக, இந்த நூலில் வருகின்ற மிக முக்கியமான ஒரு செய்தி,

கருத்துகளைக் கண்டு அஞ்சக்கூடாது என்று சொல்கிறார். அதனை ஏற்றுக்கொள்வதற்கான துணிவு வேண்டும் என்கிறார்.

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்பொழுது, மாண வன் கையைத் தூக்கினால், அவன் என்ன கேட்கப் போகி றானோ என்று ஆசிரியர் அச்சத்துடன் பார்ப்பார். ஏனென் றால், அன்றைய பாடங்களை முதல் நாளே படித்து விட்டுத்தானே பாடங்களை நடத்துகிறார். ஆசிரியரோடு சேர்ந்து மாணவனும் படித்துவிட்டு வந்து விடுகிறான்.

ஒரு கருத்தை நாம் எதிர்கொள்ளக்கூடிய திறமையும், துணிவும் நமக்கு இருக்கவேண்டும்.

பெரியார் சொல்லியதை வீரமணி அவர்கள் ஓரிடத்தில் எடுத்துக் காட்டுகிறார்.

பிஎச்.டி., படிப்பு படிக்கும்பொழுது, அல்லது மேற்பார்வை யாளராக இருக்கும்பொழுது, அவர் ஒரு செய்தியைச் சொல்லிவிட்டார் என்றால், அந்த மாணவன் அதனை மறுத்து எழுதக்கூடாது. அந்த மாணவன் ஒரு 10, 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதனைப்பற்றி புதிதாக ஆய்வு செய்யும்பொழுது, அந்தக் கருத்தை அந்த மாணவனால் மறுக்க முடியாது; அவன் அதனை மேற்கோள் காட்டுவான்.

ஆனால், உண்மையிலேயே ஒரு நல்ல ஆசிரியர் என்ன செய்யவேண்டும் என்றால், இந்த மாணவன் தன்னுடைய கருத்தை மறுக்கவேண்டும். அப்பொழுதுதான், நாம் முதலில் சொன்ன கருத்துக்கு மதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

முதலில் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தோம் என்றால், இந்த சமுதாயம் வளரவில்லை என்றுதான் அர்த்தம்.

இன்றைய இளைஞர் சமுதாயம் வளர்ந்திருக்கிறது என்றால், அவர்கள் அதனை மறுக்கவேண்டும் அல்லவா!

பெரியார் சொன்னதை வீரமணி அவர்கள் இங்கே அழகாக எடுத்துச் சொல்கிறார்,

என் கருத்து மறுக்கப்பட்டால் மகிழ்வேன்!

இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய கருத்தைகூட இது யாரோ ஒரு அறிவற்றவன் சொன்ன கருத்து என்று மறுக்கக்கூடிய ஒரு காலம் வந்தால், நான் மகிழ்ச்சியடைவேன் என்று மிகத் திறந்த மனதோடு சொல் கிறார் பெரியார்.

மூன்று தொகுப்புகளாக வெளிவந்த ஒரு நாவலின் முன்னுரையில் ஒருவர் சொல்கிறார்,

இந்த நாவலில் வரக்கூடிய ஒரு பாத்திரத்தை உருவாக்கு வதற்கு, நான் என்னிடம் இருந்த கைவண்ணங்கள் எல்லாவற் றையும் செலவழித்துவிட்டேன் என்று ஒரு அணிநயத்தோடு ஒரு வார்த்தையைக் கூறினார் தலையும், தாடியும் நரைத்த அந்த ரஷ்ய எழுத்தாளர்

இதனை மேற்கோளாகக் கொடுத்துவிட்டு, ஜெயகாந்தன் அவர்கள் சொல்கிறார்,

இனி வருங்காலத்தில் என்னுடைய தலையும், தாடியும் நரைத்தாலும்கூட இப்படி அவர் சொல்லியதைப்போல ஒரு கருத்தை சொல்வதற்கு இந்தத் தமிழ் வாசகர்கள் என்னை அனுமதிக்கமாட்டார்கள் என்று இப்பொழுதே நான் பெரிதும் வருந்துகிறேன் என்றார்.

படிக்கமாட்டான், முன்னேறமாட்டான் என்ற அர்த்தத்தில் அவர் சூசகமாகச் சொல்கிறார்.

நம்முடைய கருத்தை பின்பு ஒருவர் மறுக்கின்றபொழுது, அதற்காக நாம் மகிழ்ச்சியடையவேண்டும் என்கிற செய்தியை இந்த நூலில் வீரமணி அவர்கள் அருமையாகச் சொல்கிறார்.

மொழியைப்பற்றி பெரியாருடைய சிந்தனை

மொழியைப்பற்றி பெரியாருடைய சிந்தனையை வீரமணி அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்.

இங்கிலீசில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன 24 எழுத்துகள் மட்டும்தான். ஒரு சின்னப் பையனை அழைத்து 24 எழுத்துகளை மட்டும்தான் நீ படிக்கப் போகிறாய் என்ற வுடன், அவன் மகிழ்ச்சியாக படிப்பான். அந்த மொழியினுடைய பரவலுக்கு அது மிகமிக உதவியாக இருக்கிறது.

நம்முடைய தமிழில் ஆரம்பமே எப்படி ஆரம்பிக்கிறோம். தொல்காப்பியர் சரியாக ஆரம்பிக்கிறார்,

எழுத்தென படுபவை அகர முதல் நகர இருவாய்

முப்பது என்பன என்று.

பின்னாளில் வந்தவர்கள் 246 எழுத்துகள் இருக்கின்றன என்று சொன்னதினால், தமிழ் மொழியைப் படிக்க வந்தவர்கள் எல்லாம் அலறி ஓடுகிறார்கள்.

இப்பொழுது நவீனமான கணினி யுகத்தில் கி போர்டில், 30 பட்டன்களிலேயே எல்லாவற்றையும் அடக்கி விடு கிறார்கள்.

நாங்கள் ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்யும்பொழுது, பின் சீட்டில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவர் நகைக் கடையில் தரகு வேலை செய்பவர். நாங்கள் எல்லாம் மிடுக்காக பேண்ட் சட்டை அணிந்திருந்தோம்.

அவர் எங்களைப் பார்த்து, தம்பிகள் எல்லாம் நிக்கிறாங்க; அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லி,

ஏம்பா, இந்த உலகத்தையே பாயாக சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்றான் என்று புராணத்தில் படிக்கிறீர்களே, அது எப்படி என்றார்.

எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்.

உடனே அவர், இந்த பூமியிலேதாம்பா கடலும் இருக்கிறது; பூமியைப் பாயாகச் சுருட்டினால், அந்தக் கடலையும் சேர்த்து தானே சுருட்டி இருப்பான். என்னப்பா, கதை விடுகிறீர்கள்’’ என்று கேட்டார்.

உலகம் தட்டையாக இருக்கு என்று சொன்ன ஒரு கதையை, உலகம் உருண்டையாக இருக்கின்ற ஒரு கால கட்டத்தில், மிகச் சாதாரணமாக மறுக்கிறார்.

அதுபோன்று பெரியாருடைய செய்தியை ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்த நூலில் அழகாக எடுத்துக்காட்டுகிறார்.

தன்னிடமுள்ள சமத்துவமற்ற

தன்மையை கைவிடவேண்டும்

மொழி என்பது பயன்படுத்துவதற்கு எளிமை உடையதாக இருக்கவேண்டும் என்ற செய்தியை மிக அழகாக சொல்கிறார்.

அதுபோல, ஒரு சமுதாயம் மாறவேண்டும் என்று சொன்னால், அது தன்னிடமுள்ள சமத்துவமற்ற தன்மையை கைவிடவேண்டும் என்பதை அவர் பல சான்றுகளில் வற்புறுத்துகிறார்.

இந்த நூலில் மிக நுணுக்கமாக ஒரு செய்தியை சொல்கிறார்,

This will be enforced until adequate representation is abtain

இவர் மொழி பெயர்க்கும்பொழுது, இட ஒதுக்கீடு ணீபீமீஹீuணீtமீ க்ஷீமீஜீக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ என்பதை போதுமான இட ஒதுக்கீடு என்று மொழி பெயர்த்து சொல்லியிருக்கிறார்.

இந்த புத்தகம் எவ்வளவு நுணுக்கமானது என்பதற்காகத் தான் இந்த உதாரணத்தை சொல்கிறேன். நான் சொல்லியதோடு இந்த புத்தகத்தில் அவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள். அதனை வாங்கி நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டும்.

மொழி பெயர்ப்பில் போதுமான இட ஒதுக்கீடு என்ற ஒன்று இருக்கவே முடியாது.  ணீபீமீஹீuணீtமீ என்பதற்கு ஏனையவர்கள் அடைந்திருக்கின்ற நன்மைக்கு இணையான சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கின்ற வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று மிக நுட்பமாக சொல்லியிருக்கிறார்.

பெரியார் ஒரு எக்ஸ்ரே கலைஞர்!

பெரியாரைப்பற்றி அவர் ஒரு உருவகம் கொடுக்கிறார். அது என்னவென்றால்,

போட்டோ எடுக்கும் கலைஞர் இருக்கிறார்; ஒரு படத்தை எடுத்துவிட்டு, அந்தப் படத்தைக் கொஞ்சம் சீரும் சிறப்புமாக ஆக்குவதற்கு சில முயற்சிகள் செய்யலாம். ஆனால், நம் உடலில் உள்ள எலும்பை படம் எடுக்கும் எக்ஸ்ரே கலைஞர் எடுக்கும் படத்தினை எப்படி அழகாகக் காட்ட முடியும்?

பெரியார் யார்? என்ற கேள்வியை கேட்டு, வீரமணி அவர்கள் பதில் சொல்கிறார்,

பெரியார் ஒரு ஓவியர் அல்லர்; புகைப்படக் கலைஞர் அல்ல; அவர் ஒரு எக்ஸ்ரே கலைஞர்.

சமுதாயத்தில் என்ன பார்த்தாரோ, அதை அப்படியே அவர் சொல்லி விட்டார்; கோபப்பட்டார் என்று வீரமணி அவர்கள் சொல்வதை இந்த நூலில் பார்க்கலாம்.

பீவர்லி நிக்கோலஸ் என்கிற மேல்நாட்டவர் இந்தியாவை சுற்றிப் பார்த்துவிட்டு சொன்ன ஒரு கருத்து,

“நான் இந்தியாவில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தேன். நிறைய பேரை சந்தித்தேன், நிறைய பேரிடம் பேசினேன், ஆனால், ஒரு இந்தியனைக் கூட பார்க்கவில்லை” என்று கடிதம் எழுதியிருந்தார்.

எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவில் இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும்பொழுது, நீ எப்படி ஒரு இந்தியரைக் கூட பார்க்காமல், நிறைய பேரைப் பார்த் தேன் என்று சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டபொழுது,

அவர் சொன்னார்,

நான் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களைப் பார்த்தேன். ஆனால், இந்தியன் என்கிற உணர்வு உடையவர்களை ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை என்றார்.

இன்னொரு இடத்தில் இந்த புத்தகத்தில்,

காசியில், சம்பூரானந்தா என்ற ஒரு மகானுடைய சிலையைத் திறப்பதற்காக, அன்றைய ராணுவ அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் சென்றபொழுது, அங்கே இருந்த மாணவர்கள் எதிர்த்தார்கள், அவர் சிலையை திறக்கக்கூடாது என்று.

அதை வீரமணி அவர்கள் எழுதும்போது, உணர்ச்சி வசப்பட்டு எழுதுகிறார்,

சிலையை திறக்கும்பொழுது அவர் மேலே விழுந்து, கட்டிப் பிடித்து திறக்கப் போவதில்லை. ஒரு பொத்தானை அழுத்தினால், அந்தத் திரை விலகிவிடும். சிலை வெளியே தெரியும். ஆனால், அதனை செய்வதற்குக்கூட ஜெகஜீவன் ராம் அவர்களுக்கு அந்த மாணவர்கள் அனுமதி கொடுக்க வில்லை என்று வருத்தத்தோடு அதனைப் பதிவு செய்திருக் கிறார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வினாயகத்தின் கேள்வியும் - அண்ணாவின் பதிலும்!

ஒருமுறை  சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வினாயகம் ஒரு கேள்வி கேட்கிறார்,

பேசும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காக; நம்மை யாராவது திட்டிவிட்டால், கேள்வி கேட்டால், அதனை முழுமையாக கவனித்து அதற்குப் பதில் சொல்கிறோம். ஆனால், நம்மை யாராவது பாராட்டினால், அப்பொழுதும் நாம் அதே கவனத்தோடு இருக்கவேண்டும். ஏனென்றால், பாராட்டிற்குப் பிறகு வாரி விடுகின்ற தன்மை இருக்கும்.

வினாயகம் கேட்கிறார், இப்பொழுது தமிழ்நாட்டில் புளியின் விலை மிகவும் குறைந்திருக்கிறது. இது யாருடைய சாதனை? என்று அண்ணாவைப் பார்த்து கேட்கிறார்.

நாமாக இருந்தால் என்ன சொல்வோம்,

‘‘நாங்கள் அரும்பாடு பட்டு அந்த புளியமரங்களுக்கெல்லாம் வைட்டமின் எல்லாம் கொடுத்ததினால், அந்த புளியமரங்கள் நிறைய காய்த்தன; அதனால் புளி விலை குறைந்தது’’ என்று சொல்லியிருப்போம்.

ஆனால், வினாயகத்தினுடைய கேள்விக்கு மிகமிக எளிமையாக அண்ணா அவர்கள் பதில் சொல்கிறார், ‘‘அது என்னுடைய சாதனையல்ல; அது புளிய மரத்தினுடைய சாதனை என்று புரிந்துகொள்க!’’ என்றார்.

வீக்கர் செக்ஸ் (பலமற்ற பாலினம்) என்று

தங்களை பெண்கள் நினைக்கக்கூடாது

பெண்களைப்பற்றி இந்த நூலில்,

நீங்கள் ஒரு நாளும் வீக்கர் செக்ஸ் (பலமற்ற பாலினம்) என்று உங்களை நினைக்கக்கூடாது. ஏனென்று சொன்னால், உங்களைவிட, வீக்கஸ்ட் செக்ஸ் ஒன்று இருக்கிறது; அதுதான் ஆண். எனவே, வீக்கராக இருக்கிறவன், மிக பலவீனமாக இருக்கக்கூடிய ஒரு ஆண் மகனிடம் போய் நீ தோற்றுப் போய்விடக்கூடாது; துணிவாக எதிர்த்து நிற்கவேண்டும் என்கிற செய்தியை சொல்கிறார்.

இந்தப் புத்தகம் முழுவதும் பல்வேறுவிதமான கருத்துகளால் நிரம்பி இருக்கிறது.

இதில் எந்தக் கருத்து நூலாசிரியாராகிய திரு.வீரமணி அவர்களுடையது என்றும், எந்தக் கருத்து பெரியாருடையது என்றும் பகுத்து உணர முடியாத அளவிற்கு, பெரியாருடைய கருத்துகளை அப்படியே உள்வாங்கி, இவர் தன்னுடைய நடையில் கொடுத்திருக்கின்ற காட்சியை இந்த நூலில் பார்க்கின்றோம்.

திராவிடர் கழகப் புத்தக வெளியீட்டுப் பிரிவிற்குப் பாராட்டு

எனவே, இந்தப் புத்தகம் நம்முடைய வீடுகளில் இருக்கவேண்டிய புத்தகம். இந்தப் புத்தகத்தினை முதற்கண் நாம் பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்து, அவர்களை படிக்கச் செய்யவேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை பெறவேண்டும்.

அந்த வகையில், இந்தப் பயனுள்ள புத்தகத்தை வெளியிட் டிருக்கக்கூடிய திராவிடர் கழகப் புத்தக வெளியீட்டுப் பிரிவை நான் பாராட்டுகிறேன்.

நான் இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்டதினால், நிறைய நேரம் கிடைப்பதினால், நிறையப் புத்தகங்களை வாங்கிப் படிக்கின்றேன்.

ஒரு நாள் நம் சீனிவாசன் அவர்களிடம் கேட்டேன், சாமி சிதம்பரனார் அவர்கள் எழுதிய தமிழர் தலைவர் என்கிற புத்தகம் இருக்கிறது என்று சொல்லி அதனைக் கொடுத்தார், அதனைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு அழைத்த மைக்காக பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களுக்கு என்னு டைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக இலக்கிய வாசகர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், இந்த 20 ஆம் நூற்றாண்டினுடைய அனைத்து விதமான போக்குகளையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண் டும். அப்பொழுதுதான் அது எதிர்காலத்திற்குப் பேருதவியாக இருக்கும் என்று கூறி, இந்த நல்வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சிறந்த தமிழறிஞருமான திருமலை அவர்கள் உரையாற்றினார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner