எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் கல்வி உரிமையை மட்டும் வாங்கிக் கொடுக்கவில்லை          அதற்குப் பிறகு அரசியல் அறிவையும் ஊட்டினார்

பத்திரிகைப் படிக்கிற பழக்கம் பத்திரிகை நடத்தும் அறிவு இவற்றை உண்டாக்கியவரும் தந்தை பெரியாரே!

“உலகத் தலைவர் பெரியார்” நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் மதிமாறன்

சென்னை, மார்ச் 28- பத்திரிகை படிக்கிற பழக்கத்தையும், பத்திரிகை நடத்தும் அறிவையும் நம் மக்களுக்கு ஏற்படுத்தி யவர் தந்தை பெரியாரே என்றார் எழுத்தாளர் மதிமாறன்.

ஜனவரி 6 முதல் 19 ஆம் தேதி வரையிலும் பெரியார் நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற  40 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் 14,1,2017 அன்று நடைபெற்ற ‘‘உலகத் தலைவர் பெரியார்’’ புத்தக வெளியிட்டு விழாவில்  எழுத்தாளர் மதிமாறன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘உலகத் தலைவர் பெரியார்’’

அனல் பறக்கும் உரை - ஆவேசமான பேச்சு - இப்படி யெல்லாம் நான் தம் கட்டிப் பேசுவேன் என்று நீங்கள் நினைத்தால், ஏடிஎம் வாசலில் நின்று எப்படி நீங்கள் ஏமாந்து போனீர்களோ அதுபோன்று நான் உங்களை ஏமாற்றி விடுவேன். தந்தை பெரியாரிடம், நீங்கள் எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள் - எழுத்தாளரா? பேச்சாளரா? நீங்கள் என்று கேட்டபொழுது,

அய்யா சொன்னார், ‘‘நான் எழுத்தாளனும் இல்லை, பேச் சாளனும் இல்லை. நான் ஒரு கருத்தாளன்’’ என்று சொன்னார்.

தோழர்களே, என்னையும் நான் ஒரு கருத்தாளனாகக் கருதி, ஆசிரியர் அவர்கள் எழுதிய ‘‘உலகத் தலைவர் பெரி யார்’’ என்கிற புத்தகத்தை நான் எப்படி புரிந்துகொண்டிருக் கின்றேனோ, அதுபோலவே புரிய வைக்கும் ஒரு முயற்சிதான் என்னுடைய உரை.

இந்த அவை எனக்கு புதிதாக இருக்கிறது. ஒரு சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியில் பேசுவதுபோன்று, ஆங்காங்கே போகிறவர்கள், வருகிறவர்கள், பாப்கான் சாப்பிட்டுக் கொண்டே கூட்டத்தைக் கேட்பது, அய்ஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே கேட்பது எல்லாம் எனக்குப் புதியதுதான்.

திருவையாறு தியாகராயர் ஆராதனை விழா - ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் புத்தகக் காட்சியைப் பார்க்கும்பொழுது, எனக்கு அதுதான் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால், ஒரே மாதிரி அய்டியாலஜி உள்ளவர்களே தொடர்ந்து பேசுவது போலவே, எனக்குத் தோன்றும்.

பெரியார்பற்றி பேசுவதற்கு

தனியான ஒரு இடம்!

அந்தச் சூழலில், இந்த மேடையில், திராவிடர் கழகத்திற்கு தனியாக ஒரு இடமும் - அதில் பெரியார்பற்றி பேசுவதற்கு தனியான ஒரு இடமும் கொடுத்தது என்பது மிகவும் தைரியமான செயல். அதைவிட, அதைப்பற்றி பேசுவதற்கு என்னை அழைத்தது என்பது மிகவும் துணிச்சலானது.

அந்தத் தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரணமான தலைவர்களைப்பற்றி பேசினாலே, அரசியலைப் பற்றி பேசவேண்டியிருக்கும். பிரச்சினைகளைப் பற்றிபேச முடியாது. புரட்சியாளர் பெரியாரைப்பற்றி பேச வேண்டும் என்றால்,  அரசியல் மட்டும்தான் பேச முடியும். வேறு விஷ யங்களை அங்கே பேச முடியாது.

பெரியாரைப்பற்றி இங்கே பேசுகிறோம் என்றால், பிரச்சினையில்லாமல், மற்றவர்களை சங்கடப்படுத்தாமல் எல்லாம் பேச முடியாது. மிகக் குறிப்பாக, யாருக்கும் சங்கடம் கொடுக்காமல், யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தாமல் பேசவேண்டும் என்றால், ஆம வடை சுடுவது எப்படி? என் பதுபற்றிதான் பேசவேண்டும். அதைப்பற்றி பேசினாலும்கூட, ஆம வடையே எனக்குப் பிடிக்காது என்று ஒருவர் இருப்பார். அவருக்கு அது சங்கடமாக இருக்கும்.

‘நமஸ்காரம்’ என்பது போய் வணக்கம் என்ற சுயமரியாதை சொல் அறிமுகப்படுத்தப்பட்டது

ஆமவடைபற்றி பேசினாலே, அடுத்தவர் மனது கஷ்டப் படும் என்கிற சூழ்நிலையில், ஜாதி ஒழிப்பு போராளிபற்றி பேசும்போது, எல்லாருக்கும் பிடித்ததுபோன்று ஒருமித்த கருத்தைப் பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது. அதனால், நான் இங்கு பேசப்போகிற பல விஷயங்கள் - அவை எல்லாவற் றிற்கும் முழு பொறுப்பு, பழியும், பாவமும் நான் என்னுடைய இரண்டு தோளில் போட்டுக்கொண்டு நானே ஏற்றுக்கொண்டு இங்கே உரையாற்றுகிறேன்.

‘கும்பிடறேன் சாமி’ என்கிற அடிமைத் தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன ஆதிக்க சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதை சொல்லை அறிமுகப்படுத்தியது, பிரபலப்படுத்தியது பெரியார் இயக்கம் - திராவிடர் இயக்கம். வணக்கம் என்கிற அந்தக் கழகச் சொல்லோடு என்னுடைய உரையை தொடர்கிறேன்.

ஒரு சீனப் பழங்கதை

மலைகளை அகற்றிய கிழவன்

சீனாவில் ஒரு கிழவனைப்பற்றிய ஒரு பழங்கதை. அந்தக் கிழவனுடைய வீட்டு வாசலின் எதிரே, இரண்டு பெரிய மலைகள் அந்த வீட்டை அடைத்துக் கொண்டு நிற்கிறது. அந்தக் கிழவன் ஒருநாள் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, மலையை தகர்த்து வீட்டிற்கு வெளிச்சம் வருவதற் கான பணியில் ஈடுபட்டார். அங்கே வந்த அறிவாளிக் கிழ வர்கள், இந்தக் கிழவரைக் கேலி செய்கிறார்கள். உனக்கென்ன அறிவு இல்லையா? இந்த மலையை உங்களால் எப்படி தகர்க்க முடியும்? என்று கேலி செய்கிறார்கள்.

அதற்கு அந்தக் கிழவன் பதில் சொல்கிறார், இந்த மலையை இப்பொழுது நான் தகர்ப்பேன்; எனக்குப் பின்னால் என்னுடைய மகன் தகர்ப்பான்; அதற்குப் பின்னால், என்னு டைய பேரன், பேரன், பேரன், என்று வரிசையாகத் தகர்த்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு மேல் இந்த மலை வளருவ தற்கான வாய்ப்பில்லை. நாங்கள் அதனைத் தகர்க்க தகர்க்க குறைவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது. என்னுடைய தலை முறையில் மட்டுமல்ல, வரவிருக்கின்ற அத்தனை தலை முறையும் இந்த மலையை தகர்க்கின்ற பணியில்தான் ஈடுபடுவார்கள். இந்த மலையை தகர்த்து முடிப்போம் என்று அவர் சொல்கிறார்.

இதனை கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர் மாவோ  இந்தக் கதையை சொல்லிவிட்டு, சீன மக்களிடம் இரண்டு மலைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று, நிலபிரபுத்துவம், மற்றொன்று ஏகாதிபத்தியம். இந்த இரண்டு மலைகளையும் அகற்றவேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்பொ ழுதோ தீர்மானித்துவிட்டது என்று சொல்கிறார்.

அதுபோல், தமிழர்களின் வாசலை இரண்டு மலைகள் பிரம்மாண்டமாக அடைத்துக் கொண்டிருந்தன. ஒன்று, ஜாதி என்ற ஒரு மலை; இன்னொன்று அந்த ஜாதியைப் போற்றிப் பாதுகாக்கின்ற இந்து மதம் என்கிற மலை.

நம்மூரில் ஈரோட்டுக் கிழவன் கடப்பாரையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். ஜாதி என்கிற மலையையும், அதனைப் பாதுகாக்கின்ற இந்து மதம் என்கிற மலையையும் தகர்ப்பதற்காக.

நானே தகர்ப்பேன்; நான் மட்டுமே தகர்ப்பேன் என்றார் பெரியார்!

நம்முடைய ஈரோட்டுக் கிழவன் மண்வெட்டியை எடுத்துச் செல்வதைப் பார்த்த, இங்கே இருந்த அறிவாளிக் கிழவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிழவர்கள், தமிழ்த் தேசிய தாத்தாக்கள் எல்லாம் சேர்ந்து, ‘‘உனக்கென்ன அறிவில் லையா? நீ எப்படி ஜாதிக்கு எதிராகப் பேசலாம்? இந்து மதத்தை எதிர்த்துப் பேசலாம்? ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்? உன்னால் முடியாது? என்று அந்த ஈரோட்டுக் கிழவரை கேலி செய்தார்கள்.

அதற்கு ஈரோட்டு கிழவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? ‘‘இந்த மலைகளை நான் தகர்ப்பேன்; நானே தகர்ப்பேன்; நான் மட்டுமே தகர்ப்பேன்’’ என்று சொன்னார்.

இதனை நான் மட்டுமே செய்வேன் என்று, தந்தை பெரியார் அவர்கள் 20 வயதிலிருந்து தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ஜாதி என்கிற மலையையும், அதனைப் பாதுகாக்கின்ற இந்து மதம் என்கிற மலையையும் தொடர்ந்து தகர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டு, அந்த மலைகளை ஆட்டம் காண வைத்து, தமிழர்களின் வாசலில் வெளிச்சத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.

இது பொய்யில்லை, ஆதாரங்கள் இருக்கின்றன.

இன்றைக்கும் இந்தியாவின் எந்த மாநிலத்திற்குச் சென்றா லும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்ற ஊர்களில், கம்யூ னிஸ்டுகளே தன்னுடைய பெயருக்குப் பின்னால், ஜாதிப் பெயரை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1925 ஆம் ஆண்டிற்கு முன்னால், தந்தை பெரியாரே, ராமசாமி நாயக்கர் என்றுதான் போட்டிருந்தார்.

இந்த ஜாதி என்கிற மலையை, அவர் தனி நபராக தகர்த்து, தகர்த்ததினால் என்னாயிற்று என்றால், தன்னுடைய பெயருக் குப் பின்னால் இருந்த ஜாதி பெயரை மட்டும் தூக்கிப் போட வில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா ஜாதி பெயர்களையும் தூக்கி எறிந்தார். அவரைப் பார்த்து அன்றைக்குக் கேலி செய்தார்கள், கம்யூனிஸ்ட் தாத்தாக்களும், கம்யூனிஸ்ட் அறிவாளி தாத்தாக்களும், தமிழ்த் தேசிய அறிவாளி தாத்தாக்களும் என்ன சொன்னார்கள் என்றால், ஜாதியை உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலேயே ஜாதி பெயர்களே இல்லாத மாநிலம் தமிழகம்தான். அதற்கு முன்னால், ஒவ்வொருவரும் ஜாதிப் பட்டங்களைப் போட்டிருந்தார்கள். அதற்குப் பின் னால் மதத் தாக்குதல் இருந்தது.

இஸ்லாமியர்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள்

இன்றைக்கும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான் மையினராக இருக்கக்கூடிய குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில், இஸ்லாமியர்கள் அவர்கள் சம்பாதித்து சாப்பிடுகின்ற உணவை, அவர்களுடைய வீட்டில் சாப்பிட் டாலே, எப்பொழுது உள்ளே நுழைந்து அடிப்பார்கள் - இஸ்லாமியப் பெண்களை கொலை செய்துவிடுவார்களோ என்கிற பயத்தோடு நடுங்கி வாழுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இஸ்லாமியர்கள் இவ் வளவு பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கும், இந்து மதம் என்கிற மலையை, தலைவர் தந்தை பெரியார் தகர்த்தெறிந்ததுதான் காரணம்.

ஆக, இங்கே வெளியிடப்பட்ட ‘‘உலகத் தலைவர் பெரி யார்’’ புத்தகத்தில் ஆசிரியர் அவர்கள் தன்னுடைய முன்னு ரையில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த முன்னுரை ஒரு புத்தகத்திற்கான முன்னுரையாக இல்லை. அது ஒரு கொண்டாட்ட மனநிலையில் எழுதப்பட்டது.

அதில், ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இங்கே இவ்வளவு பேர் சூத்திரர்களாக, பஞ்சமர் களாக மிக மோசமாக நடத்தப்பட்ட இந்த மக்களின் குழந் தைகள், இன்றைக்கு உலகம் முழுக்க டாக்டர்களாக, பொறி யாளர்களாக, விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்களே, இதெல்லாம் அன்றைக்குப் பெரியார் அவர்கள் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடாமல் இருந்திருந்தால் நடந் திருக்குமா? என்று அந்த முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

1953 ஆம் ஆண்டில், ராஜாஜி அவர்கள், அப்பன் என்ன வேலை செய்கிறானோ, அதே வேலையைத்தான் மகனும் செய்யவேண்டும் என்கிற ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். அப்பா ஒரு பொற்கொல்லராக இருக்கிறார்; மகன் படிப்பு நேரம் போக, அப்பாவின் பணியைத் தொடர்ந்தால் மகிழ்ச்சி. அப்பா ஒரு வணிகக் கடை வைத்திருக்கிறார்;  மகன் படிப்பு நேரம் போக, அப்பாவின் பணியைத் தொடர்ந்தால் மகிழ்ச்சி.

ஆனால், அப்பா ஒரு நாவிதராகவோ, துணி வெளுப்ப வராகவே, பிணம் எரிப்பவராகவோ இருந்தால், அவர்களின் மகன் மீண்டும் குலத்தொழிலான நாவிதர் வேலைக்கோ, வெளுக்கும் வேலைக்கோ, பிணம் எரிக்கும் வேலைக்கோ அனுப்பவேண்டும் என்கிற குயுக்தியான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார் ராஜாஜி, அதனை தந்தை பெரியார் அவர்கள் தகர்த்தார்.

புத்தகக் காட்சி நடப்பதற்கே

பெரியார்தான் காரணம்

இன்றைக்கு இவ்வளவு பேர் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்கிறீர்கள். இதுபோன்ற புத்தகக் கண்காட்சி நடப்ப தற்கே பெரியார்தான் காரணம். ஏன் என்று கேட்டால், இந்த சமூகத்தில் கல்வியே கிடையாது. சாதாரண ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மீனவர்கள் போன்றவர்களுக்கு மட்டும் கல்வி மறுக்கப்படவில்லை. இங்கே 500 ஏக்கர் சொந்தமாக இருந்தவருக்கும் கல்வி மறுக்கப்பட்டது. ஏனென்றால், இங்கே கல்வி சூத்திரர்களுக்குக் கிடையாது, பஞ்சமர்களுக்குக் கிடையாது என்கிற சூழ்நிலையில், ஒரு நிலச்சுவான்தாரருக்கே கல்வி மறுக்கப்பட்டது என்றால், எளிய, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்.

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி, 10 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இன் றைக்கு நீங்கள் புத்தகம் வாங்குகிறீர்களே, அதில் 10 பேரின் ரத்தம் அந்த மையில் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஏன் இந்த புத்தகக் கண்காட்சியே பெரி யாரால்தான் நடைபெறுகிறது! இவர்  மிகவும் அதிகபட்சமாக பேசுகிறார் என்று உங்களில் சிலர் நினைக்கலாம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், படிக்கின்ற பழக்கத்தினை - நீதிக்கட்சி வந்த பிறகுதான் சிலர் படிக்கின்ற நிலை ஏற்பட்டது. அதற்கும் தடை போட்டார், ராஜாஜி. அதனை எதிர்த்துப் பெரியார் போராடினார்.

கல்வி உரிமையை மட்டும்

பெரியார் வாங்கிக் கொடுக்கவில்லை

அனா, ஆவன்னாவையே அப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், ஒருவன் பத்திரிகையை படிக்கின்ற பழக்கத்திற்கு எப்படி மாறுவான்?

பெரியார் அவர்கள், வெறுமனே கல்வி உரிமையை மட்டும் வாங்கிக் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு அரசியல் அறிவை ஊட்டுகிறார்.

படிக்கின்ற உரிமையை சட்ட ரீதியாக வாங்கிக் கொடுத்த தந்தை பெரியார், அதற்குப் பின்னால், இந்த மக்களை அரசியல்படுத்துவதற்கு, அரசியல்பற்றி பேசுகிறார். பத்திரி கையை படிக்கின்ற பழக்கத்தினை திராவிடர் கழகம்தான் உண்டாக்கியது. அரசியலுக்குக் கொண்டு வந்தார்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்,  பத்திரிகை படிப்ப தற்கு மட்டுமல்ல, பத்திரிகையை நடத்துவதற்கே தகுதியும், ஆதிக்க ஜாதியாக இருந்தால் மட்டும்தான் முடியும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை, கல்வி அறிவு பெற வழிவகுத்தார்

படிக்கின்ற பழக்கமே இல்லாத இந்த சமூகத்தை, பத்திரிகை நடத்துகின்ற அளவிற்குத் தயார் செய்தவர், தந்தை பெரியார் அவர்கள். படிக்க வைத்தது மட்டுமல்ல, வாசகனாக ஆக்குவது, எழுத்தாளனாக ஆக்குவது என்று சொல்லி, ஒரு பெரிய தலைமுறையை உண்டாக்கியிருக்கிறார். ஏராளமான, கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் களை, கல்வி அறிவு பெற வழிவகுத்தார்.

சாதாரணமான கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில், அரசியல் அறிவு, இலக்கிய அறிவு முற்றிலுமாக மூடப்பட்டிருந்தபொழுது, பெரியாரியக்கம்தான் தொடர்ந்து மக்கள் மத்தியில் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தியது. ராஜாஜி அவர்கள் மூன்று மணிநேரம் படித்தால் போதும் என்று சொன்னார். பெரியார் இயக்கம் என்ன சொல்லிற்று தெரியுமா? படி, படி, படி காலையில் படி, மாலையில் படி, கடும் பகல் படி, டீக்கடையில் படி, முடி திருத்தும் கடையில் படி என்று சொல்லிற்று. பத்திரிகை படிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்றால், அது பெரியார் இயக்கம் கொண்டு வந்த பழக்கம்.

பத்திரிகை படிக்கின்ற பழக்கமும், பத்திரிகை நடத்துகின்ற அறிவும், பெரியாரிய இயக்க எழுத்தாளர்களாக ஏராளமான இளைஞர்களை உண்டாக்கினார். அதன் காரணமாக, ஏராளமானோர் வாசகர்களாக மாறினார்கள்; ஏராளமானோர் எழுத்தாளர்களாக மாறினார்கள். அதன் காரணமாகத்தான் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. நவீன எழுத்தாளர் கள் எழுதிய புத்தகங்களை அவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும் - வாங்குவதற்கு ஆள் கிடையாது.

பெரியார் இயக்கத்திற்கு எதிராக எழுதுகிறவர்களின் புத்தகங்களும் பெரியாருடைய அரசியலால்தான் வந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் நீங்கள்.