எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

“உலகத் தலைவர் பெரியார்” நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் மதிமாறன்

சென்னை, மார்ச் 29- சமரசமில்லாமல், போர்க்குணத்தோடு பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் என்றார் எழுத்தாளர் மதிமாறன்.

ஜனவரி 6 முதல் 19 ஆம் தேதி வரையிலும் பெரியார் நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற  40 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் 14.1.2017 அன்று நடைபெற்ற ‘‘உலகத் தலைவர் பெரியார்’’ புத்தக வெளியிட்டு விழாவில்  எழுத்தாளர் மதிமாறன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது நினைத்துப் பார்க்க முடியுமா?

இந்த ‘உலகத் தலைவர் பெரியார்’ நூலில், சுயமரியாதைத் திருமணத்தைப்பற்றி சொல்கிறார்.

1934ஆம் ஆண்டில் அய்யா ஒரு சுயமரியாதைத் திரு மணத்தை நடத்தி வைக்கிறார். அந்தத் திருமணத்தில் புரோ கிதம் கிடையாது; நல்ல நேரம் கிடையாது. அதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், புரட்சிகரமான விஷயம் என்ன வென்றால், மாப்பிள்ளை ஏற்கெனவே மனைவியை இழந்த வர். இது வழக்கமாக நடப்பதுதான்; மனைவி இறந்துவிட்டால், கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைப்பது என்பது சர்வ சாதாரணமானதுதான். ஆனால், மணப்பெண் ஏற்கெனவே கணவனை இழந்தவர். இப்படி ஒரு திரு மணத்தை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது நினைத் துப் பார்க்க முடியுமா?

ஒரு புரோகித திருமணத்தில் இன்றைக்குக்கூட செய்வ தற்குத் தயங்குகின்ற சமுதாயம் இது.  1934 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள், புரோகித மறுப்பு, ஜாதி மறுப்பு, விதவை, விதவன் மறுமணத்தை செய்து வைக்கிறார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செல்லாது என்று தீர்ப்பு!

1934 ஆம் ஆண்டு முடிந்த அந்தத் திருமணம் - 1953 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்குமேல் அவர்கள் இணை யர்களாக வாழ்ந்து, நான்கு குழந்தைகளும் இருக்கின்ற நிலையில், 1934 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வருகிறது.

இந்தத் திருமணம் செல்லாது என்று எதன் அடிப்படையில் நீதிமன்றம் செல்லாது என்று சொல்கிறது என்றால், சட்டத்தின் அடிப்படையில் அல்ல - புரோகிதம் செய்கிறவர்கள் நீதிபதி யானால் எப்படி தீர்ப்பு கொடுப்பார்களோ, அதுபோன்று.

அந்த இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பில், ‘‘நாரதர், யஜ்வல்கியர், பராசர் இவர்கள் வழியில் அந்தத் திருமணம் நடைபெறவில்லையாம்; அதனால், அந்தத் திருமணம் செல்லாதாம்.’’

இது எவ்வளவு பெரிய மோசடி; இந்திய அரசியல் சட்டத் திற்குட்பட்ட நீதித்துறையில், நாரதர் எங்கிருந்து வந்தார்? நாரதர் வழியில் அந்தத் திருமணம் நடைபெறவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அப்படி அறிவிக் கப்பட்ட பிறகு, நீதிமன்றம் பெண்ணை இழிவாகக் குறிப்பிடு கிறது.

பெரியார் தொண்டர்கள்

கொதித்து எழுந்தார்கள்

அது என்னவென்றால், புரோகித முறைப்படி, வேத முறைப்படி அந்தத் திருமணம் நடைபெறவில்லை ஆதலால், இந்தத் திருமணம் செல்லாதது என்பதோடு முடிந்துவிட வில்லை. அடுத்ததாக என்ன சொல்கிறது என்றால், அந்தத் திருமணத்தை செய்துகொண்ட பெண்ணை ‘வைப்பாட்டி’ என்று சொல்லியது.

அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் வைப்பாட்டி குழந்தைகள் என்று சொல்லியது. இதனைக் கேட்ட பெரியார் தொண்டர்கள் கொதித்து எழுந்தார்கள்.

1934 ஆம் ஆண்டிலிருந்து 1953 ஆம் ஆண்டு வரைக்கும் ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி இருந்தார் பெரியார் அவர்கள். அந்தத் திருமணங்கள் எல்லாம் செல் லாது என்றது நீதிமன்றம்.

எல்லா திருமணங்களும் செல்லாது; எல்லோரும் வைப் பாட்டிகள்; எல்லோரும் வைப்பாட்டி மகன்கள், மகள்கள் என்று சொல்லியது நீதிமன்றம்.

ஆசிரியரின் துணைவியார்

மோகனா அம்மையார்தான்!

அப்பொழுது பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ‘‘அய்யய்யோ நம்முடைய திருமணம் செல்லுபடியாகவில் லையே, நம்முடைய பிள்ளைகளுக்கு புரோகிதரை வைத்து திருமணம் செய்யவேண்டும்; வைதீக முறையில் செய்ய வேண்டும்’’ என்று நினைக்கவில்லை. மாறாக, 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த தீர்ப்புக்குப் பிறகு, நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல், அதைவிட ஏராளமான சுயமரியா தைத் திருமணத்தை செய்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இந்தத் தைரியம் வேறு எந்த இயக்கத்திற்கும் கிடையாது - பெரியார் இயக்கத்தைத் தவிர.

1934 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணமான அந்த இணையருக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு மகன்கள், இரண்டு பெண்கள் பிறந்ததாகச் சொன்னேன் அல்லவா, அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் யார் தெரியுமா? அவர்கள், நம்முடைய திராவிடர் கழகத் தலைவரும், இந்த நூலில் ஆசிரியருமான வீரமணி அவர்களின் துணைவியார் மோகனா அம்மையார்தான் அந்தப் பெண்.

ஆசிரியர் வீரமணி அவர்களின்

திருமணமே ஒரு சாட்சி

நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அந்த இணையருக்குப் பிறந்த ஒரு பெண், இவ்வளவு சீரும் சிறப்புமான ஒரு வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என்றால், பெரியார் இயக்கம் எவ்வளவு சிறப்பானது என்பதும், பெரியார் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள் எவ்வளவு சிறப்பானது என்ப தற்கு ஆசிரியர் வீரமணி அவர்களின் திருமணமே ஒரு சாட்சி.

அதுமட்டுமல்ல, இந்த சுயமரியாதைத் திருமணத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால்,

இதில் முதன்மையாக இருப்பது பெண் உரிமை. ஏனென்றால், திருமண அமைப்பு முறை - எவ்வளவுதான் திருமணத்திற்குமுன் பெண்கள் சுதந்திரமாக இருந்தாலும், அது எந்தத் திருமண முறையாக இருந்தாலும், திருமண ஏற்பாடு நடைபெறும்பொழுதே, பெண்ணடிமைத்தனம் - ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகின்ற அளவில்தான் நடை பெறும்.

பெண்ணை உயிருள்ள ஒரு நபராகவே பார்ப்பதில்லை. மிகவும் வயதானவருக்குத் திருமணம் செய்துகொடுப்பது - பெண்களுடைய கருத்தை கேட்கத் தவறுவது - கல்யாணத் திற்குப் பெயர் கன்னிகாதானமாகத் தருவது. பெண்ணை எவ்வளவு இழிவாக நடத்த முடியுமோ, அவ்வளவு இழிவாக நடத்துவது.

இதையெல்லாம் உடைத்தது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் போன்று ஒரு சிறப்பான திருமண முறை கிடையாது.

தந்தை பெரியார் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து சுயமரியாதைத் திருமணங்களை நடத்துகிறார்

இதில் முழுக்க முழுக்க பெண்ணுரிமையை சார்ந்தது - பெண்களுக்கு முக்கியத்துவம்தான்.

புரட்சிகர திருமணம் என்றால், தாலி கட்டாமல் நடத்துவது தான் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார்.

பெண்ணியம் பேசுகின்ற பல தோழர்கள், நவீன பெண்ணியம் பேசும் யாரும், பெரியாரின் சுயமரியாதை குறித்து பேசாமல் இருப்பது என்பது பெரும் தவறாகும்.

பெண்ணியக் கண்ணோட்டம் இருந்தால், பெண்களை இழிவாகப் பேசுகின்ற இந்து ஜாதி அமைப்பு முறைக்கு அவர்கள் எதிராக இருந்திருக்கவேண்டும். அவர்கள் எதிராக இல்லை என்பது வேறு விஷயம்.

அதற்கு எதிராக இருந்து, இவ்வளவு போராட்டங்களை நடத்தி, 2000 ஆண்டுகளாக பெண்களுக்கு எவ்வளவு கேவலம் இருந்ததோ, அதையெல்லாம் துடைத்து, தந்தை பெரியார் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து சுயமரியா தைத் திருமணங்களை நடத்துகிறார்.

தன் தொண்டர்களை விமர்சிக்கிறார், தன்னையும் விமர்சிக்கிறார்!

1968 ஆம் ஆண்டு ஒரு திராவிடர் கழகக் குடும்பத்தில் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றுகிறார்.

அதில், ‘‘நேற்றுவரைக்கும் சந்தோசமாக இருந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை கெடுப்பதற்காகத்தான் இத்தனை பேர் இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று ஆரம்பித்து,

இந்தக் கல்யாணத்தில், வாழ்த்துரை வழங்குகிறவன், தலைமை தாங்குகிறவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் போடவேண்டும் என்று சொல்கிறார். அவரையும் சேர்த்து தான். ஏன் அதனை சொல்கிறார் என்றால், திராவிடர் இயக்கத் தோழர்கள்கூட, தான் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணத்திற்குப் பிறகு, குடும்ப வாழ்க்கையில், ஒரு வைதீக திருமணம் செய்த பெண் எப்படி வாழ்கிறாளோ, அது போலவே வாழ்கிறாள் என்கிற கோபம் தந்தை பெரியார் அவர்களுக்கு. தன் தொண்டர்களை விமர்சிக்கிறார், தன்னை யும் விமர்சிக்கிறார்.

பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் பெரியார்!

அப்பொழுது, பெண்ணியத்திற்காக அவர் சமரசமில்லா மல், போர்க் குணத்தோடு அவர் இயங்கி, பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

ஆனால், இன்றைக்குப் பெண்ணியம் பேசும் பெண்கள் கூட, பெரியாரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது, இந்த ஜாதி அமைப்பு முறை - இந்துத்தனம் எவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணம்.

குறிப்பாக, பெரியாரைப் புறக்கணித்துவிட்டு, மாறாக யாரை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்றால், அம்பை, ஆண்டாள் என்று வேத காலத்திற்குச் சென்று தேடுகிறார்கள் பெண்களை.

ஆண்டாள், வள்ளி, மீரா இவர்களையெல்லாம் பெண்ணி யத்தின் குறியீடாகப் பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க இந்து ஆதரவுக் கண்ணோட்டம்தானே தவிர, ஒரு இடத் தில்கூட ஆண்டாளிடம் பெண்ணுரிமை கிடையாது.

ஆண்டாள், தன்னுடைய காமத்தை, காதலை பகிரங்கமாக பேசினாள் என்கிற ஒரு தொனி ஆதரவாக சொல்லப்பட்டது. அது புதிதல்ல.

இந்து சமுதாயத்தில்

அங்கீகரிக்கப்பட்ட விஷயம்!

இந்து, இந்து சமூக அமைப்பில், திருமணம் ஆன ஒரு ஆணை - திருமணம் ஆன ஒரு பெண் விரும்புவது, திருமணம் செய்து கொள்வது என்பது இயல்பான ஒன்று.

ஆக, மானிட சமுதாயத்தில் என்ன நடைமுறை என்றால், கல்யாணம் ஆன ஒரு ஆண் - கல்யாணம் ஆகாத ஒரு பெண் - இரண்டாம் தாரமாக, மூன்றாம் தாரமாக முதல் மனைவி இருக்கும்பொழுதே, திருமணம் செய்துகொள்ளலாம் என்பது இந்து சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகும்.

அப்படி அங்கீகரிக்கப்பட்ட விஷயத்தைதான், ஆண்டாள் என்கிற ஒரு திருமணம் ஆகாத பெண் - திருமணமான கடவுளை விரும்புகிறாள்.

சமூக அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்க ளேயானால், ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில், ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம், ஆனால், பெண் இன்னொரு திருமணத்தை விரும்புக்கூடாது. கற்பு என்பது மானிடப் பெண்களுக்கு எப்படி இருக்கிறதோ, அதுபோல்தான், கடவுள் பெண்களுக்கும் கற்பு இருக்கிறது.

ஒரு மானுடப் பெண், திருமணமான கடவுள் ஆணை விரும்பலாம்; காமுறலாம் எல்லாம் செய்யலாம். வள்ளியா கட்டும், மீராவாகட்டும், ஆண்டாளாகட்டும் - ஆனால், ஒரு திருமணமான கடவுள் பெண்ணை, ஒரு மானுட ஆண் விரும்பவே கூடாது. கொலை நடக்கும் இந்த ஊரில்.

இது பெண்ணியமா? அடிமைத்தனம் எங்கே இருக்கிறது என்றால், அடிமைத்தனம் ஆண்டாளிடம் இல்லை; ஆண் டாள் விரும்புகின்ற திருமாலின் மனைவியிடம் இருக்கிறது.

பெண் கடவுள்களில் பெரும்பாலும் திருமணமாகாத பெண் கடவுள்களே கிடையாது.

மனிதர்களுக்கு என்ன கற்பொழுக்கமோ, அதுதான் கடவுள்களுக்குமான கற்பொழுக்கம். மீண்டும் ஆண்டாளை ஆதரிப்பது என்பது, இந்து மதத்தைப் புதிப்பிப்பது - அதுமட்டுமல்ல அது பெண்களுக்கும் எதிரானதும்கூட!

சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில்

தந்தை பெரியார் தீர்மானம்!

1940 ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு தீர்மானத்தைப் போடுகிறார் தந்தை பெரியார் அவர்கள்.

‘‘திருமணம் ஆன ஒரு பெண் - இன்னொரு ஆணை விரும்புவதை குற்றமாக்கக் கூடாது’’ என்றார்.

அய்யோ, அம்மா என்று அசிங்க அசிங்கமாகத் திட்டினார்கள் அன்று.

அதனை ஏன் சொன்னார் என்றால், இந்தியாவில் பெண்கள்மீது நடக்கின்ற வன்முறைகளில் முதன்மையான எதுவென்று பார்த்தீர்களேயானால், தன் மனைவியின்மீது சந்தேகப்படுவதுதான்.

இது ராமாயண காலத்திலிருந்து நடைபெறுகிறது - அகலிகையின்மீது சந்தேகப்பட்டு, கவுதம முனி, கல்லாகப் போ என்று சாபம் கொடுத்துவிட்டான். இன்னொருவருடன் உறவு கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு. அவர்களுடைய வாரிசுகள் எல்லாம் இன்றைக்கு அப்படியே இருக்கிறார்கள். கவுதம முனி வரம் பெற்றவர் - அதனால் சாபம் கொடுத்து விட்டார். நம்மாட்கள் வரம் பெற்றவர்கள் கிடையாது - அதனால் நம்மாள் கல்லைத் தூக்கித் தலையில் போடு கிறார்கள்.

பெண்ணியம் சார்ந்த கருத்துகளைப் பேசியவர் தந்தை பெரியார்

இதனைப் புரிந்துகொண்ட தலைவர் தந்தை பெரியார் என்ன சொன்னார் என்றால், ‘‘திருமணமான ஒரு ஆண் - வேறு ஒரு பெண்ணை விரும்புவது - குற்றம், குற்றமில்லை என்பது வேறு. அது சமூகத்தில் இழிவான செயல் என்று கருதப்படவில்லையே. அதுபோல், பெண்களையும் கருதக் கூடாது என்று ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தால், பெண் கள் மீது நடைபெறும் வன்முறைகள் குறையும் என்றார்.

ஆணாதிக்க மனோபாவத்திற்கு எதிரான சட்டங்களும், ஆண் - பெண்ணைப்பற்றி ஆணின் மதிப்பீடுகளை மாற்று கிற கல்வித் திட்டங்களைக் கொண்டுவந்தால்தான் மாற்ற முடியும் என்று பேசிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

பெரியாருடைய கண்ணோட்டம் - எப்படி வந்தாலும், பெண்ணியம் சார்ந்த கருத்துகளில், அவர் பேசிய எல்லா விஷயங்களை விடவும், தன்னையே விமர்சனம் செய்து கொண்டு, மிகத் தீவிரமாக பெண்ணியம் சார்ந்த கருத்துகளைப் பேசியவர் தந்தை பெரியார்.

வெறும் ராமாயணம், மகாபாரதம் என்கிற இந்து இதிகாசங் களை மட்டும் எதிர்க்கவில்லை பெரியார் அவர்கள். தமிழ் அடையாளத்தையே எதிர்க்கிறார். ராமாயணத்தையும், மகா பாரதத்தையும் எவ்வளவு கடுமையாக விமர்சனம் செய் தாரோ, அதற்கு இணையாக சிலப்பதிகாரத்தை விமர்சனம் செய்தார்.

இன்றைக்குப் பல பெரியாரிஸ்டுகளே, பெரியார் எதிர்ப்பு தமிழ்த் தேசியவாதிகளைப்போல், சிலப்பதிகாரத்தையும், கண்ணகியும் ஆதரிப்பது என்பது பெரியாருக்கு செய்கின்ற  பச்சைத் துரோகம்.

ஊரிலுள்ள மக்களையெல்லாம் கொளுத்தி, ஊர்ச் சொத்தையெல்லாம் நெருப்பிற்கு இரையாக்கி, மக்களை நெருப்பில் தள்ளி, தன்னை பத்தினி என்று நிரூபித்துக் கொண்ட கண்ணகியைவிடவும், தன்னையே நெருப்பில் இறக்கிக் கொண்டு உத்தமி என்று காட்டிக்கொண்ட சீதை எவ்வளவோ பரவாயில்லை.

பெரியாரிடமிருந்து விலகினால்,...

சீதையை விமர்சிக்கின்ற பெரியாரிஸ்டுகளுக்கு, கண்ணகியை ஆதரிக்கின்ற பெரியாரிஸ்டுகளுக்கு, சீதையை விமர்சிப்பதற்கு யோக்கியதை கிடையாது.

பெரியாரிடமிருந்து விலகினால், நீங்கள் பிற்போக்குவாதி களாகவும், மதவாதிகளாகவும் மாறிவிடுவீர்கள். இது தொடர்ந்து நடைபெறுகிறது.

பெரியாரிய கண்ணோட்டம் என்பது, இது தமிழனா? இந் துவா? பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதவர்களா? என்ப தெல்லாம் கிடையாது.

எது நேர்மை? எது தவறு? எது உண்மை? எவனை வேண்டுமானாலும் சொல், மலையை நான் மட்டுமே தகர்ப்பேன் என்று சொன்னார் அல்லவா அதுபோன்றதுதான்.

அதனால்தான், அவரை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; அவரைத் திட்டுவதால், எந்தப் பாதிப்பும் கிடை யாது. ஜாதிக்காரத் தலைவர்களைத் திட்டினால், எங்கள் ஜாதித் தலைவரை எப்படித் திட்டலாம் என்று வருவார்கள்.

எல்லா தலைவர்களின் பின்புலத்திலும்

ஒரு ஜாதி பின்புலமாக இருக்கிறது

அதற்குப் பயந்துகொண்டுதான், இவர்கள் பேசுகிற விஷயங்களுக்கு எதிராக இருக்கின்ற தலைவர்களை ஏன் விமர்சிப்பதில்லை என்றால், எல்லா தலைவர்களின் பின்புலத்திலும் ஒரு ஜாதி பின்புலமாக இருக்கிறது.

பெரியார் ஒரு ஜனநாயகவாதி - அவரை விமர்சிக்கலாம். பெரியார் தொண்டர்கள் யாரும் சென்று அடிக்கமாட்டார்கள். அதனை விவாதிப்பார்கள் நேருக்கு நேர்.

அதனால்தான், பெரியாருடைய அறிவுப்பூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், செருப்பை எடுத்து வீசுவது எப்படி தொடர்ந்ததோ, அதேபோல், என்னைப் போன்ற நபர்களுக்கு தனி மனித தாக்குதல் இருக்கிறது.

பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த பெண்களை விமர் சிப்பதும், பெரியார் கருத்துகளைப் பேசுகின்ற பெண்களை இழிவாகப் பேசுவதும் - கண்ணகியைப் பத்தினி என்று சொல்வதற்கு, ஊரிலுள்ள பெண்களையெல்லாம் விபச்சாரி என்று திட்டுகிறார்கள்.

பெண்ணைப்பற்றி இழிவான மனோபாவமும், பெண்ணை ஒரு பாலியல் உறுப்பாகப் பார்ப்பவர்கள் எல்லாம் கண்ணகி யின் சிறப்பைப்பற்றி பேசுவது, ஒரு பெரியார் எதிர்ப்பு மட்டுமல்ல, தீவிரமான பெண்களுக்கான எதிர்ப்பும் கூட.

பெரியார் ஒருவரிடம்தான் இருக்கிறது

இந்து உணர்வு கொண்டவர்கள், சீதை, ஆண்டாள் என்று ஆதரிக்கிறார்கள் பெண்ணியத்தில். தமிழ் உணர்வு கொண்ட முற்போக்காளர்கள் கண்ணகியைக் கட்டிப் பிடித்து அழுகிறார்கள்.

பெண்களுக்கான கண்ணோட்டம் என்பது எங்கே இருக் கிறது என்றால், அது இந்துவிலும் இல்லை, தமிழிலும் இல்லை. பெரியார் ஒருவரிடம்தான் இருக்கிறது, அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேபோன்று உணவில் ஜாதி - உணவில் ஜாதி இருக்கிறது பாருங்கள், வெளியில் சைவம் சாப்பிடுபவர்கள் - உயர்ந்தவர்கள். அசைவம், ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவர்கள் - அவர்களைவிட கொஞ்சம் மட்டம் - மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் - எல்லாரையும்விட மட்டம் என்பது உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது இந்தியாவைத் தவிர!

எப்படி மக்கள் இந்த உணவில் ஜாதிப் பார்த்து வாழ் கிறார்களோ, அதுதான் இங்கே இருக்கிறது.

இந்த ஜாதி முறை என்பது படித்தவர்களிடம்தான் இருக் கும். படிக்காதவர்களிடம் அவ்வளவு தீவிரம் கிடையாது. படித்தவர்கள்தான் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகிறார் கள். இந்த ஜாதி ஏன் படித்தவர்களிடமே தொடர்ந்து இயங்கு கிறது என்று பார்த்தீர்களேயானால், இந்தியாவில் ஜாதியை உருவாக்கியவர்களே படித்தவர்கள்தான்.

வேதம், புராணம், இதிகாசம், மனுதர்மம் என்று  நீங்கள் எதை எடுத்துக்கொண்டாலும், எல்லாவற்றிலும் ஒன் லைன் என்பது நான்கு வர்ணம்.

படித்தவர்களிடம் தொடர்ந்து

இயங்குகிறது ஜாதி

நான்கு வர்ணம்தான் ஜாதிகளின் தாய் என்பார் அம் பேத்கர் அவர்கள். அதுதான் நாலாயிரம் ஜாதிகளாக உருவா கிறது. இந்த நான்கு வர்ணத்தை உருவாக்கியவர்கள் படித்த வர்கள் செய்ததினால், படித்தவர்களிடம் தொடர்ந்து  இயங்கு கிறது ஜாதி. இந்த புத்தகக் கண்காட்சி அதற்கு ஒரு சாட்சி.

இங்கே ஏகப்பட்ட புத்தகக் கடைகள் உள்ளன. ஆன்மீகம் இருக்கிறது - ஜோதிடம் இருக்கிறது - சமையல் குறிப்பு இருக்கிறது - கம்யூனிஸ்ட் புத்தகங்கள் இருக்கிறது - புரட்சிகர புத்தகங்கள் இருக்கிறது. எல்லா கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆனால், இந்தியாவின் அறிவுச் சூரியனும், இந்தியாவில் அவருக்கு இணையான அறிவாளியே இல்லை என்கிற அளவிற்கும், உலகளவில் பொருளாதார மேதைகள் மத்தியிலும், சமூக ஆய்வாளர்கள் மத்தியிலும் அறியப்பட்ட ஒரே தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரால் ஒரு பவுன்டேசன் இருக்கிறது - ஒருவரும் அங்கே உள்ளே செல்லவில்லை. இந்த ஜாதிய அமைப்பு முறை அப்படி இருக்கிறது.

பெரியாருடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு இருக்கிறதே - ஸ்டாலினை அவர் ஆதரித்தது - அதையெல்லாம் நிறைய பேர் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். கம்யூனிஸ்ட் ஆதர விலேயே, மிகத் தீவிரமாக ஸ்டாலினு டைய ஆதரவாளராக இருந்திருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.

குத்தூசி குருசாமி அவர்களின் மகளுக்கு ரஷ்யா என்று பெயர் வைத்தவர் பெரியார்!

தமிழ் உணர்வாளர்கள் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவேண்டுமானால், பூங்கொடி, கயல்விழி என்று வைப்பார்கள்.

இந்தப் பெயர் எல்லாம் பெண்ணடிமைப் பெயர்களாகும். பெரியார் அப்படிப்பட்ட பெயர்களை வைக்கமாட்டார். பெரியார் அவர்கள் ரஷ்யாவிற்குச் சென்று வந்த பிறகு, குத்தூசி குருசாமி அவர்களின் பெண்ணுக்குப் பெயர் வைத்தார். என்ன பெயர் தெரியுமா? ரஷ்யா என்று பெயர் வைத்தார்.

ரஷ்யாவை ஒரு புரட்சியின் குறியீடாகப் பார்த்தார் தந்தை பெரியார். அதனை ஆண் குழந்தைக்குக்கூட வைக்கவில்லை - பெண் குழந்தைக்குத்தான் வைத்தார். பெண் குழந்தைக்கு அறிவுக்கொடி என்றுதான் பெயர் வைப்பார் தந்தை பெரியார். பெண்கள் எல்லாம் கிராப் வெட்டிக் கொள்ளுங்கள்; தேவை யில்லாத கூந்தல் எதற்கு என்று கேட்டார்.

பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் பாடுபட்டது யாருக்காக?

பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் பெண்களுக்காகப் பாடுபட்டது, ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த பெண்களுக்குத்தான். ஏனென்றால், அடிமைத்தனம் எளிய, தாழ்த்தப்பட்ட பெண்களிடம் கிடையாது. அங்கே அடிதடி சண்டை இருக் கும் அவ்வளவுதான்.

ஒரு மீனவப் பெண் அவர்கள் சுயமாக வேலைக்குப் போவாள்; ஒரு தலித் பெண், கணவர் ஏர் ஓட்டினால், இந்தப் பெண் நாற்று நடுவார். கணவரை சார்ந்தல்ல - கணவன் குடும்பத்தையே கவனிக்காமல், குடியில் வீழ்ந்துவிட்டால், தன் குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்களைப் படிக்க வைக்கின்ற திராணி, இங்கே உள்ள உழைக்கும் பெண் களுக்கும், தலித் பெண்களுக்கும் உண்டு. எளிய பெண்களுக் கான பெண்ணியம் அல்ல - பெரியார் பேசியதும், அம்பேத்கர் கொண்டு வந்த சட்ட மசோதாவும்.

அப்படி என்றால், வேறு யாருக்கானது?

எந்த ஜாதியில், தன்னுடைய சொந்தத் தாயையே, கணவனை இழந்துவிட்டால், மொட்டையடித்து, முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்தார்களோ, அவர்களுக் கான போராட்டம் பெரியார் அவர்கள் நடத்தியது. அந்தப் பெண்கள் இப்பொழுது படித்திருப்பது, அம்பேத்கர் அவர்களாலும், தந்தை பெரியார் அவர்களாலும்தான்.

மலத்தைவிடவா மாதவிலக்குத் தீட்டு என்று கேட்டார் தந்தை பெரியார்

உலகத்தில், மாத விலக்கை தீட்டு என்று சொல்வார்களா வேறு எந்த நாட்டிலாவது? தீண்டாமைதான் இந்து சமுதாயம். எல்லா வடிவங்களிலும் தீண்டாமை இருக்கும்; தலித் மக்களிடம் அதிகமாக இருக்கும். தீட்டு என்று மாதவிலக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் - பெண்களை இழிவுபடுத்துவதற் காகவே! பெரியார்தான் கேட்டார், கோவிலில் பெண்களை உள்ளே விடவில்லை - மாதவிலக்கின் போது. ஏனென்றால், தீட்டாகி விடும் என்று. பெண்கள் மாதவிலக்கின்போது கோவிலுக்கு வந்தால் தீட்டு என்கிறீர்கள்; மலம் கழித்துவிட்டு கோவிலுக்கு வரலாமா? என்று கேட்டார். மலத்தைவிடவா மாதவிலக்குத் தீட்டு என்று கேட்டார் தந்தை பெரியார்.

அவர் கேட்ட கேள்விக்குப் பதில்லை. மற்றவர்களின் கேள்விகளுக்கு தந்தை பெரியார் சளைக் காமல் பதில்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால், பெரியாரின் கேள்விகளுக்கு? இன்று வரையிலும் யாரும் பதில் சொல்ல இயலவில்லை. அதனால்தான் அவர் உலகத்தலைவராக போற்றப்படுகிறார். அப்படித்தான் நானும் அவரை புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே, ‘உலகத் தலைவர் பெரியார்’ என்ற இந்த புத்தகத்தை நீங்கள் அனைவரும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கொள்கிறேன். வணக்கம்!

- இவ்வாறு எழுத்தாளர் மதிமாறன் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner