எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் நூல்கள் அறிமுக விழாவில் எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார்

சென்னை, ஏப். 4- உண்மையான வறுமை என்பது வாய்ப்பு மறுக்கப்படுவதுதான் என்று பார்த்த கட்சி நீதிக்கட்சியும், திராவிட இயக்கமும் என்றார்   எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார்.

ஜனவரி 6 முதல் 19 ஆம் தேதி வரையிலும் பெரியார் நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற  40 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் 14.1.2017 அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம். சென்னை புத்தகக் காட்சிக்கு வந்திருக்கக்கூடிய வாசகப் பெருமக்கள் மற்றும் இந்த நூல் அறிமுக விழாவிற்கு வந்திருக்கக்கூடிய வாசக நண்பர்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளைச் சொல்லி என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.

இதுவரை பெரியார் திடலிலிருந்து

மூன்று அழைப்புகள்!

என்னுடைய வயது மிகவும் குறைவு. ஆகவே, என்னு டைய நினைவு நாடாக்களின் நீளமும் மிகவும் குறைவு. அதனால், நினைவுகளைப் பின்னோக்கி வெகுதூரம் செல்ல மாட்டேன். ஒரு 15 ஆண்டுகளுக்குள்ளேயே முடித்துவிடு வேன். ஆகவே நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்று அச்சப்படவேண்டாம்.

பெரியார் திடலிலிருந்து இதுவரையில் எனக்கு மூன்று அழைப்புகள் வந்திருக்கின்றன. முதல் அழைப்பு, 15 ஆண்டு களுக்கு முன். ஒரு மாணவப் பத்திரிகையாளனாக இருந்த எனக்கு, பெரியார் திடலிருந்து ஒரு நாள் அழைப்பு - ஆசிரியர் அவர்கள் உங்களுடைய பத்திரிகைக்குப் பேட்டி தர சம்மதித் திருக்கிறார் என்ற ஒரு தகவல்.

அந்த நல்லதொரு செய்தியை சுமந்துகொண்டு முதல் செய்தி வந்தது. எனக்கு அது மிகவும் மகிழ்வைக் கொடுத்த ஒரு செய்தியாகும்.

கடந்த ஆண்டு பெரியார் விருது

அதற்குப் பிறகு கடந்த ஆண்டுதான் எனக்குப் பெரியார் திடலிலிருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. இந்த ஆண் டிற்கான பெரியார் விருது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நண்பர் பிரின்சு அவர்கள் தொலைபேசி வாயிலாக சொன்னார்.

ஆசிரியர் பேட்டி கிடைத்தபொழுது எப்படி சந்தோசப் பட்டேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத் தது பெரியார் விருது கிடைத்த நிகழ்வு.

அதன்பிறகு, இந்த ஆண்டு ஒரு 10 நாள்களுக்கு முன், மீண்டும் பெரியார் திடலிருந்து ஒரு அழைப்பு. நண்பர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் அழைத்து, ஆசிரியர் அவர்களுடைய புத்தகங்கள் குறித்து நீங்கள் அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்றார்.

ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், ஆசிரியர் எழுதிய புத்தகங்களை ஒரு மாணவன் திறனாய்வு செய்வது என்பது ஒரு வியப்பிற்குரிய நிகழ்வு.

என்னைப் பொறுத்தவரை இதனை ஒரு மிகப்பெரிய நிகழ்வாக நான் பார்க்கிறேன்.

‘சமூகநீதிக் களத்தில் சரித்திர நாயகர்கள்’

ஏனென்றால், ஆசிரியருடைய புத்தகங்களை திறனாய்வு செய்வது என்பதைவிட, எந்தத் தலைப்புகளில் அவர் எழுதி யிருக்கிறாரோ, அந்தத் தலைப்பையொட்டி, அந்தத் தலைவர் களைப்பற்றி என்னுடைய நண்பர்களான உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மேடையாகவே இந்த நிகழ்வை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

‘சமூகநீதிக் களத்தில் சரித்திர நாயகர்கள்’ என்கிற ஒரு தலைப்புகளில், அய்ந்து நூல்களை ஆசிரியர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

அய்ம்பெரும் தலைவர்களைப்பற்றி...

முதல் புத்தகம், திராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார் என்கிற புத்தகம்,

இரண்டாவது புத்தகம், நீதிக்கட்சியின் தந்தை சர்.பிட்டி தியாகராயர் அவர்களுடைய புத்தகம்,

மூன்றாவது புத்தகம், திராவிட லெனின் என்று தந்தை பெரியாரால் அழைக்கப்பட்ட டி.எம்.நாயர் - நீதிக்கட்சியின் தத்துவ ஆசானைப்பற்றிய ஒரு நூல்.

நான்காவது புத்தகம், சீர்திருத்த அரசர் பானகல் அரசர் பற்றிய ஒரு நூல்.

அய்ந்தாவது புத்தகம், திராவிடத் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களைப்பற்றியது.

ஏ.டி.பன்னீர்செல்வம் காலத்து அரசியல் - வரலாறை நம்முடைய இளம் தலை முறையினருக்குச் சொல்லவேண்டும் என்ற ஒரு கடப்பாடு கொண்டவர் நம்முடைய ஆசிரியர்.

அந்த அடிப்படையில், இந்த அய்ந்து தலைவர்களைப்பற்றி சிறு சிறு நூல்களாக எழுதியிருக்கிறார் என்பதாகவே நான் பார்க்கிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகப்பெரிய ஒரு ஆய்வாளர். அவர் ஏன் சிறு சிறு நூல்களை எழுதியிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.

அவர் நினைத்தால், ஒவ்வொரு தலைவரைப்பற்றியும் 300 பக்கங்களுக்குக் குறையாமல், புத்தகம் எழுத முடியும். ஆனால், அவர் அப்படி எழுதவில்லை. ஏனென்றால், அவர் ஆசிரியர். தன்னுடைய மாணவனுக்கு எவ்வளவு தேவை? எப்பொழுது தேவை? எவ்வளவு கொடுத்தால் அவனுக்குப் புரியும் -அவனுக்குச் சரியாக இருக்கும் என்று ஒரு ஆசிரியரின் பார்வையிலிருந்து சிறு சிறு நூல்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இன்றைய வாட்ஸ்அப் தலைமுறையினர், மிகக் குறுகிய காலத்தில் படித்து, இதன் உள்ளிருக்கக்கூடிய விஷயம் மிக அதிகம். ஆனால், குறுகிய காலத்தில் படித்து முடித்துவிட முடியும். அதன்மூலம் அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில், சிறுசிறு நூல்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது என்னுடைய பார்வை.

அடுத்ததாக, இந்த அய்ந்து நூல்களும் ஒரே ஒரு சட்டகத் திற்குள் அடங்கி விடுகிறது. அதுதான் சமூகநீதி!

நீதிக்கட்சி நூற்றாண்டு கண்ட இயக்கம் - அந்த நீதிக்கட்சி யினுடைய அய்ம்பெரும் தலைவர்களையும் சமூகநீதி என்ற ஒற்றை சட்டகத்திற்குள் ஏன் அடைத்தார் ஆசிரியர் என்பது மிக முக்கியமான கேள்வி.

அப்படியென்றால், நீதிக்கட்சியினுடைய அய்ந்து தலை வர்களும் சமூகநீதியைத் தவிர வேறு எதையும் பேசவில் லையா என்று உங்களுக்குத் தோன்றலாம்.

சமூகநீதி என்பது ஒரு நூற்றாண்டின் சொல்!

ஆனால், இந்த அய்ம்பெரும் தலைவர்களும், சமூகநீதி யைத் தவிர வேறு எதையும் பேசவில்லை என்று புரிந்துகொள் வதைவிட, எல்லாவற்றிலும் சமூகநீதி என்பது அடித்தளமாக இருக்கவேண்டும் என்று சிந்தித்தவர்கள் இந்த அய்ம்பெரும் தலைவர்கள் -அதனால், சமூகநீதி களத்தில் சரித்திர நாயகர் கள் என்ற பட்டியலுக்குள் அந்த ஒரே சட்டகத்திற்குள் அய்ந்து தலைவர்களையும் அடக்கியிருக்கிறார் ஆசிரியர் அவர்கள் என்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.

சமூகநீதி என்பது ஒரு நூற்றாண்டின் சொல். ஆனால், இங்கே எல்லோருக்கும் தெரிந்தது என்னவென்றால், கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு - அதுதான் சமூகநீதி என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஏ.டி.பன்னீர்செல்வம்பற்றிய புத்தகத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. காந்தியாருக்கும் - ஏ.டி.பி.க்கும் நடந்த உரையாட லில், நீதிக்கட்சி என்பது என்ன? உத்தியோகம் வேண்டும் என்கிற கட்சிதானே? என்கிறார்.

காந்தியாருக்கும் இதுதான் புரிதல். காந்தியாருக்குப் பிறகு வந்த தலைமுறையினருக்கும் அப்படி ஒரு புரிதல் இருப்பது என்பது தவறான விஷயம். அதனை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயமாகும். மாற்றிக் கொள்ள வேண்டியது எப்படி என்றால், இதுபோன்ற புத்தகங்களை படிப்பதின்மூலமாகத்தான் நம்முடைய புரிதலை மாற்றிக் கொள்ள முடியும்.

சமூகநீதி என்பது அடித்தளமாக இருக்கிறது

எல்லாவற்றிலும் சமூகநீதி என்பது - கல்வியில் சமூகநீதி, வேலை வாய்ப்பில் சமூகநீதி, அதேபோல, பெண்ணுரிமை.

நீதிக்கட்சி - நீதிக்கட்சியிலிருந்து பிரிந்தும், திளைத்தும் முளைத்தும் உருவான -  அதன் பரிணாம வளர்ச்சியில் நெடுக உருவான எல்லா  இயக்கங்களுமே சமூகநீதியைப்பற்றி பேசி யிருக்கின்றன. அதேபோல, அந்த இயக்கங்கள் முன்னெடுத்த எல்லாவற்றிலும் சமூகநீதி என்பது அடித்தளமாக இருக்கிறது என்பதை திராவிட இயக்கங்கள் எடுத்த ஒவ்வொரு விஷ யங்களிலும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

அது பெண்ணுரிமையாக இருக்கலாம் - வகுப்புவாரி உரிமையாக இருக்கலாம் - தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றமாக இருக்கலாம் - மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயமாக இருக்கலாம்- இன்றைக்கு நாம் அதிகமாகப் பேசிக் கொண் டிருக்கக்கூடிய - மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி போன்ற தத்துவமாக இருந்தாலும், திராவிட இயக்கங்கள் அதிகமாகப் பேசக்கூடிய ஈழப் பிரச்சினையாக இருந்தாலும், எல்லாவற்றிலும் அடிநாதமாக சமூகநீதி என்ற ஒன்று இருக் கும். அதனை இந்த நூல்களின் வழியாக மட்டுமல்ல, அது சார்ந்த நூல்கள் வழியாகவும்கூட நாம் தெரிந்துகொள்ள முடியும்.

மிகப்பெரிய வறுமை என்று பட்டியல் போடவேண்டும் என்றால்....

அடுத்ததாக மிக முக்கியமான விஷயம். இந்த உலகத்தி லேயே மிகப்பெரிய வறுமை என்று பட்டியல் போடவேண்டும் என்றால், எதை எதையெல்லாம் பட்டியலிடுவீர்கள்?

உணவு பற்றாக்குறையால் ஏற்படும் வறுமையா?

இடப் பற்றாக்குறையால் ஏற்படும் வறுமையா?

நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் வறுமையா?

என்பதைவிட, நீதிக்கட்சி அல்லது திராவிடர் இயக்கம் மிகப்பெரிய வறுமை என்று எதைப் பார்த்தது என்றால், வாய்ப்பு மறுக்கப்படுவதுதான் மிகப்பெரிய வறுமை.

அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதால், ஒரு தலைமுறை எதை யெல்லாம் இழக்கிறதோ, அவையெல்லாம்தான்  மிகப்பெரிய வறுமை.

அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பள்ளத்தில் கிடப்பவர் களை, கையைப் பிடித்து மேலே ஏற்றிவிடும் இயக்கம்தான் நீதிக்கட்சி உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் பணி. பள்ளத் தில் உள்ளவர்களை மேலே தூக்கிவிட வேண்டும் என்றால், அதற்கான கருவி சமூகநீதி.

அது எல்லாவற்றிலும் சமூகநீதி - அந்த சமூகநீதி என்கிற கருவியைக் கொண்டுதான், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை எல்லாம் மேலே தூக்கிவிடக் கூடிய போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும் பொழுது, ஆட்சியில் இல்லாதபோது சமூக ரீதியாகப் போரா டுவது - எல்லாவிதமான உரிமைகளையும் கோரி போராட்டம் நடத்துவது. ஆட்சிக்கு வந்த பிறகு, அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த அரசாங்கத்திடம் கேட்டார்களோ, அதை யெல்லாம் தாம் ஆளுங்கட்சியாக வந்த பிறகு - இது நீதிக்கட்சி முதல், இன்றைக்கு இருக்கக்கூடிய எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். எதையெல்லாம் அவர்கள் களத்தில் இறங்கிப் போராடி னார்களோ, அதையெல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ் வொன்றாக செயல்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது சமூகநீதி என்றுதான் மிகமிக முக்கியமாக நான் பார்க்கிறேன்.

இன்றைக்குப் பெண்ணுரிமையைப்பற்றி நாம் அதிகமாகப் பேசுகிறோம். 33 சதவிகித இட ஒதுக்கீடு வந்துவிட்டது பெண் களுக்கு என்கிறோம்.

ஆனால், இந்தப் பெண்கள் பற்றி ஆணுக்கு நிகராக பெண் - அல்லது எல்லோருக்கும் சமநீதி - எல்லோருக்கும் சமூகநீதி என்கிற விஷயத்தை ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு, சிந்தித்த இயக்கம் நீதிக்கட்சி.

பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதல் கட்சி நீதிக்கட்சி - முதல் அரசு நீதிக்கட்சி அரசு

அதனால்தான், பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட ஒரு காலம். ஆனால், அந்தப் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் - தன்னுடைய ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர் களுக்கும் வேண்டும் என்கிற நோக்கத்தோடு, பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதல் கட்சி நீதிக்கட்சி - முதல் அரசு நீதிக்கட்சி அரசு.

அதற்குப் பிறகுதான், இந்தியா முழுவதுமுள்ள எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கான வாக்குரிமை என்பது வந்தது. அதனை சாதித்தது நீதிக்கட்சி.

பெண்களுக்கு வாக்குரிமை உரிமையை கொடுத்துவிட் டோம். இனிமேல் அவர்களை விட்டுவிடலாம் என்று நினைக் கவில்லை. அரசியல் ஜனநாயகத்தில், வெறும் பார்வையா ளர்களாக மட்டுமே வைக்காமல்,  அவர்களை அதிகாரத்தில் பங்கேற்க செய்வதற்கான உரிமைகளைக் கொடுத்ததும் முதல் கட்சி நீதிக்கட்சி அரசுதான்.

பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையை சட்ட ரீதியாகக் கொண்டு வந்தது நீதிக்கட்சி.

நீதிக்கட்சியோ அல்லது திராவிடர் இயக்கமோ முன் னெடுத்த மிகமிக முக்கியமான விஷயங்களில் ஜாதி ஒழிப்பு பிரதானம் என்றாலும்கூட, பெண்ணுரிமை என்று வருகிற பொழுது, அதில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைப் புரிந்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சி மட்டுமல்ல, நீதிக்கட்சியிலிருந்து உருவான எல்லா இயக்கங்களுமே பெண்ணுரிமை சார்ந்த 33 சதவிகித இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அது 50 சதவிகித இட ஒதுக்கீடாக மாறும்பொழுதம் சரி, திராவிட இயக்கங்களின் பங்களிப்பு என்பது மிகமிக முக்கியமானது.

இன்றைக்கு அல்ல

நூறாண்டுகளுக்கு முன்பாகவே....

நீதிக்கட்சி முதற்கொண்டு, திராவிடர் இயக்கம் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு விதமான சட்ட ரீதியான போராட்டங்களை மட்டுமல்ல, செயல்பாடுகளையும் செய்திருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடுகின்ற இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் இன் றைக்கு அல்ல நூறாண்டுகளுக்கு முன்பாகவே வந்திருக்கிறது.

குறிப்பாக, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு, சமஸ்கிருதம் தெரிந்தால்தான் படிக்க முடியும் என்கிற ஒரு நிலை இருந்தது. அதனை ஒழித்து, எல்லா மாணவர்களும் மருத்துவப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பினை வழங்கியது நீதிக்கட்சி.

இது ஏதோ சமஸ்கிருதத்தின்மீதான வெறுப்பின் வெளிப் பாடு என்று நாம் புரிந்துகொள்வதைவிட, அதற்கு உத்தரவிட்ட பானகல் அரசர் இராம நியங்கார் அவர்கள் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். அதனால், வெறுமனே சமஸ்கிருத வெறுப் பின் அடிப்படையில் இதுபோன்ற காரியங்களை செய்திருக் கிறார் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

தங்களுடைய வரலாற்றினைத் தெரிந்துகொள்வதற்கு

இதுபோன்ற ஏராளமான விஷயங்கள் நீதிக்கட்சி முதற் கொண்டு, குறிப்பாக இந்த அய்ம்பெரும் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்பற்றி இந்த புத்தகங்களில் பல நுணுக்கமான செய்திகள் உள்ளன. இதனை ஒவ்வொரு இளைஞனும், இன் றைய தலைமுறை, முக்கியமாக நான் இன்றைய தலைமுறை என்று அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன். இன்றைய தலைமுறை என்றால், எந்தத் தலைமுறை? சமூகநீதியால், திராவிட இயக்கம் முன்னெடுத்த சமூகநீதியால், வளர்ச்சி பெற்று, தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டு, முன்னேற்றப் பாதையில் நகர்ந்துகொண்டு, ஒரு பெரிய பதவிகள், அல்லது பெரிய ஒரு இலக்கை அடைந்த பிறகு, சமூகநீதி என்றாலே, இட ஒதுக்கீடு என்றாலே அதனை ஒரு வெறுப்பாகவும் அல்லது இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒரு போக்கை, ஒரு பெருமிதத்தின் அடையாளமாகப் பார்க்கக்கூடிய இன்றைய தலைமுறையினர், தங்களுடைய வரலாற்றினைத் தெரிந்து கொள்வதற்கு, இதுபோன்ற பல புத்தகங்கள் இருக்கின்றன. அதனை ஒவ்வொரு இளைஞர்களும், குறிப்பாக நான் அடிக் கோடிட்டு சொன்ன இன்றைய தலைமுறையினர் தொடர்ந்து படிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய கடந்த காலம் எப்படியிருந்தது? இன்று எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner