எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் இருந்த காலத்தைவிட அவர் இல்லாத காலத்தில் அதிகம் பேசப்படுகிறார்

நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு

தேர்தலை நோக்கமாகக் கொண்டதல்ல - மக்களை விழிப்புறச் செய்வதற்கே!

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தோழர் தா.பாண்டியன் முழக்கம்

சென்னை, ஏப். 5- தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத் தைவிட இப்பொழுது அதிகம் பேசப்படுகிறார் - தேவைப் படுகிறார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன்.

27.3.2017 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், “நாட்டை எதிர் நோக்கும் பேராபத்துகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழ் மக்களுக்காகவும், இந்த நாட்டுக்காகவும் சமூக உணர்வோடு...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்றுள்ள திராவிடர் கழகத்தின் தலைவர், விடுதலை பத்திரிகையின் ஆசிரியர்ப் பெருமகனார், தமிழ் மக்களுக்காகவும், இந்த நாட்டுக்காகவும் சமூக உணர் வோடு அவர்களை விழிப்புப் பெறச் செய்வதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள போற்றுதலுக் குரிய சகோதரர் வீரமணி அவர்களே,

முதலில் வரவேற்புரை கூறுகின்றபொழுதே, இதனுடைய நோக்கங்களைத் தெளிவாக சுருக்கமாக வள்ளுவர் மாதிரி குறுக தரித்துக் கூறி அமர்ந்துள்ள கவிஞர் பூங்குன்றனார் அவர்களே,

மக்களைத் திரட்டித்தான்

நீதியைப் பெற்றாகவேண்டும்

எனக்கு முன்னர் இங்கே உரையாற்றியவர் எழுச்சித் தலைவர் விடுதலை சிறுத்தைகளின் நிறுவனத் தலைவர், எல்லாவற்றிற்கும் மேலாக வெறும் குரல் கொடுத்தால் மட்டுமே நியாயத்தை நிலை நாட்டமுடியாது. ஒடுக்கப்படுகிற வர்கள் அதனுடைய குறைகளைச் சொல்லி நாம் புலம்பிக் கொண்டே இருந்தால், விடுதலை எந்தக் காலத்திலும் வராது.

போராட்டங்கள்மூலம் தெருவில் மக்களைத் திரட்டித்தான் நீதியைப் பெற்றாகவேண்டும் என்பதை உணர்த்தி வரக்கூடிய சகோதரர் திருமாவளவன்அவர்களை நான் முதலில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

அவர் இங்கே உரையாற்றுகின்றபொழுது, மிகத் தெளி வாக, சுருக்கமாக அவர் காலையில் நடைபெற்ற கலந்துரையா டலில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், ஒரே சிந்தனை உள்ளவர்கள் கலந்துகொண்டாலும், இல்லை என்றாலும், அதே சிந்தனையில்தான் நடைபோடுவார்கள் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

வகுப்புவாதிகளைத் தவிர -

யாருக்கும் கதவு திறந்தே இருக்கும்

அதேபோல, இந்த மேடையில் காலையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொள்ளாத பல நண்பர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும்கூட, நேற்றுவரையில் நாங்கள் எப்படி ஒன்றாக ஒரு மேடையில் தோன்றவில்லை - இன்றுவரையில் அவர்கள் சொல்லாமல் இருந்தாலும், நாளைமுதல் அவர்கள் கட்டாயம் தமிழகத்தைத் தட்டி எழுப்ப, மேலும் வருவார்கள் இங்கு வகுப்புவாதிகளைத் தவிர -  யாருக்கும் கதவு திறந்தே இருக்கும்.

ஏனென்றால், இந்த அமைப்புகளில் நாங்கள் இந்தப் பரப்புரை நடத்துவது, மக்களை விழிப்புற செய்வது என்பது - எந்தத் தேர்தலையும் நோக்கமாக வைத்து அவரை ஆதரிப்பது - இவரை எதிர்ப்பது என்பதல்ல.

மனிதனை அடிமைப்படுத்தக்கூடிய சக்தி எதுவாக இருந் தாலும், அதனை எதிர்த்துப் போராடி நொறுக்குவது என்கிற முடிவோடுதான் இன்று காலையில்கூட இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

இதற்கு முன்னாலும் அந்த ஆபத்து இல்லையா என்றால்,  எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுக ளுக்கு மேலாகவே மக்களை அடிமைப்படுத்துகிற ஒரு தத்து வம், ஒரு சனாதன பிரச்சாரம் - அதற்குள்ள சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பரப்பப்பட்டு, அது வாழ்க்கையைக் கட்டுப் படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. அவ்வாறுதான் கட்டுண்டு இந்த நாடு கிடக்கிறது.

விழிப்பை ஏற்படுத்தியவர் பெரியார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது

அதனை மீட்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் அதை மட்டுமே குறியாக வைத்து எடுத்ததற்கு உள்ள காரணம், அவர் இருந்தபோது புரிய வில்லை என்றாலும், அவரை இழந்த பிறகும் இந்த நாடு இப்பொழுது ஆபத்தை சந்திக்கின்றபோதும், திரும்பத் திரும்ப எல்லோருமே அவர் பெயரை இப்பொழுது குறிப் பிட்டு, அவர் பிறந்த மண்ணிலே நுழையப் பார்க்கிறார்களா? என்ற கேட்பதிலிருந்தே, அவர்தான் இந்த விழிப்பை ஏற்படுத்தியவர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அது ஒரு பெரிய உண்மை. முதன்முதலாக இந்த மக்களையெல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில், பகுத்தறிவுவாதிகளும் - சமய வாதிகளும் எல்லோரும் மனிதர்கள்தான். நாம் வாழ்க்கையின் ஆதாரத்தை வைத்து இது மாற்றப்படவேண்டும். இருக்கின்ற தீமைகள், குறைபாடு கள் நீக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொன் றையும் பார்க்கின்றோம்.

இவை எல்லாமே ஆண்டவனால் படைக்கப்பட்டது. அவற்றைத் தீர்ப்பதற்கு உனக்கு வேலையில்லை. நீ கட்டுண்டு ஏதாவது பூஜைகளை நடத்தினால் போதும் என்ற ஒன்றை நம்ப வைத்ததுதான், இந்த நாட்டை நாலாயிரம் ஆண்டு களுக்கு மேலாக அடிமைப்படுத்தி இருக்கிறது. அதிலிருந்து மீட்கப்படவேண்டும் என்பது ஒரு நீண்ட போராட்டம்.

நரகத்தைக் காட்டி பயமுறுத்தி, சொர்க்கத்தை காட்டி ஆசையூட்டி...

ஆனால், அந்தக் கருத்தை அன்றைக்குப் பரப்பியவர்கள் ஒரு நெருக்கடியான, இவ்வளவு கல்வித் திறமை, விஞ்ஞான வளர்ச்சிகள் இல்லாத இருந்த காலத்தில், பல கதைகளைச் சொல்லி, நரகத்தைக் காட்டி பயமுறுத்தி, சொர்க்கத்தை காட்டி ஆசையூட்டி - பலரையும் தங்கள் கருத்துக்கு ஆட்பட வைத்துவிட்டார்கள் - வெற்றி பெற்றுவிட்டார்கள்.

அது மேலும் கீழுமாக போராடிக் கொண்டிருக்கின்ற பொழுதே, அவர்களது ஆதிக்க சக்தி கொஞ்சம் கொஞ்சமாக எதிர்க்கப்பட்டு, சில மாற்றங்கள், சுதந்திரப் போராட்டக் காலம், அதற்குப் பிறகு, சில இடங்களில் இருந்து அது அகற்றப்பட்டது. நான் அதையெல்லாம் பச்சையாகவே சொல்லுவேன். ஆனால், இது ஒரு அரசியல் பிரச்சாரமாக ஆகிவிடக்கூடாது என்பதால், ஏனென்றால், ஒவ்வொரு கட்சியும் என்னை தாக்குகிறானோ என்று அவ்வாறு அலாதியாக சிந்திக்கும் அலாதி ஆற்றல் தமிழ்நாட்டில் இருக்கிறது.

எனவே, நான் பொதுவாகவே சொல்கிறேன். அந்த ஆதிக்க பீடத்திலிருந்து, நம்பிக்கை மட்டுமே வாழ்ந்த ஒரு சக்தி சற்றே தள்ளப்பட்டது. அவ்வாறு தள்ளப்படுவதற்கும், சுதந்திரப் போராட்ட இயக்கமும் ஒருவகையில் உதவி செய்தது. அரசியல் சட்டத்தை எழுதுவதில், நல்ல வேளையாக அந்த வரைவை எழுதுகிற இடத்திற்கு ஒரு தக்கவரைத் தேர்ந்தெடுத்தது அந்த சுதந்திரப் போராட்ட இயக்கத் தலை வர்கள் செய்த ஒரு மாபெரும் சாதனை.

சாஸ்திர, சம்பிரதாயங்கள் அத்தனையுமே அன்றைக்கே சட்டமாக்கப்பட்டு இருக்கும்

ஒருவேளை டாக்டர் அம்பேத்கர், அந்த அரசியல் சட்ட முன்வரைவை எழுதுகிற குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக இல்லாது இருந்திருந்தால், அந்த சட்டப் பெயருக்குப் பின்னால், பட்டங்களை மட்டும் வைத்தவர்களை மட்டுமே வைத்து எழுதச் சொல்லி இருந்தால், சாஸ்திர, சம்பிரதாயங்கள் அத்தனையுமே அன்றைக்கே சட்டமாக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு நான் சொல்கிறபொழுது, ஏதோ கற்பனையில் சொல்கிறேன் என்று நினைக்கக்கூடாது.

வரலாற்றை நடுநிலையில் மதிப்பிடலாம். ஏனென்றால், மறைந்து போன யாருமே நம்முடைய வாக்குகளை எதிர் பார்த்து நம்மிடையே இல்லை. நாம் இனிமேல் புகழாரம் சூட்டி, பட்டம் சூட்டி அவர்களுக்கு வழங்கவேண்டிய தேவையும் இல்லை. அந்தத் தகுதி என்னைப் போன்றவர் களுக்கு இல்லை.

எனவே, சுதந்திரப் போராட்டக் காலத்தில், அந்த சுதந்திரப் போராட்டத்தை நடத்திய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவர் டாக்டர் அம்பேத்கர். அவர் ஏன் அதை செய்யவில்லை என்பதை, தெளிவாகவே ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த நாடு அடிமைப்படுத்தப் பட்ட பொழுதே, வந்தவன் எடுத்த சில நடவடிக்கைகளால் எங்களுக்குக் கிடைத்த ஒரு புறவழியிலான பல நன்மைகள் என்று எடுத்து அதையே உறுதிப்படுத்திக் கொண்டு சென்றான்.

எனவே, அவர் மாறுபட்ட கருத்துடையவர் என்பது ஆட்சிக்கு வந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஏனென்றால், அன்றைக்கு இந்தியாவில் அதுதான் மிகப் பெரிய கட்சி. அவர்களது கட்சியிலேயே சட்ட வல்லுநர்கள் பலர் இருந் தார்கள். இருந்தால் என்பது மட்டுமல்ல, அவர்கள் அத்தனை பேருமே சாஸ்திர சம்பிரதாயங்களில் ஆழப் பதிந்தும் இருந் தார்கள். ரொம்பப் படித்திருந்தார்கள், ரொம்ப இதிகாசங் களையெல்லாம் எடுத்துக் கூறுவார்கள். ஆனால், சமுதாயப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், ஒரு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவைகளில்தான் ஆழ மாக நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இந்து சர்வ கலாசாலை என்றுதான் காசியில் தொடங்கினார்கள்

அந்த முறையில்தான் கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் தொடங்குகிறபொழுதுகூட, இந்து சர்வ கலாசாலை என்றுதான் காசியில் தொடங்கினார்கள். தொடங் கியவர் அந்தக் காங்கிரசு கட்சிக்குள்ளே இருந்த மதன் மோகன் மாளவியா. இப்பொழுது காந்தியடிகள் எழுதியுள்ள அந்தத் தொகுப்புகள் அனைத்துமே 30 தொகுதிகளாக வந்திருக்கிறது.

இந்த சர்வகலா சாலை திறப்பு விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியைப்பற்றி எழுதியிருக்கிறார். தயவு செய்து அதனை திரும்பவும் ஒருமுறை நம் தோழர்கள் கட்டாயம் படியுங்கள். அது வெள்ளைக்காரன் இருக்கின்ற காரணத்தினால், அந்த சர்வ கலாசாலையை தொடங்கி வைப்பதற்கே மதன்மோகன் மாளவியா, வைஸ்ராயை அழைக்கிறார். வெள்ளைக்காரனை அழைக்கிறார், அவரும் வருகிறார்.

இந்தியாவிலுள்ள சுதேச மன்னர்களையெல்லாம் அழைக் கிறார். ஏறத்தாழ, 500-க்கும் அதிகமான இந்து மன்னர்களும் வருகிறார்கள். ஒரு இஸ்லாமிய மன்னன்கூட அழைக்கப்பட வில்லை. அவன் திப்புசுல்தானைப் போல சுதந்திரத்திற்காகப் போராடியவனாக இருந்தாலும், அவனை அழைக்கவில்லை. எனவே, மன்னர்கள் அத்துணை பேரும், மகுடம், அவர்களு டைய ஆடம்பரங்களோடு மேடைகளில் அமர்ந்திருக் கிறார்கள். அப்பொழுது மகாத்மா காந்தியடிகளுக்குப் பெரும் பெயரும், புகழும் மக்கள் மத்தியில் இல்லை. அப்பொழுதுதான் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்திருக்கிறார்.

அவரே விரும்பி வேண்டி கேட்டுக் கொண்டதற்கிணங்க,  அவரை சில நிமிடங்கள் பேச இரண்டாம் நாள் அனுமதிக் கிறார்கள். அவர் மேடையில் ஏறி பேசுகின்றபொழுது, எங்களைப் போன்று புரட்சிகர முழக்கத்தை எழுப்பிடவில்லை.

அவர் மெதுவாக பேசுகிறபொழுது, இங்கே பேசியவர்கள் அத்துணை பேரும் ஆங்கிலத்திலேயே பேசினீர்கள். இங்கே இருக்கிற மக்கள் பூராவும் முன்னால் அமர்ந்திருக்கின்றவர்கள் கல்வி கற்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய இந்திய மக்கள்.

அவர்கள் தாய்மொழியில் இதுவரையில் ஒருவர்கூட பேச நான் கேட்கவில்லையே என்று அவர் முதலில் எடுத்து வைத்த முன்னுரை.

காந்தியடிகளைத் தூக்கி  மன்றத்திற்கு அப்பால் கொண்டு போய் எறிந்தார்கள்

அடுத்து சொல்கின்றபொழுது சொன்னார், இந்த ஒரு பல்கலைக் கழகத்தைவிட, தொடக்கப்பள்ளிகள் இந்தியா முழுவதும், ஒவ்வொரு கிராமத்திலும் தொடங்கப்படவேண்டும். வேறொன்றும் செய்யவேண்டாம் - இப்பொழுது வந்துள்ள மன்னர்கள், இனியும் எதற்கு மகுடங்கள் - அந்த ஒவ்வொரு மகுடங்களையும் கொடுத்தால், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பள்ளிக்கூடத்தைக் கட்டிவிடலாம் - நாடு முன்னேறும் என்றார்.

இது ஒன்றும் அபாய அறிவிப்பு அல்ல - ஒரு வேண்டு கோள்தான். நான்கு பேர் வந்தார்கள், காந்தியடிகளைத் தூக்கி மேடைக்கு அப்பால் அல்ல - அந்த மன்றத்திற்கு அப்பால் கொண்டு போய் எறிந்தார்கள். பேச்சு நிறைவு பெறவில்லை என்று அந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கிறது.

எனவே, வகுப்புவாதம் என்பது ஏதோ இன்றைக்கு திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மூட்டுகிறார் என்று யாரும் சொல்லவேண்டாம் - மூட்டியவர்களை எதிர்பார்த்து முட்டத் தொடங்கியிருக்கிறோம் என்பதுதான்.

அதனைத் தடுக்கவேண்டும் - அனைவரும் பாதுகாக்கப் படவேண்டும் - அரசியல் சட்டத்தை எழுதுகிறபோதும்கூட, ஒருங்கிணைப்பாளரோடு சேர்த்து, ஒரு 6, 7 பேரை போட்டி ருந்தார்கள். இப்பொழுது அதற்குரிய ஆவணங்களே வந் திருக்கிறது.

அம்பேத்கர் தொட்ட காகிதம் என்பதாலேயே தொடாத புண்ணியவான்கள்

எப்படியிருந்தாலும், ஒருங்கிணைப்பாளர் எழுதுகிற கடி தங்கள், காகிதங்கள் அந்த ஆவணம் இவைதானே பரிசீல னைக்கு வரவேண்டும். அவர் தொட்ட காகிதம் என்பதா லேயே தொடாத புண்ணியவான்கள் அங்கே இருந்தார்கள்.

மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், அம்பேத்கர் அவர்களுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டவரே - அவர் தொட்ட புத்தகங்கள் எதையுமே அவர் தொடமாட்டார். ஏனென்றால், அம்பேத்கர் அவர்கள் அறிஞர் பெருமகனாக இருக்கலாம் - சட்டத் துறைக்கே வல்லுநராக இருக்கலாம். அவனைப் பொறுத்தவரையில், அவர் தீண்டத்தகாதவர்.

இந்தக் கொடுமைகளை உணர்ந்திருந்த காரணத்தினால் தான், குறைந்தபட்சம் இந்த சட்டத்திலேயே இந்த இட ஒதுக்கீடும் இருக்கவேண்டும். அதோடு மட்டுமல்ல, இதை மதச்சார்பற்ற ஒரு நாடாக ஆக்கினால்தான், இது தப்பிக்கும். போராடி பெற்ற சுதந்திரம் காக்கப்படும். ஜனநாயகம் என்பதை மக்களுக்கு உணர்த்தலாம் என்ற முறையில், இன்றைக்கு நாம் அது காக்கப்படவேண்டும் என்கிறோம். அந்த ஒரு சொல்லை அவர் பதிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்சமல்ல.

அம்பேத்கரும் இல்லை, பெரியாரும் இல்லை; நாம் மிஞ்சியிருக்கிறோம்

தனி நபராக இருந்து அவர் எடுத்துக்கொண்ட முயற்சியை, வரவேற்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய தலைவர்கள் சிலர் இருந்தார்கள். இரண்டும் இணைந்தது. இப்பொழுது அது அழிக்கப்படுவதற்கான ஒரு முயற்சி வந்திருப்பவன் கையில் அதிகாரம் சிக்கியிருக்கிறது. சிக்கியிருக்கின்ற நேரத்தில், அம்பேத்கரும் இல்லை, பெரியாரும் இல்லை. நாம் மிஞ்சியிருக்கிறோம்.

எனவே, நம் சக்தியைத் திரட்டி நாம் இப்பொழுது அதே கடமையை ஆற்றி கட்டாயம் தடுத்து காக்கவேண்டும்.

புதிதாக எழுதச் சொல்லி நாம் கேட்கவில்லை. கொடுக்கப் பட்ட வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும். அது சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுதப்பட்டது.

அதேபோல, எழுதப்பட்ட சட்டங்களை மாற்றுவதோடு மட்டுமல்ல - எல்லோரும் நினைக்கிறார்கள் அய்ந்தாண்டுத் திட்டம் என்பது - பண்டித ஜவகர்லால் நேரு திரும்ப வந்ததும் - சோவியத் யூனியனில் நடைமுறையில் இருந்ததால், அத னைப் பார்த்து காப்பியடித்து இங்கே கொண்டு வந்தார்கள் என்று அப்படி இல்லை. சோவியத் யூனியன் முதலாவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்ட காலத்திலேயே, சுபாஷ் சந் திரபோஸ் காங்கிரசு கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், அவர் அறிவித்த முதல் திட்டம், இந்த அய்ந் தாண்டுத் திட்டக் குழு. அப்பொழுது அவர் அதிகாரத்தில் இல்லை. இருந்தாலும், ஒரு அய்ந்தாண்டுத் திட்டக் குழுவை அமைத்தார். அந்தக் குழுவிற்கு பண்டித ஜவகர்லால் நேருவை தலைவராகவும் நியமித்தார். அந்தக் குழுவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ருத்ரதத் பரத்வாஜ் உறுப்பினராக இருந்தார்.

இந்த அய்ந்தாண்டுத் திட்டக்குழு பிறகு இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு அமைக்கப்பட்டது.

என்ன காரணம்?

இந்தியாவின் பன்முகத் தன்மையை அறிந்து, மாநிலங் களிடையே வேற்றுமையை வளர விடாமல் ஒருமுகப்படுத் துவதற்காக, சமப்படுத்துவதற்காக கிடைக்கக் கூடிய மூலாதா ரங்களைப் பங்கிடவேண்டும். ஒன்றுக்கொன்று உதவ வேண்டும். இந்த நோக்கத்தோடு சொன்னார்கள். எனவே, இந்த நாட்டின் ஒற்றுமை கருதி பலரும் ஒப்புக்கொண்டார்கள்.

அய்ந்தாண்டுத் திட்டத்திற்குப் பதில்

நிதி ஆயோக்!

அதனுடைய பலனாக 10, 12 அய்ந்தாண்டுத் திட்டங்கள் வந்து போய்விட்டன. அந்தத் திட்டக்குழு நடந்துகொண்ட முறையில் பலவீனம் இருந்தால், திருத்தி பலப்படுத்தலாம். அதிலே சில பாகுபாடுகள் இருந்தால், அவற்றை மாற்றிய மைக்கலாம். மாறாக, தேர்தலுக்கு முன்பு அல்ல - தேர்தலில் வெற்றி பெற்ற உடனே சொல்கிறார் - அய்ந்தாண்டுத் திட்டக் குழு கலைக்கப்படும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கவில்லை - விவாதிக்கவில்லை. ஒரு தனி மனிதன் அறிவிக்கிறார் - பெரும்பான்மை இருக்கிறது என்பதால், அது நிறைவேறிவிடு கிறது. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் “நிதி ஆயோக்“ என்கிற ஒன்றை உருவாக்குகிறார்கள்.

அது யார்? ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற ஒருவர். இப்பொழுது அவர்தான் மாநி லங்களுக்கெல்லாம் உதவவேண்டும். எதற்கான நிதிகளையும் அவர்கள்தான் ஒதுக்குவார்கள்; திட்டங்களையும் ஒதுக்குவார் கள். இந்த அதிகாரத்தை தன் கட்சியில், தான் சொல்வதைக் கேட்கக்கூடிய ஒருவரை நியமித்ததோடு நிறுத்தவில்லை. இதற்கு எந்த வகையிலும் இடையூறு வரக்கூடாது என்று பொதுவாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்றால், இது வெள் ளைக்காரர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், பல நாடுகளில் அத்தகைய அமைப்பு இல்லை. இந்தியா ஒன்றில்தான் அது உருவாக்கப் பட்டது. ஒரு வகையில், அது செக்-அன்ட் பேலன்ஸ் என்ற ஒரு பாதுகாப்பாகவும் இருந்தது.

தனிப்பட்ட ஒரு நபர் அறிவிக்கிறார்!

இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜன். அவர் வல்லுநர் மட்டுமல்ல, ஒரு பேராசிரியர்ப் பெருமகனார், பொருளாதாரத்தில், நிதித் துறையில் வல்லுநர் என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர். அவரை நீக்கவேண்டும் - அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று பிரதமர் அறிவிக்கவில்லை - குடியரசுத் தலைவர் அறிவிக்கவில்லை - பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியாசென் அறிவிக்கவில்லை - சுப்பிரமணியசாமி அறிவிக்கிறார்.

அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை - அவரால் நாட்டு வளர்ச்சிக்கே முட்டுக்கட்டையாகி விட்டது என்று அறிவித்தார்.

ஆட்சியாளர்கள் கடைபிடிக்கிற

சூத்திர முறை

பிறகு அவர் சுயமரியாதை உள்ளவர். நான் மேலும் ஒருமுறை நீடிக்கத் தயராகயில்லை. நான் விலகிக் கொள்கி றேன் என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார். இது அந்தக் கட்சி நடத்துகிற முறை - ஆட்சியாளர்கள் கடை பிடிக்கிற சூத்திர முறைகள் என்பது - யாரையாவது ஒருவரை விட்டுப் பேச விடுவார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டமா? உடனே நம்முடைய தமிழ் நாட்டு பொன்.ராதாகிருஷ்ணனை  விட்டு பேசவிடுவார்கள்.

‘‘நான் டில்லியில் பேசிவிட்டேன். பொங்கலுக்குக் கட்டா யம் காளைகள் பறக்கலாம்; நீங்களும் பிடிக்கலாம்’’ என்று.

பொங்கலும் வரும், காளைகளும் வரும். ஆனால், ஜல்லிக்கட்டு மட்டும் நடக்காது.

என்னய்யா நடக்கவில்லையே என்று கேட்டால்,

உடனே அவர் ‘‘நான் பகிரங்கமாகவே மன்னிப்புக் கேட்கிறேன்’’ என்பார்.

உடனே இன்னொரு தலைவர் சொல்வார், அவர் தெரியாமல் சொல்கிறார். இப்பொழுது வருகிற அவசர சட்டமே மோடியால்தான் வந்தது. நாளைமுதல் காளைகள் பறந்து ஓடும் பாருங்கள்.

அது அவர் செய்தாரா? மாநில அரசை செய்ய வைத்தாரா?

போகிற போக்கில், கோடானுகோடி மக்கள் பயன்படுத்தக் கூடிய உயர்ந்த மதிப்புள்ள கரன்சி நோட்டுகளையெல்லாம் இன்றிரவு 8 மணிமுதல் ரத்து. அவைகளை மாற்றிக் கொள்ள இன்னும் மூன்று மாதம்; பிறகு புதிய நோட்டு கிடைக்கும் என்று அறிவிக்கிறார். அது மக்களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, சேலத்தில் உள்ள ஆளுங்கட்சிக்காரருக்கு கிடைக்கிறது. நமக்கு ஏடிஎம்மிலும் கிடைக்கவில்லை -  வங்கிக்குச் சென்றாலும் பணம் இல்லை என்கிறார்கள்.

தனிப்பட்ட நபருடைய வீட்டின் அறையில், கழிவறையில் என்று கொஞ்சம்தான் 100 கோடி ரூபாய், 30 கோடி ரூபாய் என்று எடுக்கிறார்கள். இவை அத்தனையும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. வரிசையில் நின்று 16 பேர் மடி கிறார்கள். இந்தக் கூத்து எல்லாம் நடைபெறுவதற்கு முன் ரிசர்வ் வங்கி ஆளுநர் விலகிப் போய்விட்டார்.

அறிவித்த நாளிலிருந்து 68 அறிவிப்புகள் மக்களைக் குழப்பியிருக்கிறது

ஒரு ஆளுநரை தகுதி பார்த்து தேர்ந்தெடுக்கப்பட வேண் டும் அல்லவா! தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அநேகமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயத்தையே உங்களி டம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பணக்காரர்களில், இன் றைக்கு உலகப் பணக்காரர்களின் வரிசையில் நான்காவது இடத்தில், இருக்கக்கூடிய முகேஷ் அம்பானியின் மனைவி யும், இப் பொழுது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக் கப்பட்டுள்ள பட்டேலின் மனைவியும் சகோதரிகள். அதற்குப் பிறகுதான் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறி விப்பு வெளி வருகிறது. செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது - செல்லுகிற நோட்டு எப்பொழுது வரும் என்று அறிவிக்கப் படவில்லை.

பெரும்பான்மை பெறாத மாநிலங்களில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷாவின் அறிவிப்பு

அறிவித்த நாளிலிருந்து 68 அறிவிப்புகள் மக்களைக் குழப்பியிருக்கிறது. அதற்குப் பிறகும், இன்று அய்ந்து மாநிலங்களில் தேர்தலை நடத்தி, அதில் இரண்டு மாநிலங் களில் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. அது ஒரே மாநிலத்தின் இரு பிரிவுகள்தான் - தமிழ்நாடு - பாண்டிச்சேரி போன்று. உத்தரப்பிரதேசம் - உத்தரகாண்ட் மாநிலங்களில் அவர்கள் பெரும்பான்மை பெற்றார்கள். மற்ற மூன்று மாநிலங்களில் அவர்கள் பெரும்பான்மை பெற வில்லை.

ஆனால், தேர்தல் முடிவு வருகின்றபொழுதே அறிவிக் கிறார் அமித்ஷா, அங்கே ஆட்சியை நாங்கள்தான் அமைப் போம் என்று. உங்களுக்குத்தான் பெரும்பான்மை இல்லையே, எப்படி ஆட்சி அமைப்பீர்கள் என்று கேட்டால், கண்டிப்பாக பெரும்பான்மை பெறுவோம், எங்களுடைய ஆட்சியை அமைப்போம் என்கிறார்.

இப்பொழுது அறிவிக்கப்பட்ட பட்டியலில் தமிழ்நாடும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிறகு, நீங்கள் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பாருங்கள். இங்கே ஓர் இடைத் தேர் தல் நடைபெறவிருக்கின்ற காரணத்தினால், நான் அதிகம் விளக்க விரும்பவில்லை. ஏனென்றால், நாடே அதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner