எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை சிறப்புக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எழுச்சியுரை

சென்னை, ஏப்.7 மதச் சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைக்க முயலும் சக்திகளை முறியடிக்க அரசியலையும், தாண்டி களமாடுவோம் என்றார்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

27.3.2017 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், “நாட்டை எதிர் நோக்கும் பேராபத்துகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘நாட்டை எதிர்நோக்கும் பேராபத்துகள்’

‘நாட்டை எதிர்நோக்கும் பேராபத்துகள்’ என்னும் தலைப்பில் ஒருங்கிணைக்கப் பெற்றிருக்கின்ற இந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண் டிருக்கின்ற பெருமதிப்பிற்குரிய அய்யா தமிழர் தலைவர் அவர்களே, இந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தின் தேவை குறித்து, நோக்கம் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தி, அனைவரையும் வரவேற்று உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற பொறியாளர் ஒளிவண்ணன் அவர்களே, இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கின்ற பெருமதிப்பிற்குரிய தோழர் தா.பா. அவர்களே, இந்த நிகழ்வில் பங்கேற்று இதனை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே!

உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநீதி - மதச்சார்பின்மை- மாநில உரிமைகள்

அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நாள். சமூகநீதி - மதச்சார்பின்மை- மாநில உரிமைகள் என்கிற மூன்று முக்கியமான பொருள்களின்மீதான விவாதத்தை நடத்தி, ஒத்த கருத்துள்ள இயக்கங்கள், ஒருமித்த கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கக்கூடிய தலைவர்கள் ஒருங்கிணைந்து, தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு செய்து, தமிழகம் முழுவதும் ஒரு விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கின்ற நாள் - அந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து,  நடைபெறுகிற முதல் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

நம்முடைய கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, காலையில் நடைபெற்ற அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. அதற்காக நான் என்னுடைய வருத்தத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் தலைவர் அழைப்பு விடுத்தால்,

இந்த நிகழ்வு மிகக் குறுகிய கால இடைவெளியில் அறிவிக்கப்பட்ட ஒன்று. மாதத்திற்குப் பத்து கூட்டங்கள் நடத்தினாலும், தமிழர் தலைவர் அழைப்பு விடுத்தால், அரங்கம் நிறையும் என்கிற வகையில்,  எப்பொழுதும் தமிழர் தலைவர் அவர்களின் அழைப்பை ஏற்று வருகை தருகிற, திராவிடர் கழகத் தொண்டர்கள் இந்த நிகழ்விலும் மிகப் பெருவாரியாக வந்து பங்கேற்று இந்நிகழ்வினை சிறப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நான்கூட எண்ணினேன், மிகக் குறுகிய கால இடைவெளியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறதே என்று. அவசரமான நேரங்களில், நெருக்கடியான சூழலில், குறுகிய கால இடைவெளியில்தான் நாம் அணிதிரள வேண்டியிருக்கிறது. அப்படி என்ன நெருக்கடி? அப்படி என்ன அவசரம்? என்று நினைக்கலாம். அப்படி என்ன ஒரு பேராபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது என்று கருதலாம்.

முன்கூட்டியே - முன்னுணர்ந்தவர்

தமிழர் தலைவர்

இதனை பெரியார் கண் கொண்டு பார்க்கின்றபொழுதுதான் உண்மை நிலையை உணர முடியும். நமக்கு என்ன ஆபத்து வரப்போகிறது - என்ன நெருக்கடி சூழப்போகிறது என்பதை, முன்கூட்டியே - முன்னுணர்ந்து அதற்கேற்ப செயல்படக்கூடிய ஒரு ஆற்றல் வாய்ந்த ஆளுமையாக, தலைமையாக, தமிழர் தலைவர் அவர்கள் விளங்குகிறார் என்பதை நாம் அறிவோம்.

இந்த மேடைக்கு ஒரு சிறப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். மதிப்பிற்குரிய கம்யூனிச இயக்கத்தின் தலைவர் மூத்த தலைவர் தோழர் தா.பா. அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவரை மார்க்சியத்தின் அடையாளமாக நாம் பார்க்கலாம். நம்முடைய தமிழர்  தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார் நடுநாயகமாக - அவரைப் பெரியாரியத்தின் அடையாளமாகப் பார்க்கலாம்.

புரட்சியாளர் அம்பேத்கரின் பிள்ளையாக இந்தக் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்ற திருமாவளவனை அம்பேத்கர் இயக்கத்தின் அடையாளமாகப் பார்க்கலாம். இதனை ஒரு புரிதலுக்காக நான் உங்களுக்குச் சொல்கிறேன். குத்தகை என்கிற அடிப்படையில் சொல்லவில்லை. அம்பேத் கரியத்திற்கு நான் குத்தகை அல்ல. ஒரு அடையாளத்திற்காக.

பெரியாரியம் - அம்பேத்கரியம் - மார்க்சியம்

ஆக, பெரியாரியம் - அம்பேத்கரியம் - மார்க்சியம் இந்த மூன்றும் ஒரு மேடையில் அமர்ந்திருக்கின்றது என்பதே - இந்த நாளுக்கு ஒரு சிறப்பு என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவை மூன்றும் வேறு வேறா என்றால், என்னைப் பொருத்தவரையில், இவை மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றுதான் - ஒருமித்த ஒன்றுதான். வேறு வேறு அல்ல.

தந்தை பெரியார் அவர்கள் ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தமிழகம் திரும்பியபொழுது, நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டவர். அந்தக் கருத்துகளை வலுவாக இங்கே பேசியவர். கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டவர்.

இறுதி மூச்சு வரையில் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்

பெரியார், ஒரு கம்யூனிச இயக்கத்தில் சேர்ந்து மார்க்சியத்தைப் படித்து, பாட்டாளி மக்கள் சிந்தனையைப் பெறவில்லை. இயல்பாகவே அந்த சிந்தனையைப் பெற்றிருக் கிறார் அவர். பாட்டாளி வர்க்கத்திற்காக அவர் குரல் கொடுத்தார்; போராடினார்; தனது இறுதி மூச்சு வரையில் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார் பாட்டாளி வர்க்கத்திற்காகத்தான்; ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்திற் காகத்தான். ஆக, மார்க்சியம் எதை அடிப்படையாகக் கொண் டிருக்கிறதோ, அதையே உயிர்நாடியாகக் கொண்டிருப்பது தான் பெரியாரியம். பெரியாரியம் எதை உயிர்நாடியாகக் கொண்டிருக்கிறதோ, அதுதான் அம்பேத்கரியம். இந்த மூன்றுக்கும் பெரிய இடைவெளி இல்லை என்பதை நாம் அறிவோம்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக, பின்தங்கியவர்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக, ஆளுவோரால் சுரண்டப்படுகிற மக்களுக்காகப் போராடுவதுதான் - அவர்களை மீட்பதற்காகப் போராடுவதுதான், இந்த இசங்களின்  அடிப்படை கருத்து - அடிப்படை நோக்கம்.

தேர்தல் அரசியல் சாயம் இல்லை

இந்த இசங்கள்தான் ஒன்றுசேரவேண்டும். இந்த இயக் கங்கள்தான் ஒன்று சேரவேண்டும். இந்த இயக்கங்கள்தான் தொடர்ந்து இணைந்து பயணப்படவேண்டும். அது ஒரு வரலாற்றுத் தேவை. அந்தப் புரிதலோடுதான் இந்தக் களத்தில் நாம் நிற்கிறோம். இதற்கு வேறு எந்த தேர்தல் அரசியல் சாயமும் இல்லை. யார் எதை செய்தாலும், அதனை தேர்தல் அரசியலோடு இணைத்துப் பார்க்கின்ற ஒரு சிந்தனைப் பழக்கம் நம்மிடையே வளர்ந்துவிட்டது. ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டால்கூட, இவர்கள் கூட்டணிக்கு அச்சார மிடுகிறார்களா? என்பார்கள்.

கோட்பாட்டு அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு பழக்கம் நம்மிடையே வளரவில்லை. ஆகவே, இன்றைக்கு நான் இந்த மேடையை அப்படித்தான் பார்க்கிறேன். மார்க்சியமும், பெரியாரியமும், அம்பேத்கரியமும் ஒன்றுதான் என்றாலும், வெவ்வேறு இயக்கங்களாக மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். வெவ்வேறு இயக்கங்களாக நாம் பணியாற்றிக் கொண்டிருப்பதால், வெவ்வேறு களங்களில் நம்முடைய கருத்துகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்று சேர்ந்து, ஒரே களத்தில் அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரக்கூடிய வகையில் ஒருங்கிணைக்கப்படவேண்டும். அதற்கான முயற்சியாகத்தான் இந்த அமர்வை நான் பார்க் கிறேன். காலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தையும் நான் பார்க்கிறேன். அதற்கான ஒரு தேவை எழுந்துள்ளது.

ஒருமித்த கருத்துள்ளவர்களோடு கைகோர்ப்பது சந்தர்ப்பவாதமல்ல

யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களோடு இணைந்து நாமும் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுவதுதான் சந்தர்ப்பவாதம். யாரைத் தோற்கடிக்கவேண்டுமோ, எந்தப் பகையைத் தோற்கடிக்கவேண்டுமோ, மக்களுக்கு எதிரான பகையைத் தோற்கடிக்கவேண்டுமோ, அதற்காக ஒருமித்த கருத்துள்ளவர்களோடு கைகோர்ப்பது சந்தர்ப்பவாதமல்ல. சந்தர்ப்பவாதத்தைப்பற்றிக்கூட இன்னும் சிலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

சந்தர்ப்பவாதம் என்பது, இன்றைக்குப் பாரதீய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி உத்தரப்பிரதேசத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, அது வெற்றி பெறுகிற அணி. எனவே, வெற்றி பெறுபவரோடு சேர்ந்தால், நாமும் வெற்றி பெறலாம் என்று, பதவிக்காக, பவுசுக்காக, சுகத்துக்காக, வெற்றிக்காக, அரசியல் ஆதாயத்திற்காக, வெற்றி பெறுகிற கட்சியோடு, வெற்றி பெறுகிற நபரோடு கைகோர்த்தால் அது சந்தர்ப்பவாதம்.

திராவிடர் கழகத்தோடு கைகோர்த்தால் அது எப்படி சந்தர்ப்பவாதமாக இருக்க முடியும். தேர்தல் களத்திலேயே இல்லாத இயக்கம். கொள்கை கோட்பாடு ஒன்றை மட்டுமே கொண்டு மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இயக்கம். ஆக, திராவிடர் கழகத்தோடு சேர்ந்தால்கூட, அதையும் கொச்சைப்படுத்தக் கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

கொள்கைக் கோட்பாட்டை

உயர்த்திப் பிடிக்கவேண்டும்

இன்றைக்கு சி.பி.அய்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - அது நாளைக்கு நாட்டை  ஆளப் போகிற கட்சி என்று யாரும் சொல்லிக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியே சொல்லாது. எனவே, அது வெற்றி பெறுகிற கட்சி - நாளை நாட்டை ஆளப் போகிற கட்சி - என்றைக்கு இருந்தாலும், அது ஒரு ஆளும் கட்சியாக தமிழகத்தில் வரும் - அல்லது டில்லியில் வரும் என்று எண்ணியா  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு நாம் கைகோர்க்கிறோம், இல்லை. அது ஆளும் கட்சியாக வர வாய்ப்பில்லை என்று தெரிந்தும், தமிழகத்திலும் முடியாது, டில்லியிலும் முடியாது என்று தெரிந்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு நாம் கைகோர்க்கிறோம் என்று சொன்னால், அது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டு, கொள்கைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்கிற நல்லெண்ணத்தினை அடிப்படையாகக் கொண்டு.

கொள்கையைக் காப்பாற்றவேண்டும் என்று போராடுவது

ஆனால், எப்பொழுதும் நம்மை ஏசுகிறவர்கள், பேசுகிற வர்கள் இந்த உறவுகளையும் சந்தர்ப்பவாதம் என்று பேசுகிறார்கள். சந்தர்ப்பவாதிகள் எப்பொழுதும் அப்படித்தான் சிந்திப்பார்கள். ஆதாய நோக்கில் எதையும் அணுகுகிறவர்கள் சந்தர்ப்பவாதிகள். நட்டமிருந்தாலும், தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட நபருக்கு நட்டம் ஏற்பட்டாலும், இயக்கத்திற்கு நட்டம் ஏற்பட்டாலும், கொள்கையைக் காப்பாற்றவேண்டும் என்று போராடுவது எந்த வகையிலும் சந்தர்ப்பவாதம் இல்லை.

மதச்சார்பின்மை குறித்து சில வார்த்தைகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்

ஆக, எதற்காக நாம் இந்த அரங்கத்தில் கூடியிருக்கிறோம்? சமூகநீதியைக் காப்பாற்றுவதற்காக. அதற்கு ஒரு பேராபத்து வருகிறது என்பதற்காக.

எதற்காக இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது?

மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதற்காக - அதற்கு இந்த தேசத்தில் பேராபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்காக.

எதற்காக நாம் ஒருங்கிணைய வேண்டிய தேவையை வலியுறுத்துகிறோம்?

மாநில உரிமைகளைப் பறிக்கும் சூழ்ச்சி, சூது இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முயற்சிகள் இங்கே நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைக் கட்டிக் காப்பாற்று வதற்காக.

இதை ஒவ்வொன்றைப்பற்றி பேசினால், மணிக்கணக்கில் பேசவேண்டி வரும். எனக்குப் பின் நம்முடைய பெருமதிப் பிற்குரிய தோழர் தா.பா. அவர்கள் பேசவேண்டும். நம்முடைய தமிழர் தலைவர் அவர்களும் பேசவேண்டும்.

சமூகநீதியில் நாம் எப்படி வஞ்சிக்கப்படுகிறோம் என்பதைப்பற்றி பேசினால், மணிக்கணக்கில் பேசலாம்.

மதச்சார்பின்மை என்பது இங்கே எவ்வளவு மோசமான முறையில் கேலிக்கூத்தாக நடத்தப்படுகிறது என்பதைப்பற்றி பேசினால், நாள் கணக்கில் பேசலாம்.

மாநில உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படுகின்றன என்பதை விவரிக்க இந்த மேடை போதாது. ஆக, இந்த இடத்தில் நான் மதச்சார்பின்மை குறித்து சில வார்த்தைகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மூன்றில் ஒன்றை மட்டும் குறிப்பாகப் பேச விழைகிறேன்.

மதச்சார்பின்மை என்பது குடிமக்களுக்கானதல்ல. அரசுக் கானது. குடிமக்கள் எந்த மதத்தையும் சார்ந்திருக்கலாம். மதம் சரியா? தவறா? என்பது வேறு. மதத்தை சார்ந்து இருப்பது தேவையா? தேவையில்லையா? என்பது வேறு. ஆனால், மதச்சார்பின்மை என்பது குடிமக்களுக்கான ஒரு கருத்தல்ல. அரசுக்கான கருத்து.

செக்குலரிசம் என்கிற சொல்லுக்கான பொருள்!

இந்த அரசு எந்த மதத்தையும் சார்ந்திருக்காது என்று பொருள். மதச்சார்பற்ற அரசு என்று சொன்னால், அது இந்துத்துவம் சார்ந்த அரசு என்று உரிமை கொண்டாடக்கூடாது -அறிவிக்கக் கூடாது. அது கிறித்துவம் சார்ந்த அரசு என்று பிரகடனப்படுத்தக் கூடாது. அது இஸ்லாம் சார்ந்த அரசு என்று அறிவிக்கக் கூடாது.

அதுதான் செக்குலரிசம் என்கிற சொல்லுக்கான பொருள். ஆக, மதச்சார்பின்மை என்பது அரசுக்கானது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்தக் கருத்தை ஏற்கக் கூடியவர்கள்தான் மதச்சார்பற்ற சக்திகள்.

ஆம்! அரசு எந்த மதத்தையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற கருத்தை ஏற்று, அதற்கு உடன்பட்டு, அதை ஆதரிக்கக் கூடியவர்கள் மதச்சார்பற்ற சக்திகள். அதனை நாம் வலியுறுத்துகிறோம். எனவே, நாம் மதச்சார்பற்ற சக்திகள். கம்யூனிஸ்டுகள் மதச்சார்பற்றவர்கள். பெரியாரிஸ்டுகள் மதச் சார்பற்ற சக்திகள். விடுதலை சிறுத்தைகள் மதச் சார்பற்ற சக்திகள்.

மத்திய அரசைத்தான் குறிக்கும்!

ஆக, மதச்சார்பற்ற சக்திகள் இங்கே ஒருங்கிணைவதற்கு என்ன காரணம் என்றால், இங்கே அரசு - அரசு என்றால் மாநில அரசை குறிக்காது - மய்ய அரசைத்தான் குறிக்கும். மாநில அரசு என்பது மய்ய அரசின் ஒரு கிளை.

அதனை ஒரு அரசாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். மய்ய அரசினுடைய இறையாண்மைதான் - மாநில அரசினுடைய இறையாண்மை. மய்ய அரசினுடைய கோட்பாடுதான் - மாநில அரசினுடைய கோட்பாடு. மய்ய அரசின் செயல்திட்டம்தான் - மாநில அரசின் செயல் திட்டம்.ஆனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவம் இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மொழி பேசக்கூடிய தேசிய இனங்கள் வாழுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலாச்சாரத்தைப் பின்னணியாகக் கொண்டு இயங்குகின்றன.

தொலைநோக்குப் பார்வையோடு தமிழர் தலைவர் அவர்கள் உணர்ந்திருக்கிறார்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி உரிமை இருக்கிறது - இன உரிமை இருக்கிறது - கலாச்சார உரிமை இருக்கிறது - கல்வி உரிமை இருக்கிறது - வணிகம், வர்த்தகம் தொடர்பான உரிமைகள் இருக்கின்றன - சட்டம் இயற்றுவதற்கான உரிமைகள் இருக்கின்றன. இப்படி மாநில உரிமைகள் என்பது, ஒரு தேசத்திற்குள்ளான மய்ய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற மாநில அரசுகளாக இருந்தாலும், இந்தத் தனித்துவங்கள் இருக்கின்றன. ஆகவேதான், இந்த மாநில உரிமைகள் குறித்தும் இங்கே நாம் பேசவேண்டியிருக்கிறது. அதனைக் காப்பாற்றுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது என்பதை தொலைநோக்குப் பார்வையோடு தமிழர் தலைவர் அவர்கள் உணர்ந்து, இந்த மூன்றை மட்டுமே மய்யப்படுத்தி நாம் இயக்கவேண்டும் என்கிற முன் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

தனது மதமே இந்த நாட்டை ஆளவேண்டுமாம்!

ஆக, மதச்சார்பின்மை என்பது இங்கே இயங்குகிற அரசால் கடைபிடிக்கப்படுகிறதா? அதிதீவிரமான மதவெறி உணர்வு உள்ளவர்களின் கைகளில் ஆட்சி சிக்கியிருக்கிறது - அரசு சிக்கியிருக்கிறது. வெளிப்படையாக தனது மதமே இந்த நாட்டை ஆளவேண்டும் - பிற மதங்களைச் சார்ந்த வர்கள் எல்லாம் இந்த நாட்டைவிட்டு, தேசத்தைவிட்டு ஓடவேண்டும் என்று கொக்கரிக்கக் கூடியவர்களின் கைகளில் அரசு அதிகாரம் சிக்கியிருக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் செக்குலரிசம் என்பது இருக்கலாம். அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப் பவர்கள் - அந்த மதச்சார்பின்மை கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறார்களா என்றால், இல்லை.

மதம் என்பது அவர்களின் மிக முக்கியமான ஒரு கருவியாக இருக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்கான ஒரு கருவியாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் முடிவுகள் அதற்கு ஒரு அருமையான சான்று. இஸ்லாமியர்கள் பெரும் பான்மையாக வாழுக்கூடிய சட்டமன்றத் தொகுதிகளில்கூட, பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறுகிறது. அது எப்படி நிகழ்கிறது? அது எப்படி நடந்திருக்க முடியும்?

ஒன்று, தில்லு முல்லு செய்து வெற்றி பெற்று இருக்க வேண்டும். அல்லது மக்கள் வாக்களித்து வெற்றி பெற்று இருக்கவேண்டும்.

முஸ்லிம்கள் 70 விழுக்காட்டிற்கு மேலே வாழக்கூடிய சட்டமன்றத் தொகுதியில்கூட...

பெரும்பான்மையாக முஸ்லிம்கள் 70 விழுக்காட்டிற்கு மேலே வாழக்கூடிய சட்டமன்றத் தொகுதியில்கூட ஒரு பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார். அதில் என்ன பெரிய வேடிக்கை என்றால், 403 சட்டமன்றத் தொகுதிகளில், ஒரு தொகுதியில்கூட ஒரு இஸ்லாமியரைக்கூட வேட்பாளராக நிறுத்த முடியாது என்று ஒரு கொள்கை முடிவாக எடுத்துக்கொண்டு, பாரதீய ஜனதா கட்சி அந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறது.

ஒரே ஒரு இஸ்லாமியரைக்கூட வேட்பாளராகக்கூட போடாத ஒரு கட்சி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுகிறது என்றால், அதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதம்தான் நுட்பமானது.  இந்தத் தேசத்தில் அரசியல் யுக்திகள் இரண்டே இரண்டு வகையாகத்தான் கையாளப்படுகின்றன.

ஒரு வெறுப்பு அரசியலை

யுக்தியாகக் கையில் எடுக்கிறார்கள்

ஒன்று, சிறுபான்மை இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியல். வாக்கு வங்கி - அணி திரட்டுவதற்கான ஒரு அரசியல் யுக்தியாக இந்துத்துவா சக்திகளால், குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியால் கையாளப்படுகிற யுக்தி என்பது, முஸ்லிம் வெறுப்பு அரசியல் அல்லது சிறுபான்மை இனத்திற்கு எதிரான, மதச்சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு வெறுப்பு அரசியலை யுக்தியாகக் கையில் எடுக்கிறார்கள்.

இன்னும் நுட்பமாக கீழே போனால், ஜாதி அடிப்படையில் தலித் வெறுப்பு அரசியலையும் கையிலெடுக்கிறார்கள். ஆக, வெறுப்பு அரசியல் என்பதுதான் இங்கே அடிப்படையான அரசியல் யுக்தியாக இருக்கிறது.

உலகம் முழுவதுமே நாம் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்பொழுது, வெறுப்பு அரசியல் மிக உயர்ந்த சிறந்த நுட்பமான ஒரு யுக்தியாகக் கையாளப்பட்டு இருக்கிறது.

இட்லரின் வெற்றியே அப்படிப்பட்டதுதான். அவனும் ஒரு இன வெறுப்பை யுக்தியாகக் கையாண்டான். ஆக, வெற்றி பெறுவதற்கு, தன்னுடைய பாசிட்டிவான விஷயங் களை - நேர்மறையான செய்திகளை, நல்ல கருத்து - நல்ல கோட்பாடு - உயர்ந்த தத்துவம் - உயர்ந்த பணி - உங்களுக்காக எங்களை நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம் - எங்கள் உழைப்பைப் பாருங்கள் - எங்கள் தியாகத்தைப் பாருங்கள் என்று சொல்லி மக்களின் வாக்குகளை வாங்க முடியாது - திரட்ட முடியவில்லை. ஆனால், வெறுப்பை விதைத்து, உனக்கு எதிரானவன் இவன் - உனக்கு எதிரானவன் இவன் என்று மக்களிடையே இழையோடிக் கிடக்கிற இயல்பான அந்த உணர்ச்சிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தி - இன உணர்ச்சி என்பதும் - மத உணர்ச்சி என்பதும் - மொழி உணர்ச்சி என்பதும் நீண்ட நெடுங்காலமாக இந்த மண்ணில், ஏதோ ஒரு வகையில் அல்லது குடும்பம் என்கிற  அமைப்பின் மூலமாக அது போதிக்கப் பெற்று, கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆக, அந்த உணர்ச்சியை இவர்கள் பயன்படுத்திக் கொண்டு, வெறுப்பு அரசியலை யுக்தியாகக் கையாளுகிறார்கள்.

களத்திற்கு ஏற்ப கையாளுகிற

நடைமுறைத் தந்திரங்கள்

அந்த வெறுப்பு அரசியல், இன்றைக்கு ஒரு யுக்தியாக மட்டுமல்லாமல், ஒரு கோட்பாடாக மாறியிருக்கிறது. அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்கு அடிப்படை. கோட்பாடு என்பது வேறு; யுக்தி என்பது வேறு. யுக்தி என்பது அவ்வவ்பொழுது கையாளுகிற தந்திரங்கள். களத்திற்கு ஏற்ப கையாளுகிற நடைமுறைத் தந்திரங்கள். கோட்பாடுகள் என்பது அதை ஒரு கருத்தியலாக மக்களிடத்திலே தொடர் பிரச்சாரம் செய்வது. யுக்தி என்பது கையாளுகிறவர்களின் சிந்தனைப் போக்கில் உருவாவது. ஒவ்வொரு களத்திற்கும் அது மாறுபடும். கோட்பாடு என்பது ஒவ்வொரு களத்திற்கும் மாறுபடாது. அது அடிப்படையானது. அது தொடர்ந்து மக்களிடத்திலே கொண்டு செல்லக்கூடிய ஒன்று.

முஸ்லிம்களுக்கு எதிராக, இந்து வாக்குகளை அணிதிரட்டியிருக்கிறார்கள்

இன்றைக்குப் பாரதீய ஜனதா கட்சி வெறுப்பு அரசிய லையே ஒரு கோட்பாடாக மாற்றியிருக்கிறது. அதனால், ஒரு முசுலிமைக்கூட வேட்பாளராக நிறுத்த மாட்டோம் என்பதை அவர்கள் வெளிப்படையாக முடிவெடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக, இந்து வாக்குகளை அணிதிரட்டியிருக்கிறார்கள்.

இயல்பாக அது அணி திரள்கிறது - இந்துக்களின் வாக்குகள் என்று. ஆக, இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டுவதற்காக முஸ்லிம் வெறுப்பை அவர்கள் விதைத்ததின் விளைவாக - மோடியின்மீதான விமர்சனங்கள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

ஒரு புதிய வியாக்கியானத்தை சொல்கிறார்கள்

பண மதிப்பிழப்பு (டிமானிட்டிடேசேசன்) என்கிற ஒரு நடவடிக்கை மக்கள் மத்தியில் ஒரு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தை கடுமையாக அது பாதிக்கச் செய்திருக்கிறது. வணிக வர்க்கத்தை மிகப்பெரிய அளவில் சிதைக்க வைத்திருக்கிறது. பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவிற்குப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. ஆனாலும், மோடி வெற்றி பெறுகிறார்.

என்ன விமர்சிக்கிறார்கள் என்றால், மோடியின் வெற்றி எதை உறுதிப்படுத்துகிறது என்றால், டிமானிட்டிடேசேசன் என்கிற பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்று வாக்களித்திருக்கிறார்கள் என்று ஒரு புதிய வியாக்கி யானத்தை சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. அங்கே விதைக் கப்பட்ட உணர்ச்சி என்பது இந்துக்களா? இந்துக்கள் அல்லாதவர்களா? என்பதுதான்.

சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக

ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை...

ஆக, இந்துக்களின் வாக்குகளை அணிதிரட்டவேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து, பிற சமூக மக்களுக்கு எதிராக, பிற மதங்களுக்கு எதிராக, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை ஒரு கோட்பாடாகவே முன்னெடுத்துச் செல்வது பேராபத்து. ஆக, இவர்கள் எப்படி மதச்சார்பற்ற கோட் பாட்டை காப்பாற்றுவார்கள். இந்த அரசு எப்படி ஒரு மதசார்பற்ற அரசு என்று நாம் நம்ப முடியும்? ஆக, இவர்கள் இலக்கு என்பது, டில்லி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, ஒவ்வொரு மாநில அரசு அதிகாரத்தையும் கைப்பற்றுவது. மாநிலங்களில் வேறு கட்சிகள் ஆண்டு கொண்டிருக்க, டில்லியில் மட்டும் நாம் ஆண்டால், இரு அவைகளின் பெரும்பான்மையை பெற முடியாது.

ஒவ்வொரு மாநிலத்திலும், அவர்களுடைய கட்சியின் ஆட்சியை நிறுவவேண்டும்

மக்களவை என்பது லோக்சபா என்பது நமக்குத் தெரியும். மாநிலங்களவை என்பது ராஜ்யசபா - ஒவ்வொரு மாநிலங்களிலும் யார் அதிக இடங்களில் வெற்றி பெற்று யார் ஆட்சியைப் பிடிக் கிறார்களோ - அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மூலமாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படிப் பார்க்கின்றபொழுது, மக்களவையில் எவ்வளவு பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும், மாநிலங்களவையில் அவர்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லையென்றால், அவர்கள் விரும்புகிறபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற முடியாது - அவர்கள் விரும் புகிறபடி கொண்டு வர விரும்புகிற அனைத்துச் சட்டங்களையும் கொண்டு வர முடியாது. அவர்கள் விரும்புகிறபடி நாளையே ராமர் கோவில் கட்டுவோம் என்று அவர்களால் ஒரு சட்டத்தைக் கொண்டு வர முடியாது. அதனால், மாநிலங்களவையிலும் அவர்கள் பெரும் பான்மை பெறவேண்டுமானால், ஒவ்வொரு மாநிலத்திலும், அவர் களுடைய கட்சியின் ஆட்சியை நிறுவவேண்டும். இதுதான் அவர்களின் நோக்கமாகும்.

கொல்லைப்புற வழியாக...

நடந்து முடிந்த அய்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், இரண்டு மாநிலங்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். மணிப்பூர், கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால், கொல்லைப்புற வழியாக அந்த இரண்டு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து விட்டது.

எவ்வளவு பெரிய சதி முயற்சி - எவ்வளவு பெரிய சூழ்ச்சி - எவ்வளவு பெரிய சூது. காங்கிரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்க்கக்கூட முடியவில்லை. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான லாபியைக்கூட செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் களுடைய ஆதிக்கம் என்பது நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே வருகிறது - விரிவடைந்து கொண்டே வருகிறது. அடுத்த குறி அவர் களுக்கு தமிழ்நாடும், கேரளாவும் என்று சொல்லப்படுகிறது. இதற் காகத்தான் அவர்கள் பல்வேறு வகையிலான வேலைத் திட்டங்களை வகுத்துக் கொண்டு, சோசியல் இன்ஜினியரிங் என்கிற பெயரால், எல்லா வகையான ஜாதிய, மதவாத அமைப்புகளையெல்லாம் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு மாநில வாரியாக.  மதம் சார்ந்த அமைப்புகள், ஜாதி சார்ந்த அமைப்புகள் - அதில் 10 பேர் இருக்கிறார்களா? 20 பேர் இருக்கிறார்களா? வெறும் பேனர் மட்டும்தான் இருக்கிறதா? என்பதைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

ஒவ்வொரு ஜாதி, மதவாத கட்சிகளை, அமைப்புகளை, இயக்கங் களை எல்லாம் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது பெரியார் மண்

இத்தனைக் காலம் தமிழ்நாட்டில் அவர்களால் வேரூன்ற முடியவில்லை என்பது உண்மை. நாம் பல மேடைகளில் உரத்து முழங்கியிருக்கிறோம். இது பெரியார் மண் - அதனால் மதவாத சக்திகளுக்கு இங்கே இடமில்லை - அவர்களால் வேரூன்ற முடியாது என்று இன்றைக்கும் சொல்கிறோம். முடியாது என்று நம்புகிறோம்.

ஆனாலும் அவர்கள் மெல்ல மெல்ல பரவி வருகிறார்கள். அந்த யதார்த்தத்தையும் நாம் மறுதலிக்க முடியாது. 37 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறுகிறது. ஒரு இடத்தில் மதவாத கட்சியான பி.ஜே.பி. வெற்றி பெறுகிறது. இன்னொரு இடத்தில் அப்பட்டமான ஜாதி வாத கட்சியான பா.ம.க.வும் வெற்றி பெறுகிறது. ஒருபுறம் ஜாதி வெறுப்பு - இன்னொரு புறம் மத வெறுப்பு என்கிற இரண்டு இடங்களிலும் அந்த வெறுப்பு அரசியலை விதைத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தில் அவர்கள் வேரூன்ற முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒரு அடித்தளம் அமைத்துவிட்டார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

கைகோர்க்க வேண்டிய

ஒரு தேவை - வரலாற்றுத் தேவை!

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் மார்க்சிய சிந்தனையாளர் களும், பெரியாரிய சிந்தனையாளர்களும், அம்பேத்கரிய சிந்தனை யாளர்களும், களப்பணியாளர்களும் கைகோர்க்க வேண்டிய ஒரு தேவை - வரலாற்றுத் தேவை எழுந்துள்ளதாக நாம் கருதுகிறோம். இனியும் நாம் தனித்தனியே நின்று பேசிக்கொண்டிருக்க முடியாது. இனியும் நாம் ஒருங்கிணைந்து செயல்படாமல் விலகி நிற்க முடியாது என்பதை அந்த நெருக்கடியை, அந்தத் தேவையை உணர்ந்துதான் தமிழர் தலைவர் அவர்கள் இந்த முன்முயற்சியை எடுத்திருக்கிறார்கள்.

வெறுப்பு அரசியலையே

ஒரு மூலாதாரமாக வைத்துக்கொண்டு

ஆக, மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை குழிதோண்டி புதைக்கின்ற சக்திகளின் கைகளில் இன்றைக்கு ஆட்சி அதிகாரம் இருக்கிறது. வெறுப்பு அரசியலையே ஒரு மூலாதாரமாக வைத்துக் கொண்டு, ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு, அரசியல் யுக்தியாகக் கையிலெடுத்து இங்கே ஆதாயம் தேடிக் கொண்டி ருக்கிறார்கள் - அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் அரசியல் என்பதையெல்லாம்

தாண்டி களமாடுவோம்

இப்படிப்பட்ட ஒரு சூழலில், தமிழகத்தையும், அந்தப் பேராபத்து சூழ்ந்துகொண்டிருக்கிறது.  சூழ்வதற்காக அது முனைந்து கொண்டிருக்கிறது என்பதை முன்னுணர்ந்து இந்தக் களத்தை அமைப்பதற்காக முன்வந்திருக்கிற தமிழர் தலைவர் அவர்களின் முயற்சியைப் பாராட்டி, அதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து தேர்தல் அரசியல் என்பதையெல்லாம் தாண்டி களமாடுவோம். விடுதலை சிறுத்தைகள் எப்பொழுதும் இந்தக் களத்தில், திராவிடர் கழகத்தோடும், இடதுசாரிகளோடும் கை கோர்த்து நிற்போம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner