எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அதற்காக தந்தை பெரியாரால் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டவர்

ஆர்க்காட்டாரின் பணி அதிகம் தேவைப்படும் கால கட்டம் இது

ஆர்க்காடு வீராசாமி அவர்களின் முத்துவிழாவில் தமிழர் தலைவர்

சென்னை, ஏப்.24-  எப்போதும் தேவைப்பட்டதைவிட, இப்பொழுதுதான் ஆர்க்காடு வீராசாமிகள் அதிகமாக இந்த இயக்கத்திற்குத் தேவைப்படுகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

21.4.2016 அன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி அவர்களின் முத்துவிழாவில் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் எல்லாம் மிசாவில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் 9 பிளாக் என்று சொல்லக்கூடிய அறையில் அடைத்து வைக்கப்பட் டிருந்தோம். அப்படிப்பட்ட அந்த காலகட்டத்தில், திடீ ரென்று எங்களை கைது செய்த அடுத்த நாள் - சட்டத்திற்கு மாறாக - அந்த அறைகள் எல்லாம் திறக்கப்பட்டு, வெளியில் ஒவ்வொருவராக வரிசையாக அமர்த்தப்பட்டு - அவர்கள் கொச்சையாக எங்களைத் துதிபாடி, வசைபாடி அமர்த்திய நேரத்தில், பயங்கரமான தாக்குதல்கள் அனைவர்மீதும் இருந்தது.

சிறைச்சாலையில் கடுமையாகத் தாக்கப்பட்டவர் முத்துவிழா நாயகர்

நம்முடைய தளபதி அவர்கள் சிறைச்சாலைக்கு ஒரு நாள் தள்ளி வந்தார்கள். அவரும் தாக்கப்பட்ட நிலையில்தான் வந்தார்கள். அதற்கு முன்னால், நாங்கள் எல்லோரும் தாக்கப்பட்டோம் என்று சொன்னாலும், கடுமையாகத் தாக்கப்பட்டவர் என்று சொன்னால், அவர் தான் முத்துவிழா நாயகராக இருக்கக்கூடிய நம்முடைய பெருமதிப்பிற்குரிய அருமை சகோதரர் ஆர்க்காடு வீரசாமி அவர்கள்.

இவர் பிழைப்பாரா? என்று

நாங்கள் அச்சப்பட்டோம்!

இன்றைக்கு நம்முடைய பேராசிரியர் அவர்கள் முத்துவிழா நாயகருக்கும் - அவருடைய இணையருக்கும் மாலை அணிவித்தார்கள். அன்றைய காட்சி எங்களுடைய மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவரை மூர்த் தண்யமாகத் தாக்கினார்கள். அவருடைய உடம்பெல்லாம் காயமாக இருந்தது. சாதாரணமான ஒரு நீல தைலத்தைத் தடவினார்கள் - மருத்துவமனைக்குக்கூட அழைத்துச் செல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையில், இவர் பிழைப் பாரா? என்றெல்லாம் நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டிருந்த அளவிற்கு -அவ்வளவு சங்கடத்தோடு அவர்கள் இருந்தார்கள். நல்ல வாய்ப்பாக அவருடைய செவித்திறன் பாதிப்போடு அது போனது - மற்றபடி அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.

ஒரு சிட்டிபாபுவாகவோ, சாத்தூர் பாலகிருஷ் ணனாகவோ அவர் ஆகவில்லை. அந்த அளவிற்கு, கொடுமைகளை அனுபவித்த பிற்பாடும்கூட, பல பேரிடத்திலே வெள்ளைக்காகிதத்தை நீட்டினார்கள். இங்கே வரவேற்புரையாற்றிய சகோதரர் துரைமுருகன் அவர்கள் சிறப்பாக சொன்னார். அவருடைய கொள்கை உறுதி எப்படிப்பட்டது என்பதை - இதுதான் இந்த இயக்கத்திலே இருக்கக்கூடியவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தியாகும்.

கொள்கை உணர்விற்கு மறுபெயர்தான் ஆர்க்காடு வீராசாமி

ஒரு கொள்கையைப் பின்பற்றுவது என்பது ஒரு நிலை - ஆனால், அந்தக் கொள்கைக்குச் சோதனை ஏற்படும் காலகட்டத்தில், அந்த சோதனை வேதனையாக மாறுகிற நேரத்தில், அதனை ஏற்றுக்கொண்டு, கொஞ்சம்கூட உறுதி தளராமல் இருக்கக்கூடிய உணர்வு உண்டென்றால், அந்த உணர்விற்கு மறுபெயர்தான் ஆர்க்காடு வீராசாமி என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு, அன்றைய உறுதி இன்றைக்கும் இருக்கிறது. இதுதான் திராவிடர் இயக்கம். திராவிட இயக் கத்தில் ஒரு கொள்கைப் பாசம். இது ஒரு குடும்பம் என்று சொல்வார்கள். குடும்பம் என்று சொன்னால், கொள்கைக் குடும்பம் என்று பொருள். இந்தப் பாசம் மிக நீண்ட காலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் அவர்களுக்கு இன்றைக்கு விழா நடத்துகின்றோம்.

அவருடைய வாழ்விணையரை

அதிகமாகப் பாராட்டவேண்டும்!

அவரைப் பாராட்டுவதைவிட, அவருடைய வாழ்விணையரான அந்த அம்மையாரின் தொண்டைப் பாராட்டவேண்டும். காரணம், இவ்வளவு பெரிய பொதுவாழ்வில் இருக்கக்கூடியவர்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு, அவருடைய வாழ்விணையர் எப்படி அமைகிறார்கள் என்பதைப் பொருத்துதான் அவர்களுடைய வெற்றி நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், நாம் ஆண்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி பாராட்டி, பாராட்டி பழக்கப்பட்டவர்கள் என்கிற முறையில், இவரைப் பாராட்டுவதைவிட ஒரு மடங்கு அதிகமாக அந்த அம்மையாரைப் பாராட்டவேண்டும். இதுதான் அதற்கு சரியான தருணமாகும்.

அதுமட்டுமல்ல, ஒரே ஒரு செய்தியை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ஆர்க்காட்டில், 1972 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் சார்பாக, திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக மாநாடுகள் இரண்டு நாள்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டுப் பந்தலுக்குத் தீ!

அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தது. கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அந்த காலகட்டத்தில், அய்யா தந்தை பெரியார் அவர்கள், இராணிப்பேட்டையிலுள்ள பயணியர் விடுதியில் தங்கியிருந்தார்கள்.

பேருந்து நிலையத்தின் அருகே பந்தல் போடப்பட்டு, மாநாடு நடைபெற ஏற்பாடாகி இருந்தது. விடிந்ததும், தந்தை பெரியார், நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் கலந்துகொள்ளக்கூடிய இரண்டு நாள் மாநாடு நடைபெறவிருந்தது.

அரசியல் துரோகம் காரணமாக, அங்கே இருந்த அரசியல் கட்சி நண்பர்கள், மாநாடு நடைபெறக்கூடாது என்பதற்காக, மதுரை மாநாட்டுப் பந்தலுக்கு எப்படி தீ வைத்தார்களோ, அதுபோன்றே, மாநாட்டுப் பந்தலை தீ வைத்துக் கொளுத்தி விட்டார்கள். பந்தல் முழுவதும் எரிந்து விட்டது.

விடியற்காலை 2 மணிக்கு இந்தத் தகவல் தெரிந்த வுடன், முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

‘‘இப்படி நடந்து விட்டதே என்று அய்யா பெரியார் அவர்கள் கவலைப்படவேண்டாம் என்று சொல்லுங்கள். இந்த விஷயம் அய்யாவிற்குத் தெரியுமா? நாம் எப்படியும் மாநாட்டினை நடத்தாமல் விடமாட்டோம். பந்தல் இல்லாமல் இருந்தாலும்கூட பரவாயில்லை. உறுதியாக இருங்கள்’’ என்று சொன்னார்.

சாதனைக்கு உரியவர்,

நம்முடைய முத்துவிழா நாயகர்

ஆனால், நம்முடைய சகோதரர் ஆர்க்காடு வீராசாமி அவர்களுடைய முயற்சியினால், திராவிடர் கழகத் தோழர்கள் - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் - இரட்டைக் குழல் துப்பாக்கி எப்படியெல்லாம் செயல்படுகிறது என்று காட்டுவதற்கு அறிகுறியாக, அத்துணை பேரும் முயற்சித்து, காலை 11 மணிக்குள்ளாக மாநாட்டுப் பந்தலை அமைத்துவிட்டார்கள். 11.30 மணிக்குத் தந்தை பெரியாரை அழைத்து, அந்த பந்தலில் மாநாடு தொடங்கியது. அந்த சாதனைக்கு உரியவர், நம்முடைய முத்துவிழா நாயகராக இருக்கக்கூடிய ஆர்க்காடு வீராசாமி அவர்களும், நம்முடைய இயக்கத்தவர்களும். திராவிட இயக்கத்தினுடைய சாதனை.

தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டி, பிறகு பண முடிப்பெல்லாம் கொடுத்து சிறப்பு செய்தார்கள். அய்யா அவர்கள் மகிழ்ச்சியோடு சென்னைக்கு வந்தார்கள். சென்னையில் இரண்டு நாள் தங்கியிருக்கிறார். இரண்டு நாள்களுக்குப் பிறகு திருச்சிக்குப் போகப் போகிறார்.

அந்த காலகட்டத்தில், திடீரென்று ஒரு நாள் காலையில் வந்த செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஆர்க்காடு வீராசாமி அவர்கள் ஒரு விபத்துக்கு ஆளானார் என்பதுதான் அந்த செய்தி.

தந்தை பெரியார் அவர்கள் காலையில் செய்தித்தாளை படித்து தெரிந்துகொண்டவுடன், எங்களை அழைத்துக் கேட்டார்கள்.

என்ன இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதே? எப்படி இருக்கிறார்? எங்கே இருக்கிறார்? என்பதைப்பற்றி விசாரியுங்கள், தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று மிகுந்த அக்கறையோடு, கவலையோடு அவர்கள் கேட்டார்கள்.

உடனே, சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகொண்டு பேசியபோது, ‘‘பெரிய விபத்தில்லை. சிறிய விபத்துதான் - சென்னைக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் சென்னைக்கு வந்துவிடுவார். அய்யா அவர்கள் கவலைப்படவேண்டாம்’’ என்று சொன்னார்கள்.

இத்தகவலை தந்தை பெரியார் அவர்களிடம் சொன்ன பொழுது,

அய்யா அவர்கள் உடனடியாக, ‘‘எத்தனை மணிக்கு சென்னைக்கு வருவார்’’ என்று கேளுங்கள் என்றார்.

இன்னும் ஒரு மணிநேரம் கழித்து சென்னைக்கு வந்துவிடுவார் என்றோம்.

அவருடைய நலன்குறித்து

விசாரிக்கவேண்டும் என்றார் அய்யா!

ஒரு மணிநேரம் கழிந்த பிறகு, தந்தை பெரியார் அவர்கள் கேட்டார், ‘‘ஆர்க்காடு வீரசாமி அவர்களுடைய வீடு எங்கே இருக்கிறது என்று விசாரியுங்கள்; நேரிடையாகச் சென்று அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவேண்டும். அவர் எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றினார்; எவ்வளவு தொண்டாற்றினார். உடனே அவருடைய நலன்குறித்து விசாரிக்கவேண்டும்’’ என்றார்.

தந்தை பெரியார் அவர்களோடு, அன்னை மணியம்மையார் அவர்களும், நாங்களும் சென்றோம்.

அங்கே ஆர்க்காடு வீராசாமி அவர்களுடைய பெற்றோரும் இருந்தார்கள். அவர்கள் வைதீக நம்பிக்கை உடையவர்கள்; ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அப்படிப்பட்டவர்கள், அய்யாவைப் பார்த்தவுடன், அவர்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. உடனே அந்த அய்யா அவர்கள், அந்த அம்மையாரின் கையைப் பிடித்துக்கொண்டு, அப்பொழுது அய்யாவினுடைய கையில் ஒரு நாளிதழ் இருந்தது.

பயப்படாதீர்கள்,

நல்லவிதமாக வந்துவிட்டார் அல்லவா!

அம்மா உங்களுடைய மகனுக்கு எங்கள் மாநாட்டில் கலந்துகொண்டதினால், கடவுள் இல்லை என்று சொல்கின்ற கட்சி, சாமி இல்லை என்ற கட்சி ஆகையினால்தான் இந்த விபத்து நடந்தது என்று நினைத்துக் கொண்டு, பயந்து போயிருப்பீர்கள். பயப்படாதீர்கள், நல்லவிதமாக வந்துவிட்டார் அல்லவா!

உடனே அந்த அம்மா, ஏதோ ஆண்டவன் அருளால் நல்ல விதமாக வந்துவிட்டார் என்று சொன்னார்கள்.

இப்படி அந்த அம்மையார் சொன்னவுடன்,

அய்யா அவர்கள் தன்னுடைய கையில் வைத்திருந்த நாளிதழைக் காட்டி, திருப்பதிக்குப் போன ஏழு, எட்டு பக்தர்கள் பலி என்று வெளிவந்திருந்த செய்தியைக் காட்டினார். உங்களுக்கு தைரியம் சொல்வதற்காகத்தான் இதனை சொல்கிறேன். விபத்து நடப்பதற்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னவுடன், அந்த அம்மையார் ஒன்றும் சொல்லவில்லை.

‘‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’’

‘‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’’ என்கிற நூலில், இந்த நிகழ்வினைப் பதிவு செய்திருக்கிறோம். ஆர்க்காடு வீராசாமி அவர்களுடைய தொண்டு என்பது இருக்கிறதே அது மிகச் சிறப்பானது.

அய்யாவின் அன்பைப் பெற்றவர்கள் - அண்ணாவின் அன்பைப் பெற்றவர்கள். அதுமட்டுமல்ல, எந்த சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும், கலைஞர் அவர்கள், சகோதரர் ஆர்க்காடு வீராசாமி அவர்களைத்தான் அனுப்புவார்கள்.

இவர் சென்றால், முடியாத காரியம்கூட முடிந்துவிடும். அதேநேரத்தில், அவர் தீர்த்து வைக்கக்கூடிய முறை இருக்கிறதே - ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள், ஷ்வீஸீஸீவீஸீரீ sவீtuணீtவீஷீஸீ என்று. இரண்டு பேருக்கும் தோல்வி இருக்கக்கூடாது; யார் எதிர்த்தார்கள்; யார் திட்டினார்கள் என்கிற வலியே இல்லாத அளவிற்கு அவ்வளவு சாமர்த்தியமாக தீர்த்து வைப்பார். மலையே அதிர்ந்தாலும், அவர் அதிர்ந்து போகமாட்டார்; அவர் நிதானமாகத்தான் பேசுவார். அதுமட்டுமல்ல, எல்லா துறையிலும் கலைஞர் அவர்கள், நகைச்சுவை வேண்டுமானாலும் இவரைத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தலைவருக்கு நிழலாய், பேராசிரியருக்கு நிழலாய், இயக்கத்திற்கு அரணாய்...

நாங்கள் எல்லாம் கலைஞர் இல்லத்திற்குச் சென்று மாலையில் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது - அமைச்சர்கள், நண்பர்கள் எல்லாம் அமர்ந்திருக்கும்பொழுது - எதைப்பற்றிக் கேட்டாலும், இவர் பதில் சொல்வார். அதையும் கலைஞர் அவர்கள் கிண்டல் செய்வார், அதையும் பொறுத்துக் கொள்வார், ஒன்றும் பதில் சொல்லமாட்டார்.

இவர் இருக்கையை விட்டு எழுந்திருந்தால், கலைஞர் அவர்கள் உடனே, ஆர்க்காடு வீராசாமி இருக்கையை விட்டு எழுந்தால், 9 மணி என்று அர்த்தம். சபையைக் கலைத்துவிடலாமா? என்று கேட்பார்.

அப்படி எல்லாத் துறைகளிலும் ஆர்க்காட்டார் அவர்கள், தலைவருக்கு நிழலாய், பேராசிரியருக்கு நிழலாய், இயக்கத்திற்கு அரணாய், அதேநேரத்தில், கொள்கையில் உறுதியாக இருக்கிறார். இந்தக்  கொள்கை உறுதி இருக்கிறதே, அது முன்பு எப்போதும் தேவைப்பட்டதைவிட, இப்பொழுதுதான் ஆர்க்காடு வீராசாமிகள் அதிகமாக இந்த இயக்கத்திற்குத் தேவைப்படுகிறார்கள். அதிகமான உறுதி தேவை - ஆட்சியில் இருக்கிறோம் என்பதைவிட - அந்தப் பணியெல்லாம் செய்யக்கூடிய அவசியம் இன்றைக்கு வந்திருக்கிறது.

திராவிடர் இயக்கம்

ஆயிரங்காலத்துப் பயிர்

ஏனென்றால், முந்தைய எதிரிகள் நாணயமான எதிரிகள் - இப்பொழுது இருக்கின்ற எதிரிகள் நாணயமற்ற எதிரிகள். எனவே, எப்படிப்பட்ட எதிரிகளை சந்திக்கவேண்டும் என்று சொல்கின்றபொழுது, இன்றைக்குத் தளபதிக்கு, உற்ற தளபதிகளாக இப்படிப்பட்டவர்கள் இருப்பது இருக்கிறதே, இதுதான் இந்த இயக்கம் வெற்றி வாகை சூடுகிறது - இந்த இயக்கத்தை அழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது - திராவிடர் இயக்கத்தை வீழ்த்த முடியாது - திராவிடர் இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர் என்பதைத்தான் இந்த விழா நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

எனவே,

பல்லாண்டு வாழ்க!

நலமோடு வாழ்க!

உறுதியோடு வாழ்க!

என்று கூறி, என்னுடைய உரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.