எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 13 மண்டல் குழுப் பரிந்துரை செயலுக்கு வராது என்றார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அயரா முயற்சியால் பெரும்பாடுபட்டு அதனை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தோம். ‘நீட்' ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ‘நீட்' எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

இரண்டே விஷயம்தான். Neet - National Eligibility cum Entrance Test என்பதை சுருக்கி, Neet என்று வைத்திருக்கிறார்கள். நீட் என்று வைத்துக்கொண்டு, இப்பொழுது இட ஒதுக்கீடு, மாநில உரிமை, செக்யூலரிசம் என்கிற சமயச் சார்பின்மை ஆகியவற்றையெல்லாம் நீட், நீட்டென்று அதிலே நீக்கக்கூடிய அளவிற்கு இந்த முயற்சி நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதனை எதிர்க்கக்கூடிய ஒரு ஆற்றலை இந்தத் தமிழ் மண்ணிலே நாம் பெற்றிருக்கக் கூடிய காரணம், இந்தத் தமிழ் மண்ணில்தான், அத்தனைப் போராட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அஞ்சலட்டை - மின்னஞ்சல்

நீட்டை எதிர்த்து நம்முடைய போராட்டம், இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடங்கியிருக்கின்ற இந்தப் போராட்டம், இங்கே குறிப்பிட்டதுபோல, அஞ்சலட்டையில் குடியரசுத் தலைவருக்கு இங்கே குறிப்பிட்டிருக்கின்ற வாசகங்களையெல்லாம் நாமும் எழுதி, வீட்டிலிருப்பவர்களும் எழுதி, அதேபோன்று கல்லூரிகள், பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு மாணவ அன்பர்களும் எழுதி, அஞ்சலட்டை அறப் போராட்டத்தையும் இதனையோடு இணைத்து நடத்தவேண்டும். அதனோடு மின்னஞ்சல் மூலமாகவும் குடியரசுத் தலைவருக்கு நமது கோரிக்கையை அதில் பதிவு செய்யவேண்டும். நம்முடைய வீட்டிலுள்ள அனைவரும், சகோதரர்கள் அத்துணைப் பேரும் இதனை தொடர்ந்து செய்யவேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்து, ஒன்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன்,
முத்தரசன் அய்யா உரையாற்றும்பொழுது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை மத்திய அரசு கிடப்பிலே போட்டிருக்கிறது என்று சொன் னார்கள்.

மண்டலும் - ஆசிரியர் வீரமணியும்!

மண்டல் ஆணைய அறிக்கையை 1989 ஆம் ஆண்டு இப்படித்தான் கிடப்பிலே போட்டார்கள். அப்படி கிடப்பிலே போட்ட அறிக்கையை இதே வீரமணி அவர்கள்தான் தட்டி எடுத்து, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து - இந்தியாவுக்கே விடுதலை பெறக்கூடிய அளவிற்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுத்த வரலாறு இந்தக் கூட்டமைப்புக்கு உண்டு.

அந்தக் கூட்டமைப்பின் சார்பில் இன்றைக்குத் தொடங்கியிருக்கின்ற ஆர்ப்பாட்டம், நிச்சயமாக இந்த நீட் தேர்வை மத்திய அரசு எவ்வளவுதான் முயன்றாலும், நிச்சயமாக அதனை மாற்றியமைப்போம் - மாநில உரிமையை நிலை நிறுத்துவோம். இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இந்த மண்ணில் நிலை நிறுத்தியதுபோல, இதையும் தொடர்ந்து நிலை நிறுத்துவோம். அதற்கு நாம் அத்துணைப் பேரும் ஒன்றிணைவோம் - ஒன்றிணைந்து வென்று காட்டுவோம் என்று கூறி, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி,வணக்கம்!

இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்கள் உரையாற்றினார்.