எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொட்டும் மழையில் தமிழர் தலைவர் கொட்டு முரசு!சென்னை, ஆக.12 மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் ‘முரசொலி’யை தொடங்கியதற்கு காரணம் வெறும் அரசியலுக்காக அல்ல! நமது சூத்திரத் தன்மை, பஞ்சமத்தன்மை, அடிமைத்தன்மை அகற்றப் படுவதற்காகவே.

முரசொலியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! தொட ரட்டும்!!  வாழ்த்துகிறேன் என்று கொட்டும் மழையிலும், கொள்கை முரசு கொட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் அவர் சுருக்கமாக பேசியதாவது:
1330 குறள்களிலேயே தந்தை பெரியாருக்கு பிடித்த குறள்

“குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.” (குறள் 1028)

என்ற குறள்தான். இலட்சிய வீரனுக்கு கொட்டும் மழையில்லை, கொளுத்தும் வெயிலில்லை.

கொள்கை ஒன்றுதான் மானத்தையும் தாண்டி இருக்கக்கூடியது என்பதற்கு நிரூபணம்தான் இந்த முரசொலி பவள விழா என்ற வரலாற்றுப் பெருமைமிக்க சாதனை நாள். இந்த சாதனையை ஏற்படுத்திய எங்கள் எதிர்காலம் மட்டு மல்ல, நிகழ்காலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிற அருமை தளபதி அவர்களே, திமுகவின் தலைவர் கலைஞரின் தொண்டினைத் தொடரக்கூடிய  எல்லாவகையிலும் இன மானக் கொடியை ஏற்றி நடத்துவதற்கு இதையே ஓர் ஒத்திகையாக ஆக்கிக்கொண்டிருக்கிற எங்கள் தளபதி அவர்களே, விழாவின் தலைவர் துரைமுருகன் அவர்களே, மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களே, மேடையிலே வீற்றிருக்கின்ற அத்துணை இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, தோழர்களே, மழை நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

கொட்டும் மழை என்று சொன்னாலும், மழை கைம்மாறு கருதாத ஒன்று. நம்முடைய இயக்கமும் கைம்மாறு கருதாத ஓர் இயக்கம். முரசொலியும் கைமாறு கருதாத இயக்கம். தன்னைத் தாக்குபவர்களுக்கும் அது பயன்படும். தன்னைத் தூக்குபவர்களுக்கும் அது பயன்படும். அதேபோலத்தான் இந்த நிலையிலே இன்றைக்கு ஒரு பெரிய எழுச்சியை நாம் பார்க்கிறோம்.

திராவிடத்தால் வீழ்ந்தோமா?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் சொன்னார்கள். இல்லை, திராவிடத்தால்தான் எழுந்தோம், எழுவோம், எழுவோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே எழுச்சிமிக்க ஒரு கூட்டத்தில், கலையமாட்டோம், தொடர்ந்து நடத்துங்கள் என்று சொல்கிறீர்கள். தளபதி சொல்லுகிறார், இன்னொரு அரங்கத்திலே எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக சொல்லுகிறார்.

நண்பர்களே, முரசொலியினுடைய பவள விழா என்பது தலைவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, ஓர் ஏட்டினுடைய விழா அல்ல. ஓர் இனத்தின் எழுச்சியின் மாட்சியாகும். அதை மறந்துவிடாதீர்கள். எனவே, இந்த காலகட்டத்திலே ஒன்றே யொன்றை சுருக்கமாக உங்களுக்கு நினைவூட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

ஏன் கலைஞர் முரசொலியைத் தொடங்கினார்? பெரியார் வாழ்ந்த காலத்தில், அண்ணா வாழ்ந்த காலத்தில், இந்த இயக்கத்தில் அதைச் செய்தார். ஏன்? எதற்காக? தயவுகூர்ந்து எண்ணிப்பாருங்கள். இந்த இனம் எழவேண்டும் என்பதற்காகத்தான். வெறும் அரசியலுக்காக அல்ல. வெறும் பதவிக்காக அல்ல, இது தேர்தலுக்காக அல்ல.

இந்த இனத்தினுடைய எழுச்சி, இந்த சூத்திரத்தன்மை, பஞ்சமத்தன்மை, அடிமைத்தன்மை, மானமற்ற தன்மை மறைந்து, நாமெல்லாம் சுயமரியாதைக்காரர்களாக மாற வேண்டும் என்பதற்காகத்தான், கலைஞர் தன்னையே மானமிகு சுயமரியாதைக்காரர் என்று ஆக்கிக்கொண்ட மாபெரும் வீரர்.

எனவே, முரசொலியினுடைய பவளவிழா என்பது ஓர் ஏட்டினுடைய விழா என்பது மட்டுமல்ல, மாறாக எழுச்சியின் வரலாறு, இது தேவை இன்றைய காலகட்டத்தில்.

மதவெறி மிரட்டுகிறது. பதவிவெறி தலைதூக்கி ஆடுகிறது. முதலமைச்சர்களால் வரலாறு படைக்கப்பட வில்லை. புரட்சியாளர்களால்தான் வரலாறு படைக்கப்பட் டிருக்கிறது.

எனவேதான், இது ஒரு சமுதாயப்புரட்சி விழா. இந்த சமுதாயப்புரட்சி விழா தொடரட்டும், தொடரட்டும்.

முரசொலியினுடைய பவள விழா என்பது முரசு கொட்டி முரசு கொட்டி அதன் வெற்றிப் பயணம் தொடரட்டும் தொடரட்டும் என்று வாழ்த்துக் கூறி முடிக்கிறேன்.

வாழ்க கலைஞர்! வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அண்ணா, வாழ்க திராவிடம்!
வாழ்க முரசொலி வளர்க!
வாழ்க தளபதி!
நன்றி வணக்கம்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி ஆசிரியர் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

முரசொலி பவளவிழாப் பொதுக்கூட்டம் தொடங்கப்படு வதற்கு முன்பாக பொதுக்கூட்ட மேடை அருகே செய்தியாளர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழர் தலைவர்: ’நீட்’ பிரச்சினையில் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தெளிவான திட்டவட்டமான ஓர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பது கிடையாது. தமிழ்நாட்டு மக்க ளுடைய உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை. தமிழக அரசு அதைப் புரியவைப்பதற்கான முயற்சிகளை எடுத்ததாகவும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையிலே, நிச்சயமாக அடுத்த கட்டத்திலே, மிகப்பெரிய அளவுக்கு இங்கே வந்திருக்கக்கூடிய அத்துணை கட்சி களையும் ஒருங்கிணைத்து, மிகப்பெரிய அளவில் அடுத்த கட்டப்போராட்டம் பற்றி சிந்திக்க வேண்டும். என்னுடைய உரையிலேகூட அதை நான் குறிப்பிடுவதாக இருக்கிறேன்.

செய்தியாளர்: ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற நிலையிலும்கூட, தமிழக அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தமிழக அரசு இருந்தால் நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசுதான் இல்லையே.

செய்தியாளர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் மூன்று அணிகளும் ஆதரவு கொடுத்தார்கள், இப்போது முதலமைச்சரும், அமைச்சர்களும் நீட் தேர்வு பிரச்சினையில் இன்னமும்   சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்காத பாஜகவின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: மூன்று அணிகளுக்கும் சேர்ந்து முப்பட்டை நாமம். ‘மூன்று அணிகள்-முப்பட்டை நாமம்’

செய்தியாளர்: அதிமுகவின் இரு அணிகளும் சேர்வதாக கூறுகிறார்களே? மக்களுக்கு எந்த வகையில் பயன் அளிக்கும்?

தமிழர் தலைவர்: எந்த அணிகள் சேர்ந்ததாலும், தமிழ்நாட்டின் பிணி நீங்காது. இந்த அணிகள் தமிழ்நாட்டின் பிணிகள்.

இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.    முரசொலி பவள விழா நிகழ்ச்சிகள்

முரசொலி நாளிதழின் பவள விழா நிறைவையொட்டி சென்னையில் முரசொலி பவளவிழா  வெகு சிறப்பான ஏற்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்னாள் (10.8.2017) காலை சென்னை கோடம் பாக்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் முரசொலி பவள விழாக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாலை நேர நிகழ்வாக சென்னை திருவல்லிக்கேணி கலை வாணர் அரங்கத்தில் முரசொலி வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திறந்தவெளி அரங்கில் நேற்று (11.8.2017) மாலை முரசொலி பவள விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட திறந்த வெளி மைதானத்தில் கலைநயத்துடன் கூடிய மேடை அமைப்புடன்  பல்லாயிரக்கணக்கில் நாற்காலிகள், மின் விளக்கு அலங்காரங்கள், ஓங்கி உயர்ந்த இரும்பு கம்பங்களில் கொடிகள், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் உருவங்களில் (கட்அவுட்) மின் விளக்கு  அலங்கார அமைப்பானது ஒரு பொதுக்கூட்ட ஏற்பாடாக இல்லாமல், ஒரு மாபெரும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளாக சிறப்புற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மைதானத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப் பட்டிருந்தன.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் முரசொலி பவள விழாப் பொதுக்கூட்டத்துக்கு மாநாட்டுக்கு திரள்வதுபோன்று பெருந்திரளாக வருகைதந்தனர். பெண்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் விழாவில் பங்கேற்றனர்.

திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர்  க.அன்பழகன் கூட்டத்தை தலைமையேற்று நடத்துவதற்கு வர இயலாத சூழலில் முரசொலி பவளவிழாப் பொதுக்கூட்டத்துக்கு வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைத்தார். பொதுக்கூட்டத்தில் இனமானப் பேராசிரியர் வாழ்த்துச்செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூட்டத்தலைமை யேற்று வரவேற்று உரையாற்றினார்.

விழா மலர் வெளியீடு

முரசொலி பவள விழா மலரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட முரசொலியின் முதல் மேலாளர் சி.டி.தட்சணாமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

மு.க.ஸ்டாலினைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவிப்புவிழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டி, தம் உரையைத் தொடங்கினார்.

நினைவுப் பரிசு

விழாவில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு கொட்டும் மழையிலேயே திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

ஒத்திவைப்பு அறிவிப்பு

பின்னர் மு.க.ஸ்டாலின் கடைசியாக நன்றியுரை ஆற்றியபோது, “முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்படுகிறது. இன்னொரு நாளில் இதைவிட சிறப்பாக, மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தப்படும். தற்போது வருகை தந்த தலைவர்களுக்கும், உங்களுக்கும் (தொண்டர்கள்) நன்றி” என்றார்.

பங்கேற்ற தலைவர்கள்

இந்திய தேசிய லீக் அகில இந்திய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், இந்திய சமூகநீதிப்பேரவை தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன்,  கட்டடத் தொழிலாளர் முன்னேற்றக் கழகம் பொன். குமார் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திமுக பொறுப்பாளர்கள் ஆர்க்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி மற்றும் முரசொலி செல்வம்,  தயாநிதிமாறன், சுப்புலட்சுமி ஜெகதீசன், மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுக   பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தரமணி மஞ்சுநாதன், ஆதம்பாக்கம் பொறியாளர் கே.செல்வன், பெரியார் திடல் சுரேஷ், விமல்ராஜ், ஆனந்த், அசோக், சிவக்குமார், சக்திவேல், சுதன், செஞ்சி ந.கதிரவன், யுவராஜ் உள்பட பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner