எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார், அம்பேத்கர்தான் கொள்கை, கோட்பாட்டு ஆசான்கள்

தொல்.திருமாவளவன் விளக்கவுரைசென்னை, ஆக.23  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் 55 ஆவது ஆண்டு பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 17.8.2017 அன்று மாலை கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்றது.

தன்னுடைய பிறந்தநாள் விழா கவியரங்கில் ஏற்புரையாக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிட இயக்கங்களை, திராவிட அரசியலை பெரியாரியலிலிருந்து பெரியாரின் பங்க ளிப்பிலிருந்து பார்க்கிறது.

சில பேர் திமுக, அதிமுக நடவடிக்கைகளிலிருந்து பார்க்கிறார்கள். திமுக, அதிமுக என்பது தேர்தல் கட்சிகள். திராவிடர் இயக்கம் என்பதும், திராவிட அரசியல் என்பதும் திமுக, அதிமுக என்கிற அரசியல் கட்சிகளிலிருந்து மட்டுமே பார்ப்பது ஓர் அரசியல் அறியாமை.

தந்தைபெரியாருக்கு முன்னால் வாழ்ந்த தலித் தலைவர்கள் திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள். திராவிட மகாஜன சபை என்கிற அமைப்பைக் கட்டியவர் பண்டித அயோத்திதாசர். பெரியாருக்கு முன்னாலும் இந்த சொல் கையாளப்பட்டிருக்கிறது.

திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஓர் இயக்கம் பெரியாருக்கு முன்னால், கிட்டதட்ட 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால், ரெவரெண்ட் ஜான் ரத்தினம் அவர்களால் உருவாக்கப்பட்டது, செயல்பட்டிருக்கிறது திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே.
ஆனால், திராவிட இயக்கத் தலைவர்கள் அதாவது திமுக, அதிமுக அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாருக்குப் பின்னால் இருந்துதான் எல்லாவற்றையும் பார்க்கிற காரணத்தால், 1912ஆம் ஆண்டு திராவிடர் சங்கத்தை நிறுவிய டாக்டர் நடேசன் அவர்களிலிருந்து அந்த இயக்க வரலாறை அவர்கள் பார்க்கிற காரணத்தால், ரெவரெண்ட் ஜான் ரத்தினம் பற்றியோ, பண்டிதர் அயோத்திதாசர் அவர்களைப் பற்றியோ பேசுவதில்லை.

பெரியாரிலிருந்து திராவிட அரசியல் ஆனால், அவர்கள் கையாண்ட அந்த சொல்லாடலுக்கும், தந்தை பெரியார் முன்மொழிந்த திராவிட அரசியலுக்கும் வேறுபாடு இருக்கிறது. எனவேதான், பெரியாரிலிருந்து திராவிட அரசியலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

அதற்காக திராவிடம் என்ற சொல்லைக் கையாண்ட தாலேயே பண்டிதர் அயோத்திதாசரிலிருந்து நாம் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பார்க்க முடியாது. ரெவரண்ட் ஜான் ரத்தினம் அவர்களிடமிருந்து நாம் திராவிட இயக்க அரசியலை பார்க்க முடியாது. டாக்டர் நடேசன் அவர்களிட மிருந்துகூட திராவிட இயக்க அரசியலை நாம் பெரிதாக உயர்த்திப் பிடிக்க முடியாது. தந்தை பெரியாரிலிருந்துதான் திராவிட அரசியலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

சமூக நீதியை மய்யமாகக் கொண்ட கொள்கை பெரியார் கொள்கை


ஆகவே, தந்தைபெரியார் அவர்களின் அந்த கொள்கை சமூக நீதியை மய்யமாகக் கொண்ட கொள்கை. அதிலி ருந்துதான் கடவுள் இல்லை என்பதே வருகிறது.

கடவுள் இல்லை என்பதிலிருந்து பெரியாரியம் தொடங் கவில்லை. சமூகநீதியிலிருந்துதான் பெரியாரியம் பிறக்கிறது. சமூக நீதியிலிருந்துதான் கடவுளை மறுக்க வேண்டிய தேவை எழுகிறது. சமூக நீதியிலிருந்துதான் பார்ப்பனர் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டிய தேவை  எழுகிறது.

சமூக நீதி என்கிற பார்வையிலிருந்துதான் பார்ப்பனியம் என்கிற ஒரு கொள்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சமூக நீதி என்கிற பார்வையிலிருந்துதான் மனுதர்மத்தின் கொடூரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சமூக நீதி என்கிற பார்வையிலிருந்துதான் தீண்டாமையும் பார்க்க வேண்டியுள்ளது. சமூக நீதி என்கிற பார்வையிலிருந்துதான் ஜாதி ஒழிப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சமூக நீதி என்பதுதான் பெரியார் பார்வை ஒற்றைச் சொல்லில் சொல்லப்போனால்.

இதில் போய் நாம் திராவிடத்தால் வீழ்ந்து போனோம், திராவிடத்தால் அழிந்துபோனோம் என்று சொன்னால், இதைவிட பச்சை அயோக்கியத்தனம், பச்சைத் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

திமுக அரசியலை எதிர்ப்பது வேறு, அதிமுக அரசியலை விமர்சிப்பது என்பது வேறு.

திராவிட இயக்கக் கொள்கை என்று பார்க்கிறபோது, பெரியார் தமிழ் பேசாதவர் அல்லது தமிழை தாய்மொழியாகக் கொள்ளாதவர் என்று சொன்னால்,  அம்பேத்கர்...? எப்படி நாம் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வது? இப்படியும் சில மூடர்கள் வெளியிலே கிளம்பியிருக்கிறார்கள். அம்பேத் கரையே வடநாட்டுக்காரர் என்று சொல்லக்கூடிய, சமூக வலைத்தளங்களில் எழுதக்கூடிய மூடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி என்றால், காரல் மார்க்சை நாம் எப்படிப் பார்ப்பது? மாவீரன் லெனின் அவர்களை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது? இது அரசியல் அறியாமையிலிருந்து வெளிப்படுகிற விமர்சனங்கள்.

பெரியார் அம்பேத்கர் கொள்கை,
கோட்பாட்டு ஆசான்கள்

ஆகவே, நம்முடைய விடுதலைக்கானக் கொள்கை, விடுதலைக்கான அரசியல் எதுவோ, அதுதான் நமக்கான அடிப்படை. நமக்கான கோட்பாடு. அவற்றை நமக்குத் தந்தவர்கள் நமக்கான கோட்பாட்டு ஆசான்கள். கொள்கை ஆசான்கள்.
அப்படித்தான் தந்தை பெரியாரையும், இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் நாம் பார்க்கிறோம்.
வெறும் பிழைப்புவாதத்துக்காக அம்பேத்கரை பயன்படுத்துபவர்கள் அல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி.

பெரியார் பாசறையில் உருவானவர்கள் அண்ணா, கலைஞர்

ஆகவே, அந்த பெரியாரியம் உருவாக்கிய பாசறையில் வளர்ந்தவர் அண்ணா, அந்த பாசறையில் வளர்ந்தவர் கலைஞர். ஆகவேதான் அவர்கள் இந்தியை எதிர்க்கவும், சமஸ்கிருதத்தை எதிர்க்கவும், வேறு எந்த மாநிலத்திலும் அதைப்பற்றி சிந்திக்காதபோது, மாநிலங்களுக்கான உரிமைபற்றி பேசவும் துணிச்சலைப் பெற்றார்கள்.

ஏன் ஆந்திராவிலே மாநில சுயாட்சிக் கோரிக்கை வரவில்லை? ஏன் கேரளாவிலே மாநில சுயாட்சி என்கிற குரல் ஒலிக்கவில்லை? ஏன் பிற மாநிலங்களில் அந்த சிந்தனை முகிழ்க்கவில்லை? அங்கே பெரியார் பிறக்க வில்லை, அதனால் முகிழ்க்கவில்லை.

வடவர் எதிர்ப்பு அல்லது இந்துத்துவ எதிர்ப்பு அல்லது பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அல்லது பார்ப்பனிய கொள்கை எதிர்ப்பு இந்த சிந்தனைதான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்கிற முழக்கத்தை உருவாக்குகிறது.

ஒட்டு மொத்த இந்தியர் என்ற உணர்விருந்திருந்தால் இந்த முழக்கம் வந்திருக்காது. ஆக, இதற்கான வித்திட்டவர் தந்தை பெரியார். அவர் பயன்படுத்திய அந்த சொல்லாடல்கள்தான் திமுகவுக்கு உரமானது.

அவர் தந்த கொள்கைதான் திமுகவுக்கு அடியுரமானது. அந்த பாசறையிலிருந்து வளர்ந்ததனால்  கலைஞர் தலைமைப்பொறுப்பை ஏற்றபோது மத்தியில்  கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கிற முழக்கத்தை  அவர் அய்ம் பெரும் முழக்கங்களில் ஒன்றாக முன்வைக்கிறார்.

இந்த கருத்து அம்பேத்கருடைய கருத்துக்கு உடன்பாடான கருத்துதான்.

தேவை கூட்டாட்சித் தத்துவம்

மத்தியில் வலுவான ஓர் ஆட்சி நிர்வாகம் தேவை.    ஆனால், Federal Set up என்ற கூட்டாட்சித் தத்துவத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்.  அதைத்தான் இந்திய அரசமைப்புச்சட்டம் வலியுறுத்துகிறது.

ஆக, இந்த  கூட்டாட்சித் தத்துவம் என்பது இன்றைக்கு இருக்கிறதா? இதிலிருந்துதான், மோடி எதிர்ப்பி லிருந்துதான் திருமாவளவன் மாநில சுயாட்சி மாநாடு என்கிற சிந்தனையைப் பெறுகிறான்.

மதசார்பின்மை பாதிக்கப்படுகிறது. அதனால், மோடி அரசியலை நாம் எதிர்க்கிறோம். ஒவ்வொரு மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோகின்றன. எனவே, மோடியை நாம் எதிர்க்கிறோம்.

கல்வி உரிமை மாநிலத்துக்கே

இன்றைக்கு `நீட்’ என்பது மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் அவர்கள் நம்மீது திணிக்கிற ஒரு தேர்வு.

பல்கலைக்கழகங்கள்தான் வினாத்தாள்களை வரையறுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள்தான் தேர்வுகளை நடத்த வேண்டும். மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவர்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த அரசாங்கம் வலிந்து தோள்மீது எடுத்துக்கொண்டு, இத்தனை இடங் கள்தான், இந்த இடங்களுக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதில் நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்துகிறோம் என்று இதிலே தலையிட்டு மாநிலங்களுக்கான உரிமைகளை தட்டிப்பறிக்கிறார்கள். இந்திரா காந்தி அம்மையார் `மிசா’ அறிவிப்பு செய்த காலத்தில் மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியலிலிருந்த கல்வி தொடர்பான அதிகாரத்தை (Con current List) ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு போனார். இரண்டு பேரும் ஒத்திசைந்த பிறகுதான், அதிலே ஒரு முடிவு எடுக்க முடியும்.

மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. கல்வி உரிமை பறிபோகிறது. இந்தி திணிப்பு சமஸ்கிருத திணிப்பு மூலம் மொழி உரிமை பறிபோகிறது. ஒரே வரிவிதிப்பு முறையால் நிதி உரிமை பறிபோனது.

யாரும் மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பதால் கலாச்சார உரிமை பறிபோகிறது. உன்னுடைய அடுப்படியிலே இருக் கக்கூடிய சட்டிக்குள் என்ன கறி இருக்கிறது? கை விட்டு நான் துழாவி பார்ப்பேன் என்பது எவ்வளவு கொடூரமான எதேச்சதிகார போக்கு இது-? ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்கிற பெயரால், எதேச்சதி காரத்தை நிலைநாட்டப் பார்க்கிறார்கள். அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக மத்தியிலே குவிக்கப் பார்க்கிறார்கள்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner