எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.24 நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறாததற்கு எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார், இந்த விவகாரத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இன்று சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி இன்று சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தின. மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நீட் தேர்வு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். பிளஸ் டூ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் அளவிலேயே மாநில பாடத்திட்டம் உள்ளதாக குறிப்பிட்டார். நீட் தேர்வினால் தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடஒதுக்கீடு கொள்கை நசுக்கப்பட்டுள்ளதாகவும் கடுமையாக சாடினார். மேலும் பேசிய அவர் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வை நுழையவிடவில்லை என்றார். தற்போது தமிழகத்தின் உரிமைகள் மொத்தமாக அடகு வைக்கப் பட்டுள்ளதாக சாடினார். நீட் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சாபமும், வயிற்றெறிச்சலும் ஆட்சியா ளர்களை சும்மா விடாது என ஆவேசத்துடன் தெரிவித்தார். கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதை பாரதிய ஜனதா விரும்பவில்லை என்று இதன் மூலம் தெரிவதாக குறிப்பிட்டார். மேலும் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்காததற்கு தமிழக அரசே காரணம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கனிமொழி எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு நல்லக்கண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.