எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தி - சமஸ்கிருத திணிப்புக்குக் கண்டனம் நதிநீர், அகழ் ஆய்வில் வஞ்சனை, தமிழக மீனவர்கள் துயரம், ‘நீட்’டின் பெயரால் சமூக அநீதி சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளுக்கு எதிரான  மத்திய பிஜேபி ஆட்சியை அம்பலப்படுத்திட மக்கள் இயக்கம்

சென்னை, ஆக.26, சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள்  இவற்றில் மக்கள் விரோதமாகச் செயல்படும் மத்திய பிஜேபி ஆட்சி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட ஒத்த கருத்துள்ளவர்கள் கை கோர்த்து செயல்படு வதற்கான அழைப்பு விடுத்து திராவிடர் கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற இரு பெரும் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

25.08.2017  வெள்ளி அன்று சென்னை பெரியார் திடல்  நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அதிகார மீட்பு, இந்தி-சமஸ்கிருத  கண்டன மாநாடு களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1: இந்தி - சமஸ்கிருத  திணிப்புக்கு எதிர்ப்பு - கண்டனம்!

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மனிதவளத்துறை அமைச் சராக பதவிவகித்த ஸ்மிருதி இரானி, ஆகஸ்ட் 2014 ஆம்  ஆண்டு  இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று அறிக்கை விடுத்து மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில்  பணிபுரிபவர்கள் இந்தி கட்டாயம் கற்க வேண்டும் என்று சுற்றறிக்கை விட்டிருந்தார். அத னைத் தொடர்ந்து இந்தி கற்றவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 2015 ஆம் ஆண்டு மே மாதம் உள்துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள சுற்றறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள்,  வெளியுறவுத்துறை உள்ளிட்ட எல்லா அமைச்சர் களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலை தளங்களில் அனைத்தையும் இந்தியில் எழுத வேண்டும் என்று கூறப்பட்டது; 2016-ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் இந்தி நாளிதழ்கள், இந்தி இதழ்களை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டது,  2017 ஆம் ஆண்டு பாஸ்போர்டில் தகவல்கள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கில மொழியை அழித்து அங்கு இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆணை பிறந்தது.

குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் பொது நிகழ்ச்சியில் இந்தியில் பேச வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அரசு பள்ளிக்கூடங்களில் மூன்றாம் இடத்தில் இருந்த ஜெர்மன் மொழியை அகற்றிவிட்டு, அங்கு சமஸ்கிருதத்தைத்  திணித்தது, சமஸ்கிருத மொழிக்கென்று புதிய துறையை உருவாக்கியது, மாநில பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்க விரும்பும் பள்ளிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது. 2015-ஆம் ஆண்டு சமஸ்கிருத மேம்பாட்டுக்குழு தலைவர் திரு. என்.கோபால்சாமி அய் யங்கார் அவர்கள் கூறியதாவது: “சமஸ்கிருதம் அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆய்வு செய்ய பொருத்தமான மொழி, இம்மொழியைக் கற்பவர்கள்  தொழிற்கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது, ஆகவே மத்திய அரசு சமஸ்கிருத மொழியை அனைத்து மாணவர் களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார்.

அய்.அய்.டி மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத வகுப்புகள் மாணவர்களுக்கு வழங்க மத்திய மனிதவளத்துறைக்கு அறிவுரை வழங்கியவரும் இவர்தான்.

2016-ஆம் ஆண்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பேசும்போது ‘சமஸ்கிருதம் நவீன உலகளாவிய மொழியாகும்; இந்த மொழியின் பாரம்பரியத்தை கங்கை நதியுடன் ஒப்பிடலாம்; கங்கை  தனது துணை நதிகளை பரிசுத்தப்படுத்தி, தன் னுடைய இயல்பை அனைத்திற்கும் வழங்குகிறது. அதே போல் புனிதமான சமஸ்கிருத மொழியானது தன்னுடன் தொடர்பு கொள்ளும் அனைத்தையும் பரிசுத்தமாக்குகிறது. எனவே நம்முடைய மனதைத் தூய்மைபடுத்த சமஸ்கிருதம் இன்றியமையாததாகும் என்றும், இந்த மாநாடு நடத்தும் அனைத்துப் பொறுப்பையும் மத்திய அரசு ஏற்றுக்கொண் டது, என்றும் பேசியுள்ளார்..

இந்தி, சமஸ்கிருதம் என்பது ஆரியக்குடும்ப மொழி களாகும். ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று கூறப்படும் கோல்வால்கர்  சிந்தனைக் கொத்து (ஙிஹிழிசிபி ளிதி ஜிபிளிஹிநிபிஜிஷி) எனும் நூலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்

“மொழிப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு தான் இருக்கிறது, சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகிற காலம் வரை இந் திக்கே முன்னுரிமை தந்து நடைமுறைப்படுத்தி, ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட் டுள்ளதை செயலாற்றும் வகையில் மத்திய பிஜேபி ஆட்சி செயல்பட்டு வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண் டிக்கிறது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற இந்துத்துவாவைத் திணித்தால் அதுவே  இந்தியாவை சிதறுண்டு போக வழிவகுக்கும் என்றும் இம்மாநாடு தொலைநோக்கோடு எச்சரிக்கிறது.

தமிழ் உள்ளிட்ட இந்திய அரசமைப்புசட்டம் எட் டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள  அனைத்து மொழி களையும் ஆட்சிமொழியாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் அலுவல் மொழியாக தமிழே இருக்க வேண்டும் என்றும், அவசியப்படும் சமயத்தில் மட்டும் ஆங்கிலம் இடம் பெறலாம் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்  2. (அ) வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, காவிரி மற்றும் நதிநீர் பிரச்சினைகள்

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு ஒரு சார்பாகவும். அரசியல் உள்நோக்கத்தோடும் செயல்பட்டு வருகிறது. காவிரி மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அந்த அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று இந்திய அரசமைப்பு சட்டப்படி உயர்ந்த அதிகாரம் படைத்த உச்சநீதிமன்ற ஆணையையே கேள்விக்குறியாக்க ஒரு மத்திய அரசே முன் வந்தது இதற்கு முன்பு ஒருபோதும் நடைபெறாத அசாதாரணமான ஒன்றே!

கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு  இந்த எல்லை மீறிய  கண்மூடித்தனமான  மனப்போக்கை மத்திய அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது, டெல்லியில் எண்பது நாள்களுக்கு மேலாகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்திக்கக் கூட தயாராக இல்லை என்ற சர்வாதிகாரப் போக்கை இந்தியப் பிரதமர் மேற்கொள்வது - இந்தியாவின் ஜீவநாடியான தொழிலை மேற்கொண்டு வரும் கோடான கோடி விவசாயிகளை சிறுமைப்படுத்தும் போக்கிற்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.

நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப் படையில் நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குரிய உரிமையை நிலை நாட்ட வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலி யுறுத்துகிறது.

கருநாடக எல்லையில் மேகதாது அணையை கட்டு வதற்கு நீண்டகாலமாக கருநாடக அரசு திட்டமிட்டு அதற் கான முயற்சிகளை அம்மாநிலம் ஈடுபட்ட போதெல்லாம் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. இந்த நிலையில் மேகதாது அணையை கட்டிக் கொள்ள தமிழ்நாடு அரசு இசைவு தந்துள்ளது - தமிழ் நாட்டுக்கு இழைக்கப்பட்ட மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் துரோகம் ஆகும்  என்று இம்மாநாடு தெரிவிப்பதோடு, தமிழ்நாடு அரசின் இந்தப் போக்கிற்கு இம்மாநாடு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்

வாயிலாக தெரிவிக்கபட்ட ஒப்புதலை வாபஸ் பெற வேண்டும் என்றும் இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது. அதுபோலவே முல்லைப்பெரியாறு, பாலாறு, ஒக்கேனக்கல் போன்ற தமிழ்நாட்டுக்குரிய நீர் பிரச்சினைகளுக்கு - உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிரந்தர தீர்வு சட்ட ரீதியாக எட்டப்பட வேண்டும் என்றும் இதில் மாநில அரசு தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாப் பதில் உறுதியாக இருந்து செயல்பட வேண்டும்  என்றும் தமிழ்நாட்டு உரிமைக்கு ஊறு விளையும் காலகட்டத்தில், ஜனநாயக உரிமையைப் பின்பற்றி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஆ) தொல்லியல் துறையில்  இழைக்கப்படும் வஞ்சனை.

ஆதிச்சநல்லூர்,  கீழடி போன்ற இடங்களில் கிடைக்கக் கூடிய தடயங்கள் ஆரிய நாகரீகத்திற்கு முந்தைய திராவிட நாகரீகங்களுக்கு உரியவை என்ற காரணத்தால், அதனை இருட்டடிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு, மத்திய அரசு செயல்படுவதை இம்மாநாடு கண்டிக்கிறது. நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிலேயே ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஜாகோர் என்பவரால் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியாகும். பல காலகட்டங்களில் அங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. 1903ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த லூயீஸ் லாப்பிக்யூ அங்கு வந்து ஆய்வு செய்து பல அரிய தடயங்களை பாரீஸ் நகர் அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். மொகஞ்சதாரோ ஆய்வை நடத்திய பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி ‘மாடர்ன் ரிவ்யூ’ இதழில் குறிப்பிட்டதாவது: சிந்து வெளியிலும் பலுச்சிஸ்தானிலும் நடைபெற்ற கண்டுப்பிடிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரிலிருந்த அறுந்து போகாத ஒரு சங்கிலி, தொடர்போல் திராவிடர்களின் பண்பாட்டு தொடர்பு உள்ளது என்றார். அத்தகு ஆதிச்சநல்லூர் கேட்பாரற்றுக்  கிடக்கிறது. கீழடியும் கைவிடப்பட்டுப் போன நிலை தான். கீழடியில் ஆர்வத்துடன் பணியாற்றிய கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

மத்திய அரசின் இத்தகு மாற்றாந்தாய்ப் போக்கிற்கு இம்மாநாடு தம் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. உடனடியாக மத்திய அரசு இந்த ஆய்வுகள் திறந்தமனதுடன் தொடரப்பட ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(இ) செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையை முடக்குவது  கண்டிக்கத்தக்கது

சென்னையில் இயங்கிவரும் தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைச் சிதைக்கும் வகையில், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய பிஜேபி அரசின் போக்கிற்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் செழுமைப்படுத்தி, தனித்தன்மையுடன் இந் நிறுவனம் இயங்க ஆவன செய்யும்படி மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஈ) தேவை தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமை

தமிழக மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்து வந்த பகுதி கச்சத்தீவுப் பகுதியாகும். இந்நிலையில் அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் அன்றாட தகவ லாக இருப்பதால், அப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை உடனடியாக மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும்,  நிரந்தரத் தீர்வாகக் கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:  (அ) புதிய கல்விக் கொள்கை வேண்டாம்

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது இந்துத்து வாவையும், குலக்கல்வியையும் உள்ளடக்கமாகக் கொண்டது. பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறந்து  புதிய கல்வித் திட்டம் ஒன்றைத் திணிக்க முயலுவது ஆபத்தானதாகும். எதிலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற இந்துத்துவா கோட்பாட்டைத் திணிக்கும் இத்தகைய முயற்சியைக் கைவிட வேண்டும் என்று மத்திய பிஜேபி அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஏற்கெனவே மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டது போதாது என்று அகில இந்தியக் கல்வித்துறை என்று புதிதாகக் கொண்டு வரும் முயற்சியை இம்மாநாடு கடுமையாக எதிர்க்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்து கிறது. மாநில அரசுகளும் இந்த வகையில் கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

(ஆ) நீட்டுக்கு எதிர்ப்பு

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு திணிப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களைப் பாதிக்க செய்யும் என்றும், இந்தியா முழுவதும்  பல்வேறு பாடத் திட்டங்கள் இருக்கும் பொழுது சிபிஎஸ்இ அடிப்படையில் சிபிஎஸ்இ கல்வித்திட்ட கல்வியாளர்களைக் கொண்டு தேர்வு நடத்துவது சமநீதி யாகாது, சமூகநீதியாகாது, அது ஒரு சார்பானது என்று தொடர்ந்து பல்வேறு வகைகளில் வலியுறுத்தியும் போராடியும் வந்தோம். அவற்றை எல்லாம் புறந்தள்ளி, கண்மூடித்தனமாக மத்திய அரசு ‘நீட்’டைத் திணித்த நிலையில், நாம் தொடர்ந்து எச்சரித்தப்படியே ஒடுக்கப்பட்டவர்களும், கிராமப்புற மக்களும் மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களுக்கும் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கும் வஞ்சனைக்கும் ஆளாக்கப்பட்டுள் ளனர் என்பது தெளிவாகிவிட்டது. 

மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் இத்தகைய நடவடிக்கைகள் சமூக நீதிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குகே கொண்டுவந்து, தொழிற் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகளை மாநில அரசுகளின் பொறுப்பிலேயே விட வேண்டும் என்றும் இந்த நிலை எட்டப்பட மக்கள் மன்றத்தில் தொடர் போராட்டங்களையும் பிரச்சாரத்தையும் மேற்கொள்வது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம்  4 .சட்டவிரோத ஜனநாயக விரோத மத்திய அரசு

சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநிலங்களுக்கு உரிய உரிமைகள், ஜனநாயக கோட்பாடுகள் இவற்றில் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி சட்டவிரோதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் கண்மூடித்தனமாக நடந்துவருவதால் இந்த ஆட்சியினை எதிர்த்து பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று மக்கள் நலன் கருதி இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இந்த ஆட்சியின் போக்கை எதிர்த்து, ஒத்தக் கருத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல முற்போக்கு சிந்தனையாளர்கள், அவற்றின் அமைப்புகள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஒருங்கிணைந்து தீவிர பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் நடத்திட, தமது முன்னுரி மையாகவும், கடமையாகவும் கருதி செயல்பட வேண்டியது அவசரமும் அவசியமும் ஆன கடமையாகும்.

தேர்தலையும் தாண்டிய நாட்டு நலக் கண்ணோட்டம் என்பதால் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமையில் அக்கறை கொண்ட அனைவரும் இதில் கைகோத்துப் பணியாற்ற இம்மாநாடு அழைப்பு விடுக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner