எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மாநில சுயாட்சியை மீட்க  இந்தித் திணிப்பை எதிர்க்க உறுதியேற்போம்!

தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்

சென்னை, ஆக. 26  இந்தியை எதிர்ப்பதில் திராவிடர் கழகமும், தி.மு.க.வும் என்றும் உறுதியாக இருக்கும்  என்றார் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

திராவிடர் கழகத்தின் சார்பில்  நேற்று (25.8.2017 சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மாநில அதிகார மீட்பு மற்றும் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

தாய்க்கழகம் - திராவிடர் கழகத்தின் சார்பில்...

நம்முடைய தாய்க் கழகமாக விளங்கும் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகளாக மாநில அதிகார மீட்பு மாநாடு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்கும் சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை காணிக்கையாக்க விரும்புகிறேன்.

1968 ஜனவரி 23 என்ற நாளை யார் மறந்தாலும், தமிழினம் நிச்சயம் மறந்து விட முடியாது. அன்னைத் தமிழின் தாலாட்டைக் கேட்டவர்கள் இந்த நாளை மறந்துவிட முடியாது. காரணம் அந்தநாளில் தான் இந்திக்கு விடைக்கொடுத்து தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கும் நாள் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அன்றுதான் மும்மொழி கொள்கைக்கு விடை கொடுத்து, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை ஆக்கப் பூர்வமாக அரியணை ஏற்றிய நாள். தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கையை தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றிய நாள் தான் 1968 ஜனவரி 23 ஆம் நாள்.

இருமொழிக் கொள்கையின் பொன்விழா

இன்னும் 100 நாள்களில் இருமொழிக் கொள்கையின் பொன் விழா ஆண்டை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்த மேடையை பொன்விழா ஆண்டை கொண்டாடுகின்ற துவக்கமேடையாக நான் கருதுகிறேன். இன்றைக்கும் நாம் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்துப் போராடுவதை உறுதியாகக் கொண்டிருக்கிறோம். இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், அந்த நேரத்தில் ஒரு கருத்தை எடுத்துச் சொன்னார்கள்.

மூதறிஞர் ராஜாஜி அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒரு பொதுக்கூட்ட  மேடையில் அமர்ந்து இருக் கிறார்கள். அந்த நிகழ்வில் ராஜாஜி அவர்களின் கருத்தை சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் அன்றே பதிவு செய்திருக்கிறார்கள். ‘‘காமராஜரும், ராஜாஜியும் அமர்ந்திருக்க வேண்டிய பொதுக்கூட்ட மேடையில் அண்ணாவும், ராஜாஜியும் அமர்ந்திருக்கிறார்களே எனக் கருதலாம். ஆனால், நானும் அண்ணாவும் இப்படி அமர்ந்திருப்பதற்கான காரணம், ‘‘ணிஸீரீறீவீsலீ ஹிஸீவீtமீs ணீஸீபீ பிவீஸீபீவீ ஞிவீஸ்வீபீமீs'' என்பது தான்'', என ராஜாஜி அவர்கள் அன்றைக்கே குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.

ஆகவே,   ‘‘பிவீஸீபீவீ ஞிவீஸ்வீபீமீs'' வேண்டாம் என்கிற ஒரே காரணத் தால் தான்  இந்தியை திணிக்காதீர்கள் என்கிறோம். சமஸ் கிருதத்தை திணிக்காதீர்கள் எனத் தொடர்ந்து நாம் குரல் கொடுத்து வருகிறோம்.  ‘‘இந்தி மொழி மீது நமக்கு ஒன்றும் கோபம் அல்ல, தமிழ் மீது அளவற்ற காதல் அவ்வளவே. என் மொழிக்கு வழிவிடுங்கள், என் மொழியில் படிக்க விடுங்கள், என் மொழியில் வளரவிடுங்கள்'', என்றுதான் நாம் கூறி வருகிறோம்.

இந்தியைத் திணித்த ராஜாஜி

பிறகு எதிர்த்தாரே!

இந்தியை ஆதரித்த ராஜாஜி அவர்கள் ஆங்கிலம் இணைப்பு மொழி என்றுக் கூறியிருக்கிறார். அவர் சொன்ன இணைப்பு என்பது, நாட்டின் ஒற்றுமை, பண்பாடு. ஆனால், இன்றைக்கு நம்மிடையே சூட்கேஸ் பெட்டிகளோடு நடந்து கொண்டிருக்கும் இணைப்புப் பற்றி கூறவில்லை, அதைப்பற்றி கூற வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் அது சந்தர்ப்பவாதிகளின் இணைப்பு, ஊழல் அணிகளின் இணைப்பு.

அதேநேரத்தில், ராஜாஜி அவர்களே இந்தி இந்நாட்டை பிளவுப்படுத்தும் என அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கிறார்கள். ஆகவேதான், ‘‘இந்தித் திணிப்பை கைவிடுங்கள். தாய்மொழிக்கு அங்கீகாரத்தைக் கொடுங்கள்'', என தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். இங்கே நடக்கக் கூடிய இந்த மாநாடு 25 ஆம் தேதியில் பொருத்தமாக அமைந்திருக்கிறது.  இதேபோல ஒவ் வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதியில் தான் தமிழுக்காக உயிர் நீத்திருக்கும் நம்முடைய மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தக் கூடிய நாள்.

தமிழ்மொழிக்கான திராவிட இயக்கத்தின் போராட்டம் உணர்வுமிக்கது, உறுதிமிக்கது. அது நீதிக்கட்சியாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி, தமிழ்மொழியின் உரிமைகளுக்காக குரல் எழுப்பக்கூடிய ஒரு மாபெரும் இயக்கமாக அந்த இயக்கங்கள் இருக்கிறது என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

தி.க.வும், தி.மு.க.வும்

ஒரு துளியும் பின்வாங்காது!

நான் பெருமையோடும், உரிமையோடும் சொல்கிறேன், திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, தி.மு.கழகமாக இருந்தாலும் சரி அதிலிருந்து ஒரு துளிகூட பின்வாங்கி விடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நம்மு டைய தலைவர் கலைஞர் அவர்கள், இங்கு மேடையில் அமர்ந் திருக்கக்கூடிய நம்முடைய ஆசிரியர் அவர்கள், அதேபோல இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து அதற்காக போராடி வருகிறார்கள். எனவே, பொருத்த மாக இந்த மாநாடு அந்த தேதியில் நடந்திருக்கிறது.

இப்பொழுது ஆறாவது களம்!

அந்த வகையில் தான் தாய்க் கழகத்தின் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஒரு தாய் பிள்ளையாக பங்கேற்கும் அரிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்தத் தாய் வீட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியோடு மட்டுமல்ல, உணர்ச்சியோடும் வந்திருக்கிறேன். இந்தித் திணிப்பை பொறுத்தவரை பல போராட்டக் களங்களை நாம் சந்தித்திருக்கிறோம். 1937 முதல் 1940 வரை சந்தித்தப் போராட்டம், அது முதல் களம். 1948 முதல் 1950 வரை சந்தித்தக் களம், இரண்டாவது களம். 1953 ஆம் ஆண்டிலிருந்து 1956 ஆம் ஆண்டு வரை சந்தித்த களம், மூன்றாவது களம். 1959 முதல் 1961 வரை சந்தித்தது நான்காவது களம். 1963 முதல் 1965 வரை அய்ந்தாவது களம். இந்த அய்ந்துக் களங்களை சந்தித்த நாம் இப்போது ஆறாவது களத்தை சந்திக்க அவசியத்திற்கு வந்திருக்கிறோம். அந்த களம்தான் இந்த மாநாட்டின் மூலமாக தொடங்கப்படுகிறது என்பதை நான் உளமாற நம்புகிறேன். இந்த ஆறாவது களத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? என்ன காரணம்? இன்று மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியில் இந்தித் திணிப்பு தீவிரமாகியி ருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தி பேசாத மற்ற மாநிலங்களில் கூட இந்தித் திணிப்பு இன்று ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியிருக்கிறது.

பி.ஜே.பி. ஆட்சியின் திணிப்பு வேலைகள்

பிஜேபி ஆட்சி வந்த பிறகு இருக்கின்ற மாற்றங்களை பட்டியிலிட்டு சொல்ல வேண்டுமென்றால்,

டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் கொண் டாடப்படக் கூடிய ஆசிரியர் தினத்தை ‘குரு உத்சவ்' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.

சமஸ்கிருத மொழியைக் கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு.

அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இந்தியை முதல் பாடத்திட்டமாக  வைக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின் மூலமாக சமஸ்கிருதத்திற்கு முடிசூட்டு  விழா  நடத்தும்  திட்டம்.

வங்கிகளில் பணப் பரிவர்த்தனைக் குறித்த மின்னஞ்சல்கள், கைப்பேசி குறுஞ்செய்திகள் ஆகியவை இந்தியில் இருக்க வேண்டும்.

பணம் எடுக்கக்கூடிய ஏ.டி.எம் சிலிப்புகளில் கூட இந்தி இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ் மொழிக்கு விடைக்கொடுத்து, அதை இந்திக்கு மாற்ற வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை மத்திய அரசு அலுவலகங்களில் ரத்து செய்யக்கூடிய நிலை.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை கொண்டு வருவோம் என்ற செய்தி, 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் புதிய நோட்டுகளில் தேவநாகரி எண் எழுத்துகளை அச்சடிக்கக்கூடிய கொடுமை.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை, அமைச் சர்களின் பதிலுரை ஆகியவற்றை எல்லாம் இந்தியில் நிகழ்த்த லாம் என்ற ஒரு புதிய திருத்தம்.

விமானப் பயணங்களுக்கான பாஸ்போர்ட் இந்தியில் அச்சடிக்கப்படும் என்ற அறிவிப்பு.

ரயில் டிக்கெட்டுகளை இந்தியில் அச்சடிக்க உத்தரவு.

இந்திப் பேசாத மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ மற்றும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்திக் கட்டாய பாடம்.

அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகள் அனைத்தையும் இந்தியில் எழுத லாம் என குடியரசுத் தலைவரிடம் அரசு உத்தரவுப்பெற்ற கொடுமை.

மத்திய அரசின் விளம்பரங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்தியில் இருக்க வேண்டும் என்ற திட்டம்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்திக்கு முக்கி யத்துவம்

என மிக நீண்டப்பட்டியல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம் மத்தியில் நடக்கக்கூடிய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி. அதற்கு நம்முடைய தமிழகத்தில் குதிரை பேரத்தால் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி துணை நின்றுக் கொண்டிருக்கக்கூடிய கொடுமை. பிஜேபியின் எடுபிடிகளாக, அடிவருடிகளாக, அடிமைகளாக இருக்கிறார்கள். காரணம், அவர்களது தலைக்கு மேல் தூக்கு கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது.தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.

மாணவர் பருவத்திலேயே தலைவர் கலைஞர்

அமலாக்கத்துறை வழக்குகள், வருமான வரித்துறை ரெய்டு கள் என அவர்கள் அஞ்சி நடுங்கி, ஒடுங்கி மத்திய பாஜக ஆட்சிக்கு அடிமைகளாக மாறியுள்ள கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, நான் இளைஞர்களை அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, தலைவர் கலைஞர் அவர்கள் தனது பொதுவாழ்வைத் தொடங்கிய நேரத்தில், திருவாரூர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், திருவாரூர் தெற்கு வீதியில் மாணவர்களை ஒன்றுதிரட்டி, இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில், புலி -  கயல் -  வில் என முக்கொடி ஏந்தி, ‘‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க'', என முழங்கியபடி நகர வீதிகளில் வலம் வந்தபோது தான், தலைவர் கலைஞர் அவர்களின் பொதுவாழ்வு தொடங்கியது.

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் 1967 இல் ஆட் சிக்கு வருவதற்கே இளைஞர்களும், மாணவர்களும் தான் காரணம் என்பதை யாரும் மறுக்க, மறைக்க முடியாது. தமிழகத்தில் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து அன்று நாடு முழுவதும் நடைபெற்றப் போராட்டத்தினால், தமிழகத்தின் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு, காராகிருகத்தில் அடைக்கப்பட்ட நேரத்தில், மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தைக் கையில் எடுத்தார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் ராஜேந்திரன்

அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் படித்துக் கொண்டிருந்த மாணவர் ராஜேந்திரன் என்பவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் பெற்றடுத்த இளைஞர், அந்தக் கல் லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை ஒன்றுதிரட்டி ஊர்வலம் வந்த நேரத்தில், காவல்துறையினரால் சுட்டுத் தள்ளப்பட்டு, குண்டடிக்கு ஆளாகி, ரத்த வெள்ளத்தில் மிதந்தார். உயிர் பிரிகின்ற அந்தக் கடைசி நேரத்தில் கூட, தன்னைப் பத்துமாதம் சுமந்துப் பெற்றெடுத்த தாயைப் பார்க்க வேண்டும் என்று கேட்கவில்லை, அவர் படித்துப் பட்டதாரியாக வேண்டும் என்றுக் கனவுக் கோட்டைகளைக் கட்டியிருந்த தந்தையைப் பார்க்க வேண்டும் என்றுக் கேட்கவில்லை, அந்த நேரத்தில் அவர் வைத்தது ஒரே ஒரு முழக்கம் தான்.  ‘‘என்னுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை, இந்தி ஒழிக  தமிழ் வாழ்க'', என்றுதான் முழங்கினார்.

முடிவு கட்டுவோம்!

இன்றைக்கும் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலையில் அந்த மாணவரின் சிலை உள்ளது. எந்தவொரு பல்கலையிலும் மாணவருக்கும் சிலை வைத்த வரலாறில்லை, அந்த வரலாற்றை உருவாக்கியவர் அவர். அப்படிப்பட்டவர்கள் நிறைந்த இந்த மண்ணில், சுயமரியாதையை தட்டியெழுப்பிய தந்தை பெரியார் பிறந்த இந்த மண்ணில், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்துக்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்த மண்ணில், சமூகநீதியை நிலைநிறுத்த இன்றைக்கும் போராடி வரும் நமது தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த இந்த மண்ணில், இன்றைக்கும் நம்மையெல்லாம் ஊக்குவித்து, வளர்த்து, நமக்கு வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர் அய்யா அவர்கள் பிறந்த இந்த மண்ணில், நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, திணிக்கப்படும் இந்தி, பறிக்கப்படும் நம் மாநில சுயாட்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் சூழல் விரைவில் வருவதற்கு, இந்த மாநாடு நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கையோடு, அப்படிப்பட்ட மாநாட்டில் பங்கேற்றதற்கு நான் மிகுந்த பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன், உங்களோடு சேர்ந்து நானும் உறுதியேற்கிறேன் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு  தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner