எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சமஸ்கிருதவாதிகளைப் பார்த்து தோழர் தா.பாண்டியன் கேள்வி

சென்னை, செப்.6-  மாநாடுகளில் - நீதிமன்றத்தில் - தேர்தல் பிரச்சாரத்தில் சமஸ்கிருதத்துக்காக வக்காலத்து வாங்குவோர் சமஸ்கிருத மொழியில் பேசத் தயார்தானா? என்ற வினாவை எழுப்பினார்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள்.

25.8.2017 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள  நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கில் ‘‘இந்தி - சமஸ்கிருத திணிப்பு கண்டன மாநாட்டில்  இந்திய கம்யூனிஸ்டு   கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நாடு முழுவதிலும்

மக்களிடம் பேசவேண்டி இருக்கிறது

இம்மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

நன்றியுரை பகர இருக்கிற இன்பக்கனி அவர்களே, குமாரதேவன் அவர்களே, பெரியோர்களே, காலம் கருதி நான் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், எனக்குமுன் உரையாற்றிய அத்துணை பேரும் நாம் எதற்காக இந்த மாநாட்டில் கூடியிருக்கிறோம் - இந்த எதிர்ப்பு ஏன் இப்பொழுது ஒருமுகப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கிப் பேசியிருக்கிறார்கள். நான் மீண்டும் அதற்கொரு விளக்கவுரையாற்ற வேண்டிய அளவிற்கு அவசியமில்லை. அது இதற்குப் பிறகு நாடு முழுவதிலும் இங்கு வராத மக்களிடம் பேசவேண்டி இருக்கிறது.

ஏன் எதிர்க்கிறோம்

இந்தி மொழித் திணிப்பை?

எனவே, இது அடுத்து நாம் நடத்தப்போகிற போராட் டத்திற்கான பிரகடன மாநாடு. எனவே, ஏன் எதிர்க்கிறோம் சமஸ்கிருதத்தை? ஏன் எதிர்க்கிறோம் இந்தி மொழித் திணிப்பை? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை.

1930 ஆம் ஆண்டிலிருந்தே இந்த தமிழ் மண்ணில், அறிவுள்ளவர்கள், தமிழ் பற்றுள்ளவர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள்.

குள்ளநரி மிகக் குதூகலமாக வந்துகொண்டிருக்கிறது

இப்பொழுது நம்மை எதிர்க்கின்ற சக்தி முழு மூச்சாக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அவன் ஒரு கொள் கைத் திணிப்பாக மட்டுமல்ல, அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் தந்த வரிப் பணத்தையும் செலவிட்டு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அல்லது வேறு மாநிலங்களில் காணப்படுகிற பலவீனத்தையும் பயன்படுத்தி, இதுதான் வேட்டையாடு வதற்கு நல்ல நேரம்; நாம் குடியேறுவதற்கு நல்ல நேரம் என்று குள்ளநரி மிகக் குதூகலமாக வந்துகொண்டிருக்கிறது.

நாம் ஒப்புக்கொண்டிருக்கிற இந்த தேர்தல் ஜனநாயக முறையில், ஒரு மூன்றாண்டு காலத்தைக் கழித்துவிட்டால், இன்னும் ஓர் இரண்டாண்டு காலம் இருக்கப் போகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்றாலும், நாம் ஜனநாயகத்தை மதிக்கின்ற காரணத்தால், ஜனநாயக முறையிலேயே நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய தேர்தல் முறைகளில் உள்ள பலவீனத்தின் காரணமாய்...

அவர் வாக்குக் கணக்குப்படி பெரும்பான்மை பெற்று இந்தியப் பிரதமர் ஆனவர் அல்ல. சரியான தேர்தல் கணக்குப்படி பார்த்தால், நம்முடைய தேர்தல் முறைகளில் உள்ள பலவீனத்தின் காரணமாய், குறைந்த வாக்குள்ள வர்களாக இருந்தாலும், அதிக இடங்களைக் கைப்பற்று கின்றபொழுது, சட்டமன்றங்களுக்குள், நாடாளுமன்றத் திலும் பெரும்பான்ம பெற்று பிரதமராக வந்துவிட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் முறை வெற்றி பெற்ற போதுகூட, 33 விழுக்காடு வாக்குகள்தான் பெற்றார். 67 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நாம் தோற்றோம். வேறொன்றுமில்லை அதற்குக் காரணம் - நாம் நமக்குள் இருந்த சண்டையை கறாராக நடத்தினோம். முதல் எதிரி யார் என்பதைப் பார்க்காமல் சண்டை போட்டோம்.

இப்பொழுது இந்த மாநாடு நடத்தப்படுவதற்குள்ள காரணம், அந்த முதல் எதிரியை மறந்துவிட்டு, பக்கவாட்டில் சகோதர சண்டையில் தமிழா ஈடுபட்டு விடாதே, உத் தரப்பிரதேசம் போன்று ஏமாந்துவிடாதே என்பதற்காகத் தான் இந்த மாநாடு.

இங்கே தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் சில விளக்கங்கள் கொடுத்தார்; நான் இப்பொழுது அந்த ஒப்புதல் வாக்குமூலங்களில் இறங்க விரும்பவில்லை.

இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று எங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப் பட்டது - தேசிய இயக்கங்கள் - அதிகமாக பொதுவுடைமை இயக்கம்.

மீண்டும் நாம் பிளவுபட்டு நின்றால், அடிமைப்பட்டு விடுவோம்

ஏன்? இந்தியா ஒன்றுபட்டு நிற்கவேண்டும்; பிளவு பட்டதால்தான் அடிமைப்பட்டது. எனவே, மீண்டும் நாம் பிளவுபட்டு நின்றால், அடிமைப்பட்டு விடுவோம் என்று தான் திராவிட நாடு என்ற கோரிக்கையை எதிர்த்தே, அநேகமாக ஒரு 30 ஆண்டுகாலம், நா தழும்பேற பேசிய வன்தான், இப்பொழுது இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்.

அவர்களும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், திராவிட நாடு பிரிவினையை கைவிடுகிறோம் என்று அறிவித்தார். பெருந்தன்மையோடு அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தபொழுதே சொன்னார், கோரிக்கையை நான் கைவிடுகிறேன்; ஆனால், அந்த திராவிட நாடு என்பதற்கு வற்புறுத்திய காரணங்கள், எதுவும் தீரவில்லை என்பதை நான் நினைவுபடுத்துகிறேன் என்றார்.

அவர் நினைவுபடுத்தினார்; அவர் சொன்னது, இன்றைக்கு நினைவுபடுத்தி இருக்கிறது.

எனவே, இப்பொழுது ஒற்றுமை என்ற பெயரால், மாநில உரிமைகள், மக்களுடைய கலாச்சார, பண்பாட்டு உணர் வுகள் அத்தனையையும் மிதிக்கத் தொடங்கியபொழுது, இப்பொழுது அடிக்கடி நான் தொலைக்காட்சிகளில் பார்க் கிறேன், காட்டெருமைகள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது; யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று.

மொழி என்பது ஒரு கருவி

தமிழ்நாட்டிற்குள் என்ன நுழைந்து கொண்டிருக் கின்றன என்பதை தமிழன் தெரிந்துகொள்ளவேண்டாமா?  அவ னுக்கே தெரியும், அவன் பேசுகிற மொழி என்பது விஞ்ஞான ரீதியில், ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி கொடுக்கிற மொழி பெயர்ப்பில் க்ஷிமீலீவீநீறீமீ ஷீயீ ஜிலீஷீuரீலீt கருத்தை வெளியிடுகிற ஒரு கருவி - ஒரு சாதனம்.

அது ஒரு சாதனம் என்பது - இப்பொழுது மருத்துவத் துறைக்கு சில சாதனங்கள் வேண்டும்; போக்குவதற்திற்கு வாகனங்கள் என்ற சாதனங்கள் வேண்டும்; பறப்பதற்கு ஒரு சாதனம் வேண்டும்; கடலில் நீந்துவதற்கு ஒரு சாதனம்; தண்டவாளத்திற்குப் போவதற்கு ஒரு சாதனம். இப்படி சாதனங்கள் வேறுபடுகிறது அல்லவா! இப்பொழுது புதிய சாதனங்கள் வருகிறபொழுது, அதனை நாம் கடைபிடிக் கிறோம். பயன்படும் என்பதால். அது எந்த நாட்டில்  உருவாக்கப்பட்டது என்பதெல்லாம் பிறகு. அது பயன்படவேண்டும்.

இப்பொழுது அவன் சொல்கிறான், நீங்கள் தான் உலக வழக்கு அழிந்து ஒழிந்து, சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று இந்த ஆரிய மொழியைச் சொல்கிறீர்கள். ஆரிய மொழி உலக வழக்கில், அழிந்து ஒழிந்து - எவனும் பேசக் காணோம்.

ஆனால், பிள்ளையார் சதுர்த்தியான இன்று காலை நான்  வருகிறபொழுது, ஆங்காங்கே அது கத்திக் கொண்டிருக்கிறது.  நல்லவேளை அது என்ன சொல்கிறது என்று வைத்தவனுக்கே தெரியாது.

குண்டர்படைதான்

ஆர்.எஸ்.எஸ்.

அதேபோன்று சில விளம்பரங்களையும் சென்னை மாநகரத்தில் பார்த்திருக்கலாம். குளோபல் சம்ஸ்கிருத் எஜுகேசன் இன்ஸ்டிடியூசன் என்று பெரிய அளவில் போட்டு, விரைவில் சேருங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள்; பலர் அதில் படிக்கிறார்கள்; மேற்படியார் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேருகிறார்கள். அவர்கள்மீது எனக்குக் கோபமே இல்லை. ஏனென்றால், அவர்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், நன்னா பேசுவா; நம்முடைய சங்க கால இலக்கியங்கள், வள்ளுவர் எதுவுமே அவர்களின் நாக்குகள் போகாது. நன்றாகப் பேசுங்கள் - பாரதீய ஜனதா கட்சி - என்னைப் பொறுத்த வரையில், இதை எதிர்க்கிறேன், அதை எதிர்க்கிறேன் என்று ஒவ்வொன்றாக அடுக்கவில்லை.

பாரதீய ஜனதா கட்சியின் அடிப்படை கொள்கையே மனுஸ்மிருதி - வருணாசிரும தர்மம். அதற்காக தொண்டர் படை என்று சொல்லக்கூடிய குண்டர் படைதான் ஆர்.எஸ்.எஸ். இதை இப்பொழுது பரிமாறுவதற்கு சங் பரிவார்.

இப்பொழுது அவனுக்கு உலக பின்னணியும், பின் ஆதரவும் வந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் பணம் கொடுத்து ஆதரிக்க வந்திருக்கிறார்கள்.

எனவே, ஏகாதிபத்தியம், கார்ப்பரேட் நிறுவனம், வகுப்புவாதம் இவை அத்தனையும் ஒரு பேயாக உரு வெடுத்து வந்திருப்பதுதான் பாரதீய ஜனதா கட்சி.

நான் சொல்வதற்கு முன்பே, நமக்குப் புரிவதற்காக அவர்களே சொல்லிவிட்டார்கள். கழகங்கள் இல்லாத தமிழகம். கவலை இல்லாத தமிழகம். இதைச் சொன்னதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. தாமரை பூக்கப் போகிறது - ஆளப் போகிறது.

தாமரை பூக்கும் என்று எவனாவது சொல்வானா?

அவர்களுக்குக் கண்கள் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு குளத்தைப் பார்த்து இப்பொழுது தாமரை பூக்கும் என்று எவனாவது சொல் வானா? ஆனால், துணிந்து சொல்கிறான்.

அவர்களுக்கு நாம் வைக்கின்ற ஒரே ஒரு வேண்டுகோள். நான் சமஸ்கிருதத்தையும் எதிர்க்கவில்லை, இந்தியையும் எதிர்க்கவில்லை, மேற்படியாளையும் எதிர்க்கவில்லை - ஏனென்றால், எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. நான் ஆறு ஆண்டுகள் டில்லியில் என்னுடைய காலத்தைக் கெடுத்தேன் - நாடாளுமன்றத்தில் தெரியாத்தனமாக. அப்பொழுது நான் கற்றுக்கொண்டது இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் - ‘ஜாவ்’, ‘நஹி’ எவ்வளவு அருமையா சொற்கள் பார்த்தீர்களா?

அதைத்தான் இப்பொழுது இவர்களுக்கும் சொல்கி றேன். நஹி, ஜாவ். மூன்றாவது வார்த்தையை நான் படிக்கவேயில்லை. ஏனென்றால், எனக்கு அவ்வளவுதான் தெரியும். நீ என்ன பேசினாலும் எனக்குப் புரியாது. அந்த இரண்டு வார்த்தைகள்தான் எனக்குப் புரியும் - உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

‘ஜாவ்’ என்று சொன்னால்தான்

அவனுக்குப் புரியும்!

இதைச் சொல்வதற்காகத்தான் அந்த இரண்டு வார்த்தைகளையும்கூட படித்தேன். போடா என்று சொன்னால், அவனுக்குப் புரியாது. ஜாவ் என்று சொன்னால்தான் அவனுக்குப் புரியும்.

நீ இரண்டே இரண்டு காரியம் செய். இது கருத்தை வெளியிடுகிற கருவி.

இப்பொழுது சுஷ்மா சுவராஜ் சொல்லியிருக்கிறார், உலக அறிவே வரும்; நுண்ணறிவு வரும்; இந்தியா முன்னேறும் என்று.

தொடையில் கயிறு திரித்துவிடலாம் என்று நினைக்காதே!

இன்னும் என்னென்ன பஜனை பாட முடியுமோ பாடு. ஒரே ஒரு வேண்டுகோள், நீங்கள் வைக்கின்ற கடைகள் அத்தனையிலும் பெயர்ப் பலகைகளை சமஸ்கிருதத்தில் எழுது.

நீ நடத்துகிற மாநாடுகள் அத்தனையிலும், சமஸ் கிருதத்திலேயே பேசு.

நீதிமன்றத்திலும் நீ சமஸ்கிருதத்திலேயே வாதாடு

தேர்தல் பிரச்சாரத்திலும் மறக்காமல் சமஸ்கிருத்த திலேயே நடத்து.

உன்னை யாரும் தடுக்க முடியுமா? தாராளமாகப் பேசு; ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?

உன் சோன் பப்படியும் விக்காது. எனவே, நாங்கள் மீண்டும் தூங்குகிறோம், தொடையில் கயிறு திரித்து விடலாம் என்று நினைக்காதே! மற்றவர்கள் எல்லாம் ஏற்கெனவே மொழிப் போரில் போராடியிருக்கிறார்கள்.

நான் சுற்றிவளைத்துச் சொல்ல விரும்பவில்லை - இந்தி மொழி எதிர்ப்புப் போர் நடைபெற்றபொழுது, அதில் பங்கேற்காத பச்சைத் தமிழன் நான்.

நான் என்று சொன்னால், காரணம், என்னுடைய கட்சி. அதைத்தான் தீபக் பவார் இங்கே மிகவும் நாகரிகமாகக் குறிப்பிட்டார். எங்கள் மாநிலத்தில் மாநாடு நடந்தால், கம்யூனிஸ்டுகள் மேடைக்கு வந்திருப்பார்களா? என்று.

செத்துப் போன மொழியை சொல்லி, ஊமையாகப் பிறக்கிறதா?

அவர் சொன்னது உண்மை. அதை ஏன் மறைக்க வேண்டும்? ஏனென்றால், இந்தியாவின் ஒற்றுமை கெட்டுப் போய்விடும் என்று முன் அப்படி சொன்னோம் - இப்பொழுது தெளிவாக தெரியவேண்டும் - இந்தியைத் திணிக்க முயன்றால், ஒற்றுமை சாகடிக்கப்படும்.

என் பண்பாட்டையும், என் கலாச்சாரத்தையும், என் வரலாற்றையும் மறந்த பிறகு, நான் ஏன் பயன்படவேண்டும். ஒரே ஒரு வேண்டுகோள் - நீ சமஸ்கிருதத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய இந்தியா - புதிய இந்தியாவிற்கு, ஒரு புதிய மொழியை சொன்னாலும் பரவாயில்லை. செத்துப் போன மொழியை சொல்லி, ஊமையாகப் பிறக்கிறதா?

நீ  ஒன்றைப் பயன்படுத்து. நீதான் வேதங்களையெல்லாம் படைத்திருக்கிறாய். பகவத் கீதையை உலக முழுவதும் கொண்டு போகவேண்டும் என்று சொன்னாய். அதோடு விட்டாயா? அப்துல்கலாமுக்கு நினைவிடம் வைத்து, அங்க வைக்கப்பட்டுள்ள அவரது சிலையின் காலிலும் பகவத் கீதையை வைக்கிறாய். பரவாயில்லை, உனக்கு இருக்கும் பக்திக்கு பகவத் கீதையை விடாதே!

நாடாளுமன்றத்தில் பேசுவதும் இல்லை - விவாதிப்பதும் இல்லை!

ஆகவே, நீ ஆட்சியில் இருப்பதால், இந்தியா முழு மைக்கும் ஒரே வரியா? ஒரு பொதுக்கூட்டத்தில் போடு கிறாய். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா? பொதுக் கூட்டத்தில் அறிவிக்கிறாய்.

நாடாளுமன்றத்தில் பேசுவதும் இல்லை - விவாதிப்பதும் இல்லை. அதேபோல், இந்திய ராணுவ முழுமைக்கும், அர்ஜுனன் பயன்படுத்திய வில் தரப்படும்; பீமன் பயன்படுத்திய கதாயுதம் வழங்கப்படும்.

விமானங்களையெல்லாம் இனி நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கவேண்டியதில்லை. மயில்களில் ஏறித்தான் பிரதம மந்திரி உலகம் முழுவதும் சுற்றி வரப் போகிறார். பிள்ளையாருக்குப் பெருச்சாளி. இப்படியே இருந்தால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைப்பற்றி நாம் கவலைப் படவேண்டாம்.

எனவே, அந்தக் கருவிகளையெல்லாம் உன் ராணு வத்திற்குப் பயன்படுத்து; மந்திரிகளுக்கெல்லாம் மயில் பிடித்துக் கொடு; மற்றவனுக்கு எல்லாம் மாடு பிடித்துக் கொடு; எருமைப் பிடித்துக் கொடு. எங்களை தயவு செய்து விட்டுவிடு!

தமிழ் மக்களைத்

தட்டி எழுப்புவோம்!

நாங்கள் இந்த மண்ணிலே பிறந்தோம் என்பது மட்டுமல்ல, இருப்பது எங்களுக்கும் ஓர் உயிர்தான்; உனக்கும் ஒரே ஓர் உயிர்தான் என்பதை மறந்துவிடாதே!

அடிமைகளாக வாழ்வதைவிட, போராடி மடியத் தயார் என்று தமிழ் மக்களைத் தட்டி எழுப்புவோம்!

முன்பு போராட்டத்தில் ஈடுபடாமல் விட்டதையும், ஈடுகட்டுகின்ற முறையில், அடுத்த போராட்டத்தில் - பேரன்பிற்குரிய மோடி அவர்களே, இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்ததற்காக உங்களுக்கு அரிய நன்றி!

ஏனென்றால், சாவதற்கு முன்பு ஒரு போராட்டத்தை நடத்திவிட்டு சாகவேண்டும் என்று ஒரு ஆசை - நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

போராடுவோம், வாருங்கள்!

- இவ்வாறு  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner