எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் இயக்கம் இந்தியை எதிர்த்திராவிட்டால்....

தெலுங்கும், கன்னடமும் சமஸ்கிருத மயமானதுபோல் தமிழும் சமஸ்கிருதமயமாகி இருக்கும் என்பதில் அய்யமில்லை

நவோதயா  கண்டனக் கூட்டத்தில்  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரை

சென்னை, அக்.1-   இன்றைக்கு தெலுங்கும், கன்னடமும் சமஸ்கிருத மயமாகியுள்ளது - தமிழ்நாட்டில் தந்தை பெரியார், திராவிட இயக்கமும் அன்று இந்தியை எதிர்க் காதிருந்தால், தமிழுக்கும் அந்தக் கதி ஏற்பட்டிருக்கும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.

14.9.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘மாநில உரிமையைப் பறிக்கும் இந்தியைத் திணிக்கும் நவோதயாவுக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில்’’ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தின் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திரா விடர் கழகத்தின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

நம்மிடையே கருத்துரை வழங்கி அமர்ந்திருக்கின்ற பேராசிரியர்  அருணன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறப்புரை யாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் வி.பி.துரைசாமி அவர்களே,

மனுதர்மம் எப்படி கோலோச்சுகிறது?

இங்கே மனுதர்மம் எப்படி கோலோச்சுகிறது? அதனை வீழ்த்துவதற்கு நாம் எவ்வாறு கைகோர்க்கவேண்டும் என்று மிகவும் உணர்ச்சிகரமாக இங்கே உரையாற்றி அமர்ந்திருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் முத்தரசன் அவர்களே,

தமிழர் தலைவரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் தலைவர் அவர்கள் விடுத்த

அழைப்பை ஏற்று...

ஒரே நாள் இடைவெளி - தமிழர் தலைவர் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, பெரியாரின் பெருந்தொண்டர் களாகிய நீங்கள் திரண்டு வந்திருப்பது, பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முதலில் உங்களுக்கு என்னுடைய பாராட்டு தலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிஞர் அவர்களிடத்தில் நான் கேட்டேன், ‘‘ஒரு நாள் இடைவெளியில் அழைப்பு விடுத்தால், எப்படி கூட்டம் வரும்?’’ என்றேன்.

‘‘பாருங்கள், வருவார்கள்’’ என்று சொன்னார்.

திராவிடர் கழகத் தொண்டர்கள் எப்பொழுதும் களத்தில் நின்று, தமிழர் தலைவர் அவர்களின் கட்ட ளையை ஏற்று, செயல்படக்கூடியவர்கள் என்பதை இந்த நிகழ்வின்மூலமும் உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது எப்படி நியாயம்?

11 ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்தத் தீர்ப்பு வருகிறது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் தமிழர் தலைவர் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, நம்முடைய கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, மாநில சுயாட்சி மாநாடு குறித்து உங்களோடு சில நிமிடம் பேசவேண்டும் என்று பேசியதும், நவோதயாப்பற்றி பொங்கினார்; குமுறினார்; ஆத்திரப் பட்டார். பார்த்தீர்களா? இந்தத் தீர்ப்பை, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது எப்படி நியாயம்? என்று ஒரு இளைஞனைப்போல, அதாவது இளைஞர்கள் என்றால், கொஞ்சம் வேகமாக இருப்பார்கள் - அப்படி, இந்த வயதிலும்கூட, தமிழர் தலைவர் அவர்கள், அநீதி கண்டு பொங்குகிற, குமுறுகிற ஒரு ஆற்றலாளராக, தலைவராக இருக்கிறார்.

நாம் எதிர்வினை ஆற்றவேண்டும்; நம்முடைய கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டும்

நான் நேரில் வருகிறேன், உங்களை சந்திக்கிறேன் என்று அவரிடத்தில் ஒப்புதல் பெற்று, திடலில் பேசிக் கொண்டிருந்தபோதுதான், உடனடியாக நாம் எதிர்வினை ஆற்றவேண்டும்; நம்முடைய கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டும் என்று, இந்தக் கண்டனக் கூட்டத்தை அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், எவ்வளவு விரைவாக நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் செயல்படுகிறார் என்பதற்கு இன்னொரு சான்று, இந்த மேடையில் வெளியிடப் பட்டிருக்கிற இந்தப் புத்தகம்.

நெ.து.சுந்தரவடிவேல் அவர்களின்

உரை - நூலாக!

நெ.து.சு. அவர்களின் உரை, 1986 ஆம் ஆண்டில், திராவிடர் கழகம் கூட்டிய மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில், அவர் ஆற்றிய உரையைத் தேடிப் பிடித்து, அதை மீண்டும் இரண்டாம் பதிப்பாகக் கொண்டு வந்து, இப்பொழுது நம்முடைய கைகளில் இப்பொழுது கொடுத்திருக்கிறார், ஒரு நாள் இடைவெளியில். இதைத்தான் செயல் தீரம் என்பது; செயல் திறன் என்பதும், செயல் தீரம் என்பதும் இதுதான்.

நெ.து.சு. அவர்கள் ஆற்றிய உரை எங்கே என்று தேடிப் பிடித்து, அந்த உரைக்கு ஒரு பதிப்புரை எழுதி, முன்னுரை எழுதி, அந்த உரையைத் தொகுத்து, மலிவு விலையில் 10 ரூபாய்க்கு நம்முடைய கைகளில் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 30, 40 பேர் மேடைக்கு வந்து வாங்கினார்கள், நான் எண்ணிக் கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் 10 புத்தகங்களை வாங்கினார்கள்.

‘தி டயனமிக் லீடர் ஷிப்!’

ஆக, நம்முடைய கருத்துகளை எப்படி பரப்பவேண் டும்? எப்படி மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும்? எப்படி உடனடி எதிர்வினை  ஆற்றவேண்டும்? எப்படி விரைவாகத் திட்டமிட வேண்டும்? என்பதற்கு இன்றைக் கும் ஒரு சான்றாக இருக்கிறார் தமிழர் தலைவர் அவர்கள்.

‘‘தி டயனமிக் லீடர் ஷிப்’’ என்று ஆங்கிலத்தில் சொல் வார்கள். அதுதான் தமிழர் தலைவர்.

ஏன் நாம் இதனை எதிர்க்கவேண்டும்? என்பதற்கு, நெ.து.சு. அவர்களின் உரையே ஒரு சான்றாக இருக்கும்.

நெ.து.சு. அவர்கள் தோலுரித்திருக்கிறார்

குடிசைகள் மண்டிக் கிடக்கும் இடத்தில், ஒரு அரண் மனையைக் கட்டுவதுபோல், இந்த ஆட்சியாளர்கள், எந்தக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத பள்ளிகள் இருக்கின்ற நாட்டில், மிகச் சிறப்பான ஒரு பள்ளிக்கூடத்தை நாங்கள் கட்டப் போகிறோம்; அதுவும் 30 ஏக்கர் பரப் பளவில் கட்டப் போகிறோம். அதற்குக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப் போகிறோம் என்று ஒரு மத்திய அரசு அறி விக்கிறது என்றால், எந்த அளவிற்கு அவர்கள் ஆணவமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நெ.து.சு. அவர்கள் தோலுரித்திருக்கிறார்.

இந்தக் குழந்தைகளுக்கு எந்த மொழியைக் கற்றுத் தரவேண்டும்? படிக்கின்ற காலத்திலேயே அவர்களுக்கு இரண்டு மணிநேரம் பயிற்சி அளிப்பது என்பதும், அந்த நவோதயா திட்டத்தில் ஒன்றாக இருக்கிறது; அதையும் கடிந்திருக்கிறார், கண்டித்திருக்கிறார்.

பிள்ளைகளை வெறும் பாட்டாளிகளாக வளர்க்கக் கூடாது; அவர்களை சுதந்திரமாகக் கற்க விட வேண்டும். படிக்கின்ற காலத்திலேயே ஏதேனும் ஒரு பயிற்சி என்று, தொழிற்பயிற்சியைக் கற்றுத் தருவதும் தவறு என்று கண்டித்திருக்கிறார்.

‘‘புதிய தோன்றல் கல்வி நிறுவனம்’’

இந்தப் பள்ளிகளுக்கு அவர்கள் வைத்திருக்கின்ற பெயர் நமக்குப் புரிகிறதா பாருங்கள். ‘நவோதயா வித் யாலயா’.

புதிய உதயம் - கல்வி நிலையம் என்று நாம் அதனை மொழி பெயர்க்கலாம். நாம் பள்ளிகள் என்று சொல்கிறோம்; அவர்கள் வித்யாலயா என்று சொல்கிறார்கள்.

நவோதயா என்றால், நவம் என்றால், புதிய என்றும் பொருள் உண்டு. நவம் என்றால் ஒன்பது என்றும் பொருள் உண்டு. நவோதயா என்றால், புதிய உதயம், புதிய தோன்றல் என்று பொருள்.

எப்படி நம்மீது அவர்கள், அவர்களின் மொழியை, அவர்கள் பேசுகிற ஒரு மொழியைத் திணிக்கிறார்கள் என்பதற்கு, இந்தப் பெயர் சூட்டலே ஒரு சான்று. எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், அதனை நவோதயா வித்யா லயா என்றுதான் சொல்லவேண்டும். அதனை நாம் தமிழ்ப் படுத்திச் சொன்னால், ‘‘புதிய தோன்றல் கல்வி நிறுவனம்’’ என்று சொன்னாலும், அது பொருத்தமாக இருக்காது.

நேர்மைத் திறம் உள்ளவர்கள்

இந்த இடத்தில் ஒன்றை நான் பாரதீய ஜனதா கட்சிக் காரர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த மேடையில் இருக்கிற தலைவர்கள், எப்பொழுதும் பாரதீய ஜனதா வின்மீது ஒரு வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள். ஆகவே, எதை அறிவித்தாலும், இவர்கள் எதிர்ப்பார்கள் என்று ஒரு பொதுவான பார்வையை அவர்கள் கொண்டிருப்பார்கள். இந்த மேடையில் உள்ளவர்கள் எப்பொழுதும் நேர்மைத் திறம் உள்ளவர்கள் என்பதற்கு, இந்த நிகழ்வு ஒரு சான்று.

மக்களுக்கு எதிரான திட்டம் எதுவாக இருந்தாலும், எதிர்ப்போம்!

ஏனென்றால், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது, பாரதீய ஜனதா அல்ல; அன்றைக்குப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள்தான்; காங்கிரசு கட்சித் தலைவர் தான். காங்கிரசு கட்சியோடு தோழமையோடு இருந்தாலும், இந்தத் திட்டம் தவறு என்பதால் எதிர்க்கிறோம். அதுதான் மிக முக்கியமானது.

ராஜீவ் காந்தி கொண்டு வந்த திட்டம் அல்லது காங்கிரசு ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ப தினால், அந்தத் திட்டத்தை நாம் எதிர்க்கக்கூடாது என்ப தில்லை. பாரதீய ஜனதா கொண்டு வந்தால்தான் எதிர்ப் போம்; காங்கிரசு கொண்டு வந்தால் எதிர்க்கமாட்டோம் என்பதல்ல. மக்களுக்கு எதிரான திட்டம் எதுவாக இருந் தாலும், எதிர்ப்போம். அதற்கு இந்த நிகழ்வுதான் ஒரு சான்று.

இந்தியாவில் உள்ள எல்லா பள்ளிகளையும், தரம் உள்ள பள்ளிகளாக மாற்றவேண்டும்

ராஜீவ் காந்தி அவர்கள், பிரதமராக இருந்த காலத்தில், அறிவிக்கப்பட்ட திட்டம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி. அந்தப் பள்ளியில், 70, 80 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஒரு மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிற நிலை இருந்தாலும், இவர்கள் செலக்டிவாக 80, 100 பேரை தேர்ந்தெடுத்து, 30 ஏக்கர் பரப்பளவில், எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டி, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எல்லாம் இலவசம் என்கிற பெயரில், கல்வியைத் தருகிறார்கள் என் றால், இதற்கு ஒரு உள்நோக்கம் இருக்குமா? இருக்காதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நாட்டு நலன் உள்ளவர்களாக இருந்தால், சமூக நலன் உள்ளவர்களாக இருந்தால், அதேபோன்ற தரம் உள்ள பள்ளிகளை, இந்தியாவில் உள்ள எல்லா பள்ளிகளையும், தரம் உள்ள பள்ளிகளாக மாற்றவேண்டும்.

நவோதயாவுக்கு எப்படி  இலவசமாக எல்லாவற்றையும் நீ தருகிறாயோ, அப்படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா பள்ளிகளையும், இலவசப் பள்ளிகளாக மாற்றவேண்டும். அதுதான் நாட்டு நலன்மீது அக்கறையுள்ள ஒரு போக்காகும். போதிய கட்டமைப்பு வசதிகள் இல் லாமல், மரத்தடியில் பள்ளிகள் நடைபெறுகின்றன. கழிப் பறைகள் இல்லை; ஆய்வக வசதிகள் இல்லை; விளை யாட்டுத் திடல்கள் இல்லை; நூலகங்கள் வசதிகள் இல்லை; குடிநீர் வசதிகள் இல்லை. இப்படிப்பட்ட நிலையில், பள்ளிகள் ஏராளம் இருக்கின்ற நிலையில், அதைப்பற்றி யெல்லாம் எனக்குக் கவலையில்லை; நான் மிகச் சிறப்பான ஒரு பள்ளியை உருவாக்குவேன், அந்தப் பள்ளியில் நான் விரும்புவதைக் கற்றுத் தருவேன் என்றால்,

நம்மை எதிர்ப்பதற்கு, நம்மிலிருந்தே ஆட்களை உருவாக்குவது!

அவர்களுடைய உள்நோக்கம் என்ன? அவர்கள் விரும்புகிற சக்திகளை, ஒவ்வொரு மாவட்டத்திலும் உரு வாக்கவேண்டும்.

இந்தித் தெரிந்தவர்களை உருவாக்கவேண்டும்; சமஸ் கிருதம் தெரிந்தவர்களை உருவாக்கவேண்டும்; அவர் களின் கலாச்சாரத்தைக் கற்று தந்து, அதற்கான சக்திகளை உருவாக்கவேண்டும். அதற்கான நோக்கம் என்ன? எடுத்த எடுப்பிலேயே இந்தியைப் படியுங்கள் என்றால், எதிர்க்கிறார்கள்.

ஆகவே, அவர்களுக்குள்ளேயே ஒரு புதிய வர்க்கத்தை உருவாக்கவேண்டும். அதிலிருந்து சிலரைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர் களைத் தம் சக்திகளாக வளர்த்தெடுப்பதன்மூலம், இந் தியை எதிர்க்கிறவர்களுக்கு எதிராக அவர்கள் பேசு வார்கள். நம்மை எதிர்ப்பதற்கு, நம்மிலிருந்தே ஆட்களை உருவாக்குவது. நம்முடைய கருத்துகளுக்கு எதிரான கருத்துகளைப் பேசுவதற்கு நம்மிலிருந்தே ஆட்களைத் தயார் படுத்துவது. இதுதான் அவர்களின் யுக்தி.

அண்ணன் வி.பி.துரைசாமி அவர்கள் உரையாற்றும் பொழுது சொன்னார், எச்.ஆர்.டி. என்று இந்தத் துறைக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஹியூமன் ரிசோர்ஸ் டெவ லப்மெண்ட் என்று. ஏன்? மினிஸ்ட்ரி ஆஃப் எஜூகேசன் என்று பெயர் வைத்திருக்கலாமே? அப்படித்தான் இருந் தது. கல்வித் துறைதானே இது. கல்வித் துறை என்று நேரிடையாகப் பெயர் வைக்கலாமே!

மனித வளம் என்றால் என்ன பொருள்?

கல்வித்துறையை கல்வித் தளத்தை அவர்கள் வணிகத் துறையாகப் பார்க்கிறார்கள்; வணிகத்தனமாகப் பார்க்கிறார் கள். மனித வளம் என்றால் என்ன பொருள்? பணியாற்று வதற்கான, தொழில் செய்வதற்கான ஆற்றல் உள்ளவர் களைத் தயார்படுத்துவது. ஆக, மனிதர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு, அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு, ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதற்கு, சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு, உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு, பிரபஞ்சத்தைப்பற்றி கற்றுக் கொள்வதற்கு, கொள்கை, கோட்பாடுகளைப்பற்றி, தத்துவங்களைப்பற்றி, மானுடங்களைப்பற்றி அறிந்துகொள்வதற்கான ஒரு துறையல்ல.

தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு, வணிகத் தளங்களில் வேலை செய்வதற்கு, அவனுடைய திட்டங் களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரிகளாக வேலை செய்வதற்கு, ஆட்களைத் தயார்படுத்துகிற துறை. அதனால்தான், அந்தத் துறைக்கு ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தனியார்த் துறை நிறுவனங்களுக்கும் சென்றால், ஒரு எச்.ஆர். இயக்குநர் இருப்பார்; அல்லது ஒரு ஜெனரல் மேனேஜர் இருப்பார். அவருடைய வேலை என்ன வென்றால், அந்தந்தத் துறையில் தகுதி உள்ள ஆட்களைத் தேர்வு செய்து, பணியில் அமர்த்துவது.

ஆகவே, இந்த ஆட்சியாளர்கள், கல்வித் துறையை, கல்வித் துறையாகப் பார்க்காமல், தங்களுக்குப் பணியாற் றக்கூடிய வேலையாட்களைத் தயார் செய்கிற மனித வளத் துறையாகப் பார்க்கிறார்கள். ஒரு கமர்ஷியல் அப்ரோச் - ஒரு வணிக நோக்கு.

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரும் நவோதயாவை எதிர்த்தார்

ஆக, இப்படிப்பட்ட  இந்த சூழலில்தான், நாம் நவோ தயா பள்ளிகளை எதிர்க்கிறோம். 30 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் நவோதயா இல்லை. இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்தக் கருத்துகளுக்கெல்லாம் உடன் படக்கூடிய ஒரு சிந்தனை உள்ளவர்தான் எம்.ஜி.ஆர். அதாவது இந்துத்துவ கருத்துகளுக்கு அவர் எதிரானவர் அல்ல; கடவுளை மறுக்கக்கூடியவர் அல்ல. பெரியாரின்மீது மதிப்புண்டு; ஆனால், பெரியாரியத்தை உயர்த்திப் பிடிப் பவர் அல்ல. ஆனாலும், நாமெல்லாம் சேர்ந்து எதிர்த்த பொழுது, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரும் நவோத யாவை எதிர்த்தார். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

நவோதயாவை எம்.ஜி.ஆர். எதிர்த்ததினால், தி.மு.க. எதிர்த்ததினால், திராவிடர் கழகம் அதற்கு அடித்தளம் அமைத்ததினால், நவோதயா அன்றைக்குத் தடுக்கப்பட்டது. இல்லையென்றால், ஒவ்வொரு ஆண்டும், இந்த 30 ஆண்டுகளில், 32 மாவட்டங்களிலிருந்தும், ஒரு பள்ளிக்கு 100 பேர் என்றால், 3,200 பேர் ஓராண்டில் படித்து வெளியே வந்திருப்பார்கள். 30 ஆண்டுகளுக்கு எவ்வளவு பேர் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். 96,000 பேர்.

நீதிமன்றத்தை நாடி,

உள்ளே நுழைகிறார்கள்

அவ்வளவு பேரும், இந்திக் கற்றவர்களாக, சமஸ்கிரும் கற்றவர்களாக, வட இந்திய கலாச்சாரத்தை அடிப்படை யாகக் கொண்ட கல்வியை, பாடத்தைக் கற்றவர்களாக ஆளாக்கப்பட்டு இருப்பார்கள். அது தடுக்கப்பட்டது. இன்றைக்குப் புதிதாக இதை மறுபடியும் நம்மீது திணிப்பதற்கு, நீதிமன்றத்தை நாடி, உள்ளே நுழைகிறார்கள்.

யாரோ ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்பவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், அதை விசாரித்த இரு நீதிபதிகள், தமிழக அரசுக்குக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

அரசு என்பது கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் படைத்தது. அது சட்டமன்றத்திலே விவாதிக்கப் பட்டுத்தான் அந்த முடிவுகளை எடுக்கமுடியும்; நாடாளு மன்றத்திலே விவாதிக்கப்பட்டு அந்த முடிவுகளை எடுக்க முடியும். நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்? எவ்வளவு பெரிய அநீதி. எவ்வளவு பெரிய அநியாயம் இது. நீதிமன்றங்கள், நீதிபதிகள் இன்றைக்கு ஒரு சார்பு நிலை எடுத்து, அதிகாரத்தில் இருப்பவர்களையும், ஆளு வோரையும் தூண்டுதலுக்கு, அச்சுறுத்தலுக்கு இரை யாகிறார்கள்.

ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள்

என்ன செய்யப் போகிறார்கள்?

ஆக, அந்த அடிப்படையில்தான், மதுரை உயர்நீதி மன்றக் கிளை அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பினை வழங்கி யிருக்கிறது. இந்த இடத்தில் இருக்கிற மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், எம்.ஜி.ஆர். பெயரையும், ஜெயலலிதா அவர்களின் பெயரையும் சொல்லி, ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதுதான்.

அதெல்லாம் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம்; உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும்; அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைவரும் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். ஆனால், இதுவரையில் தமிழக அரசிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

நீட் தேர்வுக்கும் இவர்கள் தயாரானார்கள்; ஒருபுறம் சட்டத்தை எழுதி அனுப்பிக்கொண்டே, மறுபுறம் அவர்கள் இதற்குத் தயாரானார்கள்.

இப்பொழுது  நீட் தேர்வுக்கு ஏராளமான பயிற்சி முகாம்களை உருவாக்கப் போகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிக்கிறார்.

படித்தே தீரவேண்டும் நீங்கள் என்று இந்தியைத் திணிப்பதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

ஆகவே, அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குத் தயாராக இல்லை. இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்குத் தயாராக இல்லை.

ஏன் இந்தியைக் கற்கக்கூடாது? என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். அண்ணன் முத்தரசன் சொன்னதைப்போல, யாரும் படிக்கவே கூடாது என்று நாம் வற்புறுத்தவில்லை. ஆனால், படித்தே தீரவேண்டும் நீங்கள் என்று இந்தியைத் திணிப்பதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

இந்திப் பேசுகிற மக்களிடையே போய், தமிழ் மொழியை நீங்கள் கட்டாயம் படித்தே தீரவேண்டும் என்று நாம் சொன்னால், அவர்கள் சும்மா இருப்பார்களா?

ஏன் இந்தியைப் படித்தே தீரவேண்டும் என்று வற் புறுத்துகிறார்கள்; அதனுடைய நோக்கம் என்ன? எதற்காக மறைமுகமாகத் தொடர்ந்து இந்தித் திணிப்பில் தீவிரமாக இருக்கிறார்கள்?

தமிழ்நாட்டில் மோடியின் ஜம்பம் பலிக்கவில்லை

தேசிய இன உணர்வு என்பது வரக்கூடாது; தேசிய இன உரிமை, போராட்டங்கள் இங்கே நிகழக்கூடாது. எல்லோரும் இந்திப் பேசக்கூடியவர்களாக காலப் போக்கில் மாறவேண்டும்; ஒட்டுமொத்த இந்திய தேசமெங்கும், இந்திப் பேசுகின்றவர்களின் தேசமாக இது மாறவேண்டும். அது அவர்களுக்கு எளிது. அவர்களுடைய கருத்தைச் சொல்ல, அவர்களுடைய கருத்தியலைப் பிரச்சாரம் செய்ய, அவர்களின் மதவாத அரசியலை நிலைநாட்ட, மீண்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க, அவர்களுக்கு எளிது.

நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப்போல, ‘‘தமிழ் நாட்டில் மோடியின் ஜம்பம் பலிக்கவில்லை; அதற்கு என்ன காரணம்? இங்கே இந்தி பேசுகிறவர்கள் இல்லை, அதனால் பலிக்கவில்லை’’ என்றேன்.

இந்திப் பேசுகிறவர்கள் இங்கே கணிசமாக இருந்தால், அவர் இன்றைக்கு நம்முடைய தமிழகத்தையும்கூட சுவீகரித்திருப்பார்; சுவாகா செய்திருப்பார். அவர் தமிழ கத்தில் வந்து பேசியது எடுபடவில்லை. குஜராத்தில் பேசி னாலும் சரி, டில்லியில் பேசினாலும், தொலைக்காட்சிகளில் பரப்புகிறார்கள்; ஆனாலும், அது இங்கே எடுபடவில்லை.

இந்தி பேசக்கூடியவர்களாக நாம் மாறிவிட்டால், மிக எளிது. ஆக, நம்முடைய பாரம்பரியத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்; நம்முடைய கலாச்சாரத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள். நம்முடைய எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கப் பார்க்கிறார்கள்.

இந்த எதிர்ப்பு உணர்ச்சி என்பது, போர்க் குணம் என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் இந்தியையும், சமஸ் கிருதத்தையும் நீண்ட காலமாகவே அனுபவித்து விட்டார்கள்.

திராவிட இயக்கம் எந்த அளவிற்குத் தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பு அரணாக இருக்கிறது, இருந்திருக்கிறது, இன்னும் இருந்துகொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த வரலாற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நவோதயா என்பது

மும்மொழித் திட்டம்

ஆகவே, நவோதயா என்கிற பள்ளியின்மூலம், இந்தி யைப் படிக்கச் சொல்கிறார்கள்; சமஸ்கிருதத்தைப் படிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையில் இது மும்மொழித் திட்டம்.

இந்தி பேசும் மக்களிடையே, முதல் மொழி இந்தி. இரண்டாவது, மூன்றாவது மொழி, ஆங்கிலமும், பிறகு அவர்களின் சொந்தத் தாய்மொழி.

இந்திப் பேசாத மக்கள் தமிழ்நாட்டில். நீ வேண்டுமானால்,  உன்னுடைய தாய்மொழி தமிழை நீ கற்கச் செய்யலாம். அதிலே ஒரு விதியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இரண்டாவது மொழி, ஆங்கிலம் என்றால், மூன்றாவது மொழி இந்தி.

ஒரு இனத்தின்மீது, இன்னொரு இனம் செலுத்துகின்ற ஆதிக்கம்

ஆக, மும்மொழித் திட்டம் என்பதுதான் அதனுடைய நோக்கம். புதுச்சேரியில் இன்றைக்கு அப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த 30 ஆண்டுகளில், நவோதயா பள்ளிகளில்மூலம் படித்தவர்கள், என்ன பெரிய சாதனையை செய்துவிட்டார்கள்? அனிதா நவோதயாவில் படிக்கவில்லை - 1176 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். அவருக்கு என்ன தகுதி குறைந்துவிட்டது? ஆற்றல் குறைந்துவிட்டது?

ஆகவே, இவையெல்லாம் நம்மை ஏமாற்றுகிற வேலை. ஒரு இனத்தின்மீது, இன்னொரு இனம் செலுத்துகின்ற ஆதிக்கம் - அதனைப் புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு இதில் ஒரு தேசிய இனப்பார்வை தேவைப்படுகிறது. அப்பொழுதுதான், அந்த மொழியின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பிற மொழித் திணிப்பை ஏன் எதிர்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பாரதீய ஜனதாவை எதிர்ப்பதற்காக, காங்கிரசை எதிர்ப்பதற்காகவோ

நாம் இதனை எதிர்க்கவில்லை

ஏதோ பாரதீய ஜனதாவை எதிர்ப்பதற்காக, காங்கிரசை எதிர்ப்பதற்காகவோ நாம் இதனை எதிர்க்கவில்லை. ஒவ் வொரு தேசிய இனத்திற்கும் ஒரு நீண்ட நெடிய பாரம் பரியம் இருக்கிறது; கலாச்சாரம் இருக்கிறது. அதுதான் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அது தொடர்ந்தால்தான், இன்னும் நாம் நம்மை வளப்படுத்திக் கொள்ள முடியும்; வளர்த்துக் கொள்ள முடியும். அது சிதைந்தால், நாம் இந்த மண்ணில் இரண்டாம்தரக் குடிமக் களாக அல்லது மூன்றாம் தரக் குடிமக்களாக மாற்றப்  படுவோம்.

தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்பதற்காக...

இந்திப் பேசுகிறவர்களின் ஆதிக்கம் இன்னும், இன்னும் வலு பெறும். வடவர்களின் ஆதிக்கம் இன்னும் மேலோங் கும். ஆக, ஒடுக்குமுறை என்பது தொடரும். எதிர்கால சந்ததியினர்மீதான ஒடுக்குமுறையினைத் தடுப்பதற் காகத்தான், இப்பொழுது நாம் இந்த முயற்சியை மேற் கொள்கிறோம். இந்தியின்மீதுள்ள வெறுப்பால் அல்ல; இந்தி பேசுகிற மக்களின்மீதுள்ள வெறுப்பால் அல்ல. தமிழ்த்தேசிய இனத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்ப தற்காக - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்பதற்காக.

நவோதயா என்பது மதவாத அரசியலைத் திணிப்பதற்கான ஒரு வாசல்

எனவே, நவோதயா என்பது, அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு வாசல்; மதவாத அரசியலைத் திணிப்பதற்கான ஒரு வாசல். மனு ஸ்மிருதி - அந்தக் கருத்தியலைத் திணிப்பதற்கான, நடைமுறைப்படுத்துவதற் கான ஒரு வழி. அதை நாம் எந்தச் சூழலிலும் அனு மதிக்கக்கூடாது. அந்தப் பார்வையில் இருந்துதான் இதை நாம் எதிர்க்கிறோம். அதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள், எந்தக் கட்சியையும் சார்ந்தவரல்ல. அவர் ஏன் எதிர்க்கிறார்? அவர் ஒரு கல்வி யாளர். ஒரு கல்வியாளர், நடுநிலையாக நின்று, ஜனநாயகப் பூர்வமாக சிந்தித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல,

இந்தியா முழுவதும் கூடாது!

அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வருமல்ல; திராவிடர் கழகத்தைச் சார்ந்தவருமல்ல. பெரி யாரின் சிந்தனையில் ஈர்ப்புடையவர்; அண்ணாவின்மீது மதிப்புடையவர். ஆனாலும்கூட, நடுநிலையாக நின்று, ஜனநாயகப்பூர்வமாக சிந்தித்து, மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, இந்தப் பள்ளிகளை அனுமதிக்கக்கூடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், நாம் தமிழ்நாட் டிற்குக்கூடாது என்று மட்டும் எதிர்க்கவில்லை, இந்தியா முழுவதும் இந்தப் பள்ளிகள் கூடாது என்கிறார். அதுதான் மிகவும் முக்கியமானது. எந்த மாநிலத்தின்மீதும் இது திணிக்கப்படக்கூடாது என்கிறார். அவருடைய உரையிலே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படித்தான் நீட் தேர்வையும் நாம் எதிர்க்கவேண்டும். நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் கூடாது என்பதல்ல; ஒட்டுமொத்தத்தில் இந்தியாவில் நீட் நுழைவுத் தேர்வு கூடாது. அதிலே அவர்களின் ஊடுருவல் இருக்கிறது; அதிலே அவர்களின் சதித்திட்டம் இருக்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர்

மத்தியில் ஆட்சி அதிகாரத்தை, ஒட்டுமொத்த அதிகாரத்தைக் குவிப்பதற்குப் பார்க்கிறார்கள். அதனால், கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும். அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்படும்பொழுது, புரட்சியாளர் அம் பேத்கர் அவர்கள், மாநில சுயாட்சி எந்த அளவிற்குத் தேவை இருக்கிறது என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்கவேண்டும்; மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடாது. மத்தியில் வலுவான அரசு அமையவேண்டும் என்றாலும்கூட பிரிவினை கூடாது என்றாலும்கூட, தேசிய இனத்தின் அடிப்படையில், மாநிலங்கள் நாடுகளாகப் பிரிந்துவிடக் கூடாது என்கிற கருத்துடையவராக இருந்தார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். ஆனாலும், மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று சொன்னார்.

சுயாட்சி என்றால்...

சுயாட்சி என்றால், இறையாண்மையோடு தொடர்பு டையது; வெறும் சில உரிமைகளோடு தொடர்புடையதல்ல. அரசு என்றால், அந்த அரசுக்கு ஒரு இறையாண்மை உண்டு. மாநில அரசு என்றால், மாநில அரசுக்கு இறை யாண்மை வேண்டும்.

இறையாண்மை என்றால், சுயமாக முடிவெடுக்க -

கொள்கை முடிவெடுக்க -

செயல் திட்டங்களை வரவேற்க-

சட்டங்களை இயற்ற-

இன்றைக்கு இறையாண்மை இல்லாத அரசாக தமிழக அரசு இருக்கிறது

மாநில அரசால் சட்டங்களை இயற்ற முடியுமா? மசோ தாக்களை நிறைவேற்ற முடியும். வெளிவிவகாரக் கொள் கையில் தலையிட முடியுமா? ஆற்றுநீர்க் கொள்கையில் முடிவெடுக்க முடியுமா? இரு மாநிலங்களுக்கு இடை யிலான பிரச்சினைகளில் முடிவெடுக்க முடியுமா? கல்வித் தொடர்பான கொள்கையில் முடிவெடுக்க முடியுமா? சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் முடிவெடுக்க முடியுமா?

எந்த முடிவும் எடுக்க முடியாது. எந்த அதிகாரமும் இல்லை. ஆகவே, இந்த அதிகாரம் எல்லாம் இருந்தால், அது இறையாண்மை உள்ள அரசு. இன்றைக்கு இறையாண்மை இல்லாத அரசாக இருக்கிறது. ஒரு ஏஜென்சி அரசாக இருக்கிறது. மத்திய அரசுக்கான ஒரு முகமையாக இந்த ஆட்சி இருக்கிறது.

நம் கல்வி உரிமைகளையும், இதர உரிமைகளையும் பாதுகாக்க முடியும்!

ஆகவே, மாநில சுயாட்சி என்பது ஒரு சர்வரோக நிவாரணி என்பதுபோல.

எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காண - மாநில சுயாட்சி என்பது தேவை. அந்த அடிப்படையில்தான் 21 ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாட்டினை நாம் நடத்துகிறோம். தமிழர் தலைவர் அவர்களும் அதில் முழங்கவிருக்கிறார்.

தமிழ்ச்சொந்தங்களே, 21 ஆம் தேதி நடைபெற விருக்கின்ற அந்த மாநில சுயாட்சி மாநாட்டிற்கு வாருங்கள். நவோதயாவையும் நாம் முறியடிக்க முடியும்; நீட் என்கிற தேர்வையும் நாம் முறியடிக்க முடியும். நம் கல்வி உரி மைகளையும், இதர உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரை யாற்றினார்.


தமிழர் தலைவர் தொடர்ந்து இந்தி எதிர்ப்புக் களத்தில் நம்மை நிறுத்திக் கொண்டிருக்கிறார்

நீதிக்கட்சி காலத்திலிருந்து தமிழகம் அதனை அனு மதிக்கவில்லை, கடுமையாக எதிர்த்து நிற்கிறது. அதனால்தான், நாம் வழிவழியாகப் போராட்டக் களத்தை அமைத்து வருகிறோம். நீதிக்கட்சித் தலைவர்கள், எந்தப் போராட்டக் களத்தை அமைத்தார்களோ, அதே போராட் டக் களத்தை தந்தை பெரியார் அமைத்தார். பெரியார் அமைத்த களத்தை பேரறிஞர் அண்ணா அமைத்தார்; அண்ணா அமைத்த களத்தை கலைஞர் அமைத்தார். அந்த வரிசையில், பெரியார் வழியில், இன்றைக்குத் தமிழர் தலைவர் தொடர்ந்து அந்தக் களத்தில் நம்மை நிறுத்திக் கொண்டிருக்கிறார், நம்மை களமாட செய்து கொண்டிருக்கிறார். அந்த உணர்வெல்லாம், நமக்கு இங்கிருந்து வந்ததுதான்.

நீதிக்கட்சி காலத்திலேயே 1920 ஆம் ஆண்டுகளி லேயே அவர்கள் ஒருவேளை இந்த எதிர்ப்புணர்வு இல்லாமல், அனுமதித்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பார்க்கவேண்டும்.

திராவிடர் இயக்கம்

நமக்குத் தந்திருக்கிற பாதுகாப்பு

நாமெல்லாம் இன்றைக்கு, கேரள மக்கள் அல்லது கன்னட மக்கள் அதிகம் சமஸ்கிருதம் கலந்த உரை யாடலைச் செய்கிறார்களே, அப்படித்தான் செய்து கொண்டிருப்போம்.

தெலுங்கு மக்களும், கன்னடம் மக்களும், கேரள மக்களும் அவர்கள் பேசுகின்ற அந்த மொழியில், 60 விழுக்காட்டிற்குமேல் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. அதனால், அந்த மாநிலங்களில்கூட, வட இந்திய தலை வர்களால், ஓரளவிற்குச் செல்வாக்கு செலுத்த முடிகிறது. தமிழ்நாட்டில் முடியவில்லை. அதுதான், திராவிடர் இயக்கம் நமக்குத் தந்திருக்கிற பாதுகாப்பு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner