எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.2-   பி.ஜே.பி.யின் தலைமையிலான மோடி அரசின் நோக்கம் மனுதர்மத்தைத் திணிப்பதுதான்.  ‘நீட், ‘நவோதயா’ என்பதெல்லாம் அதன் அடிப்படையில்தான் என்றார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.

14.9.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘மாநில உரிமையைப் பறிக்கும் இந்தியைத் திணிக்கும் நவோதயாவுக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில்’’ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கண்டனப் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று நிறைவாக நல்ல சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தவிருக்கின்ற பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

இங்கே எனக்குமுன் உரையாற்றிய நம்முடைய மதிப் பிற்குரிய திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அருமை அண்ணன் வி.பி.துரைசாமி அவர் களே, அதேபோல், தொடக்கத்தில் உரையாற்றிய நம்மு டைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர் மதிப்புமிக்க தோழர் பேராசிரியர் அருணன் அவர்களே,

அடுத்து மிகச் சிறப்பான முறையில், அவருக்கே உரிய முறையில் மிகுந்த எழுச்சியோடு உரையாற்ற இருக்கின்ற எனது அன்பிற்குரிய தோழர் திருமா அவர்களே,

நம் அனைவரையும் வரவேற்று, இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துக்கூறிய, திராவிடர் கழக துணைத் தலைவர் மரியாதைக்குரிய கவிஞர் பூங்குன்றன் அவர் களே, மிக அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், பெருமளவில் பங்கேற்று இருக்கக்கூடிய தோழர்களே, நண்பர்களே, பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து காப்பாற்றவேண்டும்

ஒருவரை பாம்புக் கடித்துவிட்டது என்றால், தாமதம் செய்யக்கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், அவரைக் காப்பாற்றிவிடலாம்; இல்லையானால், அவரைக் காப்பாற்ற முடியாது.

நவோதயா என்ற அறிவிப்பு வந்தவுடன், நேற்று முதல் நாள் மாலை, கவிஞர் அவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். ‘‘நாளை மறுநாள் மாலை பெரியார் திடலில் கண்டனக் கூட்டம் வந்துவிடுங்கள்’’ என்றார்; நானும் வருகிறேன் என்றேன்.

பாம்பு கடித்தவனைக் காப்பாற்றுவதுபோல், இந்த சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை யாருக்கு வரும் என்றால், சமூகத்தில் அக்கறையுள்ள மனிதர்களுக்கு மட்டும்தான் வரும். எல்லோருக்கும் அது வராது. இதெல்லாம் இயல்பாக வரக்கூடியது. திட்டம்போட்டு, கூடி, கலந்துபேசி வருவது கிடையாது. உடனடியாக எதிர் விளைவை உண்டாக்க வேண்டும். இல்லையென்றால், மிக அமைதியாக இருந் தால், எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள் என்று நினைத்து விடுவார்கள். நம்முடைய பணியின் காரணமாக, நேரமின் மையின் காரணமாக, கொஞ்சம் காலதாமதம் செய்தால், எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது, பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது

அதனால், உடனடியாக நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்; கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்கிற முறையில், நம்முடைய ஆசிரியர் அவர்கள் உடனடியாக கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது, பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது, மிகுந்த மகிழ்ச்சிக் குரியது.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ற, பங்கேற்று இருக் கின்ற உங்களிடம் நிறைய விவரங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ஆயிரக்கணக்கான விவரங்களை சொல்லக்கூடிய ஆற்றல்மிக்கவர்கள்தான் இங்கே கூடியிருக்கிறீர்கள்.

இதனை நவோதயா என்று சொல்வதா? அல்லது கோவில்களில் செய்வார்களே நெய்வேத்யம் என்பதா?

நம்முடைய மூளை விடுதலை பெறவில்லை

கீதையின் மறுபக்கம் என்கிற புத்தகம் வெளியிடப் படுகிறது; அதனை யார் எழுதினார், யார் வெளியிட்டார் என்பதை இங்கு சொல்லவேண்டிய அவசியமில்லை. வேறு எங்கேயாவது என்றால், அந்த விவரங்களையெல்லாம் சொல்லலாம். அந்த நூலில், ஆசிரியர் அவர்கள் முன்னுரை எழுதியிருப்பார். அந்த முன்னுரையில், என்னைக் கவர்ந்த சொல் என்னவென்றால், நாம் அனைவரும் விடுதலைப் பெற்றுவிட்டோம்; ஆனால், நம்முடைய மூளை விடுதலை பெறவில்லை என்று எழுதியிருப்பார். அதுதான் உண்மை.

திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செய லாளர் அவர்கள் வருத்தப்பட்டு பல செய்திகளைச் சொன் னார். மனதிற்குள் இருக்கின்ற வருத்தங்களை இங்கே வெளிப்படுத்தினார்.

இன்றைக்கு டாக்டர்களாக, வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாக இன்னும் பல பொறுப்புகளில் நம்மவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் வந்திருந் தாலும்கூட, மூளை விடுதலை ஆகாத காரணத்தினால், நன்றி மறந்து பேசுகிறார்கள். நான் எல்லோரையும் நான் சொல்லவில்லை.

நீதிமன்றம் மதிக்கும் நிலையில் இல்லை

நீதிபதி என்றால் நமக்கு ஒரு மரியாதை உண்டு; நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படவேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்பவன்தான், அதை மீறுகிறவன் அல்ல; சட்டத்திற்கு உட்பட்டவன்தான். என்றைக்கு கீழ்வெண் மணி பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ, அன்றிலிருந்து நீதிமன்றத்தை நான் மதிக்கும் நிலையில் இல்லை.

கீழ்நீதிமன்றம் குற்றவாளி என்று  10 ஆண்டுகாலம்  தீர்ப்பு வழங்குகிறது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், காரில் செல்பவர்கள் நிலம் வைத்திருப்பவர்கள் இப்படிப் பட்ட காரியத்தை செய்யமாட்டார்கள் என்று தீர்ப்பு வழங்கியது. ஒருவர், இருவர் அல்ல 44 பேர். அன்றிலிருந்தே எனக்கு நீதிமன்றத்தின்மீது இருந்த மதிப்பு, மரியாதை போய்விட்டது.

எங்கேயோ இருந்துகொண்டு, அவ்வப்பொழுது சில தீர்ப்புகளையெல்லாம் சொல்கிறார்கள். சில நல்ல தீர்ப்புகள் எல்லாம் வரத்தான் செய்கிறது; நான் இல்லை என்று சொல்லவில்லை. தனிப்பட்ட நபருக்கு பாதிப்பு வரக்கூடிய தீர்ப்பு என்றால், அது வேறு விஷயம். ஒட்டுமொத்த சமூகத் தையே பாதிக்கக்கூடிய தீர்ப்புகளாக வருகிறபொழுது, நாம் கவலைப்படவேண்டியதாக இருக்கிறது.

நமக்குத் தொடர்ச்சியாக வேலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஏதோ இன்றைக்கு, நேற்று தொடங்கிய பிரச்சினையாக நான் பார்க்கவில்லை. நீண்ட நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற போராட்டம், இந்தப் போராட்டம்.

இன்று மாலையில் நானும், ஆசிரியரும் பேசிக்கொண் டிருந்தபொழுது, நாம் எத்தனைப் போராட்டம்தான் நடத்திக் கொண்டிருப்பது; நேற்று போராட்டம், இன்றைக்குப் பொதுக்கூட்டம்; ரயில் ஏறி அடுத்த ஊரில் இறங்குவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிடுவார்கள். அதாவது நமக் குத் தொடர்ச்சியாக வேலையைக் கொடுத்துக் கொண் டிருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை செய்தால், எதிர்ப்பு வரும் என்று அவர்களுக்குத் தெரியாதா? தெரியும், தெரிந்துதான் அவர்கள் செய்கிறார்கள். தெரியாமல் அவர்கள் செய்ய வில்லை. இங்கே இருக்கிற அண்ணா தி.மு.க. அமைச் சர்களுக்கு தெரியாதா? அவர்கள் ஒன்றும் தெரியாத சைபர் என்று நான் நினைக்கவில்லை. தெரியும், அவர்களால் எதுவும் செய்யக்கூடிய நிலையில் இல்லை.

தந்தை பெரியார் படத்தையெல்லாம் பயன்படுத்து வதைப்பற்றி அவர்கள் யோசிக்கவேண்டும். இப்பொழுது இருக்கிற அரசாங்கத்தினர், பெரியார், அம்பேத்கர், அண்ணா படங்களை போஸ்டர்களில், நோட்டீசுகளில் போடுவதுபற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும். அந்தப் படங்களைத் தவிர்த்துவிட வேண்டும். இன்னும் வேறு சிலரும் இருக்கிறார்கள், அவர்களைப்பற்றியெல்லாம் நான் குறிப்பிட விரும்பவில்லை.

கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் பெரியார் படத்தைப் போடாதீர்கள்!

பெரியார் படம் என்ன, வீட்டு வாசலில்  திருஷ்டிப் பரிகாரத்திற்கு தொங்கவிடப்பட்டிருக்கும் பொம்மையா? அதுபோன்ற பொம்மையா அம்பேத்கர் படம்? எவன் வேண்டுமானாலும் அவர்களின் படத்தைப் போட்டுக் கொள்ளலாமா? கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள் போடுங்கள்; கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் போடாதீர்கள்; அப்படி போடுவதற்கு உங்களுக்குத் தகுதி கிடையாது; போடக்கூடாது; படத்தைப் போட்டு அவமானப்படுத்துகிற செயலாகும் அது.

வெற்றிகொண்டான் நகைச்சுவையாக சொல்வார்!

கொடியில் அண்ணா அவர்களின் படத்தைப் போட்டுக் கொண்டு, அவரின் பெயரில் கட்சியை நடத்திக் கொண் டிருக்கிறார்கள் - வெற்றிகொண்டான் மிகவும் நையாண் டியாகப் பேசுவார். வண்டியில் சாராயத்தை ஏற்றிக்கொண்டு, அண்ணா ஒற்றை விரல் நீட்டிக்கொண்டிருக்கும் கொடி யைப் போட்டுக்கொண்ட காரை ஓட்டிச் செல்வார்கள் என்று தமாஷாகப் பேசுவார்.

இதுபோன்ற ஒரு அரசாங்கம் இன்றைக்கு இருக்கிறது. என்ன பிரச்சினை என்றால், நேற்று தொடங்கி, இன்றைக்கு முடிகிற பிரச்சினையல்ல; நேற்று பெய்த மழையில், முளைத்த காளான் அல்ல இந்த பிரச்சினைகள் எல்லாம். நீண்ட நெடுங்காலமாக இருக்கிறது.

தலையணைக்குப் பதில் அந்தப் புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

மகாபாரதம் திரும்பத் திரும்ப அச்சிட்டு வெளியிடப் படுகிறது. சினிமாவும் வந்திருக்கிறது; நாடகம் நடந்து கொண்டு இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும், திரும் பத் திரும்பக் கேட்கிறார்கள்; திரும்பத் திரும்பப் படிக் கிறார்கள். புதிது புதிதாக அச்சிட்டு வந்துகொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கனமான புத்தகங்கள்; தலை யணைக்குப் பதில் அந்தப் புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 50 ரூபாய்க்கு விற்கிறார்கள்; பெரிய பெரிய ஓட்டல்களில் எல்லாம் அந்தப் புத்தகங்கள் அடுக்கி வைக் கப்பட்டு இருக்கிறது. ஈரோட்டுக்குச் சென்றிருந்தேன், அங்கே உயரமாக அந்தப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அதனை எட்டிப் பார்த்தேன். கல்லாப் பெட்டியில் அருகே அமர்ந்திருப்பவர், விற்பதற்குத்தான் இந்தப் புத்தகங்கள் என்றார்.

விற்பதற்குத்தான் என்று தெரிகிறது; நான் வாங்கப் போவதில்லை என்றேன். ஏனென்றால், புத்தகம் மிகவும் பெரிதாக இருந்தது. விலை அதிகமாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

உடனே, அவர் விலை மிகவும் குறைவுதான் என்று அந்தப் புத்தகத்தை எடுத்துக்காட்டினார். 50 ரூபாய் விலை என்று போட்டிருந்தது.

ராஜாஜி வேண்டும் என்றே

அதனை தவிர்த்திருப்பார்

சரி, 50 ரூபாய்தானே என்று, இரண்டு புத்தகத்தை வாங்கினேன். நம் ஆசிரியருக்குத் தெரியும், பெரியசாமி யிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தேன். ஆசிரியர் அவர் களும் அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். ஒரு பக்கம் சமஸ்கிருதம்; ஒரு பக்கம் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம் அந்தப் புத்தகம்.

ராஜாஜி எழுதிய மகாபாரதத்தை நான் படித்திருக்கிறேன். அதில், மறந்து அவர் விட்டிருக்க வாய்ப்பில்லை; ஏனென் றால், விவரம் தெரியாத ஆளில்லை அவர்; வேண்டும் என்றே அதனை தவிர்த்திருப்பார் என்று நான் நினைக் கிறேன்.

அது என்னவென்றால், கிருஷ்ணன் சாரதியாக இருப் பார்; அர்ஜூனன் தேரில் செல்வார். நடுமத்தியில் தேரை நிறுத்து என்று அர்ஜுனன் சொல்வான். அப்படியே நடு மத்தியில் தேர் சென்று நிற்கும். துரியோதனன் படைகளை அர்ஜுனன் பார்த்துவிட்டு, என்னால் போர் செய்ய முடி யாது என்று சொல்வான்.

உடனே கிருஷ்ணன், ஏம்பா முடியாது என்கிறாய். நீ போருக்கு என்றுதானே வந்தாய்; அப்படி வந்துவிட்டு, இப்போது முடியாது என்று சொன்னால், அதற்கு என்ன காரணம் என்று கேட்பார்.

அர்ஜூனன் கூறிய காரணங்கள்

அர்ஜூனன் அதற்குரிய காரணங்களைச் சொல்வான்.

எதிரே நிற்பவர்கள் எல்லாம் என்னுடைய மாமன், மச்சான் போன்ற உறவுக்காரர்கள்; குருநாதர் என்று கார ணங்களைச் சொல்லிக்கொண்டே வந்து, கடைசியாக ஒரு காரணம் சொல்வான், அந்தக் காரணம்தான் மிக முக்கியமான காரணமாகும்.

முதலில் சொன்ன காரணங்கள் எல்லாம் மிகவும் சரியான காரணங்கள். தனது உறவுக்காரர்கள் அழிந்து விடக்கூடாது என்று அந்தப் பாச உணர்வில் சொல்வது மிகமிகச் சரியானது.

அர்ஜூனன் கடைசியாக சொன்ன காரணம் என்ன வென்றால், இந்தப் போர் நடைபெற்றால், ஏராளமான ஆண்கள் உயிர் துறப்பார்கள். அப்படி அவர்கள் இறந்து போனால், ஏராளமான பெண்கள் விதவையாவார்கள். ஏராளமான பெண்கள் விதவையானால், ஏராளமான தவறுகள் நடக்கும். ஏராளமான தவறுகள் நடக்கும்பொழுது, ஆண்டவன் படைப்பான நான்கு வருண படைப்புக்கு மாறாக, கலப்பினம் ஏற்பட்டுப் போய்விடும். இது ஆண் டவன் படைத்த படைப்புக்கே எதிரானது; ஆகவே நான் போர் புரிய மாட்டேன் என்று சொல்கிறான்.

இந்தத் தகவல்கள் ராஜாஜி எழுதிய புத்தகத்தில் இல்லை. இதை மூடி மறைத்துவிட்டார். ஆனால், ஈரோட் டில் நான் வாங்கிய புத்தகத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் சமஸ்கிருத்ததில், மற்றொரு பக்கத்தில் தமிழில் எழுதியி ருக்கிறார்கள். அதனால்தான், அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்றேன்.

கடவுள் படைப்பு என்று சொல்லி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்

அன்றிலிருந்து இன்றைய வரைக்கும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, கடவுள் படைப்பு என்று சொல்லி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். அந்தக் கொள்கையை, நம்பிக்கை உடை யவர்கள் அல்ல, நம்பி அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள், நம்பிக்கை உடையவர்கள் என்பது வேறு; நாளைக்கு அதனை மாற்றிக் கொள்ளலாம்.

வருணாசிரமக் கொள்கையில், நான்கு வருணக் கொள் கையை ஏற்றுக்கொண்டவர்கள் இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள்.

இதனை சரியாக மதிப்பீடு செய்யாமல், சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதனை எதிர்த்துப் போராடாமல், தனித் தனியாகப் போராடி எந்தப் பயனும் இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமாகும்.

தமிழ்நாடு அதற்கு எதிராக இருக்கிறது

இந்தக் கொள்கையில் நம்பிக்கை இருப்பவர்கள் இன் றைக்கு அதிகாரத்தில் இருக்கிறார்கள்; ஆட்சிக்கு அவர்கள் ஏதோ ஒருவகையில் வந்துவிட்டார்கள். குறைந்த வாக்கு களைப் பெற்று, இன்றைக்கு இருக்கின்ற தவறான நாடாளுமன்றத் தேர்தல் முறையின் காரணமாக, அதிக இடங்களைப் பெற்று அதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள். பெற்ற வாக்குகள் குறைவு - ஆனால், இன்றைய தேர்தல் முறையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் - ஆகவே அதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள்.

ஆகவே, அவர்களின் சொந்தக் கொள்கைகளை, இந்த மண்ணில் அமல்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்; அதற்கு பல மாநிலங்கள் இசைவாக இருக்கின்றன. தமிழ்நாடு அதற்கு எதிராக இருக்கிறது.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

ஆட்சியில் இருக்கிறது

ஆக, எதிராக இருக்கக்கூடிய இந்த மாநிலத்தில், அவர் களுடைய கொள்கைகளை செயல்படுத்துவதற்கு, ஒரு வாய்ப்பாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட் சியில் இருக்கிறது. இந்த ஆட்சியை எப்படி வேண்டு மானலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதைப் பயன் படுத்தி, அவர்களுடைய கொள்கைகளை அமல்படுத்து கிறார்கள்.

ஒளிவு மறைவில்லாமல் நேரிடையாகச் சொல்லக்கூடியவர் ராஜாஜி!

ராஜாஜியை உங்கள் எல்லோருக்கும் தெரியும். ராஜாஜி அவர்களின் கொள்கை என்னவென்றும் தெரியும். அவர் வெளிப்படையான மனிதர். தன் மனதில்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் நேரிடையாகச் சொல்லக்கூடியவர். கம்யூனிஸ்டுகள் என்னுடைய எதிரி என்று பகிரங்கமாகச் சொல்வார். மறைத்துப் பேசமாட்டார். சட்டமன்றத்தில், கல்யாண சுந்தரமோ, ராமமூர்த்தியோ பேசுகின்றபொழுது, ராஜாஜி அவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிந்து கொள்வாராம், அவர்களைப் பார்க்கக்கூடாது என்பதற்காக. ஆனால், அதேநேரத்தில், சிவசுப்பிரமணியம் போன்றவர் களை அழைத்து, இந்தக் கம்யூனிஸ்டுகாரர்கள் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்; அவர்கள்தான் மக்கள் பிரச்சி னையை சொல்வார்கள் என்று.

ராஜாஜிக்கும், மோடிக்கும் உள்ள

வித்தியாசம்!

இப்படி வெளிப்படையாக, பகிரங்கமாகப் பேசக்கூடிய வர் ராஜாஜி அவர்கள். அவர் வெளிப்படையாக குலக்கல்வி என்று சொன்னார். அவர் முதலமைச்சராக இல்லை.

மோடி இப்பொழுது குலக்கல்வியைத்தான் அமல்படுத் துகிறார்; நேரிடையாகச் சொல்லவில்லை. இதுதான் ராஜாஜிக்கும், மோடிக்கும் உள்ள வித்தியாசம்.

இப்பொழுது நீட்டை எதிர்த்துப் போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம்; இன்றைக்கு நவோதயாவை எதிர்த் துப் போராட்டம் செய்துகொண்டிருக்கிறோம்; திட்டக்குழு விற்குப் பதில் புதிதாக நிதி ஆயோக் என்கிற கமிட்டியை போட்டிருக்கிறார்களே, அந்தக் கமிட்டி என்ன பரிந்துரை செய்கிறது என்றால்,

அரசாங்கத்தால் பராமரிக்கப்பட முடியாத பள்ளிக் கூடங்களை தனியாரிடம் கொடுங்கள் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

மோடி சர்க்காருடைய நோக்கம், மனுதர்மத்தை அமல்படுத்துவதுதான்

நீட், நவோதயா, நிதி ஆயோக் போன்றவைகளின் நோக்கம் என்ன, மொத்தத்தில் மோடி சர்க்காருடைய நோக் கம் என்ன? மொத்தத்தில் மோடி சர்க்காருடைய நோக்கம், மனுதர்மத்தை அமல்படுத்துவதுதான்; மனுதர்மக் கொள் கைகளை அமல்படுத்துவதுதான். அதனை வெளிப் படை யாகச் சொல்லாமல், மறைமுகமாக எப்படியெல்லாம் செய்யவேண்டுமோ, அந்த முறையை அவர்கள் கையாண்டுகொண்டு இருக்கிறார்கள்.

நீ திணிக்க முயற்சித்தால்,

என்னால் அதனை ஏற்க முடியாது

அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நீட்டிற்கு ஆதரவும், இந்திக்கு ஆதரவாக வும் பேசுகிறார்கள். நாம் என்ன இந்தி மொழிக்கு எதிரியா? எந்த மொழிக்கும் நாம் எதிரி கிடையாது. ஆனால், உலகத்துள்ள அத்துணை பேரறிஞர்களும்,   பேரறிஞர்கள் ஆனதும், அவர்கள் பேரறிஞர்களாக ஆன பிறகு, திரும்பத் திரும்பச் சொல்வதும், நாட்டினுடைய முன்னேற்றம், மனிதனுடைய முன்னேற்றம், மக்களுடைய முன்னேற்றம், மாணவனுடைய முன்னேற்றம், அவனவன் தாய்மொழியில்தான். இன்னொரு மொழியால் அல்ல. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள லாம்; அதுவொன்றும் தவறல்ல. நம்முடைய ஆசிரியருக்கு ஆங்கிலம் தெரியும்; தமிழ் மொழியும் தெரியும். திருமா அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும்; தமிழ் மொழியும் தெரியும். நம்முடைய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும்; பேசும்போதே இடையிடையே ஆங்கிலம் சரளமாக வந்தது; தமிழ் மொழியும் அவருக்குத் தெரியும். பேராசிரியர் அருணன் அவர்களைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. ஆனால், எனக்கு தமிழ் மொழி மட்டும்தான் தெரியும். ஆங்கிலம் தெரியாது. நான் எட்டாம் வகுப்பு பெயில். எட்டாவது பெயில் என்று சொல்வதா? ஏழாவது பாஸ் என்று சொல்வதா? என்று தெரியவில்லை. நான் படிக்கும் காலத்தில், போராட்டம், இந்திப் பிரச்சினை என்று போய்விட்டது; படிப்பிற்கு டாட்டா காட்டிவிட்டு வந்தாயிற்று. அதனை நான் பெரு மையாகச் சொல்லவில்லை. ஆங்கிலம் கற்றுக்கொள்ள நான் முயற்சி செய்யவேண்டும்; இன்னும் எத்தனை மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமோ, அதற்கு நான் முயற்சி செய்யவேண்டும். அது வேறு விஷயம்.

ஆனால், என்னிடம் நீ திணிக்க முயற்சித்தால், என்னால் அதனை ஏற்க முடியாது. வலுக்கட்டாயமாக இதைப் படி என்றால், என்னால் அதனை ஏற்கமுடியாது.

சாப்பாடு போன்றதுதான் இதுவும்; மாட்டிறைச்சி சாப் பிடக்கூடாது என்றதும், ஆசிரியர் அவர்கள் இங்கே மாட்டி றைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்; நான் வரட்டுமா? என்றேன். கட்டணம் உண்டு என்றார்கள். ஏனென்றால், அது பெரியார் திடலில் நடைபெறுகிறது என்றார்கள்.

மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றவுடன், நாங்கள் மாட்டிறைச்சி பிரியாணி போடுவோம், உன்னால் என்ன செய்ய முடியும் என்று சவால் விடும் முறையில் அந்த நிகழ்வு நடைபெற்றது.

எதற்காக நீங்கள் படிக்கிறீர்கள்; மாடு  மேயுங்கள் என்று சொல்கிறார்கள்

அதை சாப்பிடக்கூடாது; இதை நீ படிக்கவேண்டும் என்று படிப்படியாக சொல்கிறார்கள். அவர் மிகத் தெளி வாகத்தான் சொல்கிறார், நீ ஏன் படித்துவிட்டு வக்கீலாகவும், டாக்டராகவும், பொறியாளராகவும் வருகிறீர்கள். எதற்காக நீங்கள் படிக்கிறீர்கள்; மாடு இருக்கிறது, அதனை மேயுங்கள் என்று சொல்கிறார்கள். இதனை நேரிடையாகச் சொல் லாமல், மறைமுகமாக, பக்குவமான முறையில், மத்திய அரசாங்கம், மோடி சர்க்கார் சொல்கிறது.

இதைத் தெரிந்தே ஆதரிக்கின்றானே, அவனை என்ன வென்று சொல்வது? எனக்கு அவன் சொல்வதுபற்றிக்கூட எனக்கு வருத்தமில்லை. அவனுடைய கொள்கை அவன் சொல்கிறான். கம்யூனிஸ்ட் கட்சி நாளைக்கு ஆட்சிக்கு வந்தது என்றால், கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டி ருக்கின்ற கொள்கைகளைத்தான் அது அமல்படுத்தும். தனியார்த் துறைகள் முழுவதையும் பொதுத் துறையாகத் தான் ஆக்கும். அதனால், மோடி ஆட்சிக்கு வந்துவிட்டார், அவர் கொள்கையை அமல்படுத்துவதற்கு முயற்சி செய் கிறார். அதனை எதிர்த்து, சமூகநீதியின் அடிப்படையில் வளர்ந்தவர்கள், அதன்மூலமாக முன்னேறியவர்கள் - அவர்களும் ஆதரிக்கிறார்களே என்று நினைத்தால்தான் வருத்தம் ஏற்படுகிறது.

இவர்களை என்னவென்று சொல்வது? என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுகிறார்கள் தொலைக் காட்சி விவாதங்களில். அவர்கள் ஒன்று கேட்டால், இவர் கள் வேறொரு பதில் சொல்கிறார்கள். நான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகக்கூடாதா? என்று கேட்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக துளிர்த்து வருகிறது

அது ஒரு பெரிய விஷயமல்ல. பிரச்சினை என்னவென் றால், சமூகத்தில், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள், அவர்களுடைய நலனைப் பாதுகாப்பதற்காக, தொடர்ந்து போராடி, போராடி, போராடி, படிப்படியாக இப் பொழுதுதான் இலை துளிர்த்து வருகிறது; வளர்ந்துவிட வில்லை; கொஞ்சம் கொஞ்சமாக துளிர்த்து வருகிறது.

ஒரு 10 பேரை டாக்டர்களாக, ஒரு 10 பேரை வழக்கு ரைஞர்களாக, ஒரு 10 பேரை நீதிபதிகளாக, ஒரு 10 பேரை பொறியாளர்களாகப் பார்க்கிறேன். மிகவும் குறைவுதான், வளர்ந்துவிட்டோம் என்று நாம் சொல்ல முடியாது. அதற்காக பல தியாகங்களைச் செய்துதான், போராட்டங்கள் செய்துதான் முன்னேறியிருக்கிறோம்.

அந்த முன்னேற்றத்தை தடை செய்யவேண்டும் என்கிற மிகக் குறுகிய நோக்கத்தாடு, மத்திய அரசாங்கம் இன்றைக்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்

அது நீட்டாக இருக்கலாம்; அது நவோதயாவாக இருக்கலாம்; அது பள்ளிக்கூடங்களை எல்லாம் தனியா ருக்கு தாரை வார்ப்பதாக இருக்கலாம். இப்படியான பல பிரச்சினைகளுக்கு, அவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடிய எஞ்சிய காலத்தில் இன்னும் எத்தனை அறிவிப்புகள் வரப்போகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இப் பொழுது நாம் செய்யவேண்டி பணி என்பது மக்களிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு எதிராக - எதற்கு எதிராக? மனுதர்மத்திற்கு எதிராக - அது மனுதர்மம் அல்ல; அது ஒரு நீதி; அதற்குப் பெயர் மனுதர்மம் என்று வைத்துவிட்டார்கள்.

இடைவிடாமல் போராடுவோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம்!

அதற்கு எதிரான விழிப்புணர்ச்சி இயக்கங்களை பெரு மளவிற்கு நடத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் இன்றைக்கு நம்மிடத்தில் சுமத்தப்பட்டு இருக்கிறது. அதனை உணர்ந்து, நாம் எல்லோரும் சேர்ந்து, எல்லோரும் இதற்கு வரமாட்டார்கள்; வருவார்கள் என்று நாம் எதிர் பார்க்கவேண்டிய அவசியமும் கிடையாது. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், சமூகநீதியில், கொள்கை அடிப் படையில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும்தான் வரு வார்கள்; அது வெற்றி பெறவேண்டும் என்று கருதுகிற வர்கள் மட்டும்தான் வருவார்கள். அப்படி வருகின்றவர்கள் போதுமானது; ஆகவே, இருக்கிற நாம் சேர்ந்து, இணைந்து, இடைவிடாமல் போராடுவோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம்! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் உரையாற்றினார்.

-------------

தந்தை பெரியார் அவர்கள்

எந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்?

நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக எல்லாவற்றை யும் இழந்துவிடுவதா? நிர்வாணமாக நிற்கச் சொன் னால்கூட நிற்பார்கள் போலிருக்கிறதே!

அது என்ன நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர். தந்தை பெரியார் அவர்கள் எந்த நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார்? எந்த சட்டமன்ற உறுப் பினராக இருந்தார்? எந்த சட்டமன்றத்திற்கும் செல்ல வில்லை, எந்த நாடாளுமன்றத்திற்கும் செல்லவில்லை, இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப் பினராக இருந்தால் மட்டும் சாதித்துவிட முடியாது. நாடா ளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லாமலேயே சாதிக்க முடியும், சட்டம் கொண்டு வர முடியும் என்பதற்கு தந்தை பெரியார் உதாரணம் - முன் னோடி - முன்மாதிரி.

ஆகவே, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் வரக்கூடாது என்று நான் சொல்ல வில்லை.  நாளைக்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால்கூட, நான் தேர்தலில் நிற்பேன். ஒரு தேர்தலில் நின்றேன், ஆசிரியர் அவர்கள் வந்து எனக்காகப் பிரச்சாரம் செய்தார்; எப்படியாவது என்னை வெற்றி பெற வையுங் கள் என்று. பிரச்சாரம் செய்ய வந்ததோடு மட்டுமல்ல, அந்தத் தொகுதியில் யார் யாரையெல்லாம் தெரியுமா, அத்தனைப் பேருக்கும் ஆசிரியர் அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, முத்தரசன் தேர்தலில் நிற்கிறார், அவருக்கு வாக்களியுங்கள் என்று கடுமையான முயற்சி எடுத்தார். மக்கள் வாக்களிக்கவில்லை, தோற்றுப் போய்விட்டேன். அது என்ன பெரிய பிரச்சினையா?

கண்டிப்பாக நான் தோற்பேன் என்றேன்

அந்தத் தொகுதியை நான் கேட்கவில்லை; கொடுத் தார்கள், யாரை நிறுத்துவது என்று பார்த்தார்கள்; தோற்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்று நினைத்தார்கள், அதற்கு நான்தான் பொருத்தமான ஆளாக இருந்தேன். என்னை நிற்கச் சொன்னார்கள், நான் நின்றேன். அப் பொழுது தோழர் நல்லகண்ணு அவர்கள்தான் மாநில செயலாளர்.

என்னை அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களை வேட்பாளராக முடிவு செய்திருக்கிறார்களே, என்றார்கள்.

ஆமாம் என்றேன்.

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? என்றார்.

கண்டிப்பாக நான் தோற்பேன் என்றேன்.

என்னங்க, வேட்பாளரே இப்படி சொல்கிறீர்களே, என்றார்.

உண்மையைச் சொல்கிறேன், வெற்றி பெற முடியாது என்றேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner