எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்று அய்யா பெரியார் போராடினார்

இன்று ஆசிரியர் அவர்கள் அப்பணியைத் தொடர்கிறார்!

நவோதயா கண்டனக் கூட்டத்தில்  தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்  வி.பி.துரைசாமி கருத்துரை

சென்னை, அக்.5-  சமூகநீதிக்காக - வகுப்புவாரி உரிமைக்காக உரிய நேரத்தில் அன்று தந்தை பெரியார் போராடி, அவற்றைப் பெற்றுத் தந்ததுபோல, ஆசிரியர் அவர்கள் இன்று அந்தக் களத்தில் உரிய காலத்தில் உரிமைக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அவர்கள்.

14.9.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘மாநில உரிமையைப் பறிக்கும் இந்தியைத் திணிக்கும் நவோதயாவுக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில்’’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி  உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மாபெரும் கண்டனம் தெரிவிக்கும் வகையில்  நடை பெறும் இந்தப் பொதுக்கூட்டத்தினுடைய தலைவர், நமது போற்றுதலுக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,

வரவேற்புரையாற்றி விடைபெற்று சென்றிருக்கின்ற மரியாதைக்குரிய பூங்குன்றனார் அவர்களே,

சி.பி.எம். தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற பேராசிரியர் அருணன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எழுச்சித் தமிழருமான நமது அன்பிற்குரிய சகோதரர் திருமா அவர்களே,

சி.பி.அய்.யினுடைய மாநில செயலாளர் மரியாதைக் குரிய அண்ணன் முத்தரசன் அவர்களே,

பார்வையாளர்களாக கலந்துகொண்டிருக்கின்ற சான் றோர் பெருமக்களே, மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தினை திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்வது எனது அடிப்படைக் கடமை.

தமிழர் தலைவர் ஆசிரியர் இல்லையென்றால்....

சமூகத்திற்கு, மனித குலத்திற்கு, மொழிக்கு, சமூகநீதிக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து வருகின்றதோ, அதனை எதிர்த்து எழுப்பப்படும் முதல் குரல் தமிழர் தலைவர் எழுப்புகின்ற குரலாக இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிட முடியாது. அவரும் இன்றைக்கு இல்லை யென்றால், நாம் என்ன நிலைக்கு ஆளாக்கப்படுவோம் என்று அஞ்சாமல் இருக்க முடியாது.

சரியான நேரத்தில், சரியான காலகட்டத்தில் கண்டனக் கூட்டம்

மிகப்பெரிய ஒரு ஆபத்தான பல கட்டங்களில், மொழிக் கொள்கையானாலும் சரி, இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து வருகின்ற காலத்திலும் சரி, சமூகநீதிக்கு ஆபத்து வருகின்ற சூழ்நிலையிலும் சரி, மனிதவள மேம்பாடு அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கின்ற துறையாக இருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் செய்யத் தவறிய நிலையில், நமது ஆசிரியர் அய்யா அவர்கள் உடனடியாகக் கூட்டத்தைக் கூட்டி, அனைவரின் கருத்துகளையும் கேட்டு, ஒருமித்த கருத்துகொண்ட அரசியல் தலைவர் களோடு இணைந்து போராடி வருகின்ற அந்தத் தலைவர், சரியான நேரத்தில், சரியான காலகட்டத்தில் இந்தக் கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

சரியான காலகட்டத்தில், நம்முடைய பூங்குன்றனார் சொன்னதைப்போல, புத்தகத்தையும் வெளியிட்டு, நம்மை மேலும் அந்த வேள்வியில் தீவிரமாக இறங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மானாலும் சரி, சட்டமன்றமானாலும் சரி, பட்ஜெட் செசன்ஸ், வின்டர் செசன்ஸ் என்று ஒன்று, இரண்டு, மூன்று செசன்ஸ் கூட்டத் தொடரை நடத்தியாகவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. இது அவர்களுக்கு உண்டான பிரச்சினை.

மக்களாட்சியினுடைய தத்துவத்தை நிலைநாட்டுவதற்கே நீதிமன்றம் செல்லவேண்டிய ஒரு காலகட்டம்

சட்டசபையைக் கூட்டவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் நீதிமன்றம் சென்றார். மக்களாட்சியினுடைய தத்துவத்தை நிலைநாட்டுவதற்கே நீதிமன்றம் செல்லவேண்டிய ஒரு காலகட்டத்தில், இன் றைக்குத் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் அப்படித்தான் இருக்கிறது.

மனித வள மேம்பாட்டுத்துறைக்கே

இன்றைக்கு ஆபத்து!

இந்தச் சூழ்நிலையில், நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, இருமொழிக் கொள்கை ஆபத்திலிருந்து விடு படவும், வகுப்பு வாரி உரிமைக்கு ஏற்பட்ட ஆபத்தினைத் தடுத்து நிறுத்தவும், சமூகநீதிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கின்ற - அனிதாமூலமாக தூக்கிலே தொங்கவிடப்பட்ட சமூகநீதியைக் காப்பாற்றவும், எதிர்கால குழந்தைகளான செல்வங்களாகப் பாதுகாக்கின்ற வகை யிலும், மத்திய அரசாங்கத்தில் உள்ள துறைக்கு, மனித வள மேம்பாட்டுத் துறை என்று பெயர் வைத்தார்கள். இங்கே பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை என்று வைத் திருக்கிறார்கள்.

மனித வள மேம்பாட்டிற்கே இன்றைக்கு ஆபத்து வருகின்ற - இந்த நான்கு ஆபத்துகளிலிருந்து காப்பாற்று வதற்கு, ஆசிரியர் அய்யா இன்றைக்கு நம்மையெல்லாம் அழைத்திருக்கிறார். பேராசிரியர் அருணன் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார். நவோதயா பள்ளிகளின் மூலமாக நம் மொழிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - மொழியின் அழிவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, வகுப்புவாரி உரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - நேற்றைக்குக்கூட  நீட் தேர்வை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, செயல் தலைவரின் அறிவுரையை ஏற்று ஆர்ப்பாட் டத்தினை நடத்தினோம். இங்கே மேடையில் இருக்கின்ற அத்துணைத் தலைவர்களும், சிறைக்குச் சென்றும், தியாகமும் செய்யவில்லையானால், கீழே இருக்கின்ற உங்களுடைய பிள்ளைகள் எல்லாம் அதிகாரிகளாக வர முடியுமா? என்றுதான் எண்ணிப்பார்க்கவேண்டும் நீங்கள் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

போராடாமல் இருந்திருந்தால், சிறைச்சாலைக்குச் செல்லாமலிருந்தால்...

மேடையில் உள்ள இந்தத் தலைவர்கள், போராட்டக் களம் கண்டு, சிறைச்சாலைக்குச் செல்லாமலிருந்தால், இன்றைக்கு நம் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் மருத் துவர்களாக, பொறியாளர்களாக, அரசுத்துறை உயர் அதிகாரிகளாக வர முடியுமா? என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியாது.

அதனுடைய விளைவுதான், மனித வள மேம்பாட்டுத் துறையை அழிவு நிலைக்கு எடுத்துச் செல்கிறது மத்திய அரசாங்கம்.

நவோதயா என்றால் என்ன அர்த்தம் என்று, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழனுக்குத் தெரியுமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குத் தெரியுமா?

வகுப்புவாரி உரிமை தமிழகத்திற்கு மட்டுமல்ல - இந்தியா முழுமைக்கும்!

நாங்கள் எல்லாம் அரசியலில் இருந்தாலும்கூட, ஒரு மாபெரும் வருத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறோம், பெரியார் என்ற ஒரு மாமனிதர் இல்லையென்று. பெரி யாருடைய போராட்டத்தின் விளைவாக காமராசரும், அறிஞர் அண்ணாவும், பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களிடம் சொல்லி,அன்றைக்கு கம்யூனல் ஜி.ஓ.வை, பெற்றுத் தந்தார்கள். தமிழர்களுக்கு மட்டுமா அந்த உரிமையைப் பெற்றுத் தந்தனர்? இந்தியா முழுமைக்கும் பெற்றுக் கொடுத்தனர். இதெல்லாம் நாளடைவில் மறைந்து போய்க் கொண்டிருக்கிறதே என்பதை எண்ணி நாம் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

வெவ்வேறு காலகட்டங்களில் இருமொழிக் கொள்கைத் திட்டத்திற்கு ஆபத்து வருகிறது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், பொதுவுடைமைக் கட்சிகள், திருமாவளவன் போன்ற தலைவர்கள் எல்லாம் கடுமையாக எழுச்சி உரையாற்றி, அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அது நிரந்தரமாகத் தடுக்கப்படவேண்டும் என்றால், மக்களின் பேராதரவினைத் திரட்டி, நம்முடைய பிள்ளை களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கு, மனிதவள மேம்பாடு அழியாமல் இருப்பதற்கு  தமிழர் தலைவர் ஒருவரால்தான் முடியும்.

ஆசிரியர் என்கிற ஒரு கலங்கரை விளக்கம்தான்!

பெரியார் ஒருவர் இல்லையென்று சொன்னால், கம்யூனல் ஜி.ஓ.வைக் கொண்டுவராமல் இருந்திருந்தால், எங்களைப் போன்றவர்கள் படித்திருக்க முடியாது. ஆனால், அதற்கெல்லாம் இப்பொழுது ஒரு பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுப்பதற்கு யார் என்று பார்த்தால், ஆசிரியர் என்கிற ஒரு கலங்கரை விளக்கம்தான் நம்முடைய மனதில் தோன்றுகிறது.

அரசியல் செய்யவில்லை, சமூகத்திற்காகவே தன்னு டைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். வகுப்புவாரி உரிமையை எவ்வளவு அரும்பாடு பெற் றார்கள். இவையெல்லாம் மத்தியில் ஆட்சி செய்பவர்களால் இன்றைக்கு பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு மனிதர்களைப்பற்றி கவலையில்லை - நாடாளுமன் றத்தைப்பற்றி கவலையில்லை - சட்டசபையைப்பற்றி கவலையில்லை. அநியாயத்திற்காக, ஒரு பி.ஜே.பி.யினுடைய கொள்கையை நிறைவேற்றுகின்ற, அண்ணா பெயரில் அமைந்த ஒரு கட்சி இருக்கிறதே என்று எண்ணி யாராலும் வருத்தப்படாமல் இருக்க முடியாது.

இதைத் தடுப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்கின்ற நேரத்தில்தான், இந்தப் பெரியார் திடலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இங்கு நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று எங்களுடைய செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்.

எதைப்பற்றி பேசுவது? எதைப் பேசாமல் இருப்பது? எப்படி கோபம் கொள்ளாமல் இருப்பது? என்று ஒன்றுமே தெரியவில்லை. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு, இன்றைக்கு மத்தியில் நடைபெறும் பி.ஜே.பி. அரசாங்கம் நம்மைத் தள்ளிவிட்டு இருக்கிறது.

நவோதயா தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராவது சொல்வாரா?

மத்திய அரசை எதிர்த்து ஒரு கருத்தையும் சொல்ல முடியாத நிலையில்தான், இன்றைக்கு அண்ணா பெயரில் அமைந்துள்ள கட்சி தமிழகத்தில் இருக்கிறது. நவோதயா தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச் சராவது சொல்வாரா? அப்படி அவரால் சொல்ல முடியுமா?

அப்படியே அவர் கேட்டாலும், என்னுடைய தொகுதியான கோபி தொகுதிக்கு முதல் இடம் கொடுங்கள் என்றுதான் கேட்பார்.

நீட் நுழைவுத் தேர்வுக்காக 1400 பயிற்சி முகாம்களை ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்கிறார்.

நீட்டால் எவ்வளவு இழப்பு நம்முடைய பிள்ளை

களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் கிடைக்காமல் போயிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

வாய்ப்பு மறுக்கப்படுபவர்களுக்குத்தானே இந்தக் கூட்டம்

தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வழியில், இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர். வாய்ப்புக் கிடைக் காதவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்படுபவர்களுக்கும் தானே இந்தக் கூட்டம். வாய்ப்பு உள்ளவர்களைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை?

வாய்ப்புக் கிடைக்காமல் தவிக்கின்றவர்களுக்கு கலங் கரை விளக்கமாக ஆசிரியர் அவர்கள் இருந்துகொண்டு, அறிவொளியைப் புகுத்தி, ஒருமித்த கருத்துள்ள கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசி, பேசி மக்களிடம் அதை எடுத்துச் சொல்கிறார்.

அதிகாரிகளைக் கொண்டு

ஆட்சி நடத்துகிறார்கள்

தமிழகத்தில் எங்கே நிர்வாகம் நடைபெறுகிறது. ஒரு பட்டா கூட மாற்ற முடியவில்லை. இது மக்களாட்சி என்று சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது. வெட்கமாக இருக் கிறது. அதிகாரிகளைக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். எல்லையில்லாத ஒரு பயங்கரவாதத்திற்கு இந்தத் தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம், ஒரு பழனிச்சாமியை எதிர்த்து நாம் போராட்டம் நடத்தவில்லை. ஒரு மோடியை எதிர்த்து நடத்தவேண்டியிருக்கிறது.

நீதிமன்றங்கள்வரை மத்திய அரசு என்ன நினைக்கிறது என்று பார்க்கிறார்களே தவிர, நியாயப்படி அவர்கள் நடந்துகொள்ளவில்லை. இதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அவர்கள் என்ன நினைக்கிறார்களே, அதுபடியே செய்துவிடலாம், சொல்லிவிடலாம் என்றுதான் நினைக் கிறார்கள். நமக்கேன் வம்பு என்று நினைக்கிறார்கள். எவ்வளவு பெரிய பதவியில்தான் பெரியார் அவர்கள் அமர வைப்பார்கள்.

இதெல்லாம் யாரால் கிடைத்தது என்று எண்ணுகின்ற எண்ணிக்கை குறைகின்ற காரணத்தினால்தான், இன் றைக்கு இவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

உரிமைக் குரல் கொடுக்கின்ற

ஒரு தலைவராக....

இன்னும் சொல்லப்போனால், இந்திய மக்களே விலைக்கு வாங்கியதுபோலாயிற்று. வம்பை கடையில் வாங்கிய கதையாக இருக்கிறது. இதிலிருந்து எப்படி விலகிப் போவது? எதற்குமே ஒரு முடிவு இருக்கிறது. அந்த முடிவினை எடுக்கக்கூடிய இடத்திலும், அந்த முடிவினை தமிழகப் பிள்ளைகளுக்கு, தமிழக மக்களுக்கு, தமிழ் மொழிக்கு, கம்யூனல் ஜி.ஓ.விற்குப் பாதுகாப்பு அரணாக என்றைக்கும் திகழ்கின்ற திராவிடர் கழகத் தலைவர் இருக்கின்ற வரையில், அவர் எடுக்கின்ற முடிவுகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எந்தச் சூழ்நிலையிலும், கட்டுப்பட்டு, நவோதயா மட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்பொழு தெல்லாம் முதல் குரல் கொடுக்கின்ற, உரிமைக் குரல் கொடுக்கின்ற ஒரு தலைவராக நீங்கள் விளங்குகின்றீர்கள்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல், உங்களுக்கென்று உள்ள கடமையை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். நாங்கள்கூட ஒரு எல்லையைக் கடக்க முடியாத சூழல் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் இருந்து ஒரு பரிகாரம் கிடைக்குமா? என்கிற நிலையில்தான் நாம் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், நவோதயா பிரச்சினையில் மட்டுமல்ல, இந்த தமிழ்ச் சமூகத்திற்கு, தமிழ்க் குழந்தைகளுக்கு, மனித வள மேம்பாடு அழியாமல் இருப்பதற்கு, அறிவை மேலும் வளர்ப்பதற்கு, ஒரே ஒரு வார்த்தையில் நான் சொல்கிறேன், நாமக்கல்லில் நீட் தேர்வு எழுதிய எல்லோருக்கும் இடம் கிடைத்துவிட்டது, இல்லை என்று சொல்லவில்லை. தமிழர்களிலேயே வசதி படைத்தவர்கள், என்னுடைய பிள்ளையை நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்த்து, படிக்க வைக்க முடியும் என்று எங்கள் பகுதியில் ஒரு வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது.

என்னுடைய பிள்ளைக்கு இடம் கிடைத்துவிட்டது, கிடைக்காமல் போன மாணவர்களுக்கு, நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் தரக்கூடியது இந்தப் பெரியார் திடல். அதைத்தானே நாங்கள் பேசுகிறோம். வாய்ப்பு மறுக்கப்பட்டவனுக்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக் கின்ற இடம் இந்த இடம்.

வாழும் பெரியாராக இருக்கின்றவர்

ஆசிரியர் அய்யா

ஆகவே, ஆசிரியர் அவர்கள் எடுக்கின்ற எந்த முடி வானாலும் சரி, ஆர்ப்பாட்டம் என்றாலும், பொதுக்கூட்டம் என்றாலும், சிறைச்சாலைக்குச் செல்லவேண்டியது என் றாலும் சரி அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இப்பொழுது நாட்டில் எங்கே பார்த்தாலும் பிரச்சி னைகள் ஏராளம். பிரச்சினைகள் மூட்டை மூட்டையாக இருக்கிறது. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண யாரும் இல்லை. எல்லோருக்கும் பயமாக இருக்கிறது, நமக்கேன் என்று எல்லோரும் சென்று கொண்டிருக்கிற நிலைதான் இருக்கிறது.

அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணுகின்ற வாழும் பெரியாராக இருக்கின்ற ஆசிரியர் அய்யா எடுக்கின்ற முடிவுகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்படும் என்று தெரிவித்து, இந்த நல்வாய்ப்பினை எங்களுடைய செயல் தலைவர் எனக்கு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  திராவிட முன்னேற்றக் கழகத்தின்

துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி உரையாற்றினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner