எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல்

மக்களுக்குத் தொண்டாற்றும் இயக்கம் திராவிடர் கழகமே!

ஈரோடு விழாவில் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நெகிழ்ச்சியுரை

ஈரோடு, டிச. 12  திராவிடர் கழகம் ஒன்றுதான், மக்களின் வாக்குகளைப்பற்றி கவலைப்படாமல், அவர்களின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படும் இயக்கம்என்றார் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் மத்திய அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

2.12.2017 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் மத்திய அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்த அருமையான நிகழ்ச்சியின் தலைவர் மரியாதைக்குரிய சண்முகம் அவர்களே, விழா நாயகனாக வீற்றிருக்கின்ற என்னுடைய மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய ஆசிரியர் பெருமகனார் அவர்களே, அன்புச்சகோதரர் திருமாவளவன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் தனியரசு அவர்களே, அருமை நண்பர் பெரியசாமி அவர்களே, நூர்முகமது அவர்களே, சி.பி.எம்.மைச் சார்ந்த மாரிமுத்து அவர்களே, மற்றும் இங்கே மிகப்பெரிய அளவில் கூடியிருக்கின்ற திராவிடர் கழகத்தினுடைய பாசத்திற்குரிய அருமை நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினை சொல்லிக் கொள்கிறேன்.

என்னுடைய தலையாய கடமை மட்டுமல்ல

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என் னுடைய தலையாய கடமை மட்டுமல்ல, நான் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், தமிழகம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கின்ற, சில இடங்களில் புயல் அடித்துக் கொண்டிருக்கின்ற. வேளையில் ஈரோட்டிலும் மழை பெய்து, இந்தக் கூட்டம் நடைபெற முடியாமல் போய்விடுமோ என்றுதான், நான் காலையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். என்னிடம் சொன்னார்கள், இந்தக் கூட்டம் என்பது திராவிடர் கழகக் கூட்டம். மழை பெய்தாலும், புயல் அடித்தாலும் இந்தக் கூட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்கிற செய்தி  எனக்கு சென்னையில் வந்தது.

ஆகவேதான், சென்னையிலிருந்து 11 மணிக்குப் புறப்பட்டு, 12.30 மணிக்கு திரிசூலத்தில் விமானத்தைப் பிடித்து கோவை வந்து, ஒரு மணிநேரத்தில் நான் ஈரோடு வந்து சேர்ந்துவிட்டேன். கிட்டத்தட்ட, ஒரு மூன்றரை மணிநேரத்திற்குள் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டேன்.

அன்றைக்குத் தந்தை பெரியார்....

வந்து சேர்ந்தவுடன் நினைத்தேன், இன்றைக்கு வசதிகள் அதிகம்; சென்னையிலிருந்து  கோவைக்கு இரண்டு மணிநேரத்திற்கு ஒரு விமானம் உண்டு. நினைத்தால் மூன்றரை மணிநேரத்திற்குள் ஈரோட்டுக்குச் செல்ல முடியும் என்று நான் நினைக்கும்பொழுது, இன்னொன்றும் மனதில் தோன்றியது. மூன்றரை மணிநேரத்தில், சென்னையிலிருந்து ஈரோட்டில் உள்ள என்னுடைய வீட்டிற்கு வர முடிகிறது என்று சொன்னால், அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள், ஈரோட்டிலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கும்பொழுதுதான் ஒன்று புரிந்தது.

வேன் என்பதைவிட

நாகரிகமான மாட்டு வண்டி

அவர் எப்பொழுதும் வேனில்தான் செல்வார்; வேன் என்று சொன்னால், அவருக்குக் கடைசியாகக் கொடுக்கப்பட்ட வேனில்தான் ஏ.சி. வசதி இருந்தது. அதற்கு முன்பு அவர் பயன்படுத்திய வேனில் ஏ.சி. கிடையாது. வேன் என்று சொல்வதைவிட, கொஞ்சம் நாகரிகமான மாட்டு வண்டி என்று சொல்லலாம். அது அப்படித்தான் இருந்தது. ஆனால், அதில் அவர் பயணம் செய்தார்; இன்றைக்கு இருப்பதுபோல், அன்றைக்கு சாலைகள் கிடையாது. மேடு பள்ளங்கள் அதிகம் உள்ள சாலைகள்தான். அதிலும் இரவிலேதான் பெரியார் அவர்கள் அதிகமாக பயணம் செய்வார். அப்படி பயணம் செய்யும்பொழுது, கையிலேயே சிறுநீர் கழிப்பதற்காக பாட்டில் வைக்கப்பட்டுள்ள வாளியை எடுத்துக்கொண்டு, சிறுநீர் தானாகவே வருகின்ற

நிலையிலும்கூட, அவர் கிட்டத்தட்ட 15, 20 ஆண்டுகாலம் - 95 வயது வரை அவர் வாழ்ந்தார் என்று சொன்னால், அதற்கு திராவிடர் கழகத்தார் காரணம் என்று தெரியும். இருந்தாலும் முக்கியமான இரண்டு பேர் காரணம். ஒன்று அன்னை மணியம்மை. இன்னொன்று நம்முடைய ஆசிரியர் பெருமான்.

பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம்  வரை இருந்தார் என்று சொன்னால்...

ஆகவே, பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம்  வரை இருந்தார் என்று சொன்னால்,  அவரால் அதனை சாதிக்க முடிந்தது என்று சொன்னால், அதற்குக் காரணம், இங்கே வீற்றிருக்கின்ற இன்றைய கதாநாயகன் மிகப்பெரிய காரணம் என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மற்றபடி என்னைப்பற்றி அதிகம் பேசவேண்டும் என்று நினைத்தாலும், குறிப்பாக கருஞ்சட்டைக்காரர்கள் நிறைந்திருக்கின்ற மேடையில்தான் நான் ஒன்றை சொல்லியாகவேண்டும். தனிப்பட்ட முறையில் ஆசிரியர் அவர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்; அன்னை மணியம்மைக்கும் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

மணியம்மையாரும், ஆசிரியரும் எங்களுக்குச் செய்த உதவி

பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்று சொன்னால், அவர், அவருடைய தகப்பனார்மூலமாக அவருக்கு வந்த சொத்தை, அவர் தொடவேயில்லை. அதை அப்படியே வைத்திருந்தார். பெரியார் வைத்திருந்தார் என்பது பெரிய விஷயமல்ல; மணியம்மையும், ஆசிரியரும் வைத்திருந்தார்கள் என்பதுதான் பெரிய விஷயம்.

இதைவிட மிகப்பெரிய விஷயம் என்ன வென்று சொன்னால், அதை அப்படியே எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்பதுதான்.

நினைத்திருந்தால் மணியம்மையார் என்னவேண்டுமானாலும் செய்திருக்கலாம்; அல்லது ஆசிரியர் என்னவேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அதை எங்களிடம் ஒப்படைத்ததோடு மட்டுமல்ல, அதற்குரிய பத்திரங்களை, என்னுடைய தாயாரிடம் வீரமணி அவர்கள் கொடுத்தார். அதனை என்னுடைய தாயார் எனக்குக் கொடுத்தார்கள்.

நான்கூட நினைத்தேன், இதென்னடா குப்பை மூட்டை என்று. பிறகு ஒரு இடத்தை விற்கவேண்டும் என்று சொல்லும்பொழுது, மூலப் பத்திரம் வேண்டும், அந்தப் பத்திரம் வேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள். பிறகுதான் ஆசிரியர் அவர்கள் கொடுத்த பத்திரங்களில், அந்த மூலப்பத்திரமும் இருந்தது.

கிட்டத்தட்ட 115 ஆண்டுகள் பழைமையான பத்திரங்கள். அத்தனையும் கவரில், எந்தெந்த சொத்துக்கு உண்டான பத்திரங்கள் என்கிற விவரத்தையும் எழுதி வைத்து, அதனை அப்படியே கொடுத்த ஆசிரியர் அவர்களை நான் எப்படி மறக்க முடியும்?

என்னுடைய தாத்தா வழி, என்னுடைய அப்பாவின் வழி வந்த சொத்துகள் எல்லாம், என்னுடைய அப்பா இருக்கும்பொழுதே முடிந்து போய்விட்டது. ஆசிரியர் அவர்களுக்கும் தெரியும். ஆனால், நாங்கள் இன்றைக்கு இருக்கின் றோம் என்று சொன்னால், தந்தை பெரியாரின் சொத்துகள் என்பதைவிட, அன்னை மணியம் மையார் அவர்களும், ஆசிரியர் அவர்களும் செய்த காரணம்தான் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் அருமைத் தோழர்களே!

நல்லது என்றாலும் உங்களிடம்தான் வரவேண்டும்; கெட்டது என்றாலும் உங்களிடம்தான் வரவேண்டும்!

இன்றைக்கு அவருக்கு 85 வயது என்று சொன்னால், ஏன் இந்தக் குடும்ப விஷயத்தை சொல்கிறேன் என்று சொன்னால், அதுவும் ஈரோட்டில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தில், கருஞ்சட்டைக்காரர்கள் இருக்கின்ற காரணத்தால், தொட்ட குறையோ, விட்ட குறையோ நல்லது என்றாலும் உங்களிடம்தான் வரவேண்டும்; கெட்டது என்றாலும் உங்களிடம்தான் வரவேண்டும் என்கிற காரணத்தால், என்னுடைய குடும்பப் பிரச்சினைகளை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆசிரியர் அவர்களுக்கு 85 வயது என்று சொன்னார்கள், நான் இங்கே நடைபெற்ற ஓரங்க நாடகத்தைப் பார்க்கும்பொழுது, ஒருவர் ஆசிரியர் வேடமணிந்து வந்து, நன்றாக பேசினார். அவரிடம் நான் சொன்னேன், தயவு செய்து அடுத்து, இந்த நாடகத்தை அரங்கேற்றும்பொழுது, முடியை கொஞ்சம் சுருள் சுருளாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், அந்தக் காலத்தில் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அந்தக் காலத்தில் அழகாக இருப்பார் என்றால், இப்பொழுது அழகாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

இது அறிவின் முதிர்ச்சி; அறிவினுடைய முதிர்ச்சியின் காரணமாக, பழுத்த பழமாக இன்று இருக்கிறார். அன்று இளைஞராக இருக்கும்பொழுது, மிகப்பெரிய கதாநாயகனாகவே அவர் இருந்தார் என்பதை இங்கே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பெரியாரைப்போல் வழிச் செலவிற்குப்

பணம் கேட்கவேண்டும்

மற்றபடி இந்த முப்பெரும் விழாவினைப் பொறுத்தவரையில் மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். சண்முகம் அவர்களும், ஏனைய நண்பர்களும் இந்த விழாவினை நிதி வசூலித்துத்தான் நடத்தினார்கள். அப்பொழுது நானும் நிதி கொடுத்தேன். அப்பொழுதுதான் நினைத்தேன், இனிமேல் திராவிடர் கழகக் கூட்டத்திற்குச் செல்லும்பொழுது, எப்பொழுதெல்லாம் ஆசிரியர் அழைக்கின்றாரோ, அப்பொழுதெல்லாம் பெரியாரைப்போல் வழிச் செலவிற்குப் பணம் கேட்கவேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால், பெரியார் நடத்துகின்ற நிகழ்ச்சிகளை, நிதி வசூலித்துத்தான் செய்வார். அதேநேரத்தில், பெரியார் அவர்கள் எங்கே சென்றாலும், வழிச் செலவுக்குப் பணம் கேட்பார். ஆகவே, திராவிடர் கழகத்தினர் அதே முறையில் நிற்கும்பொழுதுகூட, என்னைப் பொறுத்தவரையில் நூற்றுக்கு நூறு அந்த வழியில் வரவேண்டும் என்று நினைத்தாலும், முடியாது. காரணம், அரசியல்!

ஆகவே, எனக்கு இல்லாத தைரியம் உங்களுக்கு இருக்கும்பொழுது, உங்களோடு நான் வருகின்றபொழுது, வழிச் செலவிற்கும் இனிமேல் கேட்கவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற கூட்டம் என்பது மிக முக்கியமாக தேவைப்படுகின்ற, பொருத்தமான கூட்டமாகும்.

மூன்று பேருக்குமே தேர்தலில் நிற்பதற்கு யோக்கியதையும் கிடையாது

நாட்டிலே பல நச்சுப் பாம்புகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஓ.பி.எஸ். என்கிறார்கள்; இ.பி.எஸ். என்கிறார்கள்; இன்னொரு பக்கம் தினகரன் என்று சொல்கின்றார்கள். இந்த மூன்று பேருக்குமே தேர்தலில் நிற்பதற்கு யோக்கியதையும் கிடையாது; அருகதையும் கிடையாது. காரணம் என்னவென்று சொன்னால், சென்ற முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபொழுது, டி.டி.வி.தினகரன் கொடுத்த பணத்தை, ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும்தான் விநியோகித்தார்கள் என்று வெட்டவெளிச்சமான பிறகு, எப்படி இவர்களை அனுமதிக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தேர்தல் ஆணையம், ஓ.பி.எஸ். அணியைச் சார்ந்த மதுசூதனனுடைய வேட்பு மனுவையும், தினகரனுடைய வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு

இந்த மேடை அவசியம்

ஏனென்றால், இங்கே அரசியல் பேசக்கூடாது என்று சொன்னாலும்கூட, இந்த சூழ்நிலையில், இந்த மேடை அவசியம். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு இந்த மேடை அவசியம் என்கிற காரணத்தினால்தான், நான் இதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அருமை நண்பர்களே!

இங்கே பல பேர் வந்திருக்கிறார்கள்; திருமாவளவன் வந்திருக்கிறார். திருமாவளவன் ஒருமுறை காட்டுமன்னார் கோவிலில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் என்னை உரையாற்றுவதற்கு அழைத்திருந்தார்.

நான் அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்பொழுது சொன்னேன், உங்களுடைய முகத்திலே காமராசரையும், பெரியாரையும் ஒருசேர பார்க்கின்றேன் என்று சொன்னேன்.

திருமாவளவன் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அவரைப் பொறுத்தவரையில், சமூகநீதிக்காக உழைக்கவேண்டும்; சமூகநீதிக்காக உழைக்கின்ற கட்சிகள் மிகச் சொற்பம். காரணம், அத்துணை பேரும் அரசியலுக்குப் போய்விட்டார்கள். இவ்வளவு சொல்கின்றாயே, நீ ஏன்? என்று நீங்கள் என்னை கேட்கலாம். என்னை செய்வது? சொறி வந்துவிட்டது; சொறிந்துகொண்டுதானே இருக்கவேண்டும்.

ஆகவே, அருமைத் தோழர்களே, திருமாவளவனைப் போன்றவர்களுடைய கருத்துகளைப்பற்றி எனக்கு மிக நன்றாகத் தெரியும். அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வது இல்லை என்றாலும்கூட, ஏதோ ஒரு பாசம் அவர்பால் என்னை ஈர்க்கும்.

உங்களுடைய வாழ்வு நல்லபடியாக அமையவேண்டும்

இன்றைக்குத் திராவிடர் கழகம் ஒன்றுதான், மக்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாத என்று சொல்வதைவிட, மக்களுக்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ, அதனைச் சொல்லியாகவேண்டும் - இப்பொழுது சொல்வதினால் மக்களுக்குக் கஷ்டமாக இருந்தாலும், அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. உங்களுடைய ஓட்டு எங்களுக்கு வேண்டாம்; உங்களுடைய வாழ்வு நல்லபடியாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் உழைத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, அதைப்போன்ற இயக்கங்கள் அதிகமாக வரவேண்டும். ஏனென்றால், இன்றைக்கு இந்திய அரசியலைப் பொறுத்தவரையில், மதவாத சக்திகள் தலைதூக்கி ஆடுகின்றன என்பதோடு மட்டுமல்ல, இன்றைக்கு அடி விழ விழ, ஒவ்வொன்றாக, தலையை உள்ளே இழுத்துக் கொள்கிறது.

நாடு முழுவதும் விழுகின்ற அடிதான்

இப்பொழுது ஜி.எஸ்.டி. வரியிலிருந்து சில மாற்றங்கள். என்னுடைய அருமை நண்பர் பெரியசாமி அவர்கள் இங்கே சொன்னார்கள், மாட்டிறைச்சியை இனிமேல் சாப்பிடலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது என்று. அடி விழுந்த பிறகுதான், மோடிக்கு புத்தி வருகிறது. இல்லையென்று சொன்னால், ‘‘நான் வைத்துதான் சட்டம்; நீங்கள் அத்தனை பேரும் காவி உடை உடுத்தவேண்டும்’’ என்று  சொல்லக்கூடிய நிலையில் இருந்தவர்கள், இன் றைக்கு இறங்கி வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் என்னவென்றால், நாடு முழுவதும் விழுகின்ற அடிதான்.

தமிழ்நாட்டிலிருந்து அடி விழவேண்டும்

கண்டிப்பாக சொல்கிறேன், குஜராத்திலும், இமாச்சலப் பிரதேசத்திலும் மிகப்பெரிய அடியை மோடிக்குத் தரப்போகிறார்கள். ஆனால், அடிக்கின்ற அடி மோடிக்கு உரைக்கவேண்டும் என்று சொன்னால், அந்த அடி தமிழ்நாட்டிலிருந்து அவர்மீது விழவேண்டும்.

ஆகவே, அருமைத் தோழர்களே, மழை வந்தாலும் வரலாம் என்கிற நிலை இருக்கின்ற காரணத்தினால், என்னைப் பொறுத்தவரையில் மிகவும் மகிழ்ச்சியோடு இந்த விழாவில் நான் கலந்துகொண்டேன்.

நீண்ட நாள்கள் வாழவேண்டும்

என்னைப் பொறுத்தவரையில், நான் எவ்வளவோ முறை அவரை விமர்சித்துக்கூட சில சமயம் பேசியிருக்கிறேன். ஆனால், அவர் என்னிடம் காட்டுகின்ற அன்பு என்றைக்கும் சோடை போனதில்லை. எப்பொழுதும் என்னைப் பார்த்தால், அன்போடு விசாரிப்பாரோ, அதுபோன்றுதான் விசாரிக்கக் கூடியவர். என்னைப் பொறுத்தவரையில், அவர் நீண்ட நாள்கள் வாழவேண்டும்.

நீண்ட நாள்கள் வாழவேண்டும் என்று சொன்னால், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த உங்களுக்குத் தெரியும். தமிழகத்தில், குறிப்பாக இருக்கின்ற அத் துணை இயக்கங்களுக்கும் முன்னோடி தந்தை பெரியார் அவர்கள்தான். ஆரம்பத்தில், காங்கிரசு என்பது ஏதோ ஜமீன்தார்களும், எஜமானர்களும் இருந்துகொண்டு, ‘‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’’ என்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில்,  கிராமம்தோறும் கொண்டு போய் சேர்த்தவர் தந்தை பெரியார் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதேபோன்று, திராவிட இயக்கங்கள் - அதற்கும் முன்னோடி அவர்தான். அதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முன்னோடி அவர்தான்.

சமூக நீதியில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஏற்ற தாழ்வை நீக்குவதுதான்

ஆனால், ஒரு கட்சியின் சித்தாந்தத்தை எடுத்து, பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதைவிட, சமூக நீதியில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஏற்ற தாழ்வை நீக்குவதுதான் முக்கியம் என்கிற காரணத்தினால், இதை முன்னிலைப்படுத்தினார்.

ஆகவே, அருமை நண்பர்களே, நான் மிகவும் மகிழ்ச்சியோடு இன்னும் நிறைய பேசவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், நேரமின்மை காரணமாக, பிறிதொரு நேரத்தில் ஆசிரியர் பெருமான் அவர்கள் வாய்ப்பு  தருவார் என்கிற நம்பிக்கையில், அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் என்று நெஞ்சார வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் மத்திய அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner