எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகமும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வேறு வேறல்ல

ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கிற இருபெரும் அமைப்புகள் - இருபெரும் ஆயுதங்கள்

ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்   எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் இனமான  உரை

ஈரோடு, டிச. 13-  திராவிடர் கழகமும் - விடுதலைச் சிறுத்தை கள் கட்சியும் வேறு வேறல்ல. ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கிற இருபெரும் அமைப்புகள் - இருபெரும் ஆயுதங்கள் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாளவன் அவர்கள்.

2.12.2017 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார் அவர்கள் பிறந்த மண்ணில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்ற ஒரு வாய்ப்பினை எனக்கு வழங்கியமைக்காக முதலில் தமிழர் தலைவர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

60 ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் இணைத்து நடத்துவது பெருமைக்குரியது

இது முப்பெரும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. தமிழர் தலைவர் அவர்களுடைய 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் - விடுதலை சந்தா வழங்கும் விழா - ஜாதி ஒழிப்பு போராட்டம் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப் பெற்று 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிற நினைவு நிகழ்வு.

வெறும் பிறந்த நாள் நிகழ்வாக மட்டுமே கொண்டாடாமல், ஆடம்பர ஆர்ப்பாட்டம் என்று பிறந்த நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்காமல், தமிழர் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ‘விடுதலை’ ஏட்டினை இன்னும் பரவலாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக, சந்தா பெறுகிற விழாவாகவும், தந்தை பெரியார் அவர்களால் அரசமைப்புச் சட்டத்தை எரித்த 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் இணைத்து நடத்துவது பெருமைக்குரியது.

தமிழர் தலைவர் அவர்களின் அருமை பெருமைகளை எனக்கு முன் உரையாற்றிய தலைவர்கள் எல்லாம் நேரத்தின் அருமை கருதி மிகச் சுருக்கமாக சொன்னார்கள். அவருடைய அளப்பரிய அர்ப்பணிப்பைப் பேசவேண்டுமானால், மணிக்கணக்கில் நமக்குத் தேவைப்படும்.

மக்கள் தொண்டாற்றுவதையே

பெருமை என கருதுகிறேன்

10 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர்; தன்னுடைய பிறந்த நாள் செய்தியில் குறிப்பிடுகிறார். எனக்கு 85 ஆம் ஆவது பிறந்த நாள்; இந்த 85 ஆண்டுகளில், 75 ஆண்டுகள் பொதுவாழ்க்கை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத பெரியார் பாசறையில் வளர்ந்து, மக்கள் தொண்டாற் றுவதையே பெருமை என கருதுகிறேன் என்று பிறந்த நாள் செய்தியில் குறிப்பிடுகின்ற தமிழர் தலைவர் அவர்கள்,

தனக்கு எல்லா வகையிலும் உற்ற துணையாய் இருந்து ஊக்கமளிக்கக் கூடிய அத்துணை பேருக்கும் நன்றியும் சொல்லியிருக்கிறார்.

10 வயதில் மேடை ஏறி பேசி, 11 வயதில் சிறப்பு பேச்சாளராக பல இடங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார் என்பது, யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு.

ஆசிரியரைப்பற்றி பேரறிஞர் அண்ணா....

இங்கே தோழர்கள் ‘விடுதலை’ இதழில், தமிழர் தலைவர் அவர்களைப்பற்றி கட்டுரைகள் எழுதியிருப்பதை நான் பார்த்தேன். அய்யா ஆசிரியர் அவர்களைப்பற்றி பேரறிஞர் அண்ணா எழுதுகிறபோது, ‘‘இவர் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’’ என்று எழுதியிருக்கிறார்கள்.

திருஞானசம்பந்தர் பிஞ்சிலேயே இறைவனை எண்ணிப் பாடினார் என்று சைவ மதம் சொல்கிறது.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய உரையைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டியதையும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ‘‘இந்த சிறுவன் காதில் குண்டலம், கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் பட்டை யும் இருந்திருந்தால், இவர் ஞானப்பால் அருந்திய சிறுவன் என்று சொல்லியிருப்பார்கள். இவர் அருந்திய பால் ஞானப் பால் அல்ல; பகுத்தறிவு பால், பெரியாரின் பால்’’ என்று பேரறி ஞர் அண்ணா அவர்கள், நம்முடைய தமிழர் தலைவர் அவர் களைப் பாராட்டியிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்ற, பேரறி ஞர் அண்ணா அவர்களால் பாராட்டப் பெற்ற, தலைவர் கலை ஞர் அவர்களால் பாராட்டப் பெற்ற தமிழர் தலைவர் அவர் களை, நாம் பாராட்டுவது பொருத்தமாக இருக்காது.

‘‘வியப்பின் மறுபெயர் வீரமணி’’

‘‘வியப்பின் மறுபெயர் வீரமணி’’ என்கிற ஒரு புத்தகத்தை இங்கே வெளியிட்டிருக்கிறார்கள். அதனை அப்படியே நான் வழிமொழியக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

எப்படி இந்த வயதில் அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது? எப்படி இந்த வயதில் எந்நேரமும் போர்க்குணத் தோடு இயக்க முடிகிறது? எப்படி தந்தை பெரியாருக்குப் பின், இந்த அளவிற்கு, இந்த இயக்கத்தை உயிரோட்டத்தோடு வழி நடத்த முடிகிறது?

எல்லாவற்றையும்விட, கட்டுக்கோப்பாக இந்த இயக் கத்தை நடத்துவது என்பதையும் தாண்டி, மிக வலுவாகவும், கட்டமைப்புகளை பெருக்கி வழிநடத்தி செல்லுகிறார்.

பெரியார் காலத்தில் இருந்ததைவிட, ஏராளமான நிறுவ னங்கள்; தொண்டு அமைப்புகள் என்று, இன்றைக்குப் பெரி யார் இருந்திருந்தால், பூரிப்படையக்கூடிய வகையில், கழகத் தைக் கட்டிக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அந்தக் கருத்து களை மக்களிடையே எடுத்துச் செல்லுவதில், அவர் ஆற்றியி ருக்கிற பங்களிப்பு என்பது நம்முடைய புருவத்தை உயர்த்த வைக்கிறது.

‘விடுதலை’ சந்தாக்களும் -

எனக்கு ஏற்பட்ட வியப்பும்!

‘விடுதலை’க்குச் சந்தா வழங்குகிறார்கள் ஒரு பகுதி - இன்றைக்கு மேடையில் 67 லட்சம் ரூபாயினை வழங்கியிருக்கிறார்கள். இதுவும் எனக்கு வியப்பைத் தருகிறது. அரசியல் கட்சிகளில் போட்டிப் போட்டுக்கொண்டு, பதவி ஆசையோடு, வசூல் செய்து ஒப்படைப்பது என்பது வாடிக்கை யான ஒன்று. அரசியல் கட்சிகளில், அப்படி ஒரு கோரிக்கை வந்தால், பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்; எதிர்பார்க்கின்ற பதவியை பெறவேண்டும்; தலை வரின் நெஞ்சத்தில் இடம்பெறவேண்டும் என்கிற முனைப்பு இருக்கும்; போட்டி இருக்கும். அதிலே ஒரு தன்னலம் படர்ந் திருக்கும்.

ஆனால், திராவிடர் கழகத்தில் இருக்கின்ற தோழர்களுக்கு, அப்படிப்பட்ட எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை என்கிற நிலையிலும், இன்றைக்கு 5 ஆயிரம் சந்தாக்களைத் திரட்டி, ஏறத்தாழ, முக்கால் கோடி ரூபாயைத் திரட்டி தமிழர் தலை வரின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார் என்று பார்க்கின்ற பொழுது, எனக்கு வியப்பாக இருக்கிறது.

நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரை யாற்றுகின்றபொழுது, விடுதலை சிறுத்தைகளும் சந்தா வழங் கினார்கள் என்பதை, நான் ‘உண்மை’ விழாவில் உரையாற் றியதை, சந்தா வழங்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.

ஈரோடு மாவட்டம் சார்பில்

‘உண்மை’ இதழுக்கு 10  சந்தாக்கள்

‘உண்மை’ இதழை படிக்கவேண்டும் என்பதைத் தாண்டி, திராவிடர் கழகத்தின் வேர்களை இன்னும் ஆழமாகக் கொண்டு செல்லவேண்டும் - கிராமப்புறங்களுக்கு, தலித் மக்கள் வாழுகிற பகுதிகளுக்கு, சேரிப் புறத்து சிறுவர்களுக்கு அது போய்ச் சேரவேண்டும் என்கிற அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான், மாவட்டம் தோறும் உண்மை இதழுக்கு, பெரியார் பிஞ்சு இதழுக்கு, ‘விடுதலை’ நாளேட்டிற்கு சந்தா வசூலித்துத் தரவேண்டும் என்கிற வேண்டுகோளை, நம்மு டைய தோழர்களிடத்தில் நான் சொல்லி வருகிறேன். அதனு டைய முதல் கட்டம்தான், இன்றைக்கு ஈரோடு மாவட்டத்தில், ‘உண்மை’ இதழுக்கு 10 பேர், தலா ரூ.3,500 வீதம், 35,000 ரூபாயினை இன்றைக்கு விநாயகமூர்த்தி செலுத்தியிருக்கிறார்.

இரண்டாம் பெரியாராக தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்

இதையெல்லாம் நான் பார்க்கின்றபொழுது உள்ளபடியே வியப்படைகிறேன். தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றிவருகிற இந்த அளப்பரிய பணி, என்னைப் போன்றவர்களுக்குப் பெரிய உந்துதலைத் தருகிறது - ஊக்கத்தைத் தருகிறது- துணி வைத் தருகிறது.

பெரியார் வாழ்ந்த காலத்தில், நம்மால் அவரைக் காண முடியவில்லை - அவரோடு இணைந்து பணியாற்றவில்லை என்கிற ஏக்கத்தைத் தவிர்க்கின்ற வகையில்,  இரண்டாம் பெரியாராக தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் நம்மிடையே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று நான் பெருமைப்படுகிறேன். அவரோடு இணைந்து களத்தில் நிற்கும்பொழுதெல்லாம் எனக்கு பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

எளியவர்களைப் பாதுகாக்க, ஏழை - எளிய மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க...

அந்த அளவிற்கு, இன்றைக்கு ஒரு விழிப்புணர்வை - பெரியார் உலகம் என்கிற ஒரு மிகப்பெரிய செயல் திட்டத்தை முன்வைத்து, அந்தக் களப்பணியை - இளம் பிஞ்சுகளிடத்தில் பகுத்தறிவு சிந்தனையை கொண்டு செல்வதில் மிகத் தீவிரமாக இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தமிழர் தலைவர் அவர்களைப்பற்றி, அண்ணன் இளங்கோவன் அவர்கள் சொன்னதைப்போல, அவர் நீடூழி வாழவேண்டும்; எளியவர்களைப் பாதுகாக்க, ஏழை - எளிய மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க - தமிழர் தலைவர் அவர்களின் பணிகள் இன்னும் நீண்ட காலத்திற்குத் தேவைப்படுகிறது.

சட்ட எரிப்புப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1957 இல் அரசமைப்புச் சட்டத்தை எரித்ததைப்பற்றி நினைவூட்டுகிற வகையில், இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு - நான் பிறப்பதற்கு 5 ஆண்டு களுக்கு முன்பு. இன்றைக்கு ஜாதி ஒழியவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் மேடைகளில் நாம் என்னவெல்லாம் பேசுகிறோமோ, பேச விரும்புகிறோமோ, அதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள், 1950-களிலேயே பேசியிருக்கிறார்; அந்த உணர்வோடு பேசியிருக்கிறார்; ஆவேசத்தோடு பேசியிருக்கிறார் என்பதைப் பார்க்கின்றபொழுது, பெரியார் எவ்வளவு பெரிய சமூகப் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்து பெருமைப்படுகிறேன்.

அரசமைப்புச் சட்டம் ஜாதியை ஒழிப்பதற்கு, ஏதுவான வழிகளை உருவாக்கவில்லை

அரசியல் அமைப்புச் சட்டத்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் எழுதினார் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம் என்றாலும், அப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பெற்றார் என்கிற வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின்மூலம், ஒரு மதச் சார்பற்ற அரசமைப்பை இங்கே உருவாக்குவதற்குப் புரட்சி யாளர் அம்பேத்கர் இடமளித்தார் என்கிற வகையில் பெரு மைப்பட்டுக் கொண்டாலும், அந்த அரசமைப்புச் சட்டம் ஜாதியை ஒழிப்பதற்கு, ஏதுவான வழிகளை உருவாக்கவில்லை என்பதை, அரசியல் அமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாளிலிருந்து, அது நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து தந்தை பெரியார் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டிருக் கிறார்.

ஜாதியை ஒழிக்கப் பயன்படாத சட்டம்,

எப்படி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்?

ஜாதியை ஒழிப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படவில்லை. இந்தச் சட்டத்தை ஜனநாயகம் பாதுகாப்பதற்குப் பயன்படும் என்று எண்ணுகிறவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், ஜாதியை ஒழிக்கப் பயன்படாத சட்டம், எப்படி ஜனநாய கத்தைப் பாதுகாக்கும்? என்கிற கேள்வியை எழுப்புகிறார் தந்தை பெரியார்.

ஜாதியை ஒழிக்க, அரசியல் அமைப்பு  சட்டத்தைக் கொளுத்தவேண்டிய தேவை ஏன் எழுந்தது என்பதையும், ஓராண்டு காலம் தொடர்ச்சியான பிரச்சாரம் செய்து, தஞ்சாவூர் மாநாட்டிலே அதற்கான தீர்மானம் நிறைவேற்றி, குறிப் பிட்ட ஒரு காலக்கெடு தந்து, அதன் பிறகு இந்த சட்டத்தை எரிக்கப் போகிறோம் என்று தந்தை பெரியார் பிரகடனம் செய்திருக்கிறார்.

அரசியல் சட்டத்தை எரித்தால்

என்ன தண்டனை?

அதுவரையில், இந்த சட்டத்தை எரித்தால், என்ன தண் டனை என்று சட்டத்தில் இல்லை. தந்தை பெரியார் அவர்கள் அரசியல் சட்டத்தை எரிப்போம் என்று சொன்னதற்குப் பிறகு, அதற்கென்று அவசர அவசரமாக, மூன்றாண்டு காலம் தண்டனை வழங்கப்படும் என்கிற ஒரு நிலையைக் கொண்டு வந்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

அன்றைக்குப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு வரையில், இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜவகர்லால் நேரு அவர்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தை எரிக்கிற வர்கள், சட்டம் பிடிக்கவில்லை என்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று அவர் திருச்சிக்கு வந்து பேசியதாகக் குறிப்புகள் கூறுகின்றன.

பார்ப்பனர்களைத் தாக்கினால்தான், பார்ப்பனர்களைக் கொன்றால்தான், பார்ப்பனர்களின் வீடுகளை அல்லது குடிசைகளைக் கொளுத்தினால்தான், இங்கே ஜாதி ஒழியும் என்றால், அதையும் செய்யவேண்டிய நிலை உருவாகும் என்று தந்தை பெரியார் எச்சரித்துப் பேசியதாக அவர்மீது வழக்கு.

அப்படி ஒரு நிலை வரும் - அப்படி ஒரு நெருக்கடி ஏற்படும் - இதையெல்லாம் செய்தால்தான் நீங்கள் ஜாதியை ஒழிக்க முன்வருவீர்கள் என்றால், அப்படிப்பட்ட ஒரு நிலை வரும் என்று எச்சரித்திருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.

அந்தக் காலகட்டத்தில்தான், முதுகுளத்தூர் கலவரம் நடைபெற்று இருக்கிறது. இமானுவேல் சேகரன் கொல்லப்பட்ட காலகட்டம் அது. அப்பொழுது ஏராளமான தலித் மக்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டு இருக்கின்றன; ஏராளமான தலித்துகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதையும் தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டி, நினைவுபடுத்தியிருக்கிறார்.

புரட்சியை நடத்தாமல்,

ஜாதியை ஒழிக்க முடியாது!

இப்படியெல்லாம் செய்வதற்கு, ஜாதியவாதிகளுக்கு இங்கே பாதுகாப்பு இருக்கிறது. ஜாதியைப் பாதுகாப்பது, அரசுதான் - அரசியல் அமைப்புச் சட்டம்தான். எனவே, இந்த அரசையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் எதிர்க்காமல், அவர்களை அம்பலப்படுத்தாமல், அவர்களுக்கு எதிரான கிளர்ச்சியை, புரட்சியை நடத்தாமல், ஜாதியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த பெரியார் அவர்கள், வன் முறைக்கு இடம்கொடுக்காமல், அறவழி அறிவிப்பு செய்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை எரிக்கிற போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.

அகில இந்திய அளவில் முதன்முதலாக அரசியல் அமைப்புச் சட்டத்தை எரிப்போம் என்று எரித்துக் காட்டிய பெருமை தந்தை பெரியார் அவர்களை சாரும்.

இது எந்த வகையிலும், புரட்சியாளர் அம்பேத்கருக்கு எதிரான நடவடிக்கைகள் அல்ல. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்த சட்டத்தை எழுதினார் என்பதினால், அந்த சட்டத்தை மற்றவர்கள் வரவேற்பதைப்போல, நாம் வரவேற்க முடியாது என்பதில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களோடு நெருக்கமான நண்பராக இருந்த நிலையிலும், தந்தை பெரியார் அதை எதிர்க்கிறார்.

தமிழ்நாட்டிற்கு வருகிறபொழுது மட்டுமல்ல, அவர் மியான்மாருக்குப் போகிறபோதும்கூட, அவரோடு சென்று, பவுத்த மாநாட்டில் கலந்துகொண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

தீண்டாமை ஒழிப்பு என்பது வேறு;

ஜாதி ஒழிப்பு என்பது வேறு

தமிழ்நாட்டில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை, யாரும் ஜாதிய வாதிகள் வரவேற்காத காலத்தில், அவரை அங்கீகரிக்காத காலத்தில், அவருடைய கருத்துகளை உணர்ந்துகொண்டு, புரிந்துகொண்டு அவரை வரவேற்ற பெருமைக்குரியவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட நிலையி லும்கூட, அவரால் வரையறுக்கப்பட்ட அரசியல் அமைப் புச் சட்டமாக இருந்தாலும், அந்த சட்டம் ஜாதியை ஒழிப் பதற்குப் பயன்படவில்லை.

தீண்டாமை ஒழிப்பு என்பது வேறு; ஜாதி ஒழிப்பு என்பது வேறு என்பதை முதலில் துணிச்சலாக தெளிவுபடுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.

அரசியல் சட்டத்தை எரித்து

3 ஆயிரம் பேர் சிறையேகினர்

ஆகவே, அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்தால், தண்டனைக் கிடைக்கும் நிலை இருந்தபோதும், அதற்காக நாங்கள் அச்சப்படமாட்டோம் என்று சட்டத்தை எரித்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தண்டனை பெற்று சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பது 60 ஆண்டுகாலத்திற்கு முந்தைய வரலாறு.

திருமாவளவன் பிறப்பதற்கு முன்பே, திருமாவளவன் விடுதலை பெறவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார். அடுத்தடுத்துப் பிறக்கப் போகிற ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் விடுதலைப் பெற்றவர்களாக இந்த மண்ணில் பிறக்கவேண்டும் - வாழவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார்.

ஆக, அந்த சட்டத்தை எரித்த நாளை நினைவு கூர்கிற வகையில்,  60 ஆம் ஆண்டு நிறைவு விழாவாகவும் இந்த விழாவினை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் ஒருங் கிணைத்திருப்பது பெருமைக்குரியது, போற்றுதலுக்குரியது.

தருமபுரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு

நான் எண்ணிப் பார்க்கிறேன், பெரியார் பிறவாமல் இருந் திருந்தால், பெரியாருக்குப் பிறகு அய்யா ஆசிரியர் அவர்கள் இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால், தருமபுரியில் மூன்று சேரிகளை ஜாதி வெறியர்கள் சூறையாடி தீ வைத்துக் கொளுத்தியபொழுது, உடனடியாக அதே தருமபுரியில் ஜாதி ஒழிப்பு மாநாட்டினை நடத்தியிருக்க முடியுமா? அந்த மாநாட்டில் திருமாவளவனை அழைத்துப் பேச வைத்திருக்க முடியுமா? அந்த துணிச்சல், அந்த ஆற்றல் தமிழகத்தில் வேறு யாருக்கும் இருந்திருக்க முடியுமா? என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

ஜாதி, மதவெறியர்களின் தலையில்

சம்மட்டி அடி கொடுப்பவர் ஆசிரியர்

எப்பொழுதெல்லாம் ஜாதி வெறியர்களும், மதவெறியர் களும், தலைவிரித்து ஆடுகிறார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்களின் தலையில் சம்மட்டி அடி கொடுக்கக் கூடியவர் நமது இரண்டாம் பெரியார் அய்யா ஆசிரியர் அவர்கள் என்பதை நாம் களத்திலே பார்க்கிறோம்.

அண்மையில், பெரியார் திடலில் நடத்திய மாநாட்டில், ஜாதி ஒழிப்புக்காக 10 அம்ச கொள்கையை ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். யார் ஜாதி ஒழிப்பைப்பற்றி இங்கே பேசுகிறார்கள்? பெரியாருக்குப் பிறகு ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிற துணிச்சல், எத்தனைப் பேருக்கு இங்கே இருக்கிறது? இன்றைய சமூகக் கட்டமைப்பில், ஜாதி என்பதை தங்களுக்கு சாதகமான ஒரு ஆயுதமாக, ஜாதீய வாத சக்திகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களிடத்தில், இயல்பாக இருக்கிற ஜாதி உணர்வை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனைக் கூர்தீட்டுகிறார்கள்; மோதலைத் தூண்டுகிறார்கள்; வன்முறைக்கு வித்திடு கிறார்கள்; நாடெங்கிலும் நெருப்பை மூட்டி விடுகிறார்கள். அதிலே அரசியல் ஆதாயம் தேட முடியும் என்பதற்காக.

இரண்டு நாள்களுக்குமுன்பு, கடலூர் மாவட்டம் திரு முட்டம் ஒன்றியம் அருகே, சாத்தாவட்டம் என்கிற கிராமத்தில், ஒரு இளைஞன், தலித் அல்லாத ஒரு இளைஞன், குடி போதையில், தனக்குத்தானே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு, அவன் தற்கொலை செய்துகொள்கிறான். அங்கே ஏற்கெனவே தலித் இளைஞர் ஒருவருக்கும், அவனுக்குமிடையில் பிரச்சினை நடந்து, வழக்குப் பதிவாகி, அதில் அவன் சிறைக்குச் செல்லாமலேயே, பிணை பெற்று வெளியில் இருக்கிறான். மீண்டும் சண்டை நடந்த அதே இடத்தில், சந்தித்துக் கொள்கிறபொழுது, ஒரு தள்ளுமுள்ளு நடைபெற்று இருக்கிறது, அவ்வளவுதான். ஆனால், அவனைக் கேவலமாகப் பேசி, இழிவுபடுத்தி, அவனை தற்கொலைக்குத் தூண்டியவர்கள், அவன் சார்ந்த அதே சமூகத்தைச் சார்ந்த ஒரு ஜாதிக் கட்சியைச் சார்ந்த இளை ஞர்கள். அந்த மான உணர்ச்சி அவனைத் தூண்டியதால், தன்னை கேலி செய்துவிட்டார்களே, இழிவுபடுத்தி விட்டார் களே என்று எண்ணியதால், அவன் உடன்பிறந்த அண்ண னின் முன்னால், உறவுக்காரர்களின் முன்னால், நண்பர்களின் முன்னால், அவனே ஒருவரின் இல்லத்திற்குச் சென்று மண்ணெண்ணெயைக் கொண்டு வந்து ஊற்றிக்கொண்டு, தீ வைத்து எரித்துக் கொள்கிறான்.

என்மீது அப்பட்டமான ஒரு அவதூறு; அடாதபழி!

ஊரே நின்று வேடிக்கைப் பார்க்கிறது; அவனுடைய அண்ணன் தடுக்கிறார்; நண்பர்கள் போய் தடுக்கிறார்கள். மருத்துவமனையில் போய் பதிவு செய்கிறார்கள், தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்பதை. ஆனால், இதை முற்றிலும் மறைத்து, உடனடியாக இதற்கெல்லாம் காரணம், திருமாவள வன்தான், விடுதலை சிறுத்தைகள்தான் அவன்மீது தீ வைத்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள், இதை நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களா என்று, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு, சமூகத் தலைவர்களுக்கு, ஜாதி சங்கத் தலைவர்களையெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தூண்டி விடுகிற நிலை.

அதைப் பார்க்கிறவர்களுக்கு, கேட்கிறவர்களுக்கு எவ்வளவு ஆத்திரம்வரும் திருமாவளவன்மீது. அதனால், எவ்வளவு பெரிய வன்முறை இங்கே தலைவிரித்தாடும். வன்முறைகளைப்பற்றி கவலைப்படவில்லை, ரத்தம் சிந்துவ தைப்பற்றி கவலைப்படவில்லை, சாதாரண உழைக்கிற மக்கள் பலியாவதைப்பற்றி கவலைப்படவில்லை. தங்களுக்கு ஒரு அரசியல் ஆதாயம் வேண்டும் என்பதற்காக அப்பட்ட மான ஒரு அவதூறு; அடாதபழி.

தருமபுரியில் அப்படித்தான் என்மீது சுமத்தப்பட்டது. மேற்கு மாவட்டங்களில் இருக்கிற கவுண்டர் சமூகத்து இளைஞர்களுக்கு இப்படி தவறான தகவல் சொல்லப்பட்டது. தென்மாவட்டங்களில் இருக்கிற இளைஞர்களுக்கு தவறான தகவல் சொல்லப்பட்டது. திருமாவளவன் இப்படி பேசினான்; உங்கள் சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தினான். ஒரு இடத்தில்கூட அதற்கான ஆதாரம் கிடையாது. அப்படியெல் லாம் ஒரு சமூக இழிவை உருவாக்கக் கூடிய வகையில், நான் பேசக்கூடியவனாக இருந்தால், தமிழர் தலைவரின் பக்கத்தில் நிற்க முடியுமா? அதனை தமிழர் தலைவர் அவர்கள் அனு மதிப்பாரா? அப்படிப்பட்ட ஒரு இழிவானவனை ஊக்கப்படுத் துவாரா? என்பதை தயவுகூர்ந்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

ஏனென்றால், நானும் 20 வயதிலிருந்து பெரியார் பாசறை யில் என்னை இணைத்துக் கொண்டவன். பெரியார் திடலில் நான், அடையாளம் தெரியாத ஒரு சிறுவனாக, இளைஞனாக அங்கே எனக்கான அரசியலைத் தேடியவன்; எனக்கான கொள்கைகளைப் புரிந்துகொண்டவன்.

2016: ‘‘மதச்சார்பின்மை

பாதுகாப்பு மாநாடு’’

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிந்துவுடனேயே, விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில், ‘‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’’ ஒன்றை நடத்தி, ஒரு பிரகடனத்தைச் செய்தோம்.

ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு கருத்துகளை முன்வைத்து, கடந்த பொதுத் தேர்தலை நாம் சந்தித்தோம். மக்கள் நமக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. இனி, அதே கருத்து களை முன்வைத்து, மக்கள்நலக் கூட்டணியை நாம் தொடர முடியாத நிலையில் இருக்கிறோம். இன்றைக்கு மதவாத சக்திகள் தலைதூக்கி விட்டார்கள். ஜெயலலிதா அம்மையார் இல்லாத நிலையிலும், கலைஞர் அவர்கள் செயல்பட முடி யாத, உடல்நலிவுற்று இருக்கிற நிலையிலும், ஜாதீய வாதி களும், மதவாதிகளும் இங்கே வலுப் பெறுவதற்குத் துடிக் கிறார்கள். இதனையெல்லாம் உணர்ந்துகொண்டு, விடுதலை சிறுத்தைகள் முன்கூட்டியே சொன்னோம்.

இடதுசாரி தலைவர்களுக்கு

வேண்டுகோள்

இந்தத் தேர்தலில், மதவாத, ஜாதீய வாத சக்திகளை எதிர்ப்பதைத்தான் நாம் முன்னிறுத்தவேண்டும். இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பிரதிபலிக்க வேண் டும். கோவையில் நடைபெற்ற இந்திரா காந்தி அம்மையாரின் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்பொழுது நான் இடதுசாரி தலைவர்களுக்கு வெளிப்படையான வேண்டுகோளை வைத்தேன்.

பாரதீய ஜனதா கட்சியையும், காங்கிரசு கட்சியையும் சமதூரத்தில் வைத்துப் பார்க்கும் நிலைப்பாட்டை தயை கூர்ந்து மறுபரிசீலனை செய்யுங்கள். பாரதீய ஜனதா என்ற மதவெறி சக்தியை, மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் நாம் தடுக்கவேண்டுமானால், காங்கிரசோடு இடதுசாரிகள் இணைந்து இருக்கவேண்டிய தேவை இருக்கிறது, அகில இந்திய அளவில் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

ஆக, அந்தப் புரிதலில் இருந்துதான், இந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் முடிவெடுக்கவேண்டிய தேவை இருப்பது என்பதை நான் தொலைபேசியில் அந்தத் தலைவர்களோடு பேசினேன்.

தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தேன்

சி.பி.அய்., சி.பி.அய் (எம்) அவர்களுடைய முன்னணி தலைவர்களோடு உரிய அவையில் கலந்துபேசிய பிறகுதான், அறிவிக்கப்படும் என்பதால், அவர்கள் ஓரிரு நாள்கள் கழித்து அந்த முடிவை அறிவித்தார்கள். நான் தளபதி ஸ்டாலின் அவர்களின் கடிதம் வந்தவுடனேயே, தோழர்களோடு தொலைபேசியில் உரையாடிவிட்டு, முன்னணி தலைவர்கள் ஒரு சிலரோடு கலந்து பேசிவிட்டு, அந்த நாளே அறிவிப்பு செய்தேன்; திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு என்று.

இதுதான், தி.மு.க.வை வலிமைப்படுத்திவிடக் கூடாது; தி.மு.க.விற்கு இடதுசாரிகள் ஆதரவு - திருமாவளவன் ஆதரவு - காங்கிரசு ஆதரவு என்று அந்த அணி வலுபெறுவது, தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்திவிடும். இந்த அணி தொடர்ந்து நீடித்தால், தளபதி ஸ்டாலின் அவர்கள் முதல்வ ராகி விடுவார். இதனை யாராலும் தடுக்க முடியாது. இதனைத் தடுக்கவேண்டும் என்கிற ஒரு கெட்ட எண்ணத்தோடு, கேடுகெட்ட உள்நோக்கத்தோடு, விடுதலை சிறுத்தைகளை அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக, இப்படிப்பட்ட அவதூறு.

ஆனால், இன்றைக்கு மருத்துவமனையிலிருந்து அந்த ஆவணம் வெளியாயிருக்கிறது. ஏ.ஆர். என்று சொல்லப் படுகிற அறிக்கை வெளியாகி இருக்கிறது. அவன் எப்படி இறந்தான் என்பது உள்பட. அதுதான் ஒரே சான்று.

ஆசிரியர் அவர்களின் ஆறுதல்

விடுதலை சிறுத்தைகள்மீது போடப்பட்ட, சொல்லப்பட்ட அத்தனையும் அவதூறுகள்; அடாத பழி. இதனை நன்கு உணர்ந்துகொண்டு, தோளைத் தட்டிக் கொடுத்து, ஊக்கங் கொடுத்தவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.

‘‘திருமாவளவன், நீ கலங்கவேண்டாம்; தேர்தல் அரசிய லில் ஈடுபடக்கூடியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை; நாங்கள் இருக்கிறோம்; திராவிடர் கழகம் இருக்கிறது என்று, பத்தே நாள்களில், தருமபுரியில், ஜாதி ஒழிப்பு மாநாட்டினை நடத்தி, அந்த மாநாட்டில் என்னை உரையாற்ற வைத்தார்.

அந்த நேரத்தில் நான் கலங்கிப் போய் நின்றேன்; ஏனென்றால், எல்லா ஜாதி வெறிகளையும் தூண்டிவிட்டார்கள்; எல்லா ஜாதிக்கும் எதிரானவன் என்று தூண்டிவிட்டார்கள். 2001 ஆம் ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழக சின்னமான உதயசூரியன் சின்னத்தில், மங்களூர் தொகுதியில் நான் போட்டியிட்டேன். அப்போது என்னை தோற்கடிக்கவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள் என்று எனக்குத் தெரியாது.

அப்பொழுது அவர்கள் வெளியிட்ட துண்டறிக்கையில், ஒரு தவறான செய்தியைக் குறிப்பிட்டு, வன்னிய சமூகத்து மக்களுக்கு மட்டும் ஒரு வேண்டுகோளை விடுத்தார்கள். வன்னிய சமூகத்துப் பெண்களுக்கு எதிராகவும் நான் பேசிய தாகவும். ஆனால், அதற்குப் பிறகு என்னோடு கைகோத்து, என் தம்பி திருமாவளவனோடு நான் கைகோத்து விட்டேன்; இனி எந்த சக்தியாலும், எவராலும் பிரிக்க முடியாது என்று உரத்துப் பேசிவிட்டு, இதனால், அரசியல் ஆதாயம் கிடைக்க வில்லை என்பதால், தனித்துப் போனதோடு மட்டுமல்லாமல், மதவாத சக்திகளோடு கைகோத்துக் கொண்டு, திருமாவளவ னுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் எதிரான அவதூறு பரப்பப்பட்டது.

நரேந்திர மோடி அவர்கள், சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கையாண்டு, பெரும் பான்மை இந்துக்களின் ஆதரவைத் திரட்டி, அவர் உத்தியைக் கையாளுவதைப்போல, திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை, தலித் மக்களுக்கு எதிரான வெறுப் புப் பிரச்சாரத்தை இங்கே பரப்பினால், தலித் அல்லாதவர்களின் வாக்குகளையெல்லாம் திரட்டி விட முடியும் - தன் பிள்ளையை முதல்வராக்கி விட முடியும் என்கிற உத்தியைக் கையாண்டு, அப்படிப்பட்ட ஒரு அரசியல் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டார்கள்.

எல்லா சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களும் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். எந்த மேடையிலும், யாருக்கு எதிராகவும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகவும் நான் பேசவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன், நான் பெரியாரின் பிள்ளை என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

ஜாதி ஒழிப்பை முன்னிறுத்திப் போராடுகிற இயக்கம் -

ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்குகிற இயக்கம் -

ஜாதி ஒழிப்புதான் பெரியாரியம் -

ஜாதி ஒழிப்புக்கான தேவைதான் சமூகநீதி -

சமூகநீதிக்கான தேவைதான் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு -

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்கான தேவைதான் கடவுள் மறுப்பு -

தந்தை பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட் டுமே உயர்த்திப் பிடிக்கிறார்கள். தந்தை பெரியார், கடவுளை மறுப்பதற்காக இயக்கம் தொடங்கவில்லை. சமூகநீதியை வென்றெடுப்பதற்காக இயக்கம் தொடங்கினார். அதைவிட, ஜாதியை ஒழிப்பதற்காக இயக்கம் கண்டார் என்பதுதான் முக்கிமானது.

அவருடைய அடிப்படை கோட்பாடே ஜாதி ஒழிப்புதான். ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், சமூகநீதி தேவைப்படுகிறது. எல்லா அதிகார மய்யங்களிலும் குறிப்பிட்ட சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றபொழுது, அந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டுமானால், அதிகார வலி மையைப் பலவீனப்படுத்தவேண்டும். அதிகார வலிமையைப் பலவீனப்படுத்தவேண்டுமானால், சமூகநீதி என்பது ஒரு கோட்பாடாக, சட்டப்பூர்வமான ஒரு கோட்பாடாக மாற வேண்டும். தந்தை பெரியாருடைய அந்தக் கொள்கை, கோட் பாட்டிற்கு சட்டப்பூர்வமான வலிமையைத் தந்த பெருமை, பேரறிஞர் அண்ணாவையும், தலைவர் கலைஞர் அவர்களை யும் சாரும். அவர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த காரணத்தினால்.

பெரியார் எந்தப் பாதையில்

பயணம் செய்தாரோ...

அப்படி அவர்கள் அரசியல் இயக்கமாக பிரிந்து போனா லும்கூட, பெரியார் எந்தப் பாதையில் பயணம் செய்தாரோ, அந்தப் பாதையில், இலக்கைக் குறி வைத்து, கொஞ்சமும் பிறழாமல், நழுவாமல், மிகத் துணிச்சலாக இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்பவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள். பெரியார் மறைந்து கிட்டத்தட்ட அரை நூற் றாண்டு ஆகப் போகிறது. ஆனால், இன்னும் அதே வீரியத் தோடு திராவிடர் கழகம் செயல்படுகிறது.

அந்த ஜாதி ஒழிப்புக் கருத்திலிருந்து ஒரு அங்குலம்கூட பிறழவில்லை. ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு என்கிற அந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு அங்குலம்கூட பிறழ வில்லை. பகுத்தறிவுப் பிரச்சாரம் என்கிற ஒரு கலாச்சார அமைப்பாக மட்டுமே இல்லாமல், ஜாதியை ஒழிப்பதற்கான களத்தை அமைக்கிற ஒரு அரசியல் இயக்கமாகவும் திரா விடர் கழகம் இயங்குகிறது. அரசியல் இயக்கம் என்று சொன்னால், தேர்தல் அரசியலை மட்டுமே நான் பார்க்கக் கூடாது. அரசியல் தன்மை கொண்டது. ஜாதி ஒழிப்பு என்பது, அரசியல் பண்புகளைக் கொண்டது. பகுத்தறிவு என்பது கலாச்சாரப் பண்பைக் கொண்டது. பெண்கள் விடுதலைப் பெறவேண்டும் என்பது கலாச்சாரத் தன்மையைக் கொண்டது.

ஆனால், இதில்  அரசியல் கூறுகள் புதைந்து கிடக்கின்றன. அரசியல் ரீதியான எழுச்சியைப் பெறவேண்டும். திராவிடர் கழகம் என்கிற அந்தக் களத்திலிருந்துதான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு அரசியல் இயக்கம் உருவானது என்பதைப்போல, திராவிடர் கழகம் என்கிற சிந்தனைக் களத்திலிருந்துதான், அம்பேத்கரை ஆசானாகக் கொண்டிருக்கிற, விடுதலை சிறுத்தைகள் கட்சி என்கிற இயக்கமும் உருவாகி இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகளின் ஆசான்கள் தந்தை பெரியா ரும் - புரட்சியாளர் அம்பேத்கரும். இருவரும் ஒருவர்தான். இரண்டு தலைவர்களும் ஒரே சிந்தனையாளர்கள்தான். இருவரின் இலக்கும் ஒரே இலக்குதான். அந்த வகையில், நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், இரண்டாம் பெரியா ராக மட்டுமல்ல, இரண்டாம் அம்பேத்கராகவும் இந்தக் களத் தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். அவர் நூறாண்டுகள் வாழவேண்டும்; அது ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு; ஜாதி ஒழிப்புக்கு அது மிகப்பெரிய அடித்தளமாக அமையும்.

மூன்றாவது குழலாக இருந்து

விடுதலைச் சிறுத்தைகள் களமாடும்

எனவே, தமிழர் தலைவர் அவர்கள் நூறாண்டுக்கு மேலாக வாழவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் வாழ்த்தி, இந்தக் களத்தில் என்றென்றைக்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொன்னதைப்போல, ஒரு மூன்றாவது குழலாக இருந்து விடுதலைச் சிறுத்தைகள் களமாடுவோம்.

திராவிடர் கழகமும் - விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வேறு வேறல்ல. ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கிற இருபெரும் அமைப்புகள் - இருபெரும் ஆயுதங்கள் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

- இவ்வாறு  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாளவன் அவர்கள் உரையாற் றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner