எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம்முடைய கொள்கை வெற்றி பெறவேண்டுமானால்

நாம்  திராவிடர்கள் என்ற உணர்ச்சி தேவை!

இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் கருத்துரை

சென்னை, ஜன.1 இந்தக் கொள்கை வெற்றி பெறவேண்டு மானால், தமிழர்களுக்கு ஒரு சொரணை வரவேண்டும்; தமிழர்களுக்கு என்ன சொரணை வரவேண்டும் என்றால், நாம் திராவிடர்கள் - திராவிடர்கள் என்றால், இந்த நாட் டினுடைய ஆதி மக்கள் - ஆதிமக்கள் என்றால், பழைய குடிமக்கள் - பழைய குடிமக்கள் என்றால், இந்த நாட்டிற்கே உரியவர்கள் என்றார் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்.

18.12.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலி லுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்த நிகழ்ச்சியின் தலைவர் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களே,

வரவேற்புரையாற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இங்கே உரையாற்றிய தோழர் முத்தரசன் அவர்களே, தொல்.திருமாவளவன் அவர்களே,

இங்கே உரையாற்ற வாய்ப்பில்லாவிட்டாலும், எங்களு டைய உரைகளையெல்லாம் கேட்டு, உடன் இருந்து இந் நிகழ்விற்கு ஆக்கம் கொடுக்கின்ற நம்முடைய வீராசாமி அவர்களே,

அருமைத் தோழர்களே, கழகத் தோழர்களே, இந் நிகழ்வில் பங்குகொள்ளக்கூடிய பல்வேறு விதமான கொள்கை உள்ளவர்களையெல்லாம் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.

இன்றைக்கு நம்முடைய வீரமணி அவர்கள் எடுத்துப் பேசிய இந்தக் கொள்கை - தொல்.திருமாவளவன் அவர் கள் எடுத்துச் சொன்ன கொள்கையையெல்லாம் நீங்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால், ஒரு உண்மை புலப்படும்.

என்ன அந்த உண்மை என்று கேட்டால், திராவிடர் களாகிய நாம் தலைதூக்கக் கூடாது என்ற ஒன்றே ஒன்று தான் இன்று இருக்கிற அரசியல்.

திராவிடர் இனம் தலைதூக்கி வளர்ந்துவிடக்கூடாது என்கிற குணத்தோடு

திராவிடர் இனத்தை - அந்த இனம் எந்த வகையாக இருந்தாலும் சரி, எந்தப் பெயரில் இருந்தாலும் சரி அந்த இனம் தலைதூக்கி வளர்ந்துவிடக்கூடாது என்கிற குணத் தோடு இன்றைக்கு அகில இந்தியா இருக்கிறது.

தலைநிமிர முடியாதபடி அடக்கி வைக்கவேண்டும் என்பதுதான் பி.ஜே.பி.யின் ஆட்சியினுடைய லட்சியம்

இன்றைக்கு அதிலும் குறிப்பாக, பி.ஜே.பி. ஆட்சி, மத்தியில் இருக்கிற ஆட்சி - பொதுமக்களை திசை திருப்பி - அதன்மூலமாக இந்த நாட்டில், தமிழர்கள், திராவிடர்கள் என்கிற பெயரில் வாழ்கிற மக்களை தலைநிமிர முடியாதபடி அடக்கி வைக்கவேண்டும் என்கிற ஒன்றுதான் பி.ஜே.பி. யின் ஆட்சியினுடைய லட்சியமாக இருக்கிறது.

அந்தக் கட்சி வெளியில் பேசுகிறபொழுது, பொதுமக் களுக்காகப் பேசுவார்கள்; ஏழைகளுக்காகப் பேசுவார்கள்; வறியவர்களுக்காகப் பேசுவார்கள். இந்த நாட்டில் பாடுபட்டு வாழவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், நடைமுறையில் அவர்களுடைய உள்மனம், ஆழ்மனம், அவர்களுடைய சிந்தனைகள் எல்லாம், அவர்கள் எல்லாம் தங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் உயர வேண்டும்; முன்னேறவேண்டும் என்றுதான் செயல்படு வார்கள்.

தமிழர்களுக்கு சொரணை வரவேண்டும்

எனவே, அவர்களுடைய ஆட்சி இருக்கின்ற வரை யில், பி.ஜே.பி. ஆட்சி இருக்கின்ற வரையில், இந்த நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம், எவ்வளவு கொள்கை உறுதி உள்ளவர்களாக இருந்தாலும், அந்தக் கொள்கையை வெற்றி பெற வைக்க முடியாது. அந்தக் கொள்கையை வெற்றி பெற வைக்கவேண்டுமானால், பி.ஜே.பி.யின் கொள் கைக்கு மாறாக, இந்தக் கொள்கை வெற்றி பெறவேண்டு மானால், தமிழர்களுக்கு சொரணை வரவேண்டும்; தமிழர்களுக்கு என்ன சொரணை வரவேண்டும் என்றால், நாம் தமிழர்கள் - தமிழர்கள் என்றால் திராவிடர்கள் - திராவிடர்கள் என்றால், இந்த நாட்டினுடைய ஆதி மக்கள் - ஆதிமக்கள் என்றால், பழைய குடிமக்கள் - பழைய குடிமக்கள் என்றால், இந்த நாட்டிற்கே உரியவர்கள்.

என்றைக்கும் போராடத் தயாராக இருக்கவேண்டும்

எனவே, அப்படிப்பட்ட நமக்கு, இந்த ஆட்சியில் என்றைக்கும் நியாயம் கிடைக்காது என்கிற உள்ளத்தோடு, என்றைக்கும் போராடத் தயாராக இருக்கவேண்டும்.

கம்யூனல் ஜி.ஓ. வந்தபோது, முத்தையா முதலியார் அவர்கள் அந்த கம்யூனல் ஜி.ஓ.வை எழுதித் தந்தவர், அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதினார்.

அவர் சொன்னார், இந்த கம்யூனல் ஜி.ஓ.வை நீங்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால், நாம் எல்லாம் எந்த இனம் என்கிற உணர்ச்சியை நாம் மறந்துவிட்டு இருக்கிறோம். அதை மறக்கக்கூடாது என்கிற அடிப்படையில், இந்த கம்யூனல் ஜி.ஓ.வை நாம் அடிக்கடி எண்ணிப் பார்த்து, நம்முடைய இனத்தை நாம் உயர்த்தவேண்டும். அந்த உள்ளத்தோடு நாம் நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் சொன்னார்.

நாமெல்லாம் திராவிடர் என்பதை

மறந்துவிடக் கூடாது

அந்த முறையை எண்ணிப் பார்த்தால், தாழ்த்தப்பட்ட மக்கள், மிகவும் பின்தங்கிய மக்கள், மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய உரிமைக்காகப் போராடுகிற அந்த உணர்ச்சியைப் பெற்று, அந்த உணர்ச்சி மேலும் மேலும் வளர்ந்தால்தான், அந்த உணர்ச்சியை எந்த நேரத்திலும் இழக்காமல் இருந்தால்தான், அந்த உணர்ச்சி எந்தக் காரணத்தை முன்னிட்டும், வேறு இனத்தாருக்கு அடிமைப்படாமல் இருந்தால்தான், அவர்கள் நிமிர்ந்து நிற்க முடியும். அவர்கள் நிமிர்ந்து நின்றால்தான், இந்த நாட்டில், நம்முடைய லட்சியம் காப்பாற்றப்படும். எனவே, அந்த லட்சியத்தைக் காப்பாற்ற, ஒரே ஒரு குறிப்பு சொல்கிறேன். நாமெல்லாம் திராவிடர் என்பதை மறந்துவிடக் கூடாது.

நாம் திராவிடர் என்பதை மறந்துவிட்டால்...

நாம் திராவிடர் என்பதை மறந்துவிட்டால், மற்ற எல்லாமும் போய்விடும். திராவிடர் என்கிற நினைப்பு, நம்முடைய மனதில் இருக்கின்ற வரையில், நாம் எதையும் இழக்கமாட்டோம்.

நாம் இந்நாட்டு மக்கள்-

நாம் இந்நாட்டுக்கே உரியவர்

எனவே, அந்த உணர்ச்சியோடு நாம் தமிழர், நாம் திராவிடர், நாம் இந்நாட்டு மக்கள் நாம் இந்நாட்டுக்கே உரியவர். எனவே, நம்முடைய உரிமையை யாரோ பறிப்பதற்கு நாம் இடம்தரக்கூடாது என்கிற உணர்ச்சி நமக்கு வரவேண்டும்.

இன்றைக்கு எடுத்துக்கொள்ளுங்கள், வடக்கே - தெற்கே என்று பிரித்துப் பார்த்தால், அதனை ஒத்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரிய வேற்றுமை உண்டு.

வடக்கே உள்ளவர்கள் எவ்வளவு தவறாக எழுதினாலும்கூட, அதற்கு மதிப்பெண் போட்டு அவர்களை உயர்த்திவிடக் கூடிய நிலைமை இன்றைக்கு வடக்கே உள்ளவர்களுக்கு இருக்கிறது.

அவர்களுடைய ஆதிக்கத்திற்கு

நாம் இடந்தரக்கூடாது

ஆனால், தென்னாட்டில் உள்ளவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், அந்தத் திறமையை அவர்களால் நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாமல், அவர்கள் அப்படியே அழுத்தப்படுகிறார்கள்.

எனவே, அதற்கு இடம்தரக்கூடாது என்கிற முறையில், அவர்களுடைய ஆதிக்கத்திற்கு நாம் இடந்தரக்கூடாது என்ற உணர்ச்சியோடு நாம் நடந்துகொள்ளவேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் திராவிடர் - நாம் தமிழர் - நம்முடைய இனம் தமிழினம். தமிழினத்தினுடைய உரிமை வாழ்வு - தமிழோடு ஒட்டிய உறவு வாழ்வு - கம்யூனல் ஜி.ஓ.வோடு சேர்ந்து வளரவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொண்டு, அந்த உணர்ச்சியை நாம் வளர்ப்போம் என்று கூறி என்னுரையை நான் முடித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு  இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர் கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner