எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டிஜிட்டல் யுகம் மவுனப்படங்கள் காலத்தையும், செலுலாய்ட் திரைச்சுருளையும் பேசுவதென்பதே விந்தையான அனுபவமாகக் கருதப்படும் வேளை யிது!

மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் திரையியல் கற்பிக்கும் பேராசிரியர் முனைவர் சொர்ணவேல் எடுத்த ஒட்டு மொத்த ஆவணப்படத் திரையிடலை சென்னை பெரியார் திடலில் டிசம்பர் மாதம், மறுபக்கம் அமைப்பும், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையும் இணைந்து நடத்தின.

1995 ஆவணப்படமான “தங்கம்” மூலம் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகிலுள்ள தனது கிராமத்து அத்தியாயம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள முனை கிறார் சொர்ணவேல். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பீடி சுற்றிக் கொண்டிருக்கும் தங்கம் ஆண்-பெண் வித்தியாசமின்றி ஊரில் சகஜமாக பழகும் சிறுமி. அவளுக்கும் கனவுகள் இருக்கின்றன. ஊர்மக்கள் கலாச்சாரம், திருவிழாக்கள், சடங்குகள் ஊடாக அவள் தோழியாக சொர்ணவேலின் கைக் காமிராவும் துள்ளலுடன் காடு, கழனி சுற்றி வருகிறது. சவால்களை சந்தித்து காட்சிப்படுத்துகிறார் கவிநயத் துடன். வானொலி வர்த்தக ஒலிபரப்பு மட்டுமே பின்புலத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது! (அக்கிராமத்தை தொலைக்காட்சியும் செல்பேசியும் ஆக்கிரமிக்காத காலகட்டத்தில் ஒரே பொழுது போக்கு வானொலிப் பெட்டி பாடல்கள் கேட்பதே!)

தங்கம் பீடி சுற்றச்செல்லும்போது ஊஞ்சலாடிய அந்த ஆலமரத்தின் விழுதுகள் அந்த ஊரில் இன்னும் இருக்கிறதா, இல்லை புறவழிச் சாலை விரிவாக்கத்திற்கு குறுக்கீடாக நின்று பலியானதா என்ற நெருடல் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது!

சிறு வீடுகள் குடிசைகளுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கும் ஊர்மக்களின் வாழ்வு முறை தங்கம் என்ற உண்மைக்கதாபாத்திரத்தின் வாயிலாக நமக்கு உணர்த்தப்படுகிறது. அவளது கனவுகள் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன. பீடித்தொழிலாளிகளின் நலனுக்காக சமூகசேவகி இருசக்கர வாகனத்தில் வரும்போதே தங்கம் மனசும் பூக்கிறது!

சோறு போடும் பீடித்தொழில் காசநோயையும் நெஞ்சாங்கூட்டில் வளர்ப்புப் பிராணியாக சிறுகச் சிறுக வளர்த்துவருகிறது என்பதுதான் கண்ணுக்கு புலப்படாத விஷயம். கதைபோகிற போக்கில், பக்குவமாக இதை உணர்த்தி மருத்துவப் பரி சோதனை செய்ய வற்புறுத்துகிறார் சமூகசேவகி. 55 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் இணை இயக்குநர் இளேரியா புரேசியா. இன்புட் ’96, எக்கோ ’96, ஆர்ச்சிபெலாகோ ’96மரேம்மா, வெஸ்ட் என்ட் லண்டன் சர்வதேச ஆவணப்பட விழாக்களில் விருது பெற்ற படம். "அய்என்ஏ" (1997, 56 நிமிடங்கள்) ஆவணப்படம் நேதாஜி காலத்தை அசைபோடும் வாய்மொழிப் பதிவாக வெளிப்படுகிறது. நேதாஜி யுடன் காலாட்படை வீரர்களாக நெடும் பயணம் மேற்கொண்ட சக பயணிகளின் நேர்காணல்களும் ஸ்டாக் பிலிம்களும் ஊடும் பாவுமாக நெகிழ்வுடன் மனதைப் பின்னுகின்றன.ராணி ஜான்சி, பெண்கள் ரெஜிமென்ட் பெயர்கள் எல்லாமே சங்கேதமாக உணர்த்தப்படுகின்றன. பெண்கல்வியும் பெண்கள் பணிக்குச் செல்வதும் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் இராணுவம் அறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு பெண்கள் நுண்ணறிவுப் பிரிவில் அமர்த்தப்பட்டிருந்தனர். வேலப்பன் என்றால் வேலம்மாள், முருகப்பன் என்றால் முருகம்மாள் என்று அர்த்தம்! நெடும்பயணத்தை வழிநடத்திய நேதாஜி காலில் கண்ட கொப்புளங்கள் பற்றி வேதனை யுடன் பகிர்கின்றார் ஜானகி தேவர். அய்என்ஏ மேஜர் பாஸ்கரன் சுபாஷ் போஸின் அந்தரங்க செயலாளராக இருந்தவர். ‘பேஸ்மேக்கர்’ மூலம் உயிர் வாழும் பாஸ்கரன் ஒருவர்தாம் மீதமிருக்கும் நேதாஜியின் நெருங்கிய சகா. படம் எடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு அளித்த மேஜர் பாஸ்கரன், நேதாஜி இறுதியாக விடைபெறும் காட்சி குறித்து பொங்கிவரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு அது இறுதிகட்டமாக இருக்கக்கூடும் என்பதை தாம்உணர்ந்ததை தெரிவிக்கிறார்.

படத்தில் இடம்பெறாத நெகிழ்வான நிகழ்வு ஒன்று உண்டு. தனது மகன் இறந்த செய்தியை வெளிப்படுத்தாது இந்த ஆவணப்பட நேர்காணலை நடத்திய பின்னரே இவ்விஷயத்தை இயக்குநரிடம் வேதனையுடன் பகிர்கிறார். அய்என்ஏ பற்றியும் நேதாஜி பற்றியும் தானறிந்த ஒவ்வொரு விஷயத் தையும் ஆவணப்படுத்தும் நோக்கில் தனது துயரத்தையும் பொருட்படுத்தாத இந்த மாமனிதர்! (படம் எடுத்த பத்தாண்டுகள் கழித்து மறைந்தார்.) நேதாஜியுடன் கூலிங் கிளாஸ் அணிந்து புதுமைப் பெண்ணாக வரும் ராணி ஜான்சி ரெஜிமென்ட் கேப்டன் லட்சுமி ஸ்டாக்ஆர்கைவ் படங்களில் வந்து மறையும்போது நமது கண்களும் பனிக் கின்றன.

பிற்காலத்தில் அவர் மருத்துவராகப் பணியாற்றும் களம் கான்பூர் ஆன காரணத்தால் 1996-97இல் படமெடுக்கும்போது அவரிடம் நேர்காணல் எடுப்பது விடுபட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மியான்மா (பர்மா)வுக்கு நேதாஜி வந்தபோது, அவரது அறைகூவலை ஏற்று அங்கு மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த லட்சுமிசுவாமிநாதன், ராணி ஜான்சி ரெஜிமென்ட் கேப்டன் ஆனதும் பின்னாளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலும் சிபிஅய்(எம்) கட்சியிலும் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர்.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது சீக்கியர்களுக்கு எதிராக மதக்கலவரம் தூண்டி விடப்பட்டபோது கான்பூரில் மருத்துவராகப் பணிபுரிந்த கேப்டன் லட்சுமி சீக்கியர்களுக்கு அடைக்கலம் அளித்து பாதுகாத்தவர். “என் பிணத் தின் மீது சென்றுதான் சீக்கியர்களை உங்களால் பிடிக்கமுடியும் ” என்று கலவரவாதிகளுக்கு எச் சரிக்கை விடுத்தவர் கேப்டன் லட்சுமி!அவரது துணிச்சலின் விளைநிலம் அய்என்ஏ ராணுவம் என்றால் அது மிகையாகாது.

“வில்லு” (1997, 58 நிமிடங்கள்) வில்லுப்பாட்டு கலைஞர்களின் நேர்காணல் அடங்கிய ஆவணப் படம். அருண்மொழியின் துல்லியமான ஒளிப்பதிவு வில்லிசைக் கலைஞர்கள் உடல்மொழியை அண் மையில் காட்டுவதோடு அருகிவரும் கலைஞர்களின் அதீத ஈடுபாடு குறித்தும் பதிவிடுகிறது. தொழில் என்று வரும்போது, தன்னைக் காப்பாற்றிவரும் வில்லிசை மரபு வழியில் புராணக்கதைகளுக்கு ஏற்ப நெற்றியில் குங்குமம், விபூதிப்பட்டை அணிந்தபடி தோன்றும் கலைஞர் வீட்டில் உரையாடும் போது பின்புலத்தில் மார்க்ஸ் -ஏங்கெல்ஸ்- லெனின்- ஸ்டாலின் பிரேமிடப்பட்ட படம் தொங்குகிறது. கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் என்பதை சிரித்துக் கொண்டே கூறிவிட்டு நிறுத்திய இடத்திலிருந்து தொடர்கிறார்!

90 வயது வில்லிசை துணை வாத்தியக் கலைஞர் ஒருவர் ஈடுபாட்டுடன் பேசும்போது காமிரா மேயும் அவரது உடல்சுருக்கங்கள் அவரது துவண்டு விடாத மன விசாலத்தை நமக்குள் பாய்ச்சி விடுகிறது.

தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைக்கல்வி பயின்று மிச்சிகன் ஸ்டேட் பல்கலை கழகத்தில் பேராசிரியர் ஆன சொர்ணவேலின் ஆவணப்பதிவு கள் அமெரிக்க அறிஞர்கள் மத்தியில் பேசப்படுவது பிரமிப்பாக உள்ளதை அறியலாம். சொர்ணவேல் தமது ஏற்புரையில், தொழில்நுட்ப வளர்ச்சிஅடைந்த காலகட்டத்தில் பின்னோக்கிப் பயணித்து தமது ஆவணப்பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண் டார். தங்கம் ‘டாகுபிக்ஷன்’ வகைமையில் அமைந்ததை நினைவுகூர்ந்தார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி வாழ்த்தும்போது:

“மதவெறி அலையில் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும் பாலானவை அருவருக்கத்தக்க அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அலை யோடு அடித்துச் செல்வதற்குப் பதிலாக எதிர்நீச்சல் போட்டு மாறுபட்ட சிந்தனை, புதுப்பார்வை தேவை என்பதாக இத்தகைய குறும்படங்கள், ஆவணப்படத் திரையிடல்கள் நடைபெற்று வருவது சிறப்பு’’ என்று கூறி சொர்ணவேலை கவுரவித்தார்.

இரா.குமரகுருபரன்

நன்றி: ‘தீக்கதிர்', 7.1.2018