எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு:

தமிழகம் முழுவதும் திமுக-கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன.28 பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் நேற்று (27.1.2018) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், காங்கிரசு தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மெரீனா புரட்சி- மு.க.ஸ்டாலின்

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியது:

பேருந்துக் கட்டணத்தை ரூ.3 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு யாரையும் ஆலோசிக்காமல் உயர்த்தி மக்கள் மீது பெரிய சுமையை அரசு ஏற்றியுள்ளது. இதைத் திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்ய முடியா விட்டால், பதவி விலக வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு முடியாது. மெரீனா புரட்சி போல மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

வைகோ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:

மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மிக மோசமான நிலையில் உள்ளது. தமிழக அரசில் ஊழல்தான் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். பேருந்துக் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மெரீனா புரட்சி மீண்டும் நடக்கும். திமுக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மதிமுக உறுதுணையாக இருக்கும் என்றார்.

கவிஞர் கனிமொழி

மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியது:

பேருந்து சேவை என்பது மக்கள் சேவை. அமெரிக்கா போன்ற நாடுகளில் பேருந்து கட்டணத்துக்கு 65 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கிறது. இந்த அரசின் ஒரே சாதனை,பாஜகவின் கைப்பாவையாக இருப்பதுதான் என்றார். மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலை வர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநாவுக்கரசர்- திருமாவளவன்

மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சு.திருநாவுக் கரசர் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மாவட்டச் செய லாளர் மாதவரம் சுதர்சனம் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner