எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக் கோரி அனைத்துக் கட்சி மாணவர் அமைப்புகளின் கலந்துரையாடல்

மருத்துவக் கல்லூரிகள்முன் வாயிற்கூட்டம் - தொடர் முழக்கப் போராட்டம் -

மாவட்டங்களில் கருத்தரங்குகள் - துண்டறிக்கைகள் விநியோகம் - முதலமைச்சர் சந்திப்பு

மார்ச் மாதம் டில்லியில் போராட்டம்-தேசிய கருத்தரங்கம்

சமூகநீதித் திசையில் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, பிப்.10 நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் - அமைப்புகளின் மாணவர்கள் சந்திப்புக் கலந்துரையாடலில் பல முக்கிய தீர்மானங்கள் - செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

சென்னை பெரியார் திடலில்  ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் 10.02.2018 அன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாணவர் அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

மத்திய அரசுக்கு

வன்மையான கண்டனம்

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி,  கல்வியில் சம வாய்ப்பை வழங்க அறிவுறுத்தும் அரசமைப்புச் சட்டத்தை மீறும் வகையில், மீண்டும் இரண்டாம் (கல்வி) ஆண்டாக “நீட்’’ தேர்வைத் திணிக்கும் மத்திய அரசுக்கு இக்கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசின் நோக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது

தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு சட்ட திருத்த மசோதாக்களை, இன்னும் குடி யரசுத் தலைவரின் பார்வைக்கே அனுப்பாமல், மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது, நாடாளுமன்ற நடை முறைக்கும், ஜனநாயகக் கோட்பாட்டுக்கும், அரசியல் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கும் விரோதமான நடவடிக்கையாகும். பொதுப் பட்டியலில் உள்ள  கல்வித் துறையில், மாநில சட்டப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ள சட்ட முன்வரைவுகளை, மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பது சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசின் நோக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

உயிர்நாடிப் பிரச்சினைகளான சமூகநீதியும், மாநில உரிமையும் இணைந்துள்ள நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இவ்வாறு நடந்துகொள்வது முறையான தன்று என்பதோடு, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர் காலத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடியது என்பதை யும் உணர்ந்து, மத்திய அரசு உடனடியாக ‘நீட்’ தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் சட்ட திருத்த மசோதாக்களுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 2 (அ):

தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும்  தனியார் கல்லூரிகளில் அரசுக்குரிய இடங்களுக்கும்...

எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் (திருத்த) சட்டம், 2016 பிரிவு 10(ஞி)யோ, உச்சநீதிமன்றமோ விலக்கு அளிக்காத போதும், மத்திய அரசு அவற்றுக்கு நீட் பொருந்தாது என்று அறிவித்திருப்பதை சுட்டிக் காட்டுவ தோடு, மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங் களுக்கு தரப்படும் அதே விதிவிலக்கை, முறைப்படி சட்டமியற்றி விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும்  தனியார் கல்லூரி களில் அரசுக்குரிய இடங்களுக்கும் தராதது ஏன்? என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.

தீர்மானம் எண் 3:

மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்!

கடந்த கல்வி ஆண்டில் ஏற்பட்ட குளறுபடிகள், மெத்தனப் போக்குகள் தொடராமல், இந்த ஆண்டிலாவது காலந்தாழ்த்தாமல், தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குக் கோரும் சட்ட முன்வரைவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் எனவும், இதற்கென அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட குழுவினை அமைத்து, மத்திய அரசை வலியுறுத்த தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

மாநில உரிமையை

நிலைநாட்டும் முயற்சியிலும்

ஈடுபட வேண்டும்

நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக அரசு தரவிருப்ப தாகச் சொல்லும் பயிற்சிகள், அரசால் சொல்லப்படும் பலனைத் தராது என்பதோடு, 412 பயிற்சி மய்யங்களில் பயிற்சி, அதிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டு 2000 பேருக்கு 20 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி களுக்குச் சேர்க்கை நடைபெற்றபோது, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமுதாய இருபால் மாணவர்களும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் இடம் பெற்றிருந்த நிலை யுடன், ‘நீட்’ முறையில் கடந்த ஆண்டு இவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் வீழ்ச்சி பெற்று இருப்பதை ஒப்பிட்டால், நீட் முறை ஒடுக்கப்பட்ட மக்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யக்கூடியது என்பது விளங்கும்.

கடந்த ஆண்டிலோ (2017-2018), அதற்கு முந்தைய ஆண்டிலோ (2016-2017) நீட் தேர்வுக்குத் தயார் செய்து, எழுதி, தேர்வாகாதவர்களும், தொடர்ந்து இரண்டாண்டு முதல் மூன்றாண்டுகள் வரை பல லட்சம் ரூபாய் செலவு செய்து இதற்கே முழுமையாகத் தனிப் பயிற்சி எடுத்து வருபவர்களும் இந்தாண்டும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் சூழலில்,  இவர்களோடு, அரசு வழங்கும் 20 அல்லது 30 நாள் சிறப்புப் பயிற்சியை வைத்துக் கொண்டு இம்மாண வர்கள் போட்டியிடுவது எங்ஙனம் இயலும்?

கடந்த ஆண்டுகளில், பொதுப் போட்டி தவிர பிற இடங்களுக்கு 720-க்கு 107 என்பது நீட் தேர்வில் வெற்றிக்குரிய குறைந்தபட்ச மதிப்பெண்ணாகும். ஆனால், இந்த மதிப்பெண்ணோ அல்லது இன்னும் அதிகம் 200 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட, அரசின் இடங்களைப் பெற தமிழ்நாட்டு மாணவர் களுக்கு அவை ஒருபோதும் உதவாது.

மருத்துவக் கல்விக்கு “நீட்’’ தேர்வு என்னும் பெயரால் ஒரு வடிகட்டல் முறையை மத்திய அரசு கொண்டுவருகிறது; மாநில அரசோ  2000 மாண வர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்குவது, அதற்கும் முன்பே ஒரு வடிகட்டல் முறையேயாகும்.

எனவே, முழு மூச்சாக தமிழக அரசு நீட்டை ஒழித்துக் கட்டும் சட்டப் பூர்வ நடவடிக்கைகளிலும், அரசியல் சட்டம் தந்திருக்கும் மாநில உரிமையை நிலைநாட்டும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குங்குகள் - கையெழுத்து இயக்கம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நீட் என்னும் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, சமூகநீதி, சுகாதாரத் துறை ஆகியவற்றின் அடிப்படையைத் தகர்க்கக் கூடிய மிகப் பெரிய ஆபத்து என்பதை மக்களிடம் விளக்கிக் கூறிடவும், கல்லூரி - பள்ளிகளின் முன்பு தொடர் வாயில் கூட்டங்களை நடத்துவதெனவும்,  விடுதிகள்தோறும் சென்று மாணவர்களைச் சந்திப்பது எனவும்,  மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகளை - தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்துவது எனவும், கையெழுத்து இயக்கத்தையும் நடத்துவது எனவும், துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன் வரைவுகளில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசினை விரைந்து செயல்பட வலியுறுத்தியும், அனைத்துக் கட்சிக் குழுவுடன் சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டியும் மாணவர் பிரதிநிகள் சார்பில் தமிழ்நாடு முதல்வரைச் சந்திப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

டில்லியில் மாணவர் பேரணி மற்றும் ஆர்ப் பாட்டம் ஒன்றை மார்ச் மாதத்தில் நடத்துவது என்றும், அன்றைய தினமே டில்லியில் தேசிய கருத்தரங்கத்தையும் நடத்துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

தீர்மானம் எண் 6:

22 மொழிகளுக்கும் இருக்கைகளை உருவாக்க மத்திய அரசு முன்வரவேண்டும்

சென்னை அய்.அய்.டி.யில் சமஸ்கிருத இருக்கை ஒன்று அமைக்கப்பட இருப்பதாக நேற்று (9.2.2018) ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

மத்தியில் பி.ஜே.பி. அரசு உள்ளதால், அவர்களின் இந்துக் கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு கூறாகத்தான் இதனைக் கருதவேண்டும்.

இந்தியா முழுமையும் உள்ள அய்.அய்.டி.களில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் இருக்கைகளை உருவாக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

அவ்வாறு செய்யாமல், சமஸ்கிருதத்திற்கு மட்டும் சென்னை அய்.அய்.டி.யில் இருக்கை என்றால், அதனை எதிர்த்துத் தீவிரமான கிளர்ச்சியில் ஈடு படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 7:

மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு

சமூகநீதிப் பாதுகாப்பிற்கான பேரவை (அனைத் துக் கட்சிகள் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு) என்ற ஓர் அமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைத்துச் செயல்படும்.  இக்கூட்டத்திற்கு வர இயலாத அமைப்புகளையும் இதில் இணைத்துக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் பிரின்சு என்னாரெசு பெரியார். அனைத்துக் கட்சி சமூக அமைப்புகளின் பிரதி நிதிகள் அடங்கிய செயற்பாட்டுக் குழு அமைக் கப்படும்.

தீர்மானம் எண் 8:

மாணவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்

பேருந்து கட்டண உயர்வினை எதிர்த்துப் போராடிய மாணவர்கள்மீதும், ‘நீட்'டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள்மீதும் போடப்பட்ட வழக்கு களைத் திரும்பப் பெறவேண்டும் என்றும்,

கல்வி நிறுவனங்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை, மீண்டும் கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் 27.1.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங் களையும் இக்கூட்டம் வழிமொழிகிறது.

1. மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர் விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு மனதோடு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

2. மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி, தேசிய மருத்துவ ஆணையம் என்று உருவாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

3. உயர் மருத்துவக் கல்வி இடங்களில் ஏற் கெனவே நடைமுறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாண வர்களுக்கு வழங்கவேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

4. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட எம்.சி.அய். விதிமுறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

(கலந்துரையாடலில் பங்கேற்றோர் பட்டியல் 7 ஆம் பக்கம் காண்க)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner