எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வீதிமன்றங்களில் போராடுவதோடு நிறுத்திக்கொள்ளமாட்டோம்

அனைத்துக் கட்சி - பெற்றோர் - சமூக அமைப்புகள் எல்லாம் இணைந்து நீதிமன்றங்களில் மீண்டும் வழக்குத் தொடுப்போம்!

சென்னை: 'நீட்' ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, பிப்.11  வீதிமன்றங்களில் வந்து போராடுவதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம். இங்கே இருக்கிற அத்துணைக் கட்சிகள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் எல்லாம் இணைந்து நீதிமன்றங்களில் மீண்டும் நீதி கோரி வழக்குகளைத் தொடுப்போம் - வெற்றி பெறுவோம் - சட்டப்படி நிலை நிறுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

5.2.2018 அன்று நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தீர்மானங்கள் அல்ல - மசோதாக்கள்!

உரிய மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தமிழ்நாட் டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட திருத்த மசோதாக்களுக்கு - இந்த நேரத்தில் பணி வன்புடன் ஒன்றை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன். நம்முடைய தலைவர்கள் பேசும்பொழுது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்று சொன்னார்கள் - இதை சொல்லுவதற்கு மன்னிக்கவேண்டும் - நிறைவேற்றப்பட்டது தீர்மானங்கள் அல்ல - மசோதாக்கள்.

மசோதா என்றால், அடுத்தபடியாக கையெழுத்துப் போட்டவுடன்  சட்டம். ஆணைகூட அல்ல. அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அந்தச் சட்டத்தை அவ்வளவு சீக்கிரம் தூக்கி எறிய முடியாது.

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக்

கூட்டமைப்பு சார்பில்...

எனவே, அந்த இரண்டு சட்ட திருத்த மசோதாவுக்கு  ஒப்புதல் வழங்கக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசை நிர்ப்பந்தித்தும், ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் இங்கு சிறப்பாக வந்திருக்கக்கூடிய - கண்டன உரையாற்றியிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் ஒரு பொதுப் போராட்டம் - கட்சியில்லை - ஜாதியில்லை - மதமில்லை - இதில் மாணவர் களுடைய நலன்தான் இருக்கிறது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஜனநாயக உரிமை காக்கப்படவேண்டும் என்கிற கவலை இருக்கிறது என்பதை உள்ளடக்கி, சிறப்பாக இங்கே உரையாற்றிய, சமூகநீதிக் கட்சியின் தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராயர் அய்யா எஸ்றா சற்குணம் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய தோழர் வன்னிஅரசு அவர்களே, எஸ்.டி.பி.அய். கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அய்யா கே.கே.எஸ்.எம்.தெஹலான் பாகவி அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண் டியன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உரையாற்றிய அன்பிற்குரிய சகோதரர் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் சார்பில் உரையாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய சகோதரர் மாமுது அபுபக்கர் அவர்களே, சி.பி.எம். மாவட்டச் செயலாளர் தோழர் அ.பாக்கியம் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் மானமிகு மல்லை சத்யா அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அன்பிற்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்களே, தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சார்பில் இங்கே உரையாற்றிய துணைத் தலைவர் அய்யா தாமோதரன் அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அருமைச் சகோதரர் மூத்த காங்கிரசு தியாகி அன்பிற்குரிய சகோதரர் குமரி அனந்தன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய தோழர் அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் சுதர்சனன் அவர்களே, இந்நிகழ்வில் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கின்ற தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே, கட்சிகளோடு, தலைவர்களோடு வந்திருக்கக்கூடிய அனைத்துப் பொறுப்பாளர்களே, தனித்தனியாகப் பெயர்களை சொல்வதற்கு நேரமின்மையால்,  தயவு செய்து வருத்தப்படக்கூடாது. அவ்வளவு பேரையும் கொள்ளக் கூடிய அளவிற்கு மேடை அகலமான மேடையில்லை.

ஒன்றுபட்ட மேடை. இது கலைக்கப்பட

முடியாத - கலையாத மேடை

ஆனால், இது சொல்லுகின்ற செய்தி என்னவென்றால், மேடை அகலமாக இருந்தாலும், குறுகலாக இருந்தாலும் ஒரே உணர்வு படைத்தவர்களைக் கொண்ட மேடை. இந்த மேடை ஒரு தற்காலிகமான மேடையல்ல. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும்வரை ஒன்றுபட்ட மேடை. இது கலைக்கப்பட முடியாத - கலையாத மேடை. அதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் நம்முடைய தோழர்கள், தலைவர்கள் அருமையாகச் சொன்னார்கள். 27 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்டம் தோறும் இதேபோல, அத்துணைக் கட்சி நண்பர்களும் ஒருமுகமாக உள்ளத்தால் ஒருவரே - மற்று உடலால் பலராகக் காண்பர் என்ற உணர்வோடு எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.

திராவிடர் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது

ஆகவே, அதற்குக் காரணமாக இருந்து அறிக்கைகள் கொடுத்த - அத்துணை தலைவர்களையும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் திராவிடர் கழகம் தன்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறது.

கடமையாற்ற வேண்டிய நேரத்தில், கழகங்கள் மட்டுமல்ல, இந்த நாட்டில் இருக்கின்ற அத்துணை பொறுப்புள்ள இயக்கங்களும் இதனைச் செய்வார்கள் என்பதுதான் இந்த மேடை. அதிகமாக விளக்கவேண்டிய அவசியமில்லை. அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள்.

இங்கே ஊடகவியலாளர் சகோதரர்கள் இருக்கிறார்கள் - அவர்களுக்கும் சேர்த்து சொல்கிறேன்.

அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்த

வேண்டியது எங்களுடைய கடமை

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் - அது பொதுவானது. அல்லது உங்களால் ரத்து செய்ய முடியவில்லையானால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், விலக்கு அளிக்கவேண்டும். எங்கள் பிள்ளைகள் அந்தத் தேர்வை எழுதவேண்டிய அவசியமில்லை என்று கேட்பது இருக்கிறதே - இது ஏதோ மோடியிடம், மத்திய அரசிடம் கருணை மனு கொடுத்து - ஏதோ சலுகை கேட்பது போன்ற விஷயம் அல்ல. முதலில் நம்முடைய அமைச்சர்களுக்கு அதைத் தெளிவுபடுத்தவேண்டியது எங்களுடைய கடமை.

ஏனென்றால், முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று சொல்வதுபோன்று, நம்முடைய அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இன்றைக்குக்கூட ஒரு அமைச்சர் சொல்கிறார், ‘‘நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம்; நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்’’ என்று சொல்கிறார். இதனால் மக்கள் புரியாமல், குழம்புகிறார்கள்.

நீட் தேர்வை நீங்கள் பெரிய அளவிற்கு எதிர்க்க வேண்டாம்; எங்களோடு இருந்தால் போதும். குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கவேண்டும்.

காமராசர் அவர்கள் ஆளுகின்ற நேரத்தில், அண்ணா, கலைஞர் ஆகியோர் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தபொழுது, சி.சுப்பிரமணியம் அவர்கள் அவைத் தலைவராக இருந்தார்.

எங்களைக் காட்டி

தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாப்பீர்!

அண்ணா அவர்கள் எழுந்து, ‘‘மத்திய அரசு உங்களை வஞ்சிக்கிறபொழுது, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொன்னால்’’ என்று அண்ணா அவர்கள் சொன்னபொழுது,

‘‘என்ன செய்யவேண்டும்? நீங்களே சொல்லுங்கள்’’ என்று சி.சுப்பிரமணியம் அவர்கள் கேட்டார்.

அண்ணா சொன்னார், ‘‘நீங்கள் புத்திசாலிகள்; நாங்கள் அரசியல் தெரிந்தவர்கள். உங்களால், உங்கள் கட்சித் தலைமையை வலியுறுத்த முடியாது. எங்களை அதற்குப் பயன்படுத்துங்கள். குறைந்தபட்சம் அதன்மூலமாவது, எங்களைக் காட்டி, தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாருங்கள்’’ என்று சொன்னார்.

அந்த அளவிற்கு வரும்பொழுது, அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப்பாருங்கள். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் நாம். ஆளுங்கட்சி என்ன சொல்கிறது, கொள்கை அளவில் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொன்னார்கள்.

ஆளுங்கட்சியைப்பற்றி இங்கே சொன்னார்கள், அது அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது என்றெல்லாம். அது அங்கே இருக்கிறதா? இங்கே இருக்கிறதா? என்பதெல்லாம் பிறகு பார்க்கலாம். அவர்கள் ராஜினாமா செய்து போகிறார்களா? அல்லது கலைக்கப்படுமா? என்பதெல்லாம் பிறகு இருப்பதாகவே வைத்துக்கொண்டால், குறைந்தபட்சம் அவர்களுடைய கொள்கை முடிவு - நீட் தேர்வை நாங்கள் ஆதரிக்கவில்லை. விலக்குக் கோருகிறோம் என்கிற மசோதாவை நீங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருக்கிறீர்கள். அந்த மசோதா ஓராண்டுகாலமாக மத்திய அரசிடம் இருக்கிறது. எதன் காரணமாக? அருள்கூர்ந்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இது சட்டப்படி நமக்குள்ள உரிமைப் பிரச்சினை - இது சலுகையல்ல. எப்படியென்று கேட்டால், கல்வியை மாநிலப் பட்டியலிருந்து, நெருக்கடி காலத்தில் யாருக்கும் தெரியாமல், அதனைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போனார்கள். அப்படி கொண்டு போன காரணத்தினால், மத்திய அரசு கல்வித் திட்டம் - மாநில கல்வித் திட்டம் - இரண்டு திட்டமும் இங்கே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுப.வீ. அவர்கள் அதனை இங்கே அழகாக சொன்னார். 1.6 சதவிகிதம் இருக்கிறவன் - அதிலிருந்துதான் கேள்வி கேட்போம் என்கிறார்கள். 98 பேர் படிக்கின்ற மாநிலக் கல்வித் திட்டத்தில் நம்முடைய பிள்ளைகள் படிக்கிறார்கள்.  இந்தக் கல்வி அரசியல் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டு, நம்முடைய பிள்ளைகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில், மேல் நிலைப்பள்ளிகளில் - தமிழ்நாடு அரசாங்கப் பாடத் திட்டங்களை வைத்திருக்கிறார்கள். எனவே, அந்த மாநிலங்களில், அந்த மாநிலப் பாடத் திட்டங்கள் இருக்கின்றன.

அரசியல் சட்டப்படி,

மத்திய அரசுக்கு உரிமை உண்டா?

எனவே, மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நாங்கள் கேள்விகள் கேட்கமாட்டோம்; மத்தியில் இருந்து, எஜமானர்களாக இருந்து இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணித்துக் கொண்டிருப்போம்.

ஆகவே, 1.6 சதவிகிதக்காரர்கள் என்ன உத்தரவு போடுகிறோமோ, அதனை 98 பேராக இருக்கின்ற நீங்கள் கடைபிடிக்கவேண்டும் என்று சொல்வதற்கு, அரசியல் சட்டப்படி, மத்திய அரசுக்கு உரிமை உண்டா? என்று கேட் டால், இல்லை - கிடையாது என்பதுதான் திட்டவட்டமான பதில். மத்தியில், காங்கிரசு ஆட்சி முடியப் போகிற நேரத் தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இப்படி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் முயற்சி எடுத்தார்கள். அந்த நேரத்தில் அதற்கு எதிர்ப்பு வந்தது; நாமெல்லாம்கூட அதனை எதிர்த்தோம்.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரை

அன்றைய மத்திய அரசாங்கம் அதனைப் புரிந்து கொண்டு, நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்றை அமைத்தார்கள். அதில் ஒரு தெளிவான தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான் - அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட பிறகுதான் - இந்த சட்டமே அன்றைய மத்திய அரசாங்கம் நிறைவேற்றியது.

அது என்ன நிபந்தனை என்னவென்றால், ‘‘நீட் நுழைவுத் தேர்வை எந்த மாநிலம் விரும்பவில்லையோ, அந்த மாநிலம் சுதந்திரமான விலக்குப் பெறலாம்’’ என்பது தெளிவாக அந்த சட்டத்தில் இருக்கக்கூடிய சட்டப் பிரச்சினை. எனவேதான், நம்முடைய தமிழக அரசு, தமிழக அமைச்சர்கள் இதனை வற்புறுத்தவேண்டும்.

சமூகநீதிப் பிரச்சினை; இது கிராமப் பிள்ளைகளுடைய பிரச்சினை

நம்முடைய ஜெ.அன்பழகன் அவர்கள் மிக அழகாகச் சொன்னதைப்போல, எதிர்ப்பே இல்லாமல்

நிறைவேறியிருக்கிறது அந்த மசோதா.

புத்திசாலிகளாக இந்த ஆட்சியினர் இருந்தால், என்ன செய்திருக்கவேண்டும்? தமிழ்நாடே எங்கள் பின்னால் இருக்கிறது; எதிர்க்கட்சி எங்களைஆதரிக்கிறது. இந்தப் பிரச்சினையில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பிரச்சினை இல்லை. இது சமூகநீதிப் பிரச்சினை; இது கிராமப் பிள்ளைகளுடைய பிரச்சினை; ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினை என்று சொல்லி, எளிதாக நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை.

உங்களால் முடியவில்லையானால், மக்கள் அதை செய்வார்கள். மக்கள் பெருந்திரள் என்று அத்துணை பேரும் அதனை செய்யக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றோம்.

எனவேதான் நண்பர்களே, இந்த நீட் தேர்விலிருந்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பது அரசியல் சட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, அதன் படி ஜனநாயக உரிமைப்படி, எந்த அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டார்களோ, அதே அரசியல் சட்டத்தின் பிரிவின்படிதான், இந்த உரிமையை நாங்கள் கேட்கிறோம்; இது சலுகையல்ல.

தேசிய ஆணைய மசோதாவை கைவிடவேண்டும்!

இரண்டாவதாக, மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி, தேசிய ஆணையம் என்று ஒன்றை உருவாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்தமக்கள் பெருந்திரள் மத்திய அரசை வலியுறுத்துகிறது. மருத்துவர்கள் எல்லாம் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் பறிக்கக் கூடிய அளவிற்கு, மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பை மாற்றினார்கள். அதற்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேதென் தேசாய், திருப்பதி வெங்கடாசலபதியிடமிருப்பதைவிட, இவரிடமிருந்து அதிகமான தங்கத்தை எடுத்தார்கள். அது என்னாயிற்று என்று இதுவரையில் தெரியாது - ஆனால், மத்தியில் இருப்பவர்கள் ஊழலை ஒழிப்போம் என்று சொன்னார்கள்.

அவரை குஜராத் மூலமாகக் கொண்டு வந்து, உலக அமைப்புக்குத் தலைவராக்கி விட்டார், மோடி. அவருடைய யோசனைப்படிதான் நீட் - மற்றவையெல்லாம்.

இதன்படி மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றிவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, எல்லா மருத்துவர்களின் உரிமைகளையெல்லாம் பறிக்கக்கூடிய அந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இந்த மக்கள் பெருந்திரள் வலியுறுத்துகிறது.

மூன்றாவதாக, உயர் மருத்துவக் கல்வி இடங்களில், நண்பர்களே நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். உயர் மருத்துவக் கல்வி இடம் என்றால் என்னவென்று, பொதுமக்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டும்.

எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவுடன், எம்.டி., எம்.எஸ்., அதற்குமேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எம்.சி.எச். என்று படிக்கிறார்கள். இது இந்தியாவில் இருக்கக்கூடிய வடபுல மாநிலங்களில், அங்கே இருக்கிற மருத்துவக் கல்லூரிகளில், அங்கே இருக்கிற பல்கலைக் கழகங்களில் ஒரு இடம் அல்லது பல மாநிலங்களில் இந்தப் படிப்பிற்கான இடமே கிடையாது. அதேபோன்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி.

கலைஞர் தலைமையில் திராவிட

முன்னேற்றக் கழக ஆட்சியினால்...

இந்தியாவிலேயே பல இடங்களை உருவாக்கிய ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடுதான். அதுவும் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்ததினால், அந்த சாதனையை செய்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் இட ஒதுக்கீடு இருக்கிறது. இப்பொழுது இதனை மாற்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 100 விழுக்காடு இடங்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

எம்.சி.அய். விதிமுறையில் திருத்தம் கொண்டுவரவேண்டும்

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரிகளில், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட, எம்.சி.அய். விதிமுறையில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பது மிக முக்கியம். நம் நாட்டில் இரண்டு இடம் இருந்தாலும், கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுது அவரிடம் சொன்னோம் - அதனை அவர் ஒப்புக்கொண்டார். இரண்டு இடம் இருந்தால்கூட, ஒடுக்கப்பட்டவர்களுக்கு முதலில் கொடுக்கவேண்டும்; தாழ்த் தப்பட்டவர்களுக்கு முதலில் கொடுக்கவேண்டும் என்றார். ஏனென்றால், பசியேப்பக்காரனை பந்தியில் முன்னால் உட்கார வைக்கவேண்டும்; புளியேப்பக்காரனை பின்னுக்குத் தள்ளு என்பதுதானே தவிர வேறொன்றும் கிடையாது.

கரையான் புற்றெடுக்க,

கருநாகம் குடிபுகுந்ததுபோன்று...

ஆகவே, நண்பர்களே! இந்தத் தீர்மானம் என்பது இருக்கிறதே, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் இருக்கிறது என்றால், 22 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் வருவதற்கு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனையால்தான்.

இப்பொழுது நோகாமல், கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்ததுபோன்று சவுகரியமாக வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இது நீட் தேர்வினால் வந்த கோளாறினால்தான். எனவேதான், இதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்து விளக்கி, நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தவேண்டும். நீதிமன்றத்தில்கூட நமக்கு நீதி கிட்டவில்லை. மீண்டும் நீதிமன்றங்களுக்கும் நாம் செல்லவேண்டி இருக்கிறது. பல நீதியரசர்கள், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஜஸ்டிஸ் அரி பரந்தாமன் போன்றவர்கள், ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் போன்றவர்கள், இன்னும் பல நீதியரசர்கள் இந்த சட்ட விவரங்களையெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில்கூட இதில் சரியான தீர்ப்பு கிடைக்க வில்லை. ஏனென்றால், அவர்களுக்குள்ளேயே அங்கே என்ன பிரச்சினை என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

வருகிற 10 ஆம் தேதி அந்த முடிவுகளை மாணவர் அமைப்பினர்...

எனவேதான், அப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்தது மாணவர்கள் கிளர்ச்சி; பொதுமக்களுக்குப் பயன்படக்கூடியது; எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது. வருகிற 10 ஆம் தேதி அந்த முடிவுகளை மாணவர் அமைப்பினர் எடுக்கவிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் இந்த அணிகளுடைய ஆதரவு - கட்சிகளுடைய ஆதரவு - அமைப்புகளுடைய ஆதரவு தெளிவாக உண்டு.

வழக்குகளைத் தொடுப்போம் -

வெற்றி பெறுவோம்!

ஆகவேதான், இந்த வாய்ப்புகளை உருவாக்குவோம். வீதிமன்றங்களில் வந்து போராடுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டோம். இங்கே இருக்கிற அத்துணைக் கட்சிகள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் எல்லாம் இணைந்து நீதிமன்றங்களில் மீண்டும் நீதி கோரி வழக்குகளைத் தொடுப்போம் - வெற்றி பெறுவோம் - சட்டப்படி நிலை நிறுத்துவோம் என்று கூறி, அனைவருக்கும் நன்றி கூறி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner